மனித உழைப்பின் மகத்தான படைப்புகளில் 4,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பிரமிடுகள் குறிப்பிடத்தக்கவை. எகிப்து சாம்ராஜ்யம் உலகிலேயே பெரும் செல்வச்செழிப்பும் வலுவும் கொண்டிருந்த காலம் அது. மக்கள் மன்னர்களைத் தெய்வங்களாக வழிபட்ட காலம் அது. மன்னர் மரித்த பிறகும் அவரை வழிபட்டால்தான் தமக்குத் தீங்கு ஏதும் வராது என மக்கள் நம்பினார்கள். மன்னரின் ஆத்மா சிரமம் இல்லாமல் வானுலகுக்கு ஏற வசதியாகப் பிரமிடுகள் நாற்கூம்பு வடிவில் அமைக்கப்பட்டன. அவற்றின் சரிந்த பக்கங்கள் சூரியனின் கதிர்களைக் குறித்தன.
மன்னர் மரித்த பிறகும் அவரது ஆத்மாவின் ‘கா’ என்ற பகுதி அவருடைய உடலிலேயே தங்கிவிடுவதாகப் பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள். ஆத்மா வசதியாகக் குடியிருக்கும் வகையில், மன்னரின் உடலைப் பாடம்செய்து ஆகாரங்கள், உடைகள், படுக்கை
கள், இருக்கைகள், கழிப்பறைகள் எனப் பலவகைப் பொருட்களையும் மன்னருடைய உடல் இருந்த அறையில் வைத்தார்கள். அவருக்கு மரணத்துக்குப் பிறகும் ஊழியம் செய்வதற்காக மந்திரி பிரதானிகளையும் மனைவியரையும் ஊழியர்களையும் உள்ளே தள்ளி மூடினார்கள். அவர்களுடைய வழிச் செலவுக்காகத் தங்க நாணயங்களை உள்ளே குவித்து வைத்தார்கள். ஜோசர் என்ற மன்னரின் அடக்க ஸ்தலத்துக்கு மேல் சக்காரா என்னுமிடத்தில் கி.மு. 2360 வாக்கில் அமைக்கப்பட்டதுதான், இதுவரை அறியப்பட்ட பிரமிடுகளில் மிகவும் பழமையானது. அதை வடிவமைத்தவர் இம்ஹோடெப் என்ற பூசாரி. அவர் பகுதி நேர மருத்துவராகவும் பணியாற்றினார். 1400 ஆண்டுகள் கழித்து, மக்கள் அவரை எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்களின் காவல் தெய்வமாக மாற்றி வழிபடத் தொடங்கினார்கள்.
பிரமிடுகளின் அறிவியல் வடிவம்
கி.மு. 2600 வரை நிர்மாணிக்கப்பட்ட பிரமிடுகளின் பக்கச் சுவர்கள் படிக்கட்டுகளின் வடிவில் அமைந்தன. அதன் பிறகு அமைக்கப்பட்டவை சமதளமாக அமைக்கப்பட்டன. அந்த வகையில், முதன்முதலாக அமைக்கப்பட்டது தஹசூர் என்ற இடத்தில் சிவப்பு நிறச் சுண்ணாம்புப் பாறைகளால் அமைந்ததாகும். கி.மு. 2200 வாக்கில் பிரமிடு கட்டும் ஆர்வம் மறைந்துவிட்டது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு மங்கியதும் ஒரு காரணம். பிரமிடுகளில் புதைந்து கிடந்த செல்வங்களைக் கொள்ளையர்கள் கொண்டுபோனார்கள். அவற்றின் வெளிப் பரப்புகளில் பதிக்கப்பட்டிருந்த வழவழப்பான சுண்ணாம்புக் கல் பாளங்களைக்கூடப் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள்.
பிரமிடுகளின் வடிவம் பூமியில் பரவியிருக்கிற ஆற்றல் புலங்களான மின்காந்த அலைகள், காஸ்மிக் கதிர்கள், மின்னிறக்க அலைகள், நிறையீர்ப்பு அலைகள் போன்றவற்றை உள்வாங்கிப் பெரிதுபடுத்தும் ஒத்ததிர்வி அமைப்பாகும். அந்த ஆற்றல்கள் பிரமிடுக்குள் ஒன்றோடொன்று ஊடாடுகின்றன. பிரமிடு தன்னைச் சுற்றிலும் ஒற்றைச் சுர (அதிர்வெண்) அலைக் கோளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. அந்தக் கோளத்துக்குள் இடம்பெறுகிற எல்லாப் பொருட்களும் அந்தச் சுரத்தில் அதிர்வடைகின்றன.
நடுவில் தீ
சாதாரணமான காந்தத்தில் விசைப்புலங்கள் வட முனையிலிருந்து வெளிநோக்கியும் தென் முனையில் உள்நோக்கியும் பரவும். ஒரு பிரமிடுக்குள் ஒரு காந்தத்தை வைத்தால், விசைப்புலங்கள் வட முனையில் உள்நோக்கியும் தென் முனையில் வெளிநோக்கியும் பரவுகின்றன. பிரமிடுக்குள் அதன் மேல்முனை காந்த வட முனை போலவும், அதன் அச்சின் நடுப் புள்ளி தென் முனை போலவும் செயல்படுகின்றன. அதன் உச்சியில் உள்நோக்கிச் செலுத்தப்படும் ஆற்றல் அச்சின் நடுப் புள்ளியிலிருந்து வெளிநோக்கிப் பாய்கிறது. அது பிரமிடின் சாய்ந்த சுவர்களில் பட்டுப் பிரதிபலித்து, ஒரு புள்ளியில் குவிகிறது. அந்தப் புள்ளியில் மன்னரின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பிரமிடு என்ற சொல்லுக்கு ‘நடுவில் தீ’ என்று பொருள்.
அந்த மையப் புள்ளியில் தொடர்ந்து ஆற்றல் குவிந்துகொண்டேயிருப்பதால், எலெக்ட்ரான்கள் மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே போகிற வட்டப் பாதைகளில் சுற்றிவரத் தொடங்குகின்றன. அவற்றின் ஆற்றல் அலைகளின் அலை நீளம் 10 நானோ மீட்டர் அளவை நெருங்கும்போது, ஆற்றல் பிரமிடின் மூலைகளிலிருந்து வெளியே கசியத் தொடங்குகிறது. அந்த ஆற்றல் உயிரூட்டம் செய்வதற்கான பிரபஞ்ச ஆற்றல் எனப்படும். அது விண்வெளி முழுவதும் விரவிப் பரவியிருக்கிறது. ரேடியோ அலைகளை உள்வாங்கி வீட்டுக்குள்ளிருக்கும் ரேடியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டி இயங்க உதவும் ஆன்டெனாவைப் போல, உயிரியல் பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கும் அமைப்பாகச் செயல்படுகிறது பிரமிட். கிஸா பிரமிடின் உச்சியில் ஏறி நின்றபோது, தமது உடலில் பெரும் ஆற்றல் புலம் விரவியதாகப் பல ஆய்வர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
வலுவூட்டப்படும் ஆற்றல்கள்
படிக வகைப் பாறைகள், கருங்கல், சலவைக்கல் போன்றவற்றால் அமைக்கப்படும் பிரமிடுகள் தம்மைச் சுற்றிலும் ஒரு கோள வடிவிலான ஒற்றைச் சுர அதிர்வெண் மண்டலத்தை உருவாக்குகின்றன. ரோஸ் கருங்கல் என்ற வகைக்கல், கிஸா பிரமிடில் மன்னரின் சவப் பெட்டி அறையை அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கல் மிகுந்த காந்தத் தன்மையுள்ளது. அது தான் இருக்கு மிடத்தின் காந்தப்புலத்தை மாற்றியமைக்கக்கூடியது.
கிஸா பிரமிடின் வெளிப்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக் கல், காந்த எதிர்ப்புத் தன்மை கொண்டது. ஒரு சட்டக் காந்தத்தை அதனருகில் கொண்டு சென்றால், காந்தத்தின் இரு முனைகளுமே விலகி ஓடும். எனவே, பிரமிடுக்குள் நுழையும் எந்தவித ஆற்றலும் உடனடியாக வெளியேறிவிடும். இவ்வாறான துகள்கள் பிரமிடைச் சுற்றிலும் ஒரு குமிழி வடிவ விசைப்புலத்தை உண்டாக்கும். அந்தக் குமிழி வேறு எந்த ஆற்றலும் பிரமிடுக்குள் புகாமல் தடுக்கிறது. இதன் மூலம் அழிவுண்டாக்கும் ஆற்றல்கள் தடுக்கப்பட்டு, பிரமிடுக்கு உள்ளிருக்கிற ஆக்க ஆற்றல்கள் வலுவூட்டப்படுகின்றன.
கிஸா பிரமிடை ஆய்வு செய்யும் அனைத்து நாட்டு அமைப்பைச் சேர்ந்த ஜோ பார் இவ்வாறான ஆற்றல் புலங்களை ஆய்வுசெய்தபோது பிரமிடின் அடிப்பரப்பிலிருந்து, அதன் மொத்த உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் உள்ள ஒரு மையப்புள்ளியில் இந்த ஆற்றல் புலம் வெளிப்படுவதாகக் கண்டுபிடித்தார். சூரியப் புள்ளிகளின் தாக்கமும் சந்திரனின் அலைகளின் தாக்கமும் பிரமிடின் ஆற்றல் புலத்தின் செறிவைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன. ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் பிரமிடின் ஆற்றல் புலம் எல்லாவிதமான கதிர்களையும், பூமியின் ஈர்ப்பு விசையையும் பிரமிடுக்குள் புகாமல் தடுத்துவிடுகிறது. பூமியில் பரவியுள்ள காமா கதிர்களின் ஆற்றலையும் பிரமிட் தணித்துவிடுகிறது. பிரமிடைச் சுற்றியுள்ள மற்றும் அதனுள் இருக்கிற வளிமண்டலத்தின் ஆற்றல் மேற்கூறப்பட்ட மையப்புள்ளியைச் சுற்றியுள்ள ஒரு கோள வடிவப் புலத்துக்குள் அடங்கிவிடுகிறது. அவ்வப்போது பிரமிடுக்குள்ளும் வெளியேயும் நிறுவப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளில் பதிவுகள் எதுவும் ஏற்படாமல் அந்த ஆற்றல் தடுக்கிறது. இது போன்ற தடங்கல் விளைவுகள் காரணமாக சூரியப் புள்ளிகள் போன்ற வானுலகச் சம்பவங்களுக்கும், பிரமிடின் ஆற்றல் குமிழின் செறிவுக்கும் இடையில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
பிரமிடுகளுக்குள் கிருமிகளைக் கொன்றழிக்கக்கூடிய காரணி எதுவும் புலப்படவில்லை. ஆனால், உயிரினங்களின் திசுக்கள் சிதையும்போது உருவாகும் ஊட்டச்சத்துகளே கிருமிகளின் உணவு. பிரமிடுக்குள் திசுக்கள் சிதைவது மிக மிக அரிது. எனவே, கிருமிகளும் பாக்டீரியாக்களும் செழித்து வளர வாய்ப்பு கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே பிரமிடுக்குள் வைக்கப்படும் உணவுகள் கெட்டுப்போவதில்லை. அவை கெட்டுப்போக அவகாசமில்லாமல் உலர்ந்து விடுகின்றன. விதைகள் தாமதமாக முளை
விடுகின்றன. பிரமிடுகளுக்குள் வழிதவறிப் புகுந்துவிடும் எலிகள் அப்படியே காய்ந்துவிடுகின்றன. பல பிரமிடுகளுக்குள் இப்படிப் புகுந்து காய்ந்துபோன நாய், பூனை ஆகியவற்றின் உலர்ந்த சடலங்கள் காணப்பட்டிருக்கின்றன. அவை மன்னர்களின் வளர்ப்புப் பிராணிகள் எனவும் மன்னருடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன எனவும் தவறான கருத்துகள் பரவ அவை காரணமாகிவிட்டன.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago