வரலாறு எப்படிக் கருணை காட்டும் சிங் அவர்களே?

By க.திருநாவுக்கரசு

பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று செய்த முழக்கம், வரலாற்றில் அழியா இடம்பெற்றுவிட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அன்றைய பாட்டிஸ்டா சர்வாதிகார அரசு தன்னைத் தண்டித்தாலும் அதற்கெதிரான தனது போராட்டத்தை எதிர்காலத் தலைமுறையினர் புரிந்துகொள்கிறபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தான் விடுவிக்கப்படுவேன் என்ற காஸ்ட்ரோ வின் நம்பிக்கையை வெளிப்படுத்திய வாசகம் அது.

வரலாற்றைக் கட்டுப்படுத்துபவர்கள்

வரலாற்றில் இன்று போற்றப் படுகிறவர்களில் பலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்பட்டதேயில்லை; தாங்கள் வாழ்ந்த காலத்தில் போற்றப்பட்டவர்களில் பலர் வரலாற்றில் அடிக்குறிப்பாகக்கூட இடம்பெற்றதில்லை. வரலாற்றில் போற்றப்படுகிறவர்களே போற்றுதலுக்குரியவர்கள் என்பதல்ல இதன் அர்த்தம். ஏனெனில், ஜார்ஜ் ஆர்வெல் கூறியதைப் போல, “நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்களே கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.” அதாவது, அந்தந்தக் காலகட்டத்தின் போது மேலாண்மை செலுத்தும் அறிவுஜீவி வர்க்கத்தினரால் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. ஆனால், வரலாறும் நிரந்தரமானது அல்ல; மாறாக, அது புதிய தரவுகளின் அடிப்படையில் காலந்தோறும் தொடர்ச்சியாக மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு மனிதன் அல்லது நிகழ்வுபற்றிய சமகால மதிப்பீட்டுக்கும் வரலாற்றின் மதிப் பீட்டுக்கும் பல சமயங்களில் பெரும் வேறுபாடு காணப்படுவதற்கு இதுவே காரணம். ஆகவே, தங்கள் சமகாலத்தவரால் தூற்றப்படுகிற அல்லது புறக்கணிக்கப்படுகிற பலரும் வரலாற்றைத் துணைக்கு அழைப்பதில் ஆச்சர்யமில்லை.

வரலாற்றின் முதல் வரைவு

சமகாலத்திய ஊடகங்களுடன் ஒப்பிடுகிறபோது வரலாறு தன்னிடம் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று சமீபத்தில் ஊடகவியலாளர்களுடனான தனது சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். நேர்மைத் திருவுரு என்று ஊடகங்களால் தொடக்க காலத்தில் வர்ணிக்கப் பட்ட மன்மோகன் சிங், இன்று ஊழலுக்குத் துணைபோனவர் என்று வர்ணிக்கப்படுகிறார். மிகச் சிறந்த பொருளாதாரப் பேராசிரியராக, சிறந்த நிர்வாகியாக அறியப்பட்ட அவர், இந்தியாவின் ஆக மோசமான பிரதமர் என்று வர்ணிக்கப்படுகிற நிலைக்கு இன்று தாழ்ந்திருக்கிறார். பத்திரிகைச் செய்திகள் வரலாற்றின் கரடுமுரடான முதல் வரைவு என்று சொல்லப்படுகிறது. முதல் வரைவில் செய்யப்பட்ட மதிப்பீடானது, மேலும் மேலும் ஆய்வுகளால் பட்டைதீட்டப்பட்ட இறுதி வரைவில் முற்றிலுமாக மாறுதலுக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது என்றாலும், இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில் அது மிகவும் குறைவு. மன்மோகன் சிங் குறித்த இன்று செய்யப்படும் ஒரு முழுமையான, நேர்மையான மதிப்பீடே வரலாற்றின் மதிப்பீடாகவும் இருக்கும்.

சிங் ஆட்சி: ஒரு மதிப்பீடு

சிங்கின் ஆட்சியை இரண்டு தளங்களில் ஒருவர் மதிப்பீடு செய்யலாம்: ஒன்று, அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள். இரண்டு, அவரது ஆட்சி நிர்வாகம். இன்று ஊடகங்களால் அவர் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் அவரது நிர்வாகத்தின் நேர்மையின்மைகுறித்ததே தவிர, அவரது பொருளாதாரக் கொள்கைகள் குறித்ததல்ல. தனியார்மயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் ஆகிய அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் இருக்கும் நேரடி உறவைப் பற்றி ஊடகங்கள் ஒருபோதும் விவாதித்ததேயில்லை.

சிங்-மோடி: என்ன வேறுபாடு?

அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி, நிலக்கரிச் சுரங்க ஊழலாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் கவனம் குவிக்கப்பட்டது அவற்றில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது மட்டுமே. அவற்றினால் பெரும் லாபம் ஈட்டிய முதலாளிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் ஊடகங்களினால் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. ஊடகங்களுக்கும் சரி; எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும் சரி... சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை. ஆட்சியைப் பயன்படுத்தித் தானோ தனது உடனடிக் குடும்பத்தினரோ சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்ற நேர்மைக்கான ஆகக் குறுகிய வரையறையில் மட்டுமே சிங்கும் நரேந்திர மோடியும் நேர்மையானவர்கள்.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரான குறுங்குழுவாத முதலாளித்துவத்தை (குரோனி கேப்பிடலிஸம்) வளர்ப்பது, சாதாரண மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பெருநிறுவனங்களின் நலன் களுக்காகத் திட்டங்கள் தீட்டுவது ஆகியவை நேர்மையின்மையாகப் பார்க்கப்படுவதேயில்லை.

நேர்மையான ஆட்சிக்கான இலக்கணங்களில் முதன்மையானவை எவையோ அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை என்பதுதான் சோகம். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சிங் மட்டுமல்ல, மோடியும் நேர்மையின்மைக்கான உதாரண புருஷர்கள் என்பது புரியும். கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு எடுக்கும் விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிங் அரசாங்கம் அளித்த, நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய அளவற்ற சலுகைகளை மோடியோ அல்லது ஊடகங்களோ ஒருபோதும் கேள்விக்குட்படுத்தியதில்லை.

முகவர், பிறகு பிரதமர்

நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சரானபோது, உலக வங்கி மற்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கொள்கைகளையும் ஆலோசனைகளையும் செயல்படுத்தும் ‘முகவர்’ஆக சிங் இருந்தார். பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமரானபோதும் அதே கொள்கைகளைப் பின்தொடர்ந்தார். தனியார்மயமாக்கலின் பெயராலும் தாரளமயமாக்கலின் பெயராலும் குறுங்குழுவாத முதலாளித்துவம் ஊக்குவிக்கப்படுகிறபோது, ஊழல் பெருக்கெடுப்பது தவிர்க்க முடியாதது. அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த ஊழல்களால் பலன்பெறுவது பெருமளவு தடுக்கப்பட்டு, எல்லா லாபங்களும் பெருநிறுவனங்களுக்கே சென்றிருக்கும் பட்சத்தில் சிங் நேர்மையின் திருவுருவ மாக ஊடகங்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டிருப்பார்.

இரண்டு நல்ல விஷயங்கள்

சிங்கின் ஆட்சியில் நடந்த இரண்டு நல்ல விஷயங்கள் என்றால், அவை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும் தகவலறியும் உரிமைச் சட்டமும்தான். இவை இரண்டையுமே சிங் மனமுவந்து நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை. முதலாவது, இடதுசாரிக் கட்சிகளும் சிந்தனையாளர்களும் தந்த அழுத்தத்தால் உருவானது. பின்னது, அருணா ராய், நிகில் டே, கேஜ்ரிவால் போன்றவர்கள் தந்த அழுத்தத்தால் உருவானது. இவை இரண்டையும் சோனியா காந்தி வலுவாக ஆதரித்ததால் அவற்றை சிங் அரசு அமல்படுத்தியது.

எந்த அடிப்படையில் கருணை?

ஆக, எந்த அடிப்படையில் வரலாறு தன்னிடம் கருணையாக நடந்துகொள்ளும் என்று சிங் எதிர்பார்க்கிறார்? 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்துவரும் வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின் இன்றைய அபார வளர்ச்சிக்கு (எதிர்காலத்தில் அப்படி நடக்கும்பட்சத்தில்) அடித்தளமாக அமைந்தது 1990-களில் சிங் நடைமுறைப்படுத்திய தனியார்மயமாக்கல் கொள்கைகளும் தாரளமயமாக்கல் கொள்கைகளுமே என்று கூறுவார்கள் என்ற நம்பிக்கையிலா அல்லது இந்தியாவின் மின்சாரத் தட்டுப்பாடு ஒழிந்து, உபரி மின்சார உற்பத்தி சாத்தியமானதற்குக் காரணம், சிங் அமல்படுத்திய இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தமே என்று கூறுவார்கள் என்ற நம்பிக்கையிலா? இவை இரண்டும் இல்லை.

நீங்கள் செயலாற்றத் தவறிவிட்டீர்கள் என்ற நிலையில், நீங்கள் விட்டுச்செல்லும் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, ‘‘சமகாலத்திய ஊடகங்களுடன் அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிடுகிறபோது, வரலாறு என்னிடம் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று உண்மையாகவே நம்புகிறேன். கேபினெட் அமைப்பிலான அரசாங்கத்தில் நடைபெறும் விஷயங்கள் அனைத்தையும் நான் வெளியே சொல்ல முடியாது. சூழ்நிலைகளையும் கூட்டணி ஆட்சியின் நிர்ப்பந்தங்களையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவே செயல்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

செஞ்சோற்றுக் கடனா, பதவியா?

எதிர்காலத்தில் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி மேலும் பல உண்மைகள் வெளிவருகிறபோது, பின்வரும் இரண்டு விதங்களில் அவர் மதிப்பிடப்படலாம்: மக்கள் செல்வாக்கு இல்லாத தன்னைப் பிரதமராக்கிய சோனியா காந்தியிடம் பட்ட செஞ்சோற்றுக் கடன் தீர்க்க எல்லா ஊழல்களையும் மூடி மறைக்கும் செயலுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டார் அல்லது ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் பதவியைத் துறந்துவிட்டுச் செல்லும் வாய்ப்பிருந்தும் பதவி ஆசையின் காரணமாக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.

முதலாவது மகாபாரதத்தில் துரியோதனனுக்காக கர்ணன் செய்த தியாகத்தை நினைவுபடுத்துகிறது என்றால், இரண்டாவது, மகன் மீதான (இங்கு பதவி மீதான) பாசத்தின் காரணமாக துரியோதனனின் எல்லாச் செயல்களையும் பொறுத்துக்கொண்ட திருதராஷ்டிரன் நிலையை நினைவு படுத்துகிறது. முதலாவது வகையில், சிங் மதிப்பிடப்பட்டால் அதுவே வரலாறு அவரிடம் காட்டும் கருணையாக இருக்கும்.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்