தேசியக் கட்சி ஆக முடியுமா ஆம் ஆத்மி?

By ஞாநி

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பதை அடுத்து, இன்று இந்தியா முழுவதும் மாற்று அரசியலை விரும்புவோர் மனதில் இருக்கும் கேள்வி - நம் ஊரிலும் ஆம் ஆத்மி சாத்தியப்படாதா?

இந்த விருப்பம் நிறைவேறும் சாத்தியங்கள் என்ன என்று பார்ப்பதற்கு முதலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு வெளியே வளரக் கூடிய அனைத்திந்தியக் கட்சியாகப் பரிமாணம் எடுக்கக் கூடிய கட்சியா என்று பார்ப்போம்.

ஆம் ஆத்மியின் தேசியச் செயற்குழுவில் இருக்கும் மனிஷ் சிசோடியா, கோபால் ராய், சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா, குமார் விஸ்வாஸ், நவீன் ஜெய் ஹிந்த், தினேஷ் வகேலா, அஜித் ஜா, ஆனந்த் குமார், இலியாஸ் அஸ்மி, ஷாசியா இல்மி, ஹபுங் பயங்க், யோகேஷ் டாஹியா,எம்.பி.என்.பணிக்கர், அசோக் அகர்வால், கிரிஷ்காந்த் சவேடா, மாயாங்க் காந்தி, கேஷ் சின்ஹா, கிறிஸ்டினா சாமி என்று நீளும் 21 பேர் பட்டியலில் மூவரைத் தவிர, மீதி அனைவரும் வட இந்தியாவின் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முக்கியமான தலைவர்கள் என்று நால்வரைச் சொல்லலாம். அர்விந்த் கேஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண். இவர்கள் நால்வரும் இந்தி மொழியினர்தான்.

இந்திய அளவில் ஒரு கட்சி நாடு தழுவிய கட்சியாக வளர வேண்டுமானால், பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு வலிமையான உள்ளூர் தலைவர்கள் இருக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மத்தியத் தலைமை இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் வரலாம். ஆனால், நடைமுறையில் பெரும்பாலும் அது இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வருவோரின் தலைமையாகவே ஆக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் மட்டும்தான்

இன்று நாடு தழுவிய கட்சிகள் என்று சொல்லக்கூடிய நிலையில் இருப்பவை மிகச் சில. காங்கிரஸ், பா.ஜ.க, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே அவை. இவையும் தம்மை அனைத்திந்தியக் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் நடைமுறையில் பல மாநிலங்களில் இவற்றுக்கு எந்தச்செல்வாக்கும் கிடையாது. சில இடங்களில் பலவீனமாக இருந்தாலும்கூட, எல்லா மாநிலங்களிலும் ஓரளவேனும் இருக்கும்கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இதற்குக் காரணம், அதன் நூறாண்டு வரலாறு மட்டுமே. அந்நிய ஆட்சிக்கு எதிரான இயக்கமாக காங்கிரஸ் கட்சி உருவான காலத்தில், அதில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், அதை வளர்த்தவர்கள் பெரும்பாலானோர் இந்தி பேசும் மாநிலத்தவர் அல்ல. வங்காளம், பஞ்சாப், மராட்டியம், சென்னை ராஜதானி ஆகியவற்றிலிருந்தே அன்று பெருவாரியான போராட்டத் தலைவர்களும் சாத்வீகத் தலைவர்களும் உருவாகி வந்தார்கள்.

தேய்வுக்குக் காரணம்

இந்தி பேசும் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இத்துடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவென்றாலும், காந்தி, நேரு, படேல் போன்ற பெரும் ஆற்றல் மிகுந்தவர்கள் அங்கிருந்து வந்தவர்கள். மற்றவர்களுக்குத் தலைமை

தாங்கும் இடத்தைப் பெற்றிருந்தார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர், இந்தி பகுதித் தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாகி, இதர மொழித் தலைவர்களின் பலம், செல்வாக்கு காங்கிரஸில் குறையத் தொடங்கி, இந்திரா காந்தி காலத்தில் எல்லா வட்டாரத் தலைவர்களுமே முற்றிலும் முக்கியமற்றவர்களாக்கப்பட்டுவிட்டனர்.

இந்தி வட்டாரத் தலைமையும் பரவலானதாக இல்லாமல், ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இந்திய அளவில் காங்கிரஸ் தேய்வுக்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

இதை காங்கிரஸுக்குள்ளேயே முன்கூட்டி எதிர்பார்த்து, சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே கருத்து சொன்னவர்கள் இருந்தார்கள். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையே வேண்டும்; அந்த அடிப்படையில்தான் புதிய இந்தியா, புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றிக் கையெழுத்துப் போட்டவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ்காரர்கள்தான் - காமராஜர், திரு.வி.க, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, செங்கல்வராயன், டாக்டர் சுப்பராயன், வ.ரா, கல்கி, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ம.பொ.சி, இவர்களுடன் பாரதிதாசன், ரசிகமணி டி.கே.சி, கம்யூனிஸ்ட் ஜீவானந்தம். பலமான தேசிய இனங்களின் கூட்டமைப்

பாக இந்தியா இருக்க வேண்டும்; ஒற்றை தேசிய இனத்தின் ஆதிக்கத்தில் இருக்க முடியாது, இருந்தால் பலவீனப்படும் என்பதே அவர்களின் அன்றைய கருத்து.

காங்கிரஸ் இயக்கமே அப்போது நடைமுறையில் அப்படி இருந்ததினால்தான் நாடுமுழுவதும் அது செல்வாக்கோடு இருந்தது.

அந்த அணுகுமுறையைக் கைவிட்டது முதல் காங்கிரஸ் தேயத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த தேசிய இனங்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய, பிரதிபலிப்பதாகச் சொல்லக்கூடிய கட்சிகளின் உருவாக்கம் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. இதன் பிரதிபலிப்பாகவே இன்று மத்தியிலும் ஒற்றைக் கட்சி ஆட்சி நடத்த முடியாது, மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடுதான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கடிகாரத்தைத் திருப்பி வைப்பதுபோல இதை இனி திருப்பி வைக்க முடியாது.

சிக்கலில் பா.ஜ.க.

ஆனால், காங்கிரஸுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தக் கூடிய பா.ஜ.க. காங்கிரஸ் பாணியிலேயே தன்னை ஒற்றை அனைத்திந்தியக் கட்சியாகவே வளர்க்கவும் காட்டவும் முயற்சித்துவருகிறது. நடைமுறையில் இது காலாவதியாகிவிட்ட கருத்தியல் என்பதால், அதைச் செயல்படுத்துவது சிக்கலாகவே இருக்கிறது. பழைய கால காங்கிரஸைப் போல மாநிலங்களின் வட்டாரத் தலைவர்களைச் செல்வாக்குடையவர்களாக வைத்திருப்

பதன் மூலம், தன் எண்ணம் சாத்தியப்படும் என்று பா.ஜ.க. முயற்சிப்பதன் அடையாளங்கள்தான் எடியூரப்பா, சவ்ஹான், வசுந்தரா, ரமண்சிங், கல்யாண்சிங், நரேந்திர மோடிஎல்லாமே. ஆனால், வட்டாரத் தலைவர்

கள் மத்தியத் தலைமைக்குச் சவாலாக காங்கிரஸில் ஆனதைப் போன்ற அதே சிக்கலை பா.ஜ.க-வும் சந்திக்க வேண்டி வந்திருக்கிறது. உதாரணம்: எடியூரப்பா.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான், ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் மாற்றாக டெல்லியில் வந்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ், பா.ஜ.க. போல அனைத்திந்தியக் கட்சி ஆக முடியுமா என்ற கேள்விக்கு உடனடியான பதில்:

அனைத்திந்தியக் கட்சியாக இருக்க காங்கிரஸும் பா.ஜ.க-வுமே திணறிக்கொண்டிருக்கின்றன என்பதேயாகும்.

மாநிலக் கட்சி

தவிர, ஆம் ஆத்மி கட்சி அடுத்த மக்களவைத் தேர்தலில், பல மாநிலங்களிலிருந்து போட்டியிடப்போவதாகத் தெரி

வித்திருந்தாலும், இதுவரை அது டெல்லியின் மாநிலக் கட்சியாகவே தன்னை நடைமுறையில் வைத்திருக்கிறது. அதிகபட்சமாக, அது இந்தி பேசும் ஒரு சில மாநிலங்களின் கட்சியாகவே தன்னை அடையாளம் காட்டும் நிலையிலேயே இப்போதைக்கு இருக்கிறது.

டெல்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி வென்ற வழிமுறைகளைப் பார்த்தாலே, அது மாநிலக் கட்சியாகச் செயல்பட்டே வென்றிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். அதன் முக்கியத் தலைவர்கள் எல்லாரும் டெல்லி மாநிலப் பகுதிகளிலேயே பல வருடங்களாகத் தொண்டு நிறுவனக் களப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு

இயக்கத்தின் முதல் அத்தியாயம் முடிந்துபோய் ஆம் ஆத்மி கட்சி உருவானதும், அது மேற்கொண்ட கள நடவடிக்கைகள் எல்லாம் டெல்லி மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பானவையே ஆகும். டெல்லி பேருந்தில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரம் நாடு முழுவதும்

மீடியாவினால் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், அது டெல்லி வட்டாரத்தில் மீடியா உதவி இல்லாமலே பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாகும். அதில் தொடங்கி, டெல்லி மக்களின் மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், குடிசைப் பகுதிகளை ஒழுங்குபடுத்தி நிரந்தரமாக்குதல் முதலிய பிரச்சினைகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சியால் கையாளப்பட்ட உள்ளூர் பிரச்சினைகளே ஆகும். சட்டப் பேரவைத் தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளையே முன்வைக்க முடியும்.

ஆம் ஆத்மி கட்சி தோன்றி வளரும் சமயத்தில், அதற்கு வாய்ப்பாக அமைந்த ஆங்கில மீடியா கவனிப்புகளில்கூட, அர்விந்த் கேஜ்ரிவால் ஆங்கிலம் தெரிந்தவரானபோதும் ஆங்கிலக் கேள்விகளுக்கெல்லாம் ஆங்கில சேனல்களில் பெரும்

பாலும் இந்தியிலேயே பதில் அளித்துவந்தார். தன் உடனடி வாக்காளர்கள் டெல்லியில் இருக்கும் இந்தி பேசும் மக்கள் என்ற உணர்வே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

இப்போது ஆம் ஆத்மி கட்சி தன்னைப் பல மாநிலங்களில் விரிவுபடுத்திக்கொள்ள விரும்பினால், அர்விந்த் கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திரா போன்ற பலமான ஆற்றலுடைய உள்ளூர் தலைவர்களை, அதிலும் மக்களை ஈர்க்கும் ஆளுமை

உடையவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டறிந்தால் மட்டுமே கொஞ்சமேனும் வளர முடியும். இப்போதைக்கு ஆம் ஆத்மி கட்சியின் இதர மாநிலப் பிரதிநிதிகளைப் பார்க்கும்போது, அவர்கள் அந்தத் தகுதி உடையவர்களாகத் தெரியவில்லை. அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பத்தை முன்னிறுத்தியே கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் கட்சியை வளர்க்க முற்பட்டால், சோனியா, ராகுல், அத்வானி, மோடி, மாயாவதி போன்ற பிம்பங்களை முன்னிறுத்தி, மாநிலக் கிளைகளை அந்தக் கட்சிகள் எல்லாம் வளர்க்க முயற்சித்துத் தோல்வியடைந்துகொண்டிருக்கும் அதே விளைவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

இன்னொரு பக்கம், அர்விந்த் கேஜ்ரிவால் போன்ற பலமான தலைமைகள் வெவ்வேறு வட்டாரங்களில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்தாலும், அவர்களை இந்திரா காந்தியின் கால காங்கிரஸைப் போல நடத்தாமல், காந்தி-நேரு கால காங்கிரஸைப் போல (அதுவும் முற்றிலும் சரியான முன்மாதிரி அல்லதான்.) நடத்தும் பக்குவமும் முதிர்ச்சியும் ஆம் ஆத்மியின் மத்தியத் தலைமைக்குத் தேவைப்படும்.

நிலை என்ன?

எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சி ஊழல் எதிர்ப்பு, கட்சி நடத்துதல், பண விஷயங்களில் பகிரங்கத்தன்மை, எளிமை என்பதற்கு மேல் பல முக்கிய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் பிரச்சினைகளில் என்ன நிலை வைத்திருக்கிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் மீது தாக்குதல், இட ஒதுக்கீடு, ஆட்சி மொழிக் கொள்கை, கல்வி மொழிக் கொள்கை, மதவாதம், சாதியம் போன்றவற்றில் நிலை என்ன என்று அறிவிக்காமல், தமிழகத்தில் ஒரு அரசியலும் இயங்க முடியாது. இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய பிரத்தியேக விஷயங்களும் இந்திய அளவிலான பிரச்சினைகளும் ஆம் ஆத்மியால் கருத்து தெரிவிக்கப்படாமலே உள்ளன.

உண்மையில், ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் கிளைகள் தொடங்கி வளர்க்கப்பட வேண்டிய அனைத்திந்தியக் கட்சியாக ஆவதற்கான கட்சியும் அல்ல. அதற்கான தேவையும் இல்லை. ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தாக்கம். பொதுமக்களிடம் நேரடியாக உரையாடிக் கருத்துக் கேட்பது, கட்சி நிதி, நிர்வாகம்பற்றிய எல்லாத் தகவல்களையும் பகிரங்கமாக வைத்திருப்பது, எளிமை, நேர்மை, ஆடம்பரமற்ற நிர்வாகம் முதலிய அம்சங்களே இன்றைய அரசியலில் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. மக்கள் விரும்புவன என்ற கருத்தாக்கத்தின் ஓர் அடையாளமே ஆம் ஆத்மி.

இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உள்ளுர் இயக்கம், உள்ளூர் தலைமையின் கீழ் தோன்றி வலுவடைவதும் அதற்கு உதவுவதுமே ஆம் ஆத்மி கட்சியின் மெய்யான வெற்றியாக இருக்க முடியும். அப்படி உருவாகும் இயக்கங்களுடன் இந்தி மாநிலக் கட்சியாக இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கூட்டணி வைக்கலாம். அவற்றைத் தன் கிளையாக ஆக்கத் தேவையும் இல்லை.

ஒற்றைக் கட்சி இனி இல்லை

இந்தியாவில் ஒற்றைக் கட்சி மாற்று என்பது இனி இயலாதது. அது முடிந்துவிட்ட காலகட்டத்தின் வடிவம். வரவிருக்கும் நாட்களில், இந்திய அரசியலும் இந்தியச் சமூகமும் வேண்டி நிற்பது ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் ஊழலும் நேர்மையின்மையும் அராஜகமும் நிரம்பிய கட்சிகளுக்கு மாற்றான நேர்மையான, பகிரங்கமான, எளிமையான உள்ளூர் மாற்றுக் கட்சிகளாகும்.

அப்படி உருவாகிவரும் கட்சிகளின் கூட்டணியே நாளைய இந்தியாவை ஆளும் அணியாகவும் இந்தியாவை மெய்யான கூட்டமைப்பாக மாற்றுவதாகவும் இருக்கும். அதை நோக்கிய வழியைத் திறந்துவைக்க ஆம் ஆத்மி கட்சி பயன்பட்டால், அது கட்சி என்பதைத் தாண்டி கருத்தாக்கமாக இந்திய அரசியலில் தனி இடம் பெறும். ஒற்றைக் கட்சியாகத் தானே இருக்க முயன்றால் அது காங்கிரஸ், பா.ஜ.க. வழியில் சீரழிந்து, மங்கித் தேய்வதற்கான சாத்தியங்களே அதிகம்.

ஞாநி,மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர்

தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்