ஈத் பெருநாளன்று நாங்கள் ஸ்ரீநகரில் இருந்தோம். எனது ஓட்டல் புகழ்பெற்ற நிஷாத் தோட்டத்துக்கு அருகே இருப்பதால், நடந்தே செல்ல முடிவெடுத்தோம். சாலை முழுவதும் வண்டிகள். தோட்டத்துக்கு அருகில் நமது ரங்கநாதன் தெருவை மிஞ்சும் கூட்டம். சில காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்று படுதோல்வி அடைந்துகொண்டிருந்தார்கள். நான் ஒதுங்கி நின்ற இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“நிலைமை எப்படி இருக்கிறது?”
“நீங்கள்தான் பார்த்துக்கொண்டிருக் கிறீர்களே.”
“சேனல்களைப் பார்த்தால் காஷ்மீரில் தினமும் ஒவ்வொரு தெருவிலும் குண்டு வெடித்துக்கொண்டிருக்கிறது என்ற பயம் அல்லவா உண்டாகிறது.”
“இங்கிருக்கும் பாகிஸ்தானி பயங்கரவாதிகளைவிட மோசமான கிரிமினல்கள் இந்த சேனல்களை நடத்துகிறவர்கள். எங்களை நாயைவிடக் கீழ்த்தரமாக நிகழ்ச்சிகளில் நடத்துகிறார்கள். காஷ்மீரி என்றாலே தேசத் துரோகி என்ற முன்முடிவோடு”
பேசியவர் முஸ்லிம் அல்லாதவர். பெயர் சர்மா. ஜம்முவைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. என் மனைவியும் நானும் பல இடங்களுக்கு, பயணிகள் அதிகம் போகாத இடங்களுக்குக்கூடச் சென்றோம். ஆனால், பொதுவாக எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது அன்புதான்.
காஷ்மீரப் பெண்கள்
இங்கு பர்தா அணியும் பெண்களை அதிகம் பார்க்க முடியவில்லை. மூன்று நான்கு பேர்களாக ஸ்கூட்டரில் செல்கிறார்கள். தலைமுடியைத் துணியால் மறைத்துக்கொள்வதைத் தவிர, உடையில் டெல்லிப் பெண்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு இடங்களில் பெண்களை, முரண்படும் தருணங்களில் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆண் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணை வழி மறித்து, இரண்டு மூன்று இளைஞர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
‘பேவகூஃப் லட்கி,’ (முட்டாள் பெண்ணே) என்று உரத்த குரலில் ஒருவர் திட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அந்தப் பெண் அவரைப் பார்க்காமல் மௌனமாக எங்கள் காரைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அமைதியாக அதே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.
இரண்டாவது பெண், போக்குவரத்து நெரிசல் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்த காரைச் சிறைபிடித்து உள்ளே இருக்கும் இளைஞர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். காரணம், ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த அவரையும் அவருடைய தோழியையும் காரில் இருப்பவர்கள் கேலியாகப் பேசியதுதான். கூட்டம் முழுவதும் பெண்களுக்குத்தான் ஆதரவு. அடிதடியில் முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், போனால் போகிறது என்று பெண்கள் காரை விடுதலை செய்தார்கள்.
ஈத் பெருநாள் என்பதால் அருகில் இருக்கும் கிராமங்களிலிருந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என் மனைவியின் கறுப்புக் கண்ணாடியை வாங்கி ஒவ்வொருவராக அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நமது காணும் பொங்கல் திருநாள் போலவே நாங்கள் உணர்ந்தோம்.
ஹஸ்ரத்பால் மசூதி
தல் ஏரிக்கு மிக அருகில் அதிக நெரிசல் இல்லாமல், விசாலமான இடத்தில் இந்த மசூதி இருக்கிறது. இதில் நபிகள் நாயகத்தின் புனித முடி ஒன்று பேழையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. 1963-ல் அது காணாமல் போய்விட்டதால் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்தது. பலர் உயிரிழந்தனர். அது மீட்கப்பட்ட பிறகே அமைதி திரும்பியது. நான் சென்றபோது மசூதி மிகவும் அமைதியாக இருந்தது. மௌல்வி ஒருவர் எனக்கு மசூதியைச் சுற்றிக் காட்டினார்.
நான் வழக்கமான கேள்வியைக் கேட்டேன். “இது இந்துக்கள் சொல்லும் தேவலோகம். ஆனால், ராட்சதர்கள் இருக்கிறார்கள். நான் இந்திய ராணுவத்தை மட்டும் குறிப்பிடவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள், முல்லாக்கள், அரசு ஊழியர்கள், போலீஸ் எல்லோருமே மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் பேய்கள்.”
இந்திய எதிர்ப்பு
இந்திய அரசியல் சட்டத்தின் 370-ம் பிரிவை காஷ்மீரிகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஓர் இளைஞர் “முன்னூற்று எழுபதை நீக்கினால், நீங்கள் எங்கள் பிணக்குவியல்மீது நடக்க நேரிடும். வரலாறு இந்தியாவை என்றுமே மன்னிக்காது. அல்லாவும் மன்னிக்க மாட்டார்” என்று சொன்னார். இந்திய எதிர்ப்புக்குக் காரணம், பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. படித்த காஷ்மீரி ஒருவரிடம் “நீங்கள் பிரிந்துபோனால் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அதற்கு விலை கொடுக்க நேரிடும். பாகிஸ்தான் பிரிந்துபோனதற்கே இன்று வரை அவர்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.
“அதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்றால், எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று பதில் வந்தது. ஆனாலும், விடுதலை என்பது எட்டாக் கனவு என்பதை உள்ளூர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கிடைப்பது எதுவாக இருந்தாலும் பெரிதினும் பெரிதைக் கேட்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி. பள்ளத்தாக்கு மக்கள் அதில் 0.4% கூட இருக்க மாட்டார்கள். நாமும் நம்மால் முடிந்த பெரிதினும் பெரிதைக் கொடுப்பதுதான் ஒரு முழுமையான ஜனநாயக நாட்டுக்கு அழகு.
என்னதான் செய்யலாம்?
முதலாவதாக, காஷ்மீரைப் பற்றி அவதூறு செய்யும் ஊடகங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர மக்களில் பெரும்பான்மையினர் அமைதியாக இருக்கிறார்கள். அமைதியை விரும்புகிறார்கள். ஊடகப் பிசாசுகள்தான் வன்முறையை, இந்திய எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறார்கள்.
இரண்டாவதாக, காஷ்மீரில் நடக்கும் வன்முறை வட இந்தியாவில் நடக்கும் வன்முறைகளைவிட அளவில் சிறியது. கொசுவை அடிக்கக் குண்டாந்தடி தேவையில்லை. கண்களைப் பறித்துக்கொள்ளும் சாதனங்கள் தேவையேயில்லை.
மூன்றாவதாக, எல்லோரிடம் பேசத் தயாராக இருக்க வேண்டும். பாகிஸ்தானுடன் சேர விரும்புபவர்களுடனும் நாம் பேச வேண்டும். மக்களில் கணிசமானவர்கள் அந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், அவர்களுடன் பேச மாட்டோம் என்று புறக்கணிப்பு செய்வது ஒரு ஜனநாயக நாட்டுக்குப் பெருமை சேர்க்காது.
பாகிஸ்தானுடனும் பேச வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கல் வீசும் குழுக்களின் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு முழுவதும் காஷ்மீரப் போலீஸ் கையில் இருக்கும். மத்திய போலீஸ் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள். ஆனால், ஏதாவது சேதம் நிகழ்ந்தால் அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாள நேரிடும் என்று அவர்களிடம் விளக்க வேண்டும்.
நான்காவதாக, மற்றைய மாநிலங்களிலிருந்து பெருமளவு மக்கள் காஷ்மீரத்துக்குப் பயணிக்க வேண்டும். பயணிகளுக்குப் பள்ளத்தாக்கு மக்கள் என்றும் இடையூறு செய்ய மாட்டார்கள். மாறாக, அதிக மக்கள் இங்கிருந்து அங்கு சென்றால் காஷ்மீரத்தின் பொருளாதாரம் வலுப்பெறும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
ஆனால், இவை எல்லாம் நடக்கலாம் என்று காஷ்மீர மக்கள் நம்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு மத்திய அரசின்மீது, அதை நடத்தும் கட்சிமீது, முதலில் நம்பிக்கை வர வேண்டும். ஆனால், எங்கள் தலைவர் இந்திய இண்டியானா ஜோன்ஸ் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்களிடம் காஷ்மீர மக்கள் நம்பிக்கை வைப்பது கடினம்.
(நிறைவுற்றது)
- பி.ஏ.கிருஷ்ணன், ‘புலிநகக் கொன்றை’,
‘இந்தியாவும் உலகமும்’
முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago