நரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய். தேசியத்தைக் கண்போல் மதித்த இஸ்லாமியத் தலைவர்களின் மகத்தான, கடைசித் தலைமுறையினர். பன்மைச் சமூகம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை நேரு மேற்கத்தியக் கல்வி முறையிலிருந்து பெற்றுக்கொண்டார் என்றால், இவர்களோ இந்து - முஸ்லீம் சங்கமத்திலிருந்தே அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய இந்தியாவின் இஸ்லாமியத் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களை மட்டும் பார்க்கும் குறுகிய நோக்கு - இவைதான் அவர்களின் குணங்கள். முன்குறிப்பிட்ட தலைவர்கள் இப்படியல்ல. அவர்கள் தங்கள் சமூகத்தைப் பற்றிய வித்தியாசமான பார்வை கொண்டிருந்தவர்கள்; பெரும்பான்மைச் சமூகத்துக்கும் சிறுபான்மைச் சமூகத்துக்கும் இடையில் கணக்குவழக்கு தீர்க்கும் விஷயமாக அரசியலைக் கருதாதவர்கள்;
எனவே, இன்றைய இஸ்லாமியத் தலைவர்கள் அவர்களை நினைவுகூராமல் இருப்பதில் ஒன்றும் புதுமையில்லை. குறைந்தபட்சம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு இருந்த பங்கைப் பற்றி உணராமலேயே வளர்ந்தது அதன் காரணமாகத்தான். இந்த நிலையை வலதுசாரி இந்துக்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; தேசிய நீரோட்டத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்றும் தேசத்தைக் கட்டமைக்க அரும்பாடுபட்ட இந்துத் தலைவர்களின் உழைப்பின் பயனைச் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை வலதுசாரி இந்துக்கள் சித்தரிக்கிறார்கள்.
முன்மாதிரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் பின்பற்றும் வகையில் அரசியலில் முன்மாதிரிகள் யாருமில்லாமல் போனதுதான் இன்னும் மோசம். சுற்றிலும் பார்க்கும்போது, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்கள் மேல் பெரிதும் அக்கறையில்லாத, சந்தர்ப்பவாத அரசியலில் மட்டும் ஈடுபடுகிற இஸ்லாமியத் தலைவர்களே அந்த இளைஞர்களுக்குத் தென்படுகின்றனர். எனவே, வழிகாட்டுதல் இல்லாத நிலைக்கு அந்த இளைஞர்களைக் குற்றம்சாட்ட முடியாது.
ஆசாதும் கித்வாயும் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். ஆனால், நபிகள் நாயகத்தை நிந்தனை செய்யும் உப்புச்சப்பற்ற நாவல் ஒன்றாலும், இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழும் குப்பைத் திரைப்படம் ஒன்றாலும் நொறுங்கிவிடக் கூடிய அளவு பலவீனமானதல்ல அவர்களின் மதநம்பிக்கை. மதநம்பிக்கை என்றாலே அடிப்படைவாதம்தான் என்ற கருத்து, இஸ்லாத்தின் பெயரால் செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட புதுவகை இஸ்லாமியத் தலைவர்களால் உருவானது. ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் விதத்தில்தான் ஆசாத், கித்வாய் ஆகிய இருவரின் வாழ்க்கையும் திகழ்ந்தது.
தாடியுடனும் குல்லாவுடனும் தோற்றமளித்த இஸ்லாமிய அறிஞர்தான் ஆசாத். குர் ஆனுக்கும், ஹதிதுக்கும் அற்புதமான உரை விளக்கம் அளித்தவர் அவர். அறிவியல், கணிதம், தத்துவம் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உருவாக்கம் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படித்தவர்களெல்லாம் இன்று உலகம் முழுக்க வெவ்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகள் செய்துவருகிறார்கள். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவில் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தது மௌலானா அபுல் கலாம் ஆசாத்தான் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.
ஆசாத், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவே பெருமைகொள்ளும், அறிவியல், தொழிலக ஆய்வுக் கழகம் (சி.எஸ்.ஐ.ஆர்.) போன்ற பல்வேறு நவீனக் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய கல்விச் சிற்பியும் அவர்தான். இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான்; கோடிக் கணக்கான ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியைச் சாத்தியப்படுத்தியது அந்தத் திட்டம்தான்.
ஒருமைப்பாட்டின் உருவம் ரஃபி சாஹிப் என்று பலராலும் அழைக்கப்பட்ட கித்வாய்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தகவல்தொடர்புத் துறை அமைச்சர். இந்தியாவே உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது கித்வாயிடம் உணவு மற்றும் வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டது கித்வாய் மீது நேரு கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. தனக்கு ஒப்படைத்த பொறுப்பை கித்வாய் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அதனால்தான், வேளாண் துறையில் மகத்தான பங்களிப்பு செய்பவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கித்வாய் நினைவாக ஒரு விருதை ஏற்படுத்தியது. அவருடைய பரந்துபட்ட இடதுசாரிப் பார்வையின் காரணமாக 'இஸ்லாமிய சோஷியலிஸ்ட்' என்று கித்வாய் அழைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் உயர் வகுப்பு முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கென்று தனி நாடு என்ற முழக்கத்தைக் கொண்ட முஸ்லிம் லீகின் அழைப்பை ஏற்று அவர்கள் பக்கம் சாய்ந்துகொண்டிருந்தனர்; அப்படிப்பட்ட சூழலில், 'ஒருங்கிணைந்ததும் எல்லாரையும் உள்ளடக்கியதுமான இந்தியா'என்ற கருத்தை நோக்கி அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் செலுத்தியதில் கித்வாய் பெரும் பங்கு வகித்தார்.
'ஐக்கிய மாகாணங்கள்'என்று அப்போது அழைக்கப்பட்ட பகுதியில், அப்போது கித்வாய்க்கு இருந்த பிராபல்யம், செல்வாக்கு காரணமாக அவரைப் பின்பற்றியவர்களுக்கு 'ரஃபியர்கள்'என்ற பெயர் வந்தது. இந்தியாவைத் தாண்டி அனேகமாக கித்வாய் சென்றதே இல்லை. என்றாலும், உலக நாடுகளை வலம்வரும் தற்காலத்து இஸ்லாமியத் தலைவர்களைவிட சகிப்புத்தன்மை, ஒருங்கிணைக்கும்தன்மை ஆகியவற்றைச் சர்வதேசக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நன்றாகப் புரிந்துகொண்டவர் கித்வாய்.
தில்லியில் உள்ள 'ரஃபி மார்க்' கித்வாயின் நினைவாகத்தான் பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. அந்த ரஃபி யார் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? பாடகர் முகம்மது ரஃபியை அது குறிக்கிறதென்று பலர் நினைத்துக்கொண்டிருந்ததை, பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்று அம்பலமாக்கியது. இஸ்லாமியச் சமூகத்தை நோக்கிச் சில கேள்விகள் நவீன உலகத்துக்குத் தொடர்பில்லாத, கடந்த காலத்து வெற்று நினைவுகளாக ஆசாதும் கித்வாயும் கருதப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. சதிவேலை என்று கூச்சலிடுபவர்கள் இஸ்லாமியத் தலைவர்களை அரசு எப்போதும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டுவார்கள்; இஸ்லாமியச் சமூகம் மட்டும் அந்தத் தலைவர்களை நினைவுகூருகிறதா என்ன? அந்தத் தலைவர்களின் பெருமைகளை எப்போதும் பறைசாற்றும் விதத்தில் இஸ்லாமியச் சமூகம் என்ன செய்திருக்கிறது?
அந்த இரட்டையர் இந்திய இஸ்லாம் சமூகத்தின் உன்னதமான மரபுகளைப் பிரதிபலித்தவர்கள். சக வாழ்வும் கலாச்சார ஒருமைப்பாடும் இந்திய இஸ்லாம் சமூகத்தின் அடிப்படைகள்; அந்த அடிப்படைகளின் மீது இன்று தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே, அந்தத் தலைவர்களைத் 'தோண்டியெடுக்க' இதைவிடப் பொருத்தமான தருணம் அமையாது. சகிப்பின்மை, பிற்போக்குத்தனம், இன்னும் மோசமாக, பயங்கரவாதம் ஆகியவற்றின் மறுபெயர் இஸ்லாம் என்ற தோற்றம் உருவாகியிருக்கும் இந்த வேளையில், அந்தத் தலைவர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள்.
படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள்.
அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள். நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி 'பெரும்புலி'கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!
ஹசன் சுரூர், பத்தியாளர், 'இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?' என்ற இவருடைய புதிய புத்தகம் 'ரூபா & கோ' பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது. தொடர்புக்கு: hasan.suroor@gmail.com
தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
41 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago