சில கதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவற்றை அனுபவித்தாக வேண்டும்; கொரியப் பிரச்சினை அவற்றில் ஒன்று. மே 28 அன்று மாலை நான் சியோல் சென்றடைந்தேன். அடுத்த நாள் காலை, உணவருந்தச் செல்வதற்காக உடையணிந்துகொண்டிருந்தபோது, எனது கைபேசியில் வந்த விரைவுச் செய்தியைப் பார்த்துத் திடுக்கிட்டேன்: “சற்று முன்னர் வடகொரியா குறைந்த தூர ஏவுகணையை ஏவியது. அந்த நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடலில் அந்த ஏவுகணை விழுந்தது’.
பழகிவிட்ட பயம்
உடனே, ஓட்டலின் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரிக்கும் சைரன்கள் ஒலிக்கும் என்று காத்திருந்தேன். இஸ்ரேலில் இருந்த சமயத்தில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலின்போது அப்படித்தான் நடந்தது. ஆனால், இங்கு எந்த சைரனும் கேட்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. “வட கொரியாவின் மற்றொரு ஏவுகணைச் சோதனையா? அட, விநோதமான எங்கள் பங்காளிகளைப் பொருட்படுத்தாதீர்கள். அந்த ‘கிம்சி’யை (கொரியாவின் புகழ்பெற்ற உணவு வகை) இப்படிக் கொடுங்களேன்” எனும் ரீதியில்தான் தென் கொரியர்கள் அதற்கு எதிர்வினையாற்றினார்கள்.
எனக்கு உடனே, லெபனான் உள்நாட்டுப் போர் சமயத்தில் பெய்ரூட்டில் தங்கியிருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அங்கு கடும் வன்முறை அச்சுறுத்தலுக்கு மக்கள் பழகிவிட்டிருந்தனர். இரவு உணவுக்காக வந்திருந்தவர்களிடம் ஒரு பெண் இப்படிச் சொன்னார்: “இப்போதே சாப்பிடுகிறீர்களா, அல்லது போர் நிறுத்தம் வரை காத்திருக்கிறீர்களா?”
ஏவுகணைச் சோதனை நடந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர், குவாம் விமானப் படைத்தளத்திலிருந்து பி-1பி ரக அமெரிக்கப் போர் விமானங்கள் இரண்டு, வடகொரியாவின் எல்லையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன – அதாவது ‘அணுகுண்டு வீசி சோதனை’ நடந்ததாக வட கொரியா சொல்லிக்கொண்ட பகுதியை நோக்கி. அது ஒரு விஷயமில்லை. தென் கொரியப் பங்குச் சந்தை ஒன்றும் சரிந்துவிடவில்லை. எல்லைக்கு மிக அருகில் உள்ள மூசான் நகரில், வட கொரியா ஒருவேளை ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும் அது தங்கள் தலைக்கு மேலேதான் பறந்துசெல்லும் என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறார்கள் இளைஞர்கள். சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் மனிதர்களின் திறன் எனக்குத் தொடர்ந்து ஆச்சரியம் அளிக்கிறது.
அமெரிக்க அச்சம்
தென் கொரிய மாணவர்கள் குழு ஒன்றைச் சந்தித்தேன். “வட கொரியாவின் அச்சுறுத்தல் தொடர்பான பயமெல்லாம் நீர்த்துவிட்டது. காலப்போக்கில் எல்லாமே பழகிவிடும்” என்று சிலர் சொல்கிறார்கள். “வட கொரியாவால் எங்களுக்கு ஆபத்து இல்லை. எங்கள்மீது அவர்களால் போர் தொடுக்கவும் முடியாது. பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் அவர்களைவிட நாங்கள் வலிமையானவர்கள்” என்கிறார்கள் சிலர். ஒருவர் சொன்னார்: “நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, என்ன இது என்னை விட அதிகமாக வட கொரியா பற்றி அமெரிக்கர்கள் கவலைப்படுகிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்!”
சில நாட்கள் இதுதொடர்பான விவாதங்களுக்குப் பிறகு, இவ்விஷயத்தில் அமெரிக்காவுக்குச் சம்பந்தமே இல்லை என்பதை உணர்ந்தேன். ஏன்? சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் பொதுவான விஷயம் ஒன்று உண்டு. வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான அச்சம்தான் அது. மற்றபடி, வட கொரியாவே தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் – அதாவது கடுமையான பொருளாதாரத் தடையின் காரணமாகப் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் – அல்லது அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள நேரும்!
அதேசமயம், அமெரிக்காமீது வட கொரியா தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்கா, முன்பைவிட அதிகமாக அஞ்சுகிறது. மறுபக்கம், வட கொரியாமீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தும் என்று சீனாவும் தென் கொரியாவும் முன்பைவிட அதிகமாக அஞ்சுகின்றன. கொரிய தீபகற்பத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும் மோதலை ட்ரம்ப் ஏற்படுத்திவிடுவார் என்பதுதான் தென் கொரியாவின் அச்சம். தென் கொரியாவுக்கு ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்களை அமெரிக்கா வழங்கியிருக்கிறது. ஆனால், அது வட கொரியாவைச் சீண்டும் விதமாக அமைந்துவிடும் என்றும், சீனாவைத் தனிமைப்படுத்திவிடும் என்றும் அஞ்சும் தென் கொரியாவின் புதிய அதிபர் அவற்றைக் கொண்டுவருவதைத் தாமதப்படுத்திவருகிறார்.
கைமாறிய கதை
“பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்பில் வட கொரியா ஈடுபடத் தொடங்கியபோது, ‘நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்’ என்று தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் உறுதியளித்தார்கள். ஆனால், அமெரிக்கா நிஜமாகவே எங்களைப் பாதுகாக்குமா?” என்று கேட்கிறார் சய்பாங் ஹாம் என்ற தென்கொரியர். தொலைதூரம் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணையைத் தயாரிப்பதாக அமெரிக்காவை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்றைக்கு அச்சுறுத்தினாரோ அன்றைக்கே கதை அமெரிக்காவுக்குக் கைமாறிவிட்டது. “இப்போது எங்களைக் காப்பது என்பதையும் தாண்டி, அமெரிக்கா தனது சொந்த மக்களைக் காப்பாற்றுவது என்றாகிவிட்டது நிலை. அதாவது இனி அமெரிக்கா இந்த விஷயத்தில் எங்களிடமெல்லாம் ஆலோசிக்க வேண்டியதில்லை. உண்மையில் தென் கொரியர்கள் பலர் கிம் ஜோங்கை விட ட்ரம்பைப் பார்த்துத்தான் பயப்படுகிறார்கள்” என்கிறார் ஹாம்.
சீனாவிடமிருந்துதான் 95% எண்ணெயை வட கொரியா வாங்குகிறது. அதை நிறுத்தினாலே வட கொரியப் பொருளாதாரத்தைச் சீனாவால் நிறுத்த முடியும். ஆனால், அப்படிச் செய்யாமல், வட கொரியாவிலிருந்து நிலக்கரி வாங்குவதைத்தான் சீனா நிறுத்திவைத்திருக்கிறது. இது வட கொரியாவுக்குப் பொருளாதாரரீதியாக இழப்புதான் என்றாலும், அணு ஆயுதச் சோதனையை நிறுத்தும் அளவுக்கு இல்லை.
இப்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா தன்னை நெருங்க முடியாமல் பார்த்துக்கொள்வதே சீனாவின் வியூகமாக இருக்கும் என்று தெரிகிறது – அதாவது அமெரிக்காமீது ஏவுவதற்காகத் தயார் செய்யும் அணு ஆயுத ஏவுகணையின் கடைசித் திருகாணியைப் பொருத்தும் வரை வட கொரியாமீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் சீனா காத்திருக்கும்.
‘பாட்டுப் பயிற்சி’
ஆக, சீனாவும் சரி, தென் கொரியாவும் சரி... வட கொரியா வீழும்படி விட்டுவிடாது; வட கொரியாமீது தாக்குதல் நடத்தவும் துணியாது – பதில் தாக்குதல் நிச்சயம் என்பதால். கிம் ஜோங்குடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாடுகளும், அமெரிக்காவும் துணியாது. ஏதேனும் எதிர்மறை விளைவு ஏற்பட்டு அவர் அணு ஆயுதத்தை ஏவிவிடுவாரோ எனும் அச்சம். அவர் பலமடைந்துவருவதால் அவரை அலட்சியம் செய்யவும் அந்நாடுகள் துணியாது.
ஒட்டுமொத்தச் சூழலும் எனக்கு ஒரு கதையை நினைவு படுத்துகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவன், தனக்கு ஓராண்டு அவகாசம் அளித்தால் மன்னரின் செல்லக் குதிரையைப் பாட வைத்துவிடுவதாகச் சொல்லி உயிர்ப் பிச்சை கேட்பான். மன்னரும் சம்மதித்துவிடுவார்.
சிறைக்குத் திரும்பியதும், சக கைதி ஒருவன், “வாழ்நாள் முழுவதும் கடந்தாலும் மன்னரின் குதிரையை உன்னால் பாட வைக்க முடியாது” என்று ஏளனம் செய்வான். அதற்கு, “பரவாயில்லை. இப்போது என்னிடம் ஒரு வருடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கலாம். மன்னர் இறந்துவிடலாம். குதிரை இறந்துவிடலாம். நானும் இறந்துவிடலாம். யாருக்குத் தெரியும்? ஒருவேளை அந்தக் குதிரை பாடவும் ஆரம்பித்துவிடலாம்” என்றானாம் அந்தக் குற்றவாளி.
அதுதான் அமெரிக்காவின் வட கொரியக் கொள்கை. யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பார் என்று அமெரிக்கா காத்திருக்கிறது. அதாவது குதிரை பாடும் என்று காத்திருக்கிறது!
- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ. சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago