ராஜீவ் சண்டேலின் தண்ணீர் சாகுபடி

By ஒமர் ரஷித்

உத்தரப் பிரதேசத்தின் வறண்ட கிராமங்களுக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார் ராஜீவ் சண்டேல். இவர் பொறியாளரோ அதிகாரியோ அரசியல் தலைவரோ அல்ல. பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். 32 வயதாகிறது. “வறட்சியைப் போக்க இங்கு தண்ணீரைக் கொண்டுவரும் வகையில் காலுக்குச் செருப்புகூடப் போட மாட்டேன்” என்று கல்லிலும் முள்ளிலும் கற்பாறைகளிலும் சுட்டெரிக்கும் மணல்வெளிகளிலும் வெறுங்காலுடனே நடக்கிறார் இந்த லட்சிய இளைஞர். உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் மெஜா தேசிலில் (வட்டம்) சுஜனி என்ற கிராமத்தில் பிறந்தவர் சண்டேல். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். அம்மா விவசாயி. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஐந்து ஆண்டுகள் முன்னணி இந்தி பத்திரிகைகளில் நிருபராகப் பணியாற்றினார். பிறகு, பத்திரிகைத் தொழில் மீது அதிருப்தி ஏற்பட்டது.

பின்னர், தன்னுடைய சொந்த மண்ணின் பிரச்சினைகள் மீது கவனத்தைத் திருப்பினார். தண்ணீர்ப் பற்றாக்குறையும் சுகாதாரக் குறைபாடுகளும் அவருக்குப் பெரிய பிரச்சினைகளாகத் தெரிந்தன. அவற்றைத் தீர்க்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தார். சிந்தனை வெறும் சிந்தனையாக இல்லாமல், தீவிரச் செயல்பாட்டுக்கு வழிவகுத்தது. எனவே, தன்னுடைய பகுதியின் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கியிருக்க வேண்டிய வனசாகர் பாசனத் திட்டம் ஏன் இன்னமும் நிறை வேறாமல் இருக்கிறது என்று அறிய, பிராந்தியத் திட்ட அலுவலகத்துக்கே சென்று தகவல்களைக் கேட்டார். 1970-களிலேயே பேசப்பட்டு, திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற திட்டம் இது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் பயன் தரக் கூடியது. பிகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் 1990-களிலேயே வேலை தொடங்கப்பட்டது. ஆனால், முன்னேற்றம் ஏதும் இல்லாமல் அப்படியே கிணற்றில் போட்ட கல்லைப் போல அசையாமல் இருக்கிறது.

“இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும், ஏன் தொடங்கப்படாமலே இருக்கிறது?” என்று சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரியிடம் கேட்டார். “அதைக் கேட்க நீ யார்?” என்றுதான் பதில் கேள்வி வந்தது அந்த அதிகாரியிடமிருந்து. “நான் இந்தப் பகுதி விவசாயி” என்று பதில் அளித்தார் சண்டேல். “தண்ணீர் வரும்போது வரும்... போய் உன் வேலையைப் பார்” என்ற அதிகாரியின் பதிலும் மிரட்டலும் சண்டேலை அச்சுறுத்தவில்லை. மாறாக, இந்தப் பணியில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற உறுதியை அவருக்கு அளித்தன.

இந்தத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் என்ன என்று தகவல் திரட்ட சண்டேல் முடிவு செய்தார். அத்துடன் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்படும் மின்னுற்பத்தித் திட்டங்கள் குறித்தும் தகவல்களைத் திரட்டிவருகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் தரும் பதில்கள் திருப்தியைத் தராததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இதுவரை 500-க்கும்மேற்பட்ட மனுக்களை அளித்துத் தகவல்களைத் திரட்டியிருக்கிறார்.

பாசன வசதி, மின்னுற்பத்தி, கிராமப்புற சுகாதாரத் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தொடக்கக் கல்வி போன்ற பல்வேறு துறைகள் குறித்து கேள்விகளைக் கேட்டுத் தகவல்களைத் தொகுத்துவருகிறார்.

அரசு அலுவலகங்களுக்குச் செல்வது, தகவல்களைக் கேட்பதுடன் நில்லாமல் கிராமம் கிராமமாக நடந்தே சென்று மக்களுடன் பேசுகிறார். மாநில அரசின் மின்னுற்பத்தித் திட்டங்களால் விவசாயத்துக்கு நேரடியாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை விவரிக்கிறார். இந்த மின்சாரம் நகர்ப்புற மக்களுக்காகவும் தொழில் நிறுவனங்களுக்காகவும் பெருமளவு பயன்படுத்தப்படுவதையும் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் தேக்கப்பட்டு மடைமாற்றப்பட்டு வேறு பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதையும் மக்களுக்குப் புரியவைக்கிறார். வனசாகர் திட்டத்தில் எப்படி ஊழல் மலிந்துகிடக்கிறது என்று தெளிவுபடுத்துகிறார். தன்னுடைய முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு யாரையும் அவர் கட்டாயப்படுத்துவதில்லை. “இந்தத் திட்டத்தில் உள்ள ஊழல்களைக் களைவதும் கிராமங்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதும்தான் என்னுடைய நோக்கம். என்னை ஆதரிப்பீர்களா?” என்று கிராமம் கிராமமாகச் சென்று கேட்கிறார்.

வெறும் தகவல்களைப் பெறுவதுடன் நின்றுவிடாமல், இந்த வனசாகர் திட்டம் எப்படி அமலாகிறது என்று நீரோட்டப் பாதையிலேயே சென்று நேரில் பார்க்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் மேஜா மாவட்டத்திலிருந்து சித்தி மாவட்டம் வரை நடந்தே சென்று பாசனக் கட்டுமானங்களைப் பார்வையிடுகிறார். ஓரிடத்தில் நீர்த்தேக்கம் தவறாகக் கட்டப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் அக்கறையில்லாமல் செயல்பட்டிருப்பதையும் கண்டார். உடனே, மத்தியப் பிரதேச மாநிலப் பாசன அமைச்சர் சிவபால் சிங்கிடம் நேரிலேயே அவற்றைச் சுட்டிக்காட்டினார். அமைச்சர், தானே அந்த இடத்துக்குச் சென்று ஆய்வுசெய்து பொறியாளர்கள் உள்ளிட்ட சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, மேல் விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,200 கோடி செலவிட்டும் ஒரு கிராமத்துக்கும் சொட்டுத் தண்ணீர்கூட இன்னமும்கிடைக்கவில்லை என்பதை சண்டேல் அம்பலப்படுத்துகிறார். இப்போது பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவு இந்த ஊழல்கள்குறித்து விசாரணை நடத்திவருகிறது.

மத்தியப் பிரதேசத்துக்கும் பிகாருக்கும் பாசன வசதி தருவதுடன் உத்தரப் பிரதேசத்திலேயே சுமார் 1,500 கி.மீ. தொலைவுப் பகுதிகளுக்குப் பாசன நீரை அளிப்பதற்குத்தான் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் மூலம் அலாகாபாத், மிர்சாபூர் பகுதிகளில் தலா 75,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு ஆயக்கட்டுகளை விரிவுபடுத்துவதுதான் இந்தத் திட்டம். திட்டம் ஒழுங்காக நிறைவேறினால், லட்சக் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் உண்மையிலேயே வசந்தம் பூத்துக்குலுங்கும்.

சண்டேல் கடந்த ஆண்டு நிர்மல் பாரத் யாத்ரா என்ற நடைப் பயணத்தை ஐந்து மாநிலங்களில் மேற்கொண்டார். திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது, கைகளைக் கழுவிய பிறகே உணவு உண்ண வேண்டும், மழை நீரைச் சேகரிக்க வேண்டும், தண்ணீரை அசுத்தப்படுத்தக் கூடாது என்ற அம்சங்களைக் கிராமம் கிராமமாகச் சென்று அவர் பிரச்சாரம் செய்தார். இந்தப் பயணம் முழுக்கவும் அவர் காலுக்குச் செருப்பு அணியாமலேயே சென்றார்.

இப்போது அலகாபாத் பகுதியில் யமுனை நதிப் பகுதியில் மின்சாரத்துக்காகத் தண்ணீரைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு எதிராகத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அலாகாபாத்திலேயே மலைப்பாங்கான பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்கி வைக்கும் திட்டத்துக்கும் அவர் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார். மெஜா வனப் பகுதியில் மான்கள் தண்ணீர் கிடைக்காமல் சுருண்டு விழுந்து சாவதைத் தடுப்பதற்கு வனக் காப்பகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

“தண்ணீர் சாகுபடிதான் என் லட்சியம்” என்கிறார் இந்த வெறுங்கால் இளைஞர். “வெறுங்காலுடன் நடப்பது சிரமமாக இருப்பதுடன் ஆபத்தானது என்பதையும் அறிவேன். ஆனால், வெறுங்காலுடன் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் என்னுடைய லட்சியத்தை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது” என்கிறார் சண்டேல். தண்ணீர் சாகுபடிக்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன!

தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்