அமெரிக்காவின் உளவுத் திருவிளையாடல்கள் குறித்து மன்மோகன் சிங்கும் விளாதிமிர் புதினும் கூடி உட்கார்ந்து கவலைப்பட்டு முழுதாக ரெண்டு நாள் முடியவில்லை. அதற்குள் பிரான்சு தேசத்தின் வெளி விவகாரத்துறை அமைச்சர் இதே குண்டைத் தூக்கி இன்னும் பகிரங்கமாக வீசியிருக்கிறார். இதெல்லாம் ரொம்பத் தப்பு. நட்பு நாட்டில் கூடவா இந்த நாசமாய்ப் போன அமெரிக்கா உளவு பார்க்கும்? சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் - ஐயா நிறுத்துங்கள், அடியோடு நிறுத்துங்கள்!
சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் பிரான்ஸுக்கான அமெரிக்கத் தூதருக்கும் ஒரு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார். பத்திரிகைகளிலெல்லாம் சேதி வர ஆரம்பித்துவிட்டது. என்ன இது அசிங்கம்? லட்சக்கணக்கான பிரெஞ்சு அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பெரிய பெரிய பிசினஸ் ஜாம்பவான்கள், அமைச்சர்கள், பல்துறை வல்லுநர்கள் - இன்னார் அன்னாரென்ற விவஸ்தையே கிடையாது. கிட்டத்தட்ட எழுபது மில்லியன் பிரெஞ்சு பெருங்குடி மக்களின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவாளிகள் ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைத் தூக்கிப் போடுகிறார்கள்.
அதென்ன வானொலி ஒலிச் சித்திரமா? கர்ம சிரத்தையாகக் கேட்டு ரசிப்பதற்கு என்று கேட்கப்படாது. இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்து. தொலைபேசி அழைப்புகள் மட்டும்தானா என்றால் அதுவும் கிடையாது. 'US 985D' என்ற சங்கேதக் குறியீடு கொண்ட செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த சில பெரிய மனிதர்களின் மொபைல் குறுஞ்செய்திகளுக்கும் ஒரு வாய்க்கால் வெட்டி தமக்கொரு காப்பி வரும்படி பண்ணிக்கொண்டிருக்கிறது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA).
இதெல்லாம் தீவிரவாதத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்று சும்மா அடித்து விடமுடியாது. பரம சாதுவான பல புண்ணியாத்மாக்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளும் இந்தப் பட்டியலில் அடக்கம் என்று லிஸ்டு தூக்கிப் போடுகிறது ‘ல மாண்டே’ என்ற பிரெஞ்சுப் பத்திரிகை.
ஆப்கனிஸ்தான் யுத்தமானா லும் சரி, இராக் யுத்தமானாலும் சரி, இன்னபிற க்ஷேத்திரங்களில் அமெரிக்கா எங்கெல்லாம் சோடா பாட்டில் தூக்கிக்கொண்டு போகிறதோ அங்கெல்லாம் டோண்ட் ஒரி முஸ்தபா என்று உடன் சென்ற உண்மைத் தொண்டனுக்கு இன்றைக்கு இந்த நிலைமை. முந்தாநேத்து லக்சம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேசங்களின் வெளி விவகார அமைச்சர்களின் மாநாட்டில் இதுதான் அதி முக்கியமான பெரும் பிரச்னையாகப் பேசப்பட்டிருக்கிறது.
பிரான்சின் தர்மசங்கடம் இதர நாடுகளின் தர்ம சங்கடத்தைக் காட்டிலும் ஒரு பிடி உசந்தது. அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் உறவு அப்படிப்பட்டது. அமைதிப் படை படத்தில் அமாவாசை எம்.எல்.ஏவின் அண்டர்வேரைத் தோய்க்கிற உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று மணிவண்ணன் ஒரு காட்சியில் சொல்வாரே, அந்த மாதிரிதான் பிரான்சும் பிரிட்டனும் போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்காவுக்கு ஸ்ருதி பாக்ஸ் மீட்டிக்கொண்டிருந்தன. இப்போது பிரான்சில் மட்டுமல்லாமல் பிரிட்டனிலும் அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி உளவுத் திருவிளையாடல்களை நடத்தியிருப்பது குறித்துத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
யாரை நொந்து என்ன பிரயோசனம்? அமெரிக்கா அப்படித்தான். அதன் கல்யாண குணங்களை மாற்றுவதற்கில்லை.
மேற்படி அயலுறவு அமைச்சர் பெருமக்களின் மாநாட்டில் இதே விஷயம் குறித்து மெக்சிகோவின் பிரதிநிதியும் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் பாதிப்பாளர்கள் பட்டியலில் மெக்சிகோவுக்குத்தான் இரண்டாமிடம். சந்தா கட்டாமல் மெக்சிகோ தொலைபேசி டிபார்ட்மெண்ட்டிலும் அமெரிக்க உளவாளிகள் ஒலிச்சித்திரம் கேட்டிருக்கிறார்கள்.
நட்பு நாடுகளிடையே அமெரிக்கா இப்படி ஒற்று காரியம் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது; இந்தக் கேவலத்தை உடனடியாக நிறுத்தியாகவேண்டும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். என்றால், அதற்கு நட்பில்லாத நாடுகளில் உளவு பார்க்கலாம் என்று பொருளல்ல. தனக்கு வலிக்கும்போதுதான் தள்ளி நிற்பவன் வலியும் கொஞ்சம் போல் புரியும்.
இந்தியா, ரஷ்யா, பிரான்சு, மெக்சிகோ என்று நாலா திசை தேசங்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும் அமெரிக்கா இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை.
அது செய்வதை செய்து கொண்டுதான் இருக்கும். இனிமேல் சாதாரண மனிதர்க ள்கூடத் தங்கள் மொழியை என்கிரிப்ட் செய்யத் தெரிந்தால் மட்டும்தான் போனில் பேசலாம் என்றாகப் போகிறது.
நாளை முதல் க்ளோப் ஜாமூன் பத்தியையே '௱ø௱¥ƒல்௴௩௱ƒ௰௵' என்று தொடங்கி எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago