புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?

By சமஸ்

கேரளம் என்று மட்டும் இல்லை; படைப்பாளிகளைக் கொண்டாடும் விஷயத்தில், இந்தியாவிலேயே பல சமூகங்கள் நம்மைக்காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன!

திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்குப் ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். எழுத்தாளரும் நண்பருமான நாறும்பூநாதன், “இந்தப் பெயர்சூட்டலுக்குப் பின் 26 வருடப் போராட்டம் இருக்கிறது” என்று சொன்னார். “1990-ல் நெல்லையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில மாநாட்டில், இதுபற்றி முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். 2006-ல் அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது ரூ.2-க்கு அவருடைய வரலாற்றைக் குறுவெளியீடாக அச்சிட்டு விநியோகித்து, இதுபற்றிய பிரச்சாரத்தை நடத்தினோம். அடுத்தடுத்து வந்த மாநகராட்சி நிர்வாகங்களிடம் வலியுறுத்திவந்த நிலையில், இப்போது மேயர் புவனேஸ்வரி காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது” என்றார். “இப்போதும் புதுமைப்பித்தன் வாழ்ந்த வீடு அங்கிருக்கிறதா?” என்று கேட்டேன். “அது இப்போது உருமாறிவிட்டது” என்றார் நாறும்பூநாதன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகனான புதுமைப்பித்தன் 42 வருடங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். 1906-ல் புதுமைப்பித்தன் பிறந்தது கடலூர், திருப்பாதிரிப்புலியூரில். செஞ்சியிலும் திண்டிவனத்திலும் படித்தார். பணி ஓய்வுக்குப் பின், அவருடைய அப்பா சொக்கலிங்கம் சொந்த ஊரான திருநெல்வேலிக்குக் குடும்பத்தோடு ஜாகையை மாற்றியபோது, புதுமைப்பித்தனுக்கு 12 வயது. அடுத்த 13 வருடங்கள் வண்ணாரப்பேட்டையில் இருந்த பூர்வீக வீட்டில் வாழ்ந்தார். திருமண மான பின்னர், பிழைப்பு நிமித்தம் சென்னைக்கு வந்தவர், பத்திரிகைகளில் பணியாற்றினார். சினிமாவில் முயற்சி செய்தார். பெங்களூர் போனார். புனே போனார். அங்கு காசநோயால் பாதிக்கப்பட்டவர், மனைவியின் ஊரான திருவனந்தபுரத்துக்கு 1948-ல் திரும்பினார். அடுத்த ஒரு மாதத்தில் இறந்தார். ஒரு புத்தகத்துக்குள் அவருடைய எல்லாக் கதைகளும் அடங்கிவிட்டன. புத்தகம் சாகாவரம் பெற்றுவிட்டது.

வறுமையின் சாட்சியங்கள்

‘வாழ்வதாகச் சொல்கிறோம், வாழ்கிறோமா?’ என்று கேட்ட புதுமைப்பித்தனுக்கு வாழும் வாய்ப்பை வாழ்க்கை கொடுக்கவில்லை. வறுமையின் காரணமாக வாழ்வின் பெரும் பகுதி கணவன் ஓரிடத்திலும் மனைவி ஓரிடத்திலுமாக அலைக்கழிந்துகொண்டிருந்தனர். புதுமைப்பித்தன் - கமலா இடையிலான கடிதங்கள் பிரிவுத் தவிப்பின் தணலில் உழன்றவை. ‘எனதாருயிருக்கு…, கண்மணி கமலாவுக்கு…, எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு…, கண்ணான எனது உயிருக்கு…, என் கண்ணம்மாவுக்கு…, கண்ணாவுக்கு…, எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு…, எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு…’ என்றெல்லாம் உயிர் உருக உருக அவர் எழுதிய கடிதங்கள் ‘கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இந்த மூத்தத் தமிழ்க்குடி’ ஒரு படைப்பாளியை அவன் வாழும் காலத்தில் அங்கீகரிக்காமல் எப்படியெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அடித்து நொறுக்கும், வதைக்கும், சிதைக்கும், சித்ரவதைக்குள்ளாக்கும் என்பதற்கான வரலாற்றுச் சாட்சியங்கள்.

கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் கழித்து புதுமைப்பித்தன் - கமலா தம்பதிக்குப் பிள்ளை பிறந்தது, உடனே இறந்தது. இரண்டு வருடங்கள் கழித்து இன்னொரு பிள்ளை. அது அடுத்த மூன்று மாதத்தில் இறந்தது. அந்தப் பிள்ளை உடம்புக்கு முடியாமல் கிடந்தபோது மருந்து வாங்கிக் கொடுக்கக் காசில்லை; செத்தபோதோ அடக்கம் செய்யக் காசில்லை. மூன்றாவது பிள்ளை பிறந்த பின்னர், அந்தக் குழந்தையைக் காலமெல்லாம் அள்ளி அணைத்துக் கொஞ்சி வளர்க்க புதுமைப்பித்தனுக்கு உயிர் இல்லை.

பத்தோடு பதினொன்று

தேர்ந்த விமர்சகருமான புதுமைப்பித்தனுக்கு, தன் கதைகள் சர்வதேசத்துக்கு முன் இன்னும் எத்தனை நூறாண்டுகளுக்குத் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். தன் எழுத்தின் வீச்சை உணராதவரா “வானத்து அமரன் வந்தான் காண்... வந்ததுபோல் போனான் காண்…” என்று தன் வாழ்வை எழுதிச் செல்வார்? எல்லாவற்றையும் உணர்ந்தும் பிழைப்புக்காக அலைக்கழிந்தார். கடைசி நாட்களில் நண்பருக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்று சிகிச்சைக்காக நூறு ரூபாய் உதவி கேட்டு எழுதியது.

புதுமைப்பித்தன் இறந்து 68 வருடங்கள் கழித்து, அரசு சார்ந்து ஏதோ ஒரு விதத்தில் அவருடைய பெயர் நினைவுகூரப்பட்ட செய்தியைப் பத்தோடு ஒன்று பதினொன்றாகப் பத்திரிகையில் பார்த்தபோது, “இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை?” என்று அசட்டுத்தனமாக ஒரு கேள்வி எழுந்தது. இன்றைய தமிழகச் சூழலில் பைத்தியக்காரத்தனமாகக்கூட இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் துரத்தியது. அதை ஒதுக்க முற்பட்டபோதெல்லாம், “புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்காரராக இல்லாமல், ஒருவேளை அவர் மனைவி பிறந்த திருவனந்தபுரத்துக்காரராக இருந்திருந்தால், இந்தக் கேள்வி அர்த்தமுடையதாக இருந்திருக்குமா, இருக்காதா?” என்று இன்னொரு கேள்வி வேறு துரத்த ஆரம்பித்தது.

அடையாளம் காட்டிய தட்டிகள்

கேரளம் என்று மட்டும் இல்லை; படைப்பாளிகளைக் கொண்டாடும் விஷயத்தில், இந்தியாவிலேயே பல சமூகங்கள் நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்த முறை கொல்கத்தா சென்றிருந்தபோது, இயக்குநர் சத்யஜித் ரேயின் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளியிருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஒரு நாள் யதேச்சையாக அந்த வீதியைக் கடக்க நேரிட்டது. அங்கு சத்யஜித் ரே வாழ்ந்த வீடிருக்கிறது என்பதை அந்த வீதியின் வித்தியாசமான சூழல்தான் அடையாளம் காட்டியது.

வீதியின் இரண்டு பக்கங்களிலும் விஸ்தாரமான நடைமேடைகள். விக்டோரியா காலத்துப் பாணி தெரு விளக்குகள். ஆங்காங்கே மரங்கள். மரத்தடி யில் இளைப்பாறுவதற்கும் அரட்டையடிப்பதற்கு மான பெஞ்சுகள். ரே வீட்டை ஒட்டியுள்ள லீ சாலைக்கு ‘சத்யஜித் ரே தரணி’ என்று பெயர் சூட்டியிருக்கும் அரசு, அவருடைய திரைப்படங்களை நினைவுகூரும் நினைவுத் தட்டிகளை அவர் வீடிருக்கும் வீதியின் இருமருங்கிலும் நிறுவியிருக்கிறது. தன்னுடைய படங்களுக்கு ரே வடிவமைத்த சுவரொட்டிகளை வடிவமைப்பாகக் கொண்ட இந்தத் தட்டிகள், விளக்குகளின் பின்னணியில் இரவிலும் ஒளிர்கின்றன. ‘ரேவுக்கு எங்களுடைய பணிவான காணிக்கையின் சிறு அடையாளம்’ என்ற அறிவிப்போடு இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னின்று செய்திருப்பவர் முதல்வர் மம்தா பானர்ஜி. “அது ஏன் வீதிக்குப் பெயர் சூட்டும்போது, ‘சத்யஜித் ரே வீதி’ என்று பெயர் சூட்டாமல் ‘சத்யஜித் ரே தரணி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்?” என்று கேட்டேன். “தரணி என்றால், உலகம், பிரபஞ்சம்… வீதிக்குள் அடைத்துவிடக் கூடிய வீச்சா ஒரு படைப்பாளியினுடையது?” என்றார்கள்.

செத்தாலும் காசியில் சாக வேண்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

47 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்