மெல்லத் தமிழன் இனி...! 31 - மனிதனைப் பிடித்திருப்பது பேய் அல்ல, மது!

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஆந்திர மாநிலம் தடா அருகே இருக்கிறது அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பிரதேசம். அமாவாசையானால் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் சாமியார். அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தால் இயல்பானவர்களாகத் தெரியவில்லை. சிலர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் சிலர் தலைவிரி கோலமாக ‘ம்... ம்... ம்...’ என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். பேய் ஓட்டும் இடமாம் அது.

கண்ணாடியில் தெரியும் பிசாசு!

வயதான தம்பதியர் வாலிபர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அழைப்பு வந்ததும் சாமியாரிடம் சென்றார்கள். கட்டைப் பையிலிருந்து உயிருள்ள கோழி, வாழைப்பழம், பூ இவற்றுடன் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றையும் சாமியாரிடம் கொடுத்தார்கள். பெற்றோரைக் கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்தார் சாமியார். வாலிபர் சாந்தமாக, சில சமயம் சிரித்தும்கூட பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரியவில்லை. திடீரென்று சாமியார் கண்ணாடியை எடுத்து வாலிபரின் முகத்துக்கு முன்பாகப் பிடித்தார். அவ்வளவுதான். தனது முகத்தைப் பார்த்தவர், பயங்கரமாக அலறினார். கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். முகத்தைப் பொத்திக்கொண்டார். எழுந்து ஓட முயற்சித்தவரை சாமியாரின் உதவியாளர்கள் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கடுமையாக முயற்சித்து, கைகளை விலக்கி மீண்டும் கண்ணாடியில் முகம் பார்க்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் அவர் மயங்கிச் சரிந்தார். ஏதோ மந்திரம்போல உச்சரித்து, நெற்றில் குங்குமமிட்டு, உச்சந்தலையின் முடியைக் கொத்தாக வெடுக்கென்று பிடுங்கினார்கள். மீண்டும் அலறி எழுந்தார் அவர். பெற்றோரை அழைத்த சாமியார், “வொச்சே நெல அமாவாசைக்கு பிளிச்சிங்கின்னி ரா” என்று அனுப்பி வைத்தார். அவர்கள் அடுத்த மாதம் இதே அமாவாசை அன்று மீண்டும் இங்கு வர வேண்டுமாம். மயங்கிய வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

சாமியாரின் உதவியாளரிடம் கேட்டேன். “ஆ மனுஷிக்கு அத்தம்ல மூத்தி ச்சூசா பிசாசு தெலுசாந்தி” என்றார். அந்த வாலிபர் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அவர் உருவத்துக்குப் பதிலாக பிசாசு தெரிகிறதாம். டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் பேசினேன். “பேய் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. அவற்றில் 80 சதவீதம் விதவிதமான குடிநோய்களே. மீதம் 20 சதவீதம் குடிநோய் அல்லாத மனநோய்கள். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெரும்பான்மையோர் சாராயம், பிராந்தி, கோழிக்கறி கேட்பதன் சூட்சுமம் இதுதான். நீங்கள் குறிப்பிடும் அந்த வாலிபருக்கு தீவிரமான மனச்சிதைவு நோய் (Schizophrenia).இன்னும் சிலர் அடிக்கடி அருள் வந்ததுபோல சாமியாடுவார்கள். இதனை மனச்சிதைவு என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சூழல்களால் ஏற்படும் அதீத உத்வேகம் என்றும் கொள்ளலாம். இதனை மனநல மருத்துவம் பொசஷன் அட்டாக் (Possession attack) என்கிறது. மனச்சிதைவு நோய் கொண்டவர்களுக்கு விஷுவல் ஹாலுசினேஷன் (Visual hallucination) இருக்கக்கூடும். அதாவது கண் முன் தோன்றும் மாயத்தோற்றங்கள். கண்ணாடியில் முகம் பார்த்தால் அங்கு பிசாசு தெரிவதற்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும். இது பொதுவான கருத்து. அவரை மருத்துவச் சோதனை செய்தால் மட்டுமே அவரது பிரச்சினையை சரியாகச் சொல்ல முடியும்.

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஒருசில விஷயங்கள் மீது பயம் இருக்கும். பெரும்பாலானோருக்குப் பேய், பிசாசு என்றால் அச்சம். சிலர் அந்த பயத்தினூடேயே அவை குறித்து அதீத ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் பேச்சில் அமானுஷ்ய விஷயங்கள் ஆக்கிரமித்திருக்கும். இதுபோன்றவர்கள் குடிநோயில் சிக்கும்போது அவர்களின் மூளையை அது பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வாலிபரின் பிரச்சினையும் அதுதான். குடிநோயின் எதிர்மறையான எண்ணங்கள் அந்த வாலிபருக்குச் சுய வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. தன்னையே வெறுக்க தொடங்கும் அவர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பார்க்கச் சகிக்காமல் திட்டிக்கொள்வார். காலப்போக்கில் அவரது பிம்பமே அவருக்கு பிடிக்காத, அதேசமயம் அதீத ஆர்வம் கொண்ட பேய், பிசாசு போன்ற உருவங்களாக தோன்றியிருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன்!

விஷுவல் ஹாலுசினேஷனில் நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன. என்னிடம் வந்த ஒரு குடிநோயாளி படுக்கையில் எழுந்து அமர்ந்து அவருக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை போட்டுக்கொள்வார். நாற்காலியுடன் தனியாகப் பேசுவார். ஒருகட்டத்தில் கடும் விவாதம் நடக்கும். பின்பு காற்றுடன் சண்டையிடுவார். அதாவது, அவரே அங்கு இரு நபர்களாக உருவெடுக்கிறார். நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரது கண்ணுக்கு அவரைப் போலவே உண்மையான நபர் தெரிவார். “நீ செய்வது எல்லாம் சரியா?” என்றரீதியில் அவரைப் போன்ற எதிராளி அவரிடம் பேச ஆரம்பித்துக் கடுமையாக வாக்குவாதம் புரிவார். சில நேரங்களில் இருவரும் பாசமழை பொழிவார்கள். அழுவார்கள், சிரிப்பார்கள். இப்படி ஒருவர் இருவராக உருவகமாவதை ‘ஆட்டோஸ்கோபி’ (Autoscopy) என்போம்.

இதுமட்டுமல்ல, தென் மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வந்த ஓர் இளைஞர் அடிக்கடி தன் முன்பாகத் தோன்றும் காளை மாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார். ஜல்லிக்கட்டு வீரர் அவர். சிலருக்கு சிங்கம், புலி நேரில் வந்து பயமுறுத்தும். சிலருக்கு அவர்களுக்குப் பிடிக்காத நபர்கள், எதிரிகள் வந்து திட்டுவார்கள்; சண்டையிடுவார்கள். சிலருக்கு அவர்களுக்குப் பிடித்தமான கடவுள் தோன்றுவார். சிலருக்கு இவ்வாறான உருவங்களாக இல்லாமல் விதவிதமான ஒளிகள், கசாமுசாவென பிம்பங்கள் என்று வந்து பார்வையை மறைக்கும். சிலருக்கு வாகனம் ஓட்டும்போது, நடந்து செல்லும்போது இதுபோன்ற மாயத்தோற்றங்கள் கண்ணில் ஏற்பட்டு மயங்கிச் சரிவார்கள்.

பார்வையைப் பறிக்கும் மது!

தொடர்ந்த அதீத மதுப்பழக்கத்தால் மூளை - கண் பார்வை நரம்புகள் கடுமையாகச் சேதம் அடைவதே இதற்குக் காரணம். இவை மட்டுமில்லாமல் குடிப் பழக்கத்துக்கும் கண் பார்வைக் கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் கள்ளச்சாராயம் போன்ற எரிசாராய வகையறாக்களை சாப்பிடும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே பார்வை பறிபோகிறது. நிறையப் பேர் நினைப்பதுபோல் மதுப்பழக்கம் கல்லீரல், குடல், மூளையை மட்டும் பாதிப்பதில்லை. கண் பார்வையையும் நாளுக்கு நாள் மங்கச் செய்கிறது” என்றார்.

(தெளிவோம்)

-டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்