நான் 61 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தபோது, கோயில்கள் தவிர, ஆன்மிக மையங்களாக நான்கைந்து இருந்தன. மக்கள் பெருவாரியாகப் போனது சாய்பாபா கோயில். அடுத்தபடியாக, ராமகிருஷ்ண மடம். இரண்டும் சென்னை மயிலாப்பூரில் இருப்பவை.கை ரிக்ஷாக்கள், ஜட்கா வண்டிகள் இருந்தன. அப்போதெல்லாம் வாடகை மோட்டார் கார் என்று தனியாக எதையும் நான் பார்த்ததே இல்லை.
ஸ்கூட்டர்கள் வந்த பிறகு, அதாவது 1956-க்குப் பிறகு, ஆட்டோ ரிக்ஷாக்கள் வந்தன. தி.மு.க. ஆட்சியில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. கை ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்ஷாக்களாக ஓடத்தொடங்கின. ஆனால், 1980-களில், பெரிய அளவில் ஆட்டோ ரிக்ஷாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, சாலைகளில் பேருந்துகளோடு போட்டி போட்டவை ஆட்டோ ரிக்ஷாக்கள்தான்.
என்ன காரணமோ தெரியவில்லை. ஆட்டோ ரிக்ஷாக்கள் வரவோடு ஐயப்பன் ஈடுபாடும் பெருகத் தொடங்கிவிட்டது. ஆரம்ப நாட்களில் ஐயப்பன் விரதம் கடுமையானதாக இருந்தது. விரதம் இருப்போர் உடலை வருத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது, 40 நாட்களுக்குப் பிறகு குரு பூஜை என்று ஒரு கோஷ்டி பூஜை நடைபெறும். அதோடு, விரதம் இருந்தோர் தலையில் இருமுடி சுமந்தபடி ரயிலடிக்குப் போவார்கள். அப்போதெல்லாம் ஐயப்ப விரதம் இருப்பவர்கள் பளீரெனத் தனித்துக் காணப்படுவார்கள். யாரானாலும் அவர்களைச் ‘சாமி’ என்றுதான் அழைக்க வேண்டும்.
இந்நாளில் சபரிமலைக் கோயிலுக்குப் போவதில் எவ்வளவோ மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. பூஜை போடும் இடத்திலேயே தனிப் பேருந்து காத்திருக்கும். ஒரு சின்ன விடுமுறைக்குப் பக்கத்து ஊருக்குப் போவதைப் போல எல்லாம் முடிந்துவிடுகிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு முன்பு கிடைத்த மரியாதை இந்நாளில் கிடைப்பது இல்லை. முன்பு சில நூறு ரூபாய்களிலேயே முடிந்துவிடுகிற விஷயங்களுக்கு, இன்றைக்கு ஆயிரக் கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்களில் இந்துக்களாக உள்ளவர்களில் 75 சதவீதம் சபரிமலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.
இப்படி, பக்தர்களாக இருந்தும் ஆட்டோ ரிக்ஷாக்காரர்களுக்கு மக்கள் மத்தியில் விசேஷ வரவேற்பு எதுவும் இல்லை. வேறு வழியில்லை என்றுதான் ஆட்டோவை மக்கள் அணுகுகிறார்கள். ஆட்டோ ரிக்ஷாக்காரர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது. வேளாவேளைக்கு உணவு அருந்த முடியாது. எப்போதும் வண்டியிலேயே இருக்க வேண்டியிருப்பதால் இயற்கை அழைப்புகளைச் சமாளிப்பது மிகவும் வேதனை தரும். அவர்கள் பின் இருக்கையில் கையை, காலைக் குறுக்கிக்கொண்டு தூங்கும்போது பரிதாபமாக இருக்கும். நான் பல முறை அவர்களாக விழித்துக்கொள்வதற்காகக் காத்திருந்திருக்கிறேன். ஆனால், சென்னையில் பலரைப் போல நானும் இன்றும் தயங்கித் தயங்கித்தான் ஆட்டோவை அமர்த்திக்கொள்ள அணுகுகிறேன்.
ஆட்டோ ஓட்டிப் பெரிய பணம் ஈட்ட முடியாது. டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களில்கூட ஆட்டோ ஓட்டுநர்கள் வசதியோடு வாழ்பவர்கள் அல்ல; ஆனால், ஏதோ கட்டணம் நிர்ணயம் செய்திருந்தால், அதை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். சென்னை ஆட்டோக்காரர்கள் அடாவடிக்காரர்கள் என்று பெயர் பெற்றிருந்தாலும் கவனித்துப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்பது தெரியும். மிகமிகச் சிலரே முகத்தில் கடுகடுப்பு இல்லாதவர்களாக இருப்பார்கள். பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்று மாதாமாதம் கட்டணம் வாங்கிக்கொள்பவர்கள் அவ்வளவு கடுமையாக இருக்க மாட்டார்கள். இவர்களும் சபரிமலைக்குப் போவார்கள்!
சபரிமலைக்குப் போவது வெளிப்படையாகத் தெரியும் ஒரு செயல். இதேபோல வேறு மதத்தவர்கள் அவரவர்களின் புனிதத் தலத்துக்குப் போகலாம். நான் இருக்கும் பேட்டையில் கிறித்துவர்கள் நிறைய பேர் வசிக்கிறார்கள். கிறித்துவ மதத்திலும் டினாமிநேஷன்ஸ் என்று பிரிவுகள் உண்டு. என் பேட்டையில் பல பிரிவுகளுக்கு மாதா கோயில்கள் உள்ளன.
எல்லா மதங்களும் சமூக வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி வாழ்க்கை நடத்த வேண்டுமென்று தெளிவாகக் கூறியிருக்கின்றன. எல்லா ஆன்மிகத் தலைவர்களும் மனிதனுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று கூறியிருக்கிறார்கள்; கூறிவருகிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிடுகிறது அன்றாட வாழ்க்கை. அதற்குப் பளிச்சென்று ஒரு பதில்: ‘சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தம்!’
பௌத்த-சமண மதங்களும் கர்ம பலன் பற்றித் தீர்மானமாக உள்ளன. உலகில் சில நிகழ்ச்சிகள் இது உண்மைதானோ என்று ஐயப்பட வைக்கின்றன. ஒரு ரயில் அல்லது படகு விபத்தில் எல்லாரும் இறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையைத் தவிர. பார்க்கப்போனால் அந்த விபத்துக்களில் முதலில் குழந்தைகள்தான் பலியாகி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும்போது கர்ம பலன்தானோ என்று எண்ணவைக்கிறது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்போலப் பிழையற்று வாழ்க்கை நடத்தியவருக்கும் புற்றுநோய். அதேபோல பதினாறாம் வயதில் திருவண்ணாமலை வந்துசேர்ந்த ரமணர், அதன் பிறகு வேறெங்கும் போகவே இல்லை. அவரும் புற்றுநோய் வந்துதான் உயிரை விட்டார். இருவரும் சமீபத்தியவர்கள்தான்.
கர்ம பலனை ஏற்றுக்கொண்டால் முன்பிறப்பு, அடுத்த பிறப்பு இவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சபரிமலை செல்வதும் இதை எண்ணித்தானோ? கடந்த ஓரிரு ஆண்டுகளாகப் பல இடங்களிலிருந்து பலாத்காரம், அதிலும் கூட்டுப் பலாத்காரம் பற்றிய செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. செய்திப் பத்திரிகைகள் வருவதற்கு முன்பும் இத்தகைய பலாத்காரங்கள் நடந்திருக்க வேண்டும். நம் படைகள் தோற்றுவிட்டால் நம் பெண்களுக்கு எது நடக்கும் என்று கூற முடியாது. ஆதலால், கோட்டையில் இருக்கும் ராஜபுத்திர மாதுகள் எதிரிப் படைகள் வென்றுவிடும் என்று தெரிந்தால் ‘ஜோஹர்’ என்ற நிகழ்ச்சியில் தீக்குளித்துவிடுவார்கள். நாம் மகா அக்பர் என்று கொண்டாடும் அந்தச் சக்ரவர்த்தி, ஒரு முறை 16,000 ராஜபுத்திரப் பெண்கள் தீக்குளிப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறார். ராஜபுதனாவில் அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் எழுதிய குறிப்புகளில் இந்தத் தகவல் எல்லாம் உள்ளன.
மீண்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பற்றியே நினைக்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்களே மாபெரும் சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாக இருந்துவிடுகிறார்கள். ஏன் நாம் ஆட்டோ ரிக்ஷாக்காரர்களை மட்டும் குறை கூற வேண்டும்?
ஒரு காரணம் கூற முடியும். இவர்கள் நம் கண்ணுக்குத் தெரிபவர்களாக இருக்கிறார்கள். நம் அரசியல் தலைவர்கள் ஒன்றைக் கூறக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ‘சட்டம் அதன் கடமையைச் செய்யும்’என்று. இல்லை, உண்மையில் பல இடங்களில் சட்டம் இயங்குவதே இல்லை. அதனாலேயே ஆன்மிக ஈடுபாடுகூட கொஞ்சம் உண்மை இல்லாததாகத் தோன்றுகிறது!
அசோகமித்திரன் - தொடர்புக்கு: ashoka_mitran@yahoo.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago