மெல்லத் தமிழன் இனி...! 28 | 32, தெற்குத் தெரு, வக்கம்பட்டி, திண்டுக்கல், C/O மதுபானக்கடை!

By டி.எல்.சஞ்சீவி குமார்

பேருந்தை விட்டு இறங்கியதுமே தள்ளாடியபடியே வந்த அந்த நபர் தனது கூட்டாளியிடம், “மாப்ளே, இவனை அப்படியே ஓங்கி அறையட்டுமா, எவ்வளவு ரூவா பெட்டு?” என்றவர், நிலைகொள்ளாமல் வேட்டி அவிழத் தடுமாறி விழுந்தார். இப்படித்தான் வக்கம்பட்டி என்னை வரவேற்றது. திண்டுக்கல் அருகே இருக்கிறது வக்கம்பட்டி. சிறு கிராமம்.

ஊருக்குள் தெற்குத் தெரு உட்பட ஐந்தாறு தெருக்கள். பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். மீன் விற்கும் பெண்கள். அரசுப் பதிவேட்டின்படி இங்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானக் கடை கிடையாது. ஆனால், டாஸ்மாக் அறிவிப்புப் பலகை இல்லாமல், பஸ் நிறுத்தத்துக்கு எதிரே ஒரு குடோனில் பகிரங்கமாக இயங்குகிறது மதுபானக் கடை. நேரம் காலம் எல்லாம் இல்லை. குடிநோயாளிகள் நம்பி வருகிறார்கள். அதிகாலை ஆகட்டும், நள்ளிரவு ஆகட்டும், எந்த நேரமும் மது கிடைக்கிறது. தெருவுக்குப் பத்துப் பேர் மது அருந்திவிட்டு மல்லாக்கக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் கணவனை இழந்த பத்துக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். தெற்குத் தெருவில் மதுவால் கணவனை இழந்தவர்கள் என்று வீடு வீடாகத் தட்டிக் கணக்கெடுத்தோம். 32 பெண்கள் மதுவால் கணவனை இழந்து தவிக்கிறார்கள். பெண்கள் தொடர்ந்து போராடியதில் ஆறு மாதங்களுக்கு முன்பே டாஸ்மாக் நிறுவனம் இங்கிருந்த தனது கடையை அகற்றிவிட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கில் அமர்க்களமாக நடக்கிறது மதுபானக் கடை.

தாங்க இயலாத பெண்களின் சோகம்!

ஊருக்குள் சென்று விஷயத்தைச் சொன்னதுமே ஆண்கள் பின்வாங்குகிறார்கள். பெண்களோ கொந்தளிக்கிறார்கள். “வாங்க, நான் காட்டுறேன்” என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார்கள். “இதோ லலிதாவோட புருஷன் போன மாசம் செத்தான், கிளாராவோட புருஷன் அதுக்கு முந்தின மாசம் குடிபோதையில வண்டி அடிச்சி செத்தான், ராதாவோட புருஷன் குடல் வெந்து செத்துட்டான்” என்று வீடு வீடாகக் காட்டுகிறார்கள். ஏழ்மையான அந்த வீடுகள் பொருட்களின்றி வெறிச்சோடியிருக்கின்றன. கனத்த மவுனமும் அடர்ந்த சோகமும் அங்கு அப்பிக்கிடக்கிறது. பேச்செடுத்தால் பெண்கள் வார்த்தை வராமல் கண்ணீர் மல்குகிறார்கள்.

பெரும்பாலும் இளம் பெண்கள். படிக்கும் வயதில் குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிக்கிறார்கள். கணிசமான பேர் கணவன் இறந்தவுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். “அவர் இருந்த வரைக்கும் குடிச்சிட்டு வந்தாலும் ஏதோ கொடுப்பார். சமாளிச்சேன். எனக்கு வெளியே போய்ப் பழக்கமே இல்லைங்க. என்ன வேலைக்குப் போறதுன்னே தெரியலை. பசங்களுக்கு ஃபீஸ் கட்டலைன்னு ஸ்கூல்லருந்து அனுப்பிட்டாங்க. தனியா தெருவுல நடந்து போக முடியலை. பிராந்தி கடையைத் தாண்டித்தான் மெயின் ரோடு போகணும். குடிச்சிட்டு போதையில போறவனுங்க...” - பேச்சு வராமல் வெடித்து அழுகிறார் இளம் பெண் புஷ்பம். சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் சூசை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.

மது அருந்தும் சிறுவர்கள்!

லலிதாவின் கணவர் முருகராஜ், கல்லீரல் வீங்கி, அழுகி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெய, “அம்மா கூலி வேலைக்குப் போய்த்தான் என்னைப் படிக்க வைக்குது. என் அண்ணனும் இப்ப ரொம்ப குடிக்கிறான். போதையில வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணுறான். எனக்கு வீட்டுல தங்கவே பயமா இருக்குது” என்று கண் கலங்குகிறாள். அவளுடைய அண்ணனுக்கு 16 வயது. அவனிடம் பேசினால், “வேற என்னண்ணா பண்ணுறது, தெரு முக்குலயே விக்குறாங்க. ஊருக்குள்ள அத்தனை பேரும் குடிக்கிறாங்க. நான் மட்டும் தனியா உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணுறது” என்கிறான்.

சகாயமேரி, தனது கணவர் மது அருந்துகிறார் என்கிற காரணத்துக்காகவே பத்து ஆண்டுகளாக அவரை வீட்டில் அனுமதிப்பதில்லை. அதே ஊரில், பத்து வீடு தள்ளி இன்னொரு வீட்டில் வசிக்கிறார் அவரது கணவர் ஜான். “மனுஷன் என்னைக்குக் குடியை நிறுத்துறாரோ அன்னைக்கு வீட்டுக்கு வரட்டுமுன்னுட்டேன். ஒத்தையா கஷ்டப்பட்டு, இதோ மகனை காலேஜ்ல படிக்க வைக்கிறேன், பொண்ணு ப்ளஸ் ஒன் படிக்கிறா. குடிக்கிற புருஷன் என் குழந்தைகளுக்கு வேணாமுங்க” என்கிறார் வைராக்கியமாக. உள்ளூர் தேவாலயம் ஒன்றில் கழுவி, பெருக்கி இதனைச் சாதித்திருக்கிறார் சகாயமேரி.

ராதாவின் கணவர் குடித்து குடல் வெந்து இறந்துவிட்டார். பெண் பத்தாவது படிக்கிறாள். மகன் ஆறாவது படிக்கிறான். “இனிமே குடிச்சா செத்துடுவேனு டாக்டருங்க சொல்லியும் குடிச்சாருங்க. ரத்தமா வாந்தி எடுத்துச் செத்துட்டாரு. இப்ப என் ரெண்டு நாத்தனாருங்க ஆதரவுல இருக்கேங்க. அவங்க தான் பார்த்துக்கிறாங்க. எத்தனை நாள் அப்படி இருக்க முடியும்? ரொம்பச் சங்கடமா இருக்கு” என்று அழுகிறார். இப்படி இங்கே கிளாரா, மீனாட்சி, தனலட்சுமி, முத்துமாரி, பர்மா காரம்மா என்று சோகக் கதைகள் நீள்கின்றன. ஆனாலும், மிச்சமிருக்கும் சொச்சம் ஆண்களும் மது அருந்துகிறார்கள். ஊருக்குள் ஹோட்டல், தேநீர்க் கடை, பள்ளிக்கூடம், சமூகக் கூடம், பஸ் நிறுத்தம் எதையும் விட்டுவைக்காமல் மதுபானக் கூடமாக ஆக்கியிருக்கிறார்கள்.

பெண்கள் மொத்தமாக மதுக் கடைக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆனால், அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக அவர் களால் எதையும் செய்ய முடியவில்லை.

அதிரவைக்கும் மதுக் கடன் திட்டங்கள்!

பெரும்பான்மை ஆண்கள் கிழங்கு மில்லில் மூட்டை தூக்குகிறார்கள். 500, 600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். காலையில் தொடங்கி இரவுக்குள் அத்தனை ரூபாயையும் குடித்து அழித்துவிடுகிறார்கள். பற்றாக்குறைக்குக் கடன் சொல்லிக் கணக்கு வைத்து மது அருந்து பவர்களும் உண்டு. அவர்களிடம் விசாரித்தால் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

மது அருந்த வாரத் தவணை, மாதத் தவணைத் திட்டம் எனக் கடன் திட்டங்கள் இருக்கின்றன. கடன் திட்டத்தில் மது பாட்டில் வாங்கினால் விலை அதிகம். வழக்கமான கூடுதல் விலையைவிட இன்னும் விலை கூடுதல். அதாவது, வட்டி. சிலர் மொத்தமாக முன்பணம் செலுத்திக் குடிக்கிறார்கள். அவர்களுக்குச் சலுகை விலையில் மது கிடைக்கிறதாம். இன்னொரு திட்டமும் இருக்கிறது. தொழிலாளி மதுக் கடைக்கு வந்து குடித்துக்கொள்ளலாம். பணம் தரத் தேவையில்லை. வாரக் கூலியை நேரடியாக அவரது முதலாளியிடம் வசூலித்துக் கொள்வார்கள். உண்மையில், அந்தக் குடிநோயாளித் தொழிலாளிக்குத் தனது வருவாய் எவ்வளவு என்பதுகூடத் தெரியாது. இப்படி உழைப்பை மட்டும் சுரண்டவில்லை, உயிரையும் சேர்த்தே சுரண்டுகிறார்கள்.

உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லும் தகவல்கள் மேலும் கவலையை அதிகரிக்க வைக்கின்றன. “வக்கம்பட்டி, சின்னாளப்பட்டி, சிறுமலை அடிவாரம், செட்டிப்பட்டி, வெள்ளோடு, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணிபுரம் இந்த ஊரையெல்லாம் ‘சின்ன பாண்டிச்சேரி’ன்னு கூப்பிடுவாங்க. இருபது வருஷம் முன்னாடி, இந்த ஊர்களின் பிரதானத் தொழில் சாராயம் காய்ச்சுறதுதான். போலீஸ் சாராயத்தை ஒழிச்சிட்டாங்க. ஆனால், இந்த ஊர்கள்லதான் அடிக்கடி எரிசாராயம் பிடிபடுது. மொத்தமா எரிசாராயத்தை வாங்கி, அதுல சுடுதண்ணி, கெமிக்கல் எசன்ஸ் கலந்து, டாஸ்மாக் பாட்டில்ல அடைச்சு விக்கிறாங்க. இந்தப் பக்கம் இருக்கிற பெரும்பாலான டாஸ்மாக் கடைகள்ல போலி மதுபானங்கள்தான் கிடைக்குது” என்கிறார்.

மதுபானமா, எரிசாராயமா?

அவர் சொல்லும் விஷயம் சாதாரண மானது அல்ல. ஈத்தைல் ஆல்கஹால் என்பதுதான் மதுபானங்களில் போதையை உருவாக்குவதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனம். ஆனால், இவர்கள் கலப்பது மீத்தைல் ஆல்கஹால். இது ஒரு வகை அமிலம். கழிப்பறை கழுவப் பயன்படுகிறது. பெயின்ட், வார்னீஷ் போன்ற

வற்றில் கலப்பார்கள். ஈத்தைலுக்கும் மீத்தைலுக்கும் வித்தியாசம் தெரியாது. இரண்டும் பார்க்கத் தண்ணீர்போலத்தான் இருக்கும். மீத்தைல் மிகவும் ஆபத்தானது. இதுவும் கள்ளச்சாராயம் போலத்தான். கொஞ்சம் அளவு கூடினாலும் முதல் வேலையாகப் பார்வை யைப் பறிக்கும். அடுத்த அரை மணி நேரத்தில் முதலுதவி கிடைக்கவில்லை என்றால், உயிர் போய்விடும்.

டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கணக்கு உண்டு. ரசீது போடுகிறார்கள். அப்படியென்றால், வக்கம் பட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றியும்கூட விற்பனை செய்யப்படும் மதுபானத்

துக்குக் கணக்கு என்ன? அங்கு டாஸ்மாக் நிறுவனம்தான் மதுபானங்களை விநியோகிக் கிறதா? டாஸ்மாக் நிறுவனம் விநியோகிக்கிறது என்றால், அரசு கடையே அல்லாத ஒரு கடைக்கு அது விநியோகிப்பது எப்படி? அல்லது டாஸ்மாக் நிறுவனம் விநியோகிக்கவில்லையென்றால், அங்கெல்லாம் விற்கப்படுவது போலி மதுபானங்களா? வக்கம்பட்டி மட்டும் அல்ல, திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டப்பாறை, சூசைப் பட்டி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி - மைலாப்பூர் இங்கெல்லாம் நடப்பது என்ன? இதற்கான விடைகளை - அதிரவைக்கும் உண்மைகளை நாளை பார்ப்போம்!

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

பின்குறிப்பு: கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்