இரவு நேரக் குளிரில் வீடற்றவர்கள் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருப்பது தேசிய அவமானம்.
இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலம். ஆண்டுதோறும் இந்தக் குளிர் காலங்களில் குளிரினால் ஏற்படும் இறப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தவிர்க்க மாநில அரசுகள் இரவுக் காப்பகங்கள் அமைத்து வீடற்ற மக்களைக் காப்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல். தொடுத்திருக்கும் ஒரு வழக்கு இன்னமும் நடைபெற்றுவருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ல் ‘ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 27.12.2012-ல், அனைத்து மாநிலங்களும் வீடில்லாத மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன்படி உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது. ஒரு லட்சம் மக்கள்தொகை கொண்ட ஊருக்கு ஒன்று என்ற விகிதத்தில் இரவுக் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மட்டும் வீடற்றவர்கள் சுமார் 39,000 பேர் இருப்பதாகவும் இவர்களுக்கு 231 இரவு காப்பகங்கள் தேவை என்றும் தற்போது 84 காப்பகங்கள் நல்ல முறையில் நிரந்தரக் கட்டமைப்பில் இயங்குவதாகவும், அதில் சுமார் 17,000 பேர் தங்கியுள்ளதாகவும் இம் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்…
சென்னையில் சென்ற செப்டம்பர் மாதம் தண்டையார் பேட்டை, ராயபுரம் ஆகிய இரண்டு மண்டலங்களில் மட்டும் மாநகராட்சியின் சார்பில் வீடற்ற மக்களின் கணக்கெடுப்பை நடத்தியதில் மொத்தம் 1,774 பேர் சாலையோர நடைபாதைகளில் உறங்குவது அறியப்பட்டது. இதில் 689 பேர் பெண்கள், 676 பேர் ஆண்கள், குழந்தைகள் 409 பேர். இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் நடைபாதையில் வசிக்கிறார்கள். இவர் களில் பெரும்பாலான நபர்களுக்கு இரவுக் காப்பகம் என்று ஒன்று இருக்கிறது என்றுகூட தெரியவில்லை. இந்தக் கணக்கெடுப்பின்படி இரவில் நடைபாதையில் தங்கும் ஆண்களில் 90% பேர் மது அருந்துபவர்கள் என்பதால் இரவுக் காப்பக விதிப்படி இவர்களை அங்கு தங்க வைக்க முடியாது என்பது முக்கியச் செய்தி.
சென்னையில் இரவுக் காப்பகங்கள் அமைப்பதற்காக, பயன்பாடு இல்லாமல் இருக்கும் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் கட்டிடங்களைப் பயன்படுத்திக்கொள்ள இம்மாதம் 19-ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2014-15-ம் நிதியாண்டில் 42 இரவுக் காப்பகங்கள் கட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் 15 மண்டலங்களிலும் தற்போது 28 இரவுக் காப்பகங்கள் செயல்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களைக் கல்வி தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற நடைமுறை இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காகப் பயனற்ற பள்ளிக்கூடக் கட்டிடங்களை நகர்மன்றத் தீர்மானத்தின் மூலம் இரவுக் காப்பகமாகப் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முனைந்துள்ளது.
அரசு நடவடிக்கை
மேற்படி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டிலிருந்தே நடந்துகொண்டிருந்தாலும் 27.01.2010-ம் தேதியன்றுதான் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை வழங்கியது. இதன்படி மாநில அரசுகள் இரவுக் காப்பகங்கள் அமைப்பது தொடர்பான தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. இது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மன்றங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சென்னையிலுள்ள தலைமை அலுவலகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக இரவுக் காப்பகம் அமைத்து அதற்கான புகைப்படத்தைச் சென்னைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை குளிரினால் அதிகம் பாதிக்கப்படும் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு போன்ற ஊர்களின் உள்ளாட்சி மன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
சுதந்திர வாழ்க்கை
கொடைக்கானலில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை அதிகமாகக் குளிரும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. எனவே, கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் இரவுக் காப்பகம் அமைப்பதற்காக நகராட்சி ஆணையாளரும் மற்ற வெளி அலுவலர்களும் வீடில்லாமல் தெருவில் தங்குபவர்கள்பற்றி அறிந்து கொள்வதற்காக ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தனர். இந்தக் கடையில் ஒருத்தர் இரவில் படுப்பார் என யாராவது சொன்னால் உடனே இரவில் அந்தக் கடைக்குச் சென்று பார்த்தால் அன்றிரவு அங்கு யாரும் வந்து படுப்பதில்லை என்று தெரியவே இரவு 12 மணியாகிவிடும். அதற்குப் பிறகு அந்த அலுவலர் குளிரில் வீட்டுக்குச் செல்ல வேண்டும். வெளி அலுவலர்கள் அனைவரும் அலுவலகப் பணிகளை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதற்கே இரண்டு மூன்று நாட்கள் அலைந்து கடைசியில் தெருவில் படுப்பவர்கள் நால்வரை அழைத்துக்கொண்டு வந்தனர். அந்த நால்வருமே கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து போகும் இடங்களில் பிச்சையெடுப்பவர்கள். இரவில் நகரின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பின்னர், ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகராட்சிக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதி இரவுக் காப்பகமாக மாற்றப்பட்டது.
வீடற்றவர்களுக்கு புதிய கம்பளி பெட்ஷீட் தலை யணை அத்துடன் காலை உணவு ஒரு ஹோட்டலில் மதியம் ஒரு ஹோட்டலில் இரவு ஒரு ஹோட்டலில் என தினமும் இரவுக் காப்பகத்துக்கே தொடர்ந்து கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகல வசதிகளுடன் கூடிய இரவுக் காப்பகம் நகர்மன்றத் தலைவரின் தலைமையில் திறக்கப்பட்டது.
விழா முடிந்து புகைப்படம் எடுத்து சென்னைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தால் ஒருவருமே அங்கில்லை. சரி, தங்களது தொழிலுக்குச் சென்றுள்ளார்கள்போலும், இரவு வருவார்கள் என்று பார்த்தால் அன்றிரவு யாருமே வரவில்லை. கம்பளி தலையணையுடன் நால்வரும் ஓடிவிட்டார்கள். மறுநாள் ஆணையாளரின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி மீண்டும் வலைவீசிக் கண்டுபிடித்தால் நால்வரில் ஒருவருக்கும் இரவுக் காப்பகத்தில் தங்கப் பிடிக்கவில்லை.
கட்டாயப்படுத்தி மீண்டும் அங்கு எங்களைக் கொண்டுசென்றால் நாளையே திரும்ப இங்கே வந்து விடுவோம் என்று அவர்கள் உறுதியாகச் சொல்லும் போது உள்ளாட்சி அலுவலர்களால் ஏதும் செய்ய இயலாத நிலை. எங்களுக்கு இந்த வாழ்க்கைதான் பிடித்துள்ளது என்று கூறி இரவுக் காப்பகத்துக்கு வருவதற்கு மறுத்துவிட்டார்கள்.
திட்டங்களும் நடைமுறையும் எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் அரசின் தலையாய பணியாக இருக்க முடியும். அவர்களுக்கான தேவையை யோசித்து வருகிறோம்!
- வீ. சக்திவேல்,
கொடைக்கானல் நகராட்சிக் கணக்காளர் (ஓய்வு), தொடர்புக்கு: sundarisakthi@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago