சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த, என் காதில் விழுந்த தகவல்கள் இவை: நமது வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 1,76,547. தொகை ரூ.31,000 கோடி. கடந்த 25 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கு மேல் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 61. தொகை ரூ.13,000 கோடி.
சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. சென்னை போட் கிளப் சாலையில் சொத்து வரி சதுர அடிக்கு ரூ. 4. அண்ணா நகரில் சதுர அடிக்கு ரூ. 1.25.
அண்ணா நகரில் இருக்கும் எனது சகோதரியின் வீட்டில் வேலை செய்யும் பெண் கூவத்துக்கு அருகில் இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறார். குடிசையின் பரப்பு ஒன்பதுக்கு எட்டு சதுர அடி. கழிப்பறை வசதி கிடையாது. வாடகை ரூ.3,000. சதுர அடிக்கு வாடகை ரூ. 40-க்கும் மேல். இணையத்தில் தேடினால், அண்ணா நகரில் நடுத்தரக் குடும்பத்தினருக்கான வீடுகள் மாதம் ரூ.20,000-த்துக்கு வாடகைக்குக் கிடைக் கின்றன. 1,000 சதுர அடி. இரண்டு படுக்கை அறைகளுடன். சதுர அடிக்கு வாடகை ரூ. 20.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி 10% உயர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.18,000 கோடிக்கும் மேல். இந்த வருடம் மட்டும் 18% உயர்ந்திருக்கிறது. மொத்த செலவு ரூ. 34,000 கோடிக்கும் மேல். மாநில அரசு ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.70,000 கோடிக்குக் குறையாது. அரசுக்குப் பணத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் தகவல்கள் நமக்குத் தெரிவிப்பது என்ன? வங்கி ஊழல்களில் இழந்த பணத்தில் 25%தான் மீட்க முடியும் என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிடப் பெரிய ஊழல்களில் எந்தத் தொகையையும் மீட்க முடியாமலேயே போகலாம். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் நாடகம் ஆமையே ஆச்சரியப்படும் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக: ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் கடவுளைச் சந்திக்க 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சென்று விட்டார். வழக்குகள் இன்னும் தொடர்கின்றன.
ஊழல் நம் மீது நடத்தப்படும் மிகப் பெரிய வன்முறை என்பதில் நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அரசு பேரூழல் செய்பவர்களின் தரப்பில் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். ஆனால், நமது வட்டத்துக்கு வெளியே இயங்குபவர்கள் மீது நடக்கும் மறைமுகமான வன்முறைகளைப் பற்றி நமக்கு எந்தப் பிரக்ஞையும் கிடையாது. மாறாக, அரசு அவர்களுக்காகக் கொண்டுவரும் திட்டங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கடுமையாக விமரிசனம் செய்துவருகிறோம். பணத்துக்காக அரசு வீட்டுவரியை 50 பைசா உயர்த்தினால் புரட்சி வெடிக்கும் என்று பயமுறுத்துகிறோம். போட் கிளப்பில் வாழ்பவர்களுக்கு அண்ணா நகரில் இருப்பவர்களைப் பற்றிக் கவலை கிடையாது. அண்ணா நகரில் இருப்பவர்களுக்கு மாதவரத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. அருகில் இருக்கும் குடிசைகளில் வாடகை என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. ஆனால், வீட்டு வேலை செய்பவர் சம்பளம் அதிகம் கேட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.
இந்திய மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல நிலைகளில், பல பரிமாணங்களில் இயங்குகின்றன. அரசு அதிக மாறுதல்களை விரும்புவதாகத் தெரியவில்லை. மிக்க வசதி படைத்தவர்க ளுக்கு அரசும் அரசு இயந்திரங்களும் மிகுந்த முனைப்போடு உதவி செய்கின்றன. மேல் நடுத்தர வகுப்பினர்களிடம் அரசுக்குப் பரிவு இருக்கிறது. ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. கீழ் நடுத்தர மக்கள் சார்பிலும் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கென்று தனியான அடையாளம் ஏதும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஊக்கத்தொகை, மிகை நேரக் கூலி போன்ற அதிக வருவாய்களை எதிர்பார்த்துக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இவர்க ளுக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கூறிய அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நமது மக்கள்தொகையில் 25% அல்லது 30% இருப்பார்கள்.
இவர்கள் எல்லோரும் இயங்குவது ஒரு தளத்தில் என்று வைத்துக்கொண்டால், மற்றொரு தளத்தில், பெரிய ஆதரவு ஏதும் இல்லாமல், அரசு மிகுந்த தயக்கத்தோடு தரும் சிறிய சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றால் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற கனவோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் நமது நாட்டின் பெரும் பகுதியினர்.
நமது தளத்துக்குள் உராய்வுகள் இருந்தாலும், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஏழைகளாகவே, அதிக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால் நமக்கு ஆதாயம். அரசுக்கும் அதிகத் தொல்லைகள் இல்லை.
நம்மில் பலருக்கு - அரசு ஊழியர்கள் உட்பட - இந்தியாவில் அரசு நிர்ணயித்திருக்கும் சராசரி தினக்கூலி என்ன என்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கிராமங்களில் வேலை செய்யும் பயிற்சி பெறாத தொழிலாளி ஒருவரது சராசரித் தினக்கூலி 2012-ல் ரூ. 145. இது 2004-ல் ரூ. 70. எட்டு வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தினக்கூலியாக வேலை செய்பவருக்கு மாதம் அதிகபட்சமாக 25 நாட்கள்தான் வேலை கிடைக்கும். எனவே, அவரது சராசரி மாதக் கூலி ரூ. 3,750.
இனி, அரசுக் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரை எடுத்துக் கொள்்வோம். 2004-ல் அவரது சம்பளம் சுமார் ரூ. 15,000. 2012-ல் குறைந்தது ரூ. 50,000. எட்டு வருடங்களில் மூன்று மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அரசுக் கல்லூரி ஆசிரியர் தினக் கூலி வேலை செய்பவரைவிட 13 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். இது எங்கள் அறிவுக்குக் கொடுக்கும் விலை என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் உதாரணத்தைக் காட்டலாம். அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்குச் சுமார் 15,000 டாலர்கள். அங்கு கல்லூரி ஆசிரியர்களின் (Assistant Professors) ஆண்டு சராசரி ஊதியம் 55,000 டாலர்கள். வித்தியாசம் நான்கு மடங்குக்கும் குறைவுதான். நியூயார்க்கில் துப்பரவுத் தொழிலாளரின் ஆண்டு வருமானம் ஆரம்பத்தில் 33,000 டாலர்கள். ஐந்து வருடங்களில் 70,000 டாலர்களாக உயர்கிறது. சென்னையில் துப்புரவுத் தொழிலாளரின் தினக்கூலி ரூ. 235.
அகவிலைப்படி ஆண்டுக்கு 18% உயர்த்தியிருப்பது போதாது என்று சொல்லும் எனது நண்பர்களில் பலர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது என்று என்னுடன் வாதிடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மாறாமல் இருந்தால்தான் நமக்கு வசதி. நாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை!
பி.ஏ. கிருஷ்ணன், கட்டுரையாளர், எழுத்தாளர். பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குநர் (ஓய்வு) - தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago