தெருவென்று எதனைச் சொல்வீர்?

By தஞ்சாவூர் கவிராயர்

அழகும் நேர்த்தியும் மிகுந்த தெருக்களை இப்போதெல்லாம் காண முடிவதில்லை. தெருக்களைச் சாலைகள் சாப்பிட்டுவிட்டன.

நகரமயமாதலின் விளைவாக நம்மை விட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வாழ்வின் அடையாளங்களில் ஒன்றாகத் தெருவும் ஆகிவிட்டது. சின்னச் சின்னத் தெருக்களும்கூட சிமென்ட் சாலைகள் ஆகிவிட்டன. அதாவது, அவை வாகனங்களுக்கான வழித்தடங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஆம், தெருக்களைச் சாலைகள் சாப்பிட்டுவிட்டன. ஓசையும் புகையும் உண்டாக்கியபடி சீறிச்செல்லும் வாகனங்களின் கூட்டாளியாகச் சாலைகள் உள்ளன. தெருக்களைப் போலின்றி சாலைகளோடு நட்புக்கொள்ள முடிவதில்லை. தெருக்களைச் சாலைகளாக மாற்றுவதற்கு முதலில் பலிகொடுக்கப்படுவது தெருவோர மரங்கள்தான். இந்த மரங்கள் வெறும் அழகுக்காக வளர்க்கப்படவில்லை. உடனடி உணவுத் தேவைக்கும் நிழலுக்குமாக அவை பயன் தந்தன.

வீட்டுக்கு முன்னால் முருங்கை மரம் இல்லாத வீடுகளையே அந்தக் காலத்தில் பார்க்க முடியாது. திருவிடைமருதூர் தெருவழகு என்று ஒரு சொல்வழக்கே உண்டு. நேரில் போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, இரண்டு பக்கமும் நூல்பிடித்தாற் போலக் கட்டப்பட்ட வீடுகள். நீண்டு கிடக்கும் தெருவின் அழகு, தெருவின் இருபுறமும் பசுஞ்சாணம் தெளித்துப் போடப்பட்ட விதவிதமான கோலங்கள்.

குழந்தைகளின் உலகம்

குழந்தைகளின் உலகமாக இருந்தது தெரு. முதன் முதலில் உலகம் தெருவாகத்தான் குழந்தைகளுக்குத் தெரியவந்தது. தாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைகளைச் சீராட்டியது தெருக்கள்தான். கல்யாண ஊர்வலங்களும் கேளிக்கைக் கொண்டாட்டங்களுமாக அமளிதுமளிப்பட்டது அந்தக் காலத் தெரு. கடவுளே பக்தர்களைக் காண வீதி உலா வருவார். யானைகள் கம்பீரமாக நடந்துசென்று குழந்தைகளையும் பெரியவர்களையும் ஆசீர்வதித்தன. வண்ணக் கண்ணாடிகளுடன் வண்டிகளும் மணி அடித்தபடி சென்றன. பயாஸ்கோப்புப் படம் காண்பித்தவர்களைச் சுற்றிக் குழந்தைகள் கூட்டம் மொய்த்தது.

பல வண்ணங்களில் சினிமா பட நோட்டீஸ்களை விநியோகித்தபடி செல்லும் வண்டிகளின் பின்னால் ஓடும் குழந்தைகள், புலிவேஷக் கலைஞர்களின் ஆட்டமும், மயில் ஆட்மும், பொய்க்கால் குதிரை ஆட்டமும், குறவன் குறத்தி ஆட்டமும் தெருக்களில் அரங்கேறின. அதிகாலைத் தெருக்களைச் சுற்றிவரும் மார்கழி மாத பஜனை கோஷ்டிகளின் திருப்பாவை முழக்கம் பொம்மை விற்பவர்கள், கழைக்கூத்தாடிகள், பாம்புப் பிடாரன்களுக்குப் பஞ்சமில்லை. இப்போதெல் லாம் தெருக்கள் குழந்தைகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தேரோடும் வீதிகள் காரோடும் வீதிகளாக மாறிப்போனதால், குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது.

வீட்டுக்குள் நுழையும் தெரு

தெருவில் தனித்தனியாக இருக்கும் வீடுகளை ஒரே குடும்பமாக்கியது தெருதான் என்று சொல்ல வேண்டும். தெருவில் யார் வீட்டிலாவது மரணம் சம்பவித்துவிட்டால் அந்தத் தெருவே துக்கம் அனுஷ்டிக்கும். அடுப்பும் புகையாத அந்த வீட்டுக்கு மற்ற வீடுகளிலிருந்து சாப்பாடு போகும். துக்க வீட்டில் இருப்போருக்கு ஆறுதல் சொல்ல தெருவே வீட்டுக்குள் நுழைந்துவிடும்.

அந்தக் காலத்துத் தெருக்களில் எந்த அந்நிய மனிதரும் அசலூர்க்காரரும் அவ்வளவு சுலபமாகப் பிரவேசித்துவிட முடியாது. “யாருப்பா நீ? யாரைப் பார்க்கணும்?” என்ற கிடுக்கிப்பிடி கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்றோ தெருக்கள் மெல்லச் சுருங்கி அடுக்குமாடிக் குடியிருப்புத் தளங்களின் ஆளரவமற்ற காரிடார்களாகப் பயமுறுத்துகின்றன. ஒற்றைக்கண் கதவுகள் உங்களை உற்றுப்பார்க்கின்றன. அழைப்பு மணி ஓசை உள்ளிருப்போரைக் கலவரப்படுத்துகிறது. வந்திருப்பவர் நண்பர்களாகவும் இருக்கலாம், முகமூடிக் கொள்ளையர்களாகவும் இருக்கலாம்.

வாழ்க்கை எனும் மேடை

அந்தக் காலத் தெருக்கள் வாழ்க்கை நாடகத்தின் காட்சிகள் அரங்கேறும் மேடையாகவே காட்சியளித்தன. ஒவ்வொரு வீட்டிலும் கட்டப்பட்டிருக்கும் திண்ணைகளே தெருவை வேடிக்கை பார்ப்பதற்கான அரங்குகள். “திண்ணையில் உட்கார்ந்துகொண்டு தெருவைப் பார்த்தபடி ஒரு வாழ்நாளையே கழித்துவிடலாம்” என்பார் எழுத்தாளர் தி. ஜானகிராமன். கால் பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி ஆகிப்போன எழுத்தாளர் ஆர். சூடாமணி ஜன்னல் வழியாகத் தெரிந்த தெருக் காட்சிகளைக் கொண்டே வாழ்க்கையைப் படம்பிடித்து நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக் குவித்தார்.

ஆறே ஆறு வீடுகள் கொண்ட ஒரு தெருவை வைத்து ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ என்ற புகழ் பெற்ற நாவலை வண்ணநிலவன் எழுதினார். கால்களில் நெய் ஒட்டுவதுபோல புழுதி மண் ஒட்ட, தெருவில் நடந்துபோகும் எஸ்தர் என்ற ஒரு பெண்ணின் நினைவலைகளாக விரியும் தஞ்சை ப்ரகாஷின் ‘மிஷன் தெரு’ நாவலும் தெருவிலிருந்து விரியும் உலகம்தான்.

பெயர்பெற்ற தெருக்கள்

தெருக்கள் தோன்றும்போதே பெயருடன் தோன்றின. அந்தக் காரணப் பெயர்களுடன் அவை சீரும் சிறப்புமாக வாழ்ந்தன. காலம் காரணங்களை அடித்துக்கொண்டு போன பின்னும் பெயர்கள் நிலைத்துவிட்டன. தஞ்சாவூரில் குதிரைகட்டித் தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. இப்போது அங்கே குதிரைகள் இல்லை. மாரியம்மன் கோயிலில், தஞ்சை அரண்மனையில் ஓலைச்சுவடிகளைப்படி எடுத்தவர்களுக்குச் சர்வ மானியமாகக் கொடுக்கப்பட்ட எழுத்துக்காரத் தெரு இன்றும் இருக்கிறது.

சுவடி எழுதுபவர்கள் இன்று இல்லை. இப்படிக் கோழிக்காரத் தெரு, வாடிவாசல் வைக்கோல்காரத் தெரு, நாணயக்காரத் தெரு, ஆட்டுமந்தைத் தெரு… இவையெல்லாம் தஞ்சையின் விசித்திரமான தெருப் பெயர்களில் சில. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற ஊரில் ஆங்கிலேயர் நிரந்தரமாக போர்ப்படை முகாம் ஒன்றை அமைத்தனர். இந்த முகாமில் தங்கியிருந்த ஆங்கிலேய சிப்பாய்களுக்குப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர ஒரு கூலிப்படை இருந்தது. இவர்கள் காவடியின் இருபுறமும் பானைகளைக் கட்டி, தண்ணீர் கொண்டுவருவார்கள். இவர்கள் வசித்த தெருவுக்குப் பெயர் காவடிக்காரத் தெரு. சமையல் செய்பவர்களுக்கு என்றே பிரத்தியேகமான ஒரு தெருவை வெள்ளைக்காரர்கள் அமைத்தார்கள். அந்தத் தெருவின் பெயர் குசினிக்காரத் தெரு. போர்ப் படையினருக்கு ஆடு, மாடுகளைக் கொன்று புலால் கொடுப்பதற்கென்றே ஒரு வீதியை அமைத்துக்கொடுத்தார்கள்: அந்தத் தெருவின் பெயர் கறிக்காரத் தெரு.

சந்துகளுக்கும் சரித்திரமுண்டு

அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து போகும் குழந்தைகள்போல தெருக்களை ஒட்டிச் சந்துகள் இருந்தன. மேல வீதி சந்துகள் பிரசித்தமானவை. பச்சண்ணா சந்து, மனோஜியப்பா சந்து, குப்பண்ணா சந்து என்று நீளும் இவற்றையும் சாதாரணமாகக் கருதுவதற்கில்லை. எங்கிருந்தோ இந்தச் சந்துகளுக்குள் காற்று நுழைந்து வெளியேறும். அப்படித்தான் அவை அமைக்கப்பட்டிருந்தன. பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், நட்டுவாங்கக் கலைஞர்கள் வித்வத் சிரோமணிகள் இந்தச் சந்துகளில் வசித்திருக்கிறார்கள்.

தெருக்களைச் சுமந்து திரிபவர்கள்

பெருநகரங்களில் குடியேறும்படியும் தமது எஞ்சிய வாழ்நாளை மாநகர அடுக்குமாடித் தீவுகளில் கழிக்கும் படியும் நேர்ந்துவிடப்பட்ட ஒவ்வொரு மனிதரும், தான் வாழ்ந்து கழித்த கிராமத்துத் தெருக்களை மனசுக் குள் சுமந்து திரிகிறார். மாநகர நெடுஞ்சாலையில், ஹாரன் அடித்தும் விலகாத முதியவர்கள் காது கேளாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை அவர்கள் தங்கள் ஊரின் அமைதியான தெருவொன்றில் மானசீகமாக நடந்துபோகிறவர்களாகவும் இருக்கலாம். கடைசியாக, வீடென்றும், வணிக வளாகமென்றும் கேளிக்கைக் கூடமென்றும், உண்ணுதற்கு ஒப்பற்ற இடமென்றும் சொல்லுவதற்கு எத்தனையோ வைத்திருக்கும் மாநகர மனிதர்களை நோக்கி ஒரு கேள்வி: தெருவென்று எதனைச் சொல்வீர்?

- தஞ்சாவூர்க் கவிராயர், கவிஞர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்