ஐன்ஸ்டைனுக்கு உலகெங்கிலுமிருந்து கடிதங்கள் வந்தன. கூடியவரை எல்லாக் கடிதங்களுக்கும் அவர் பதில் எழுதினார். ஆனால், அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு படித்துப் பதிலெழுதியது குழந்தைகளிடமிருந்து வந்த கடிதங்களுக்கு என்று சொல்லலாம்.
அறிவியல் அறிஞர்களுக்கு அறிவியல் மொழியில் எழுதிய ஐன்ஸ்டைன், குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியில் எழுதினார். குழந்தைகள் தலைகள்மீது தகவல்பொதிகளை ஏற்றுவதைவிட, அவர்களது கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்வது முக்கியம் என்பதில் அவருக்கு என்றுமே ஐயம் இருந்ததில்லை. குழந்தைகளின் தனித்துவத்தை அவர் மிகவும் மதித்தார்.
புதுப் புதுக் கருத்துகள் தோன்ற வேண்டும் என்றால், தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
பலதரப்பட்ட கடிதங்கள்
குழந்தைகள் அவரிடம் கேள்விகளுக்கு விடைகள் கேட்டார்கள். புத்திமதி சொன்னார்கள். தங்களைப் பற்றியும் அவருக்கு அறிவித்தார்கள்.
ஒரு குழந்தை எழுதுகிறது: எனக்கு வானத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும். அம்மாவிடம் கேட்டேன், அவர் உங்களிடம் கேட்கச் சொன்னார். ஐன்ஸ்டைன் எழுதிய பதில் கிடைக்கவில்லை. வானத்துக்கு அப்பாலும் வானம் இருக்கிறது என்று எழுதியிருக்கக்கூடும்.
இன்னொரு குழந்தை அவரிடம் கேட்கிறது: யாரும் இல்லாத நேரத்தில் மரம் ஒன்று உடைந்து விழுகிறது. அது விழும் சப்தம் கேட்குமா, கேட்காதா?
பார்பரா என்ற சிறுமி 1943-ம் ஆண்டு அவருக்கு எழுதுகிறாள்: பன்னிரண்டு வயதான சராசரி மாணவி நான். எனக்கு நீங்கள் ஒரு ஹீரோ. நான் கணக்கில் சராசரிக்கும் குறைவுதான். மற்ற மாணவர்களைவிட அதிகம் படிக்க வேண்டி யிருக்கிறது
பதில்: இப்போது வரை நான் ஹீரோ என்று கனவுகூடக் காணவில்லை. ஆனால், நீ என்னைத் தேர்ந்தெடுத்த பிறகு அவ்வாறு உணர்கிறேன். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எவ்வாறு ஒருவர் உணர்வாரோ அவ்வாறு இருக்கிறது. கணிதப் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். என்னுடைய பிரச்சினைகள் உன்னுடையதைவிட மோசம்.
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா?
ஐன்ஸ்டைன் குழந்தைகளிடம் கடிந்துகொண்டு எழுதியதே இல்லை. அவருக்குத் தென்னாப் பிரிக்கச் சிறுவன் ஒருவன் இவ்வாறு எழுதினான்:
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்ற தகவலே எனக்குத் தெரியாது. நீங்கள் 18-ம் நூற்றாண்டில் இருந்தவர் என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்று எனது ஆசிரியர் சொன்னதும் ‘அவர் அமெரிக்காவிலா புதைக்கப்பட்டிருக்கிறார்? இங்கிலாந்தில் இல்லையா?’ என்று கேட்டேன். நீங்கள் உயிரோடு இருப்பதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் எனது நண்பர்களும் வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். எங்கள் தலைமை மாணவருக்குத் தெரியாமல் இரவில் சோதனைகள் செய்கிறோம். தெரிந்தால் தண்டனை கிடைக்கும்.
பதில்: நான் உயிரோடு இருப்பதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கூடிய சீக்கிரமே இதற்குப் பரிகாரம் ஏற்படும் என்று நம்புகிறேன். உங்கள் சோதனைகள் பள்ளி-அரசாங்கத்தின் பார்வைக்கு நிச்சயம் வராது. தொடர்ந்து அவர்கள் கண்ணில் படாமல் செய்யுங்கள். வெளியில் இருக்கும் அரசாங்கத்தைப் பற்றியும் நல்ல குடிமக்கள் இவ்வாறுதான் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதுதான் சரி.
அறிவியல் அறிஞர்கள் பிரார்த்தனை செய்கிறார்களா?
ஆறாவது வகுப்பில் இருந்த ஃபிலிஸ் என்ற சிறுமி, அறிவியல் அறிஞர்கள் பிரார்த்தனை செய் கிறார்களா, செய்கிறார்கள் என்றால், எதற்காகச் செய்கிறார்கள் என்று அவரிடம் கேட்டாள்.
பதில்: அறிவியல் அறிஞர்கள், நடப்பவை யெல்லாம், மனித வாழ்க்கையில் நடப்பதுகூட இயற்கையின் விதிகளின்படி நடக்கின்றன என்று நம்புகிறார்கள். எனவே, ஒரு விஞ்ஞானி, இயற்கையாக நடக்கப்போவதைப் பிரார்த்தனையால் மாற்ற முடியும் என்று நம்ப மாட்டார். ஆனால், இயற்கையின் சக்திகளைப் பற்றிய எங்களது அறிவு முழுமை பெறாதது என்பதை நிச்சயம் நாங்கள் ஒத்துக்கொள்வோம்.
எல்லாவற்றுக்கும் மேலான சக்தி ஒன்று இயங்குகிறது என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. இவ்வளவு அறிவியல் வெற்றிகளுக்குப் பிறகும் இந்த நம்பிக்கை (அறிவியல் அறிஞர்கள் மத்தியில்) பரவலாக இருக்கிறது. அறிவியல் தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பிரபஞ்ச விதிகளுக்குப் பின்னால் சக்தி ஒன்று இயங்குகிறது, அந்த சக்தி மனித சக்தியைவிடப் பல மடங்குகள் பெரியது என்பதை நிச்சயம் நம்புகிறார்கள்.
இந்த வகையில் அறிவியல் தேடல் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆன்மிக உணர்வைத் தருகிறது. ஆனால், அது எளிமையான ஒருவரின் மத நம்பிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
சூரியன் எரிந்துபோனால்?
குழந்தைகள் சொல்வது சரியில்லை என்பதை எவ்வளவு அழகாக அவர் புரியவைக்கிறார் என்பதற்கு இந்தக் கடிதப் பரிவர்த்தனை ஒரு சான்று:
நாங்கள் ஆறாம் வகுப்பில் படிக்கிறோம் நாங்கள் ஆறு பேர் ஒரு கட்சி. 21 பேர் எதிர்க்கட்சி, எங்கள் ஆசிரியரையும் சேர்த்தால் 22 பேர். எங்கள் கட்சி கூறுகிறது சூரியன் எரிந்துபோனாலும் உலகில் உயிரினங்கள் இருக்கும் என்று. எதிர்க்கட்சி, இருக்கவே முடியாது என்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று விரும்புகிறோம். சேர்ந்தால் ஆறு சிறிய விஞ்ஞானிகள், ஒரு பெரிய விஞ்ஞானி.
பதில்: சிறுபான்மையினர் சொல்வது சில சமயம் சரியாக இருக்கும் – ஆனால், உங்கள் கட்சி சொல்வது சரியில்லை. சூரிய ஒளி இல்லை என்றால், கோதுமை இல்லை, ரொட்டி இல்லை. புல் இல்லை, பசுக்கள் இல்லை, மாமிசம் இல்லை, பால் இல்லை. எல்லாமே உறைந்துவிடும். உயிர் இல்லை.
பதில் சொல்ல முடியாத கேள்வி!
அவராலேயே பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் அவரிடம் குழந்தைகள் கேட்டிருக்கிறார்கள்.
கேள்வி: நானும் எனது ஆசிரியரும் சாத்தானைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவன் சொர்க்கத்திலிருந்து கீழே ஒன்பது நாட்கள் ஒன்பது இரவுகள் விழுந்தான் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும். ஒரு நொடிக்கு 32 அடி வேகத்தில் விழுந்தான். நொடிக்கு நொடி வேகம் அதிகரித்துக்கொண்டே போனது. இதற்கு ஒரு விதி இருக்கிறது என்று சொல்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது என்று தெரியும். இருந்தாலும், முடிந்தால் விதியை அனுப்பவும்.
ஏற்கெனவே, கணிதத்தோடு போராடிக் கொண்டிருந்த ஐன்ஸ்டைன் இந்தக் கடிதத்துக்குப் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை.
- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago