மனிதன் என்பதற்காகத் தூக்கிலிடப்பட்டவன்

By செய்திப்பிரிவு

வெண்டி டோனிகரின் புத்தகத்தை பெங்குவின் பதிப்பகத்தார் கூழாக்கியதைப் பற்றி பல சர்ச்சைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் எழுத்துச் சுதந்திரத்துக்கு இடப்பட்டிருக்கும் பெரிய தளைகளில் ஒன்றாக இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சில பிரிவுகள் இருக்கின்றன. அவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் குரலெழுப்பிவரு கிறார்கள். ஆனால், இதே சமயத்தில் ஈரான் நாட்டில் கவிஞர் ஒருவர் தூக்கி லிடப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தைப் பற்றி அதிகம் பேசப்படாதது ஆச்சரி யத்தை அளிக்கிறது.

எழுத்துக்கு எதிரான போர்

ஈரான் பல ஆண்டுகளாக எழுத்துக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. ‘சாத்தானின் பாடல்கள்' (த சாட்டானிக் வெர்ஸஸ்) என்ற புத்தகத்தை எழுதிய சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவர்களுக்கு ஈரான் வெகுமதி அளிப்பதாகத் தெரிவித்திருந்தது நமக்குத் தெரியும். இந்த வெகுமதி 1989-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி ஆயத்தொல்லா கொமேனியால் அறிவிக்கப்பட்டது.

2.8 மில்லியன் டாலர்களாக இருந்த வெகுமதித் தொகை 2012-ம் ஆண்டு 3.3 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கப் பட்டது. 25 ஆண்டுகள் முடிந்த பிறகும் இந்த அறிவிப்பு இன்னும் அமலில் இருப்பதாக 14 பிப்ரவரி 2014-ல் ஈரானின் மதத் தலைவர்களில் ஒருவரான அஹமத் கடாமி அறிவித்திருக்கிறார். ருஷ்டி மன்னிப்புக் கேட்டாலும் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட மாட்டாது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

1988 -1998-ம் ஆண்டுகளில் ஈரானில் 80-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கவிஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். கொலை களைப் பற்றிப் பேசுவதே ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இவற்றைப் பற்றி ஆராய முற்பட்ட சையது ஹஜாரியான் என்ற ஈரானிய அறிஞர், தலையில் சுடப்பட்டு, சரியாகப் பேச முடியாமல் சக்கர நாற்காலியில் இயங்குகிறார்.

பொது இடங்களில் தூக்கு

ஈரானில் குற்றவாளிகள் என்று அரசால் கருதப்படுபவர்கள் பொது இடத்தில் தூக்கிலிடப்படுகிறார்கள். குற்றவாளியின் கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டு, அவர் கிரேனால் தூக்கப்படுவார். சில இடங்களில் தூக்குமேடைகளும் அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, போன வாரம் 13-ம் தேதி அன்று இரு குற்றவாளிகள் ஷிராஸ் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். இன்றைய ஈரானின் அரசு ஒரு மிதமான அரசு என்று சொல்லப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த அரசுதான் ஒரு கவிஞனைத் தூக்கிலிட்டிருக்கிறது. பொதுஇடத்தில் அல்ல, ரகசியமாக.

ஈரானின் அரேபிய மக்கள்

தூக்கிலிடப்பட்ட கவிஞருக்கு வயது 32. அவரது பெயர் ஹஷெம் ஷபானி. அரேபியர். அரேபிய மொழிக் கவிஞர். ஈரானில் பேசப்படும் மொழி 'ஃபார்சி' என்று அழைக்கப்படும் பாரசீக மொழி. இங்கு வசிப்பவர்களும் பாரசீகர்கள்தான். இராக்கை ஒட்டிய குசெஸ்தான் என்ற மேற்குப் பகுதியில் அரேபியர்கள் வசிக்கிறார்கள். ஈரானின் மக்கள்தொகையில், அரேபிய வம்சாவளியினர் மூன்று சதவீதத்திலிருந்து எட்டு சதவீதம் வரையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா பிரிவைச் சார்ந்தவர்கள். பலர் நகரங்களில் கூலி வேலை செய்கிறார்கள். குசெஸ்தானில் இருப்பவர்கள் விவசாயிகள் அல்லது ஆடு மேய்ப்பவர்கள்.

ஈரானைப் போல அதன் அண்டை நாடான இராக்கிலும் பெரும்பாலானோர் ஷியா பிரிவைச் சார்ந்தவர்கள். ஆனால், சதாம் ஹுசேன் காலத்தில் இரு நாடுகளுக்கும் கடுமையான பகைமை இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே 1980-களில் நடந்த போரில் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இராக் ஒரு அரேபிய நாடு என்பதால், அந்த நாட்டை ஆதரிப்பதாக ஈரானிய-அரேபியர்கள்மீது சந்தேகப் பார்வை விழுந்தது. பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அன்று தொடங்கி இன்று வரை ஈரானில் அரேபியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அரேபியக் கவிஞர்

ஹஷெம் ஷபானி ‘அஹ்வாஸி' என்று அழைக்கப்படும் அரேபிய மக்களுக்காகக் குரல்கொடுத்தவர். வன்முறை வேண்டாம், அமைதியாகப் போராடலாம் என்று சொன்னவர். தொலைக்காட்சி ஒன்றில் அவர் தீவிரவாதிகளுக்குத் துணைபோனேன் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறப்படு கிறது. ஆனால், சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றில் தான் எப்படித் துணை செய்தேன் என்பதைக் கூறுகிறார்:

என்னுடைய மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதையும் தூக்கிலிடப் படுவதையும் பார்த்துக்கொண்டு நான் பேசாமல் இருக்க முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் சுதந்திரமாக எல்லா உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். எனது மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை எதிர்கொள்ள நான் எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை– எனது பேனாவைத் தவிர.

ஷபானி அரேபியக் கவிஞர் மட்டு மல்ல, அவர் பாரசீக மொழியிலும் கவிதை எழுதியிருக்கிறார். மனைவியையும் ஒரே குழந்தையையும் விட்டுச்சென்றிருக்கும் அவர், சிறை செல்லும் வரை, ஈரான்–இராக் போரில் போர் வீரராகப் பணிபுரிந்தபோது, ஊனமுற்ற தனது தந்தையையும் கவனித்துக்கொண்டிருந்தார். மாணவர் கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் பல போராட்டங்களில் கலந்துகொண்ட அவர் ‘பேச்சுவார்த்தைக் கழகம்' (டயலாக் இன்ஸ்டிட்யூட்) என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

அவர் தூக்கிலிடப்படுவதுபற்றி அவரது குடும்பத்துக்கு எந்தத் தகவலும் கிடையாது. அது நடந்து சில நாட்களுக்குப் பின்புதான் அவரது மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு புதைக்கப்பட்டிருக்கிறார் என்பது இன்றுவரை அவருடைய குடும்பத்துக்குத் தெரியாது.

கவிதை இறைவனுக்கு எதிரானதா?

ஷபானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்குக் காரணம், அவர் ‘இறைவனுக்கு எதிராக'ப் போர் தொடுத்ததே என்று சொல்லப்படுகிறது. கவிதை இறைவனுக்கு எதிரானது என்று பல ஆட்சியாளர்கள் நினைக்கலாம். ஆனால், கவிதை எழுதியதற்காகக் கவிஞனைக் கொல்வது ஈரானில்தான் நடக்கும் என்று தோன்றுகிறது. மேற்கத்தியத் தலைவர்கள் இதைப் பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஏனென்றால், இன்றைய ஈரானிய அரசு “நாங்கள் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம்” என்று அறிவித்துவிட்டது. ஈரானிய அரசின் நட்பு அவர்களுக்குத் தேவை.

ஷபானிக்குத் தான் உயிரோடு திரும்ப வர மாட்டோம் என்பது தெரிந்தி ருக்கிறது. அவரது கவிதை இது:

நான் இறக்க வேண்டும் என்பதற்கு ஏழு காரணங்கள்:

ஏழு நாட்கள் அவர்கள் ஓங்கிய குரலில் சொன்னார்கள்

நீ இறைவனுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறாய் என்று

சனிக் கிழமை - நீ ஓர் அரேபியன்

ஞாயிற்றுக்கிழமை - நீ ஓர் அஹ்வாசியன்

திங்கள்கிழமை - நீ ஓர் ஈரானியன் என்பதை நினைவில் வைத்துக்கொள்

செவ்வாய்க்கிழமை - நீ புனிதப் புரட்சியைக் கேலிசெய்கிறாய்

புதன்கிழமை - நீ மற்றவர்களுக்குத் துணையாகக் குரல்கொடுக்கவில்லையா?

வியாழக்கிழமை - நீ ஒரு கவிஞன், பாடகன்

வெள்ளிக்கிழமை - நீ ஒரு மனிதன் - இது போதாதா இறப்பதற்கு?

- பி.ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்