1967-2017 - திராவிட இயக்க ஆட்சியின் 50 ஆண்டுகள்
திராவிட இயக்கத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? - ஒரு இயக்கம் நூற்றாண்டைக் கடந்திருக்கும் சமயத்தில், அதன் தளகர்த்தர் ஆட்சிப் பொறுப்பேற்று அரை நூற்றாண்டு நிறையும் தருணத்தில் (மார்ச் 6, 1967 -2017), இப்படி ஒரு கேள்வி எழும் சூழலும் திராவிடக் கட்சிகள் இரண்டும் இன்று வந்தடைந்திருக்கும் நிலையும் வரலாற்று முரண் என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் அரை நூற்றாண்டாக மாநிலத்தில் ஏனைய கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் தகர்த்து, இன்றும் சட்டசபையில் 95% உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி எனும் இரு நிலைகளிலும் அவை அமர்ந்திருக்கின்றன.
மறுபுறம், சித்தாந்தரீதியாக நடந்திருக்கும் பெரும் சரிவோடு, சமகாலத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், வலுவான அடுத்த தலைவர் வரிசையையும் இன்றி எதிர்கால நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன.
திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கும் தேசியக் கட்சிகள் இந்தச் சூழலை உவகையோடு பார்க்கின்றன. “திராவிட அரசியலுக்கான தேவை என்ன?” என்ற கேள்வி வெளியிலிருந்து மட்டும் அல்ல; யாரெல்லாம் அதன் பொருட்டு பயன் அடைந்தார்களோ அவர்களிடமிருந்தே ஒலிக்கிறது. உள்ளபடியே, மாபெரும் இந்திய அரசியல் களத்தில் திராவிட அரசியலுக்கான தேவையும் பெறுமதியும் என்ன?
நீண்ட நாட்களுக்குப் பின் சில நாட்களுக்கு முன் 1957 சட்டசபைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை வாசிக்கக் கிடைத்தது. தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்று முடிவெடுத்த பிறகு, திமுக பங்கேற்ற முதல் சட்டசபைத் தேர்தல் அது. ஆச்சரியம் என்னவென்றால், முதன்முதலாக ஒரு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான நோக்கங்களும் இலக்குகளும் தேசிய அளவிலான எல்லைகளைக் கொண்டவை. பல இன்றைக்குப் பொதுத்தளத்தில் நாம் முற்போக்காகவும் புரட்சிகரமாகவும் எண்ணிப் பேசிக்கொண்டிருப்பவை.
1957 தேர்தல் அறிக்கை
திமுகவின் 1957 தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சில முக்கியமான இலக்குகள் இவை.
சுய நிர்ணய உரிமை:
இந்திய அரசியல் சட்டம் பெரிதும் வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கு அரண் செய்யும் சட்டத் தொகுப்பாகவே உள்ளது. எந்த ஒரு மாநிலமும் இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை மாநிலங்கள் இயல்பாகப் பெற்றிருக்க வழிசெய்யப்பட வேண்டும். இதுவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய முதல் மாற்றமாகும்.
அரசியல் சமத்துவம்:
பெருமளவில் மொழி, கலாச்சார அடிப்படையிலேயே இந்திய ஒன்றியத்தின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்களவையில் இப்போதைய பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. இந்த அநீதியின் விளைவாகப் பெரிய மாநிலங்களாக விளங்கக்கூடிய வகையில் எண்ணிக்கையில் பெருத்துள்ள சில இனத்தவர், சிறிய மாநிலங்களாக அமைந்துள்ள வேறு இனத்தவர் மீது ஆதிக்கம் செலுத்த இடம் ஏற்படுகிறது.
அரசியல் சமத்துவம் இல்லாத இம்முறைக்கு மாறாக அது சிறியதோ, பெரியதோ; எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் (அதாவது, உத்தர பிரதேசத்துக்கு 80 இடங்கள்; தமிழகத்துக்கு 39 இடங்கள்; சிக்கிம், மிசோரம், நாகாலாந்து போன்றவற்றுக்கு 1 இடம் என்றில்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் இணையான இடங்கள்).
மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு:
இன்றைய அமைப்பில் அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு வருவாயைப் பெருக்கிக்கொள்ள வழியில்லை. சாதாரண பிரச்சினைகளில்கூட முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. மாநிலங்களின் அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் அதிகரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கான அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி:
அனைவருக்கும் பள்ளிக் கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்.
தாய்மொழிவழிக் கற்பித்தல்:
கல்வி பல கட்டங்களிலும் தாய்மொழியிலேயே அளிக்கப்பட வேண்டும். இந்தி திணிப்பு ஒருசாராரின் அரசியல் ஆதிக்க வெறியைப் பிரதிபலிப்பதால், அதற்கு இடமளிப்பது பெரும் தீமை பயக்கும்.
ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம்:
உலகத் தொடர்புக்கும் விஞ்ஞான தொழில் நுணுக்க, தத்துவ, வரலாற்றுப் பொருளாதார அறிவுக்கும் ஆங்கிலம் இன்றியமையாதது. ஆங்கில மொழி பயிற்றுவிப்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.
தொழில்கள் தேசியமயம்:
தொழில்துறையில் இன்று நிலவும் தனியார் ஆதிக்கம் நாட்டு மக்கள் அனைவர் நலனுக்கும் நல்வாழ்வுக்கும் பெரும் கேடாக அமைந்துள்ளது. உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்.
நிலச் சீர்திருத்தம்:
நிலவுடைமைக்கு வரம்பு கட்டும் சட்டத்தைத் துணிந்து நிறைவேற்ற வேண்டும். சமூகநீதியை நிலைநாட்ட இது முக்கியம்.
ராணுவச் செலவுக்குக் கட்டுப்பாடு:
இந்திய அரசு தன்னுடைய ராணுவச் செலவைக் குறைத்துக்கொண்டு, நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
ஐந்தாண்டு திட்ட அநீதிக்கு முடிவு:
இந்திய வளர்ச்சிக்கு என்ற பெயரில் மத்திய அரசு தீட்டியுள்ள ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரிதும் வட நாட்டின் வளத்தைப் பெருக்கவும் வடவரின் வாழ்வையே நோக்கமாகக் கொண்டும் தீட்டப்படுகின்றன. திட்டங்களை நிறைவேற்றும் முழுப் பொறுப்பையும் அந்தந்த மாநில அரசுகளே ஏற்று நடத்த வகைசெய்ய வேண்டும்.
பிரதிநிதித்துவ தூதர்கள்:
இலங்கை, பர்மா, மலாயா போன்ற தமிழர்கள் அதிகம் நிறைந்துள்ள வெளிநாடுகளில் தமிழர்களே இந்தியத் தூதர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
அசலான அதிகாரப் பகிர்வின் குரல்
அரசியலமைப்புச் சட்டம் புனித நூலாக அணுகப்படும் ஒரு தேசத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே விமர்சித்து, அதை மாற்றக் கோரும் ஒரு குரல் 60 ஆண்டுகளுக்கு முன் எப்படி அணுகப்பட்டிருக்கும்? தேசப் பிரிவினைக்குப் பின் தேசியப் பெருமிதங்களும், பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற குரல்களும் பொங்கி வழிந்துகொண்டிருந்த நாட்களில், ராணுவத்தின் செலவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் எப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்? அதிகாரப் பகிர்வை வெற்றுச் சொல்லாடலாக அல்லாமல், மாநிலங்களின் உரிமை சார்ந்து இவ்வளவு உறுதியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய வேறு ஒரு அரசியல் கட்சி இந்திய அரசியல் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.
திமுகவைத் தமிழர்கள் உருவாக்கிய ஒரு அரசியல் கட்சியாக, தமிழர் நலனைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் இயக்கமாக, மேலும் ஒரு மாநிலத்துக்கான கட்சியாக மட்டுமே அண்ணா கட்டவில்லை. இந்தியா எனும் ஒன்றியம் பன்மைத்துவத்தை அதன் உண்மையான பொருளில் அடைவதற்கும், பல்வேறு தேசிய இனங்களைப் பிரதிபலிக்கும் உண்மையான ஒன்றிய அமைப்பாக அது திகழ்வதற்குமான தேசிய குரலாகவே திமுகவை அண்ணா வளர்த்தெடுக்க விரும்பினார்.
மூன்று விழுமியங்களின் மீதான விமர்சனங்கள்
1.5.1962 அன்று மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரை, இந்தியாவின் மூன்று முக்கியமான விழுமியங்கள் தொடர்பில், தீர்க்கமான கேள்விகளையும் மறு ஆய்வையும் முன்வைக்கின்றன.
“ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயல்களுக்கு பொது மக்களின் ஆதரவு உண்டா; இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வாக்களிப்பு முறையும் அமலாக்கப்படாத வரை, ஜனநாயகத்துக்கான எந்தப் பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. சோஷலிஸம் என்பது சேமநலத்துக்கு உறுதிபெறுவது மட்டுமல்ல, சமத்துவத்தை உண் டாக்கப் பாடுபடுவது சோஷலிஸம். வாஸ்கியின் கூற்றுப்படி, சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதல்ல. எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும்.
ஆனால், இங்கே சம வாய்ப்பு தரப்பட்டது, தந்துகொண்டிருக்கிறோம் என்று கூற முடியுமா? மூன்றாவது தேசியம். எந்தக் கட்சியைச் சார்ந்திருக்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் தொடர்புடையதாகும். இப்போது அதிக புழக்கத்திலிருக்கும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமானால், அதை ‘தேசிய ஒருமைப்பாடு’ என்று அழைக்கலாம்... தேசிய ஒருமைப்பாடு எனும் சொல்லாடலே முன்னுக்குப் பின் முரணானது என்று நான் கருதுகிறேன். ஒருமைப்பாடு பெற்ற சமூகம்தான் நாடாகிறது.
அப்படி ஒரு நாடாக இது உருவாகியிருந்தால், ஒருமைப்பாட்டை வலியுறுத்த இப்போது என்ன அவசியம் வந்தது? கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமையே இந்தச் சொல் என்று நினைக்கிறேன்.
நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம், நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. பெரிய திறமைசாலிகள்தான் அரசியலமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். எனினும், நாடு என்றால் என்னவென்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய, புனராலோசனை செய்ய வேண்டிய, புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம், ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசிய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை. ஜனநாயகம், சோஷலிஸம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டு இருக்கிறது. சோஷலிஸம் சாரமற்றதாக்கப்பட்டு இருக்கிறது. தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.”
25.1.1963 அன்று மாநிலங்களவை உரையில் குறிப்பிடுகிறார். “கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனையாக திமுக செயல்படும்.”
அண்ணாவின் ஆறு முன்னுரிமைகள்
வெறும் இரண்டாண்டுகள் மட்டுமே அண்ணா முதல்வர் பதவியில் இருந்தார். அதில் கணிசமான காலகட்டம் அவர் புற்றுநோயோடும் போராடிவந்தார். உலகமயமாக்கலுக்கு முந்தைய - நிதியாதாரங்களுக்குப் பெரிய அளவில் மத்திய அரசை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய, அதேசமயம், மத்திய அரசால் துச்சமாகப் பார்க்கப்பட்ட ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்த - அந்தக் காலகட்டத்தில் அண்ணா மேற்கொண்ட காரியங்கள் மிகக் குறைவு. ஆனால், அவர் அடியெடுத்துவைத்த பணிகள் திராவிடக் கட்சிகளின் தொடர் பயணத்துக்கான என்றென்றைக்குமான திசைகாட்டிகள் என்று சொல்லலாம்.
சமூக நலத் திட்டங்களின் பிறப்பு:
நாடு கடுமையான நிதி தட்டுப்பாட்டிலும், அரிசித் தட்டுப்பாட்டிலும் சிக்கியிருந்த நிலையிலேயே அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஒரு வாரத்துக்கான அரிசிக் கையிருப்பை மட்டுமே முந்தைய பக்தவத்சலம் அரசு விட்டுச்சென்றிருந்த நிலையிலும், ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ வழங்கும் திட்டத்தை அவர் தொடக்கிவைத்தார். “ஐந்து கோடி கூடுதல் செலவு ஆகும்” என்கிறார்கள் அதிகாரிகள். “லட்சக்கணக்கான ஏழைகள் பயனடைவார்கள் ஐயா” என்கிறார் அண்ணா.
நிலவுடைமைக்கு உச்ச வரம்பு:
நிலவுடைமை உச்சவரம்பை அவர் ஒரு புதிய வரையறைக்குள் கொண்டுவந்தார். அதுவரை 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்றிருந்த உச்ச வரையறையை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்றாக்கினார். இந்நடவடிக்கை 1.78 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வழிவகுத்தது. பின்னாளில் 1.36 லட்சம் நிலமற்ற விவசாயிகள் இதன் மூலம் நிலம் பெற்றனர். கூடவே, நீர்நிலைகளைத் தூர்வாரி மேம்படுத்திப் பாதுகாக்க தன்னுடைய பட்ஜெட்டில் ரூ.11 கோடியை ஒதுக்கினார்.
சாதி ஒழிப்புக்கான அசலான விதை:
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் தந்த இந்து திருமணச் சட்டம். அண்ணாவே குறிப்பிட்டபடி இது சாதாரண சீர்திருத்தம் அல்ல. கூடவே, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்குத் தங்கப்பதக்கமும் வழங்கியது அவருடைய அரசு.
தமிழ்நாடு பெயர் சூட்டல்:
தமிழ் மக்களின் இந்நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டியது.
இருமொழிக் கொள்கை:
இந்திய அரசின் மும்மொழித் திட்டத்துக்கு மாற்றாக, சட்டசபையில் அவர் நிறைவேற்றிய இருமொழிக்கொள்கைத் தீர்மானம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், குறியீட்டுச் செயல்பாடுகள் என்று இன்று கருத முடியும்.
இறுதிக் கால முக்கிய பிரகடனம்
இவை அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, 1968, ஜூலை 28 அன்று சென்னையில் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் அவர் நிகழ்த்திய உரை. “நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றி சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!”
எவ்வளவு பெரிய கனவு! திரும்பிப் பார்க்கையில் இன்றைக்கு அந்தக் கனவின் பெரும் பகுதி அப்படியே மிச்சம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கு அவருடைய பெயரைச் சொல்லி அதிகாரத்தில் இருப்பவர்கள் அங்கிருந்து எவ்வளவோ தொலைவு வந்துவிட்டார்கள். ஆனால், அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கத்தின் தேவையையும் பெறுமதியையும் அந்த மிச்சக் கனவை நோக்கிய பயணமே தீர்மானிக்கும் என்று தோன்றுகிறது!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago