சொற்களால் ஆனது உலகம்

By இமையம்

ஓர் இனத்தின் செழுமை அதன் மொழியின் செழுமைதான்; அதாவது, அம்மொழியில் உருவான இலக்கியப் படைப்புகளின் செழுமையே. நம்முடைய பண்பாடு, பாரம்பரியம், தொல் பெருமை, அறிவு, வாழ்க்கை, சமூக இயக்கம் எல்லாவற்றையும் இலக்கியப் படைப்புகளின், மொழியின் வழியேதான் பெற முடியும்.

நம்முடைய சொத்து, அரிய பொக்கிஷம் என்பதெல்லாம் நம்முடைய இலக்கியங்களே. மொழிதான் நாம் கற்கும் கல்வியே. இலக்கியம்தான் - நமது முந்தைய வாழ்வை அறிவது. மொழியின் வழியாகத்தான் பொருள்களை, உலகைப் புரிந்துகொள்கிறோம். ஒரு மனிதனுக்கு அவன் பேசுகிற மொழிதான் அடையாளம். கருத்தைப் பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டுமல்ல மொழி. மனிதர்களுக்கு இருப்பது போன்ற மொழி விலங்குகளுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மனிதர்களுக்கு அதுதான் உயிர். அதிலும் எழுத்தாளர்களுக்கு இன்னும் மேலே.

மொழி என்னும் கருவி

ஒரு மனிதனின், ஓர் இனக் குழுவின் அடையாளமாக இருக்கும் மொழியைப் பதிவு செய்பவர்களும் மொழியைப் புத்தாக்கம் செய்பவர்களும் எழுத்தாளர்கள்தான். எழுத்தாளர்களுக்கான ஆயுதம் மொழி. தங்களுடைய ஆயுதம்குறித்த அறிவு, பயிற்சி, அதை நுணுக்கமாகப் பயன்படுத்தும் திறன், இருக்க வேண்டும்தானே? அரிவாள் இல்லாமல் கதிர் அறுக்க முடியுமா? மண்வெட்டி இல்லாமல் வாய்க்கால் வெட்ட முடியுமா? தறி இல்லாமல் நெசவு செய்ய இயலுமா? வாளி இல்லாமல் கிணற்றிலிருந்து நீர் எடுக்க முடியுமா? அதேமாதிரி, மொழி பற்றிய குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாமல், எழுத்தாளராக இருக்க முடியுமா? முடியும் என்றுதான் தமிழ் எழுத்தாளர்கள் கூறுகிறார்கள்.

சொற்களுக்கு உயிர் உண்டா?

தமிழின் சில பத்திரிகை, தினசரிகளில் வரக்கூடிய கவிதைகள், கட்டுரைகளின் மொழி எப்படியிருக்கிறது? சொற்களுக்கு உயிர் உண்டு என்று இவர்கள் எப்போது அறிவார்கள்? சொற்களால் ஆனது உலகம் என்பதை அறிவார்களா? ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுகிற பழக்கம் - மொழியின் ஆன்மாவைப் பாதுகாக்குமா, உருக்குலைக்குமா? இதெல்லாம் தெரியாமல் தமிழைக் கச்சடா மொழிபோல மாற்றிவிட்டார்கள்.

‘மூளய யூஸ் பண்ணாதவர்’ என்றும் ‘இதுக்கு நான் சொன்னதே பெட்டர்’ என்றும் ‘இவளை கிளாஸ்லயிருந்து டிஸ்மிஸ் பண்ணிருங்க’ என்றும் ‘சாலையில் பீக் ஹவரில் ஊர்வலம் நிகழ்த்தினோம்’ என்றும் எழுதுகிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் தூய, அதி உன்னதமான, நம் காலத்தின் ஆகப் பெரிய கலைஞர்களின் எழுத்தும் மொழியும் எப்படியிருக்கிறது?

கொடூரம். ‘குபீர்’என்று சிரித்தான். ‘குபுக்’ என்று எழுந்தான். ‘டபுக்’என்று விழுந்தான். ‘தொபுக்கடீர்’ என்று குதித்தான் - இப்படியெல்லாம் எழுதுகிறார்கள். ‘தாகம் இருட்டிக்கொண்டு வருகிறது’ என்றும் அவர் சாதாரண மனிதர் என்பதை ‘அவர் சாதாரணர்’ என்றும் எழுதுகிறார்கள்.

எழுத்தாளரின் கூற்றும் பாத்திரத்தின் கூற்றும்

எது பேச்சு வழக்கு, எது எழுத்து வழக்கு, எது வட்டார, சாதிய, உயர், புலவர் வழக்கு என்ற தெளிவு எழுத்தாளர்களிடம் இருக்கிறதா? ஒரு வாக்கியத்திலேயே எல்லா வழக்குகளையும் போட்டு எழுதுவார்கள், பாத்திரங்களின் வழியாகப் பேசுவார்கள். எது எழுத்தாளரின் கூற்று, எது பாத்திரத்தின் கூற்று என்று அறிய முடியாது. இரண்டு நபர்களின் மொழியும் ஒன்றாக இருக்கும். ஒரு பாத்திரத்தின் தன்மைக்கும் அது பேசுகிற மொழிக்கும் எந்தப் பொருத்தமும் இருக்காது. இது மொழிக்கான குழப்பமல்ல. மொழியைக் கையாளும் எழுத்தாளருக்கான குழப்பம். தமிழில் எழுதப்படுகிற கதைகளை, கவிதைகளைவிட, அவற்றை எழுதப் பயன்படுத்தும் மொழி மிகவும் கற்பனையானது. விநோதமானது. ஓர் இனத்தின் அடையாளமாக இருக்கும் மொழியை உருவாக்குபவர்கள், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கல்வியாக வழங்கப்பட இருக்கிற இலக்கியத்தை உருவாக்குபவர்களின் லட்சணம் எப்படி இருக்கிறது? எதையாவது சொன்னால் ‘முதல் தலைமுறையாக எழுத வந்துள்ளார்’ என்றும், ‘வட்டார எழுத்து இப்படித்தான் இருக்கும்’என்றும் வாதிடுகிறார்கள். சலுகை கோருகிறார்கள்.

வட்டார இலக்கியம் உண்டா?

நாஞ்சில் நாட்டு இலக்கியம், கொங்கு வட்டார, கரிசல்காட்டு, நடுநாட்டு இலக்கியம் என்று வகைபிரிப்பது சரியா? இந்தப் பிரிவுகள் நிலவரைவியலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; அதுவும் முற்காலத்தில். இக்காலத்தில் பொருந்தாது. இலக்கியத்தில் சுத்தமாகப் பொருந்தாது. நாஞ்சில் நாட்டுப் பகுதியில் - எல்லா இனத்து மக்களும் ஒரே விதமான மொழியைத்தான் பயன்படுத்துகிறார்களா? ஒரே விதமான தொழிலைத்தான் செய்கிறார்களா? அதே மாதிரி கொங்கு நாடு, கரிசல் காடு, நடுநாடு ஆகியவற்றில் எல்லா இனத்து மக்களும் ஒரே விதமான மொழியைத்தான் பயன்படுத்துகிறார்களா? ஒரே விதமான தொழிலைத்தான் செய்கிறார்களா? சாதிய முத்திரையும், வட்டார முத்திரையும் ஒரு சலுகை. இந்தச் சலுகை வழங்கப்படுவதற்குப் பின்னால் சாதிய மேலாதிக்க நுண் அரசியல் இருக்கிறது. வட்டார வழக்கு என்றோ, வட்டார இலக்கியம் என்றோ இருப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. சாதிய வழக்கு, தொழில் சார்ந்த வழக்கு, சடங்குகள் சார்ந்த வழக்குகளும், அவற்றின் இலக்கியங்களும்தான் இருக்க முடியும்; சாதி சார்ந்த, தொழில் சார்ந்த, அந்தந்த சாதிக்கு உண்டான சடங்குகள் சார்ந்த வழக்குகளும் கதைகளும்தான் இருக்க முடியும். வட்டாரம் சார்ந்த வழக்குகள், கதைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சாதியை மறைப்பதற்கு, சாதி சார்ந்த இலக்கியம் என்ற முகமூடி உதவலாம். வாழ்க்கை சார்ந்த இலக்கியமும் மொழியும் மட்டுமே உண்டு. ஒரு வாழ்க்கைமுறைதான் இலக்கியத்தையும் மொழியையும் உருவாக்குகிறது.

எழுத்தாளர்களின் கிராமங்கள்

நம்முடைய எழுத்தாளர்களில் பலர் கிராமங்களை விட்டு வெளியேறி முப்பது நாற்பது ஆண்டுகள் இருக்கும். திருமணம், சாவு போன்ற காரியங்களுக்காகக்கூட கிராமத்துக்குச் செல்வதில்லை. கிராமம் சார்ந்த நினைவுகள் கசப்பைத் தருபவையாகவே இருக்கும். ஆனால், அவர்கள் எழுதுகிற கதைகள் இன்றும் கிராமம் சார்ந்தவையாகவே இருக்கும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் தங்களுடைய இளமைக் காலத்தில் நடந்த -நடந்ததாக நம்புகிற, விஷயங்களைக் கதைகளாக எழுதுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் தமிழகக் கிராமங்கள் பெற்ற வளர்ச்சி, முன்னேற்றம், தனிமனித வாழ்வில் - சமூக வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்குறித்து ஏதும் அறியாமல் அவர்கள் எழுதுவதுதான் ஆச்சரியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கைதான் இன்று கிராமப்புறங்களில் வாழப்படுகிறதா, அந்தக் காலங்களில் பேசப்பட்ட மொழிதான் இன்று பேசப்படுகிறதா? இன்று தொலைக்காட்சி இல்லாத வீடு கிராமத்தில் உண்டா? கைபேசி இல்லாத வீடு உண்டா? மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனங்கள் செல்லாத கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றனவா? ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாதத்துக்கு உணவுக்குச் செலவாகும் தொகையைவிட, கைபேசிக்கு அதிகத் தொகை செலவாகிறது என்பதை எழுத்தாளர்கள் அறிய வேண்டும். நிஜமும் அல்லாத கற்பனையும் அல்லாத செயற்கையான ஒரு பேச்சு மொழியையும் வாழ்க்கை முறையையும் எழுத்தின் வழியே உருவாக்குகிறார்கள். சமூகத்தின் இயக்கத்தைக் கூர்ந்து கவனிப்பதன் வழியாகத்தான் சமூகம் பெறும் மாற்றங்களை அறிய முடியும். கூர்ந்து கவனிக்காது, கற்பனையாக யூகித்து எழுதப்படும் படைப்புகள் தரம் குறைந்தவையாகவே இருக்கும். கிராமம் சார்ந்து எழுதப்படுகிற அநேகப் படைப்புகள் நம்பகத்தன்மை இல்லாத, செயற்கையான கதைகளாக மட்டுமே - தமிழ் சினிமாக்களைப் போலவே - இருக்கின்றன.

ஒரு சமூகத்தில் கோடீஸ்வரர்களைவிடவும், தொழிலதிபர்களைவிடவும், அரசியல்வாதிகளைவிடவும் மேம்பட்டவர்களாக எழுத்தாளர்கள் கருதப்படுவதற்குக் காரணம், அவர்கள் மொழியைக் கையாள்கிறார்கள் என்பதால்தான். மொழியைத் தவிர, நாம் செல்வம் என்று கருதுகிற அனைத்தும் காணாமல் போய்விடும் என்பது எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டும். தமிழ் மொழி இன்றும் உயிருடன் இருப்பதற்குக் காரணம் – படித்தவர்களல்ல, எழுத்தாளர்கள் அல்ல, பாமரர்கள்தான். மொழியை அவர்கள்தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

- இமையம், எழுத்தாளர், ஆசிரியர், தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்