மெல்லத் தமிழன் இனி...! 18 - ஏழு தலைமுறை தாண்டியும் தாக்கும் ஏவுகணை!

By டி.எல்.சஞ்சீவி குமார்

கடந்த அத்தியாயத்தில் அந்த இளைஞருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை; ஆனால், அவர் ஏன் மது அருந்துகிறார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்களாலும் சொல்ல இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்துவிட்டு நிறைய பேர் தொடர்புகொண்டு காரணங்களை அடுக்கினார்கள். பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டது ‘திமிர்’.

இதுகுறித்து டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டேன். “அப்படிச் சொல்ல வேண்டாம். உண்மையில், மிகவும் பரிதாபத்துக்குரியவர் அவர். அவர் ஏன் மது அருந்துகிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் ஒரு குடிநோயாளி என்பது மட்டுமே உண்மை. அந்தரீதியில் மட்டுமே அவரை அணுக வேண்டும். அந்த இளைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே ஒருவர் இரு வகைகளில் மதுவுக்கு அடிமையாகிறார். ஒன்று, தனது உடல், மனம், மூளை சார்ந்து. மற்றொன்று, மரபு வழியாக. அதே சமயம், மது வாசனையே அறியாத குடும்பங்களிலும் குடிநோயாளிகள் உருவாவதுண்டு. குடித்தே குட்டிச்சுவரான குடும்பங்களிலும் குறிஞ்சிப் பூக்கள் பூப்பதுண்டு. எனவே, இது பெரும்பான்மை மருத்துவக் கணக்கீடு மட்டுமே.”

உடல்ரீதியாக எப்படி அடிமையாகிறார்?

“நமது மூளையில் பில்லியன் கணக்கில் நரம்புகள் உள்ளன. அத்தனையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பவை. ஒவ்வொன்றுக்கும் இடையே கற்பனைக்கு எட்டாத வேகத்தில் தகவல் பரிமாற்றம் பறக்கும். இந்தத்

தகவல் பரிமாற்றத்துக்காக மூளையில் பல்வேறு வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. அதில் ஒன்றுதான் ‘டோப்பமின்’ (Dopamine).

மூளையின் கீழ்ப் பகுதியில் இருபுறமும் தலா ஒரு நரம்புத் தொகுப்புகள் இருக்கின்றன. இதன் பெயர் ‘நியூக்கிளியஸ் அக்கும்பென்ஸ்’ (Nucleus accumbens). நாங்கள் இந்த நரம்புத் தொகுப்புகளை ‘ரிவார்டு சென்டர்’ அல்லது ‘பிளஷர் சென்டர்’ என்போம். ஒரு செயலை ஊக்குவித்து, மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டிவிடக்கூடியது என்பதால் அந்தப் பெயர். இது படிப்பது முதல் குடிப்பது வரை அனைத்துச் செயல்களுக்கும் பொருந்தும்.

பொதுவாகவே, உற்சாகமான நேரங்களில் ‘டோப்பமின்’ சுரக்கும். அப்படியானால் மது அருந்தும்போது சொல்லவா வேண்டும். மிக, மிக அதிகமாகச் சுரக்கும். அப்போது மூளை நரம்புகளில் பல மடங்கு அதிகமாக வேதியியல் மின்தூண்டல் ஏற்படும். உற்சாக மிகுதியில் ஒவ்வொரு மூளை நரம்பும் தங்களின் வால் பகுதியை மற்றொரு நரம்பின் வாலுடன் உரசி உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்கின்றன. குடிப்பவர்கள் ‘சியர்ஸ்’ சொல்வதைப் போல. சுருக்கமாகச் சொல்வதென்றால் மூளையின் அத்தனை நரம்புகளும் கெட்ட ஆட்டம் போடும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் போதையில் ஆட்டம் போடுவது, சத்தமாகப் பாட்டுப் பாடுவது, பக்கத்தில் இருப்பவருக்கு முத்தம் கொடுப்பது, கடித்து வைப்பது... இன்ன பிற சேட்டைகள் எல்லாம் நடப்பது இப்போதுதான். தான் ஆடாவிட்டாலும் மூளை நரம்பு ஆட வைக்கும்.

கருவாட்டுச் சுவை கண்ட பூனை மீண்டும் சுற்றிச் சுற்றி வரும் என்பார்களே, அப்படித்தான் மூளை நரம்புகளும். ஒருமுறை மது அருந்தப் பழகிவிட்டீர்கள் என்றால் ‘நியூக்கிளியஸ் அக்கும்பென்ஸ்’ அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. நீங்கள் மறுத்தாலும், ‘இன்னைக்கு ஒரு நாள் மட்டும்’ என்று கெஞ்சும். ‘சாமியே சாராயம் குடிக்குது’ என்றெல்லாம் சொல்லிப்பார்க்கும். இல்லாத காரணங்களைச் சொல்லி, இழுத்துக்கொண்டு போய் மதுக்கூடத்தில் நிற்க வைக்கும். இந்த இடத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு தப்பித்தால் உண்டு. இதில் நிரந்தரமாகக் கட்டுப்படுத்திக்கொண்டு தப்பித்தவர்களும் உண்டு. பாதாளத்துக்குள் விழுந்தவர்களும் உண்டு.

இதில் இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள். ‘அவ்வப்போது வகையினராம்’ அவர்கள்! மனைவி ஊருக்குப் போனால் மட்டும், சுற்றுலா சென்றால் மட்டும், காதுகுத்து, கடாவெட்டுக்கு மட்டும், ஞாயிற்றுக் கிழமை மட்டும் என்று சொல்லும் வகையினர். இவர்கள், தங்களை சமூக ‘குடி’மகன்கள் (சோஷியல் டிரிங்கர்ஸ்) என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். அதாவது, சமூக குடிநோயாளிகள். நோயாளிகள் என்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது!”

மரபு வழிக் குடிநோயாளிகள்!

“இரண்டாவதாக, ஒருவர் மரபுரீதியாகவும் குடிநோயாளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்று இவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஒருவரின் ரத்தம் மற்றும் ரத்தக்கிளை உறவுகளில் தாய், தந்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டனுக்குக் குடிநோய் இருந்திருந்தால்கூட, வாய்ப்பு அமையும் பட்சத்தில் அவரும் எளிதில் குடிநோயாளியாக ஆகக்கூடும். அதாவது, மதுக்கடையைப் பார்த்தவுடன் எளிதில் அது அவரை ஈர்க்கக்கூடும்.

தோல் வியாதிகள், நீரிழிவு, ரத்தக் கொதிப்புபோல குடிநோயும் தலைமுறை தாண்டித் தாக்க வல்லது என்பது மட்டும் நிஜம். பொதுவாக, மரபுக் கோட்பாடுகளை அறிவியல்ரீதியாக எளிதாக விளக்க முடியாது. மிகவும் சிக்கலானது. ‘பெத்தவங்க பாவம் புள்ளைகளைப் போய்ச்சேரும்’ என்பார்களே, அப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் மது அருந்தும் பாவம் உங்கள் ஏழாம் தலைமுறையைக்கூட அழிக்கக்கூடும்”என்றார்.

அந்தத் தந்தையைத் தொலைபேசியில் அழைத்து “உங்கள் தலைமுறையில் யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்ததா?” என்று கேட்டேன். “சின்னத் தாத்தாவுக்கு” என்றார்!

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்