Globe ஜாமூன் - ஒண்டிக்கு ஒண்டி

புளியந்தோப்பு, காரமேடு, மயிலை மாங்கொல்லை கட்சிக் கூட்டங்களில் சி சென்டர் பேச்சாளர்களின் பிரயோ கங்களை ரசிக்கும் மனோபாவம் உள்ளவர்களால் இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹு ஐ.நா.வில் புதன்கிழமை பேசிய வீர உரையை அவசியம் ரசிக்க முடியும். என்ன வித்தியாசமென்றால் நமது பேச்சாளர்களின் வீரத்தை ஒரு பாட்டில் சோடா தணித்துவிடும். நெதன்யாஹு கொஞ்சம் பேஜார் பிடித்த மனிதர். செய்ய உத்தேசித்திருப்பதைத்தான் 'வெறும் கோபத்தில் கத்துகிற' பாவனையில் வெளிப்படுத்துவார். போகிற போக்கில் சும்மா கொளுத்திப் போட்டுவிட்டுப் போவது. ஏன்யா இப்படி என்று பின்னால் யாராவது சட்டையைப் பிடித்தால், அதான் அப்போதே சொன்னேனே என்று கையைக் கழுவிவிடலாம் பாருங்கள்.

பராக் ஒபாமா, ஈரானிய அதிபர் ருஹானிக்கு ஹலோ சொன்னதில் கடுப்பானாரா, அல்லது நான் ஹலோ சொல்கிறேன்; நீ ஐயோ சொல்லு என்று அவரே செட்டப் பண்ணி வைத்து பேசச் சொன்னாரா, அதுவுமில்லாவிட்டால், எங்கே ஈரான் மீது உலக நாடுகளுக்கு நல்லெண்ணம் வந்து அதிபரை உத்தமோத்தமராகக் கருதிவிடுவார்களோ என்று உள்ளபடியே பயந்துவிட்டாரா தெரியாது. காது கொண்டு கேட்க முடியாத கண்ணராவிப் பேச்சால் குளிப்பாட்டி எடுத்துவிட்டார் நெதன்யாஹு. என்ன மிரட்டல், என்ன ரவுடித்தனம், என்ன ஒரு எகத்தாளம்! ஒரு தெலுங்குப் படத்தைக் காட்டிலும் மசாலா தூக்கலாக ஒரு தேசத்தின் அதிபர் பேச முடியுமென்றால் அது இதுதான்.

ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரி த்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் பொதுவில் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை; நாங்கள் அணுவைப் பிளந்து மின்சாரம் மட்டும்தான் தயாரிக்கி றோம் என்று ஈரான் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இந்த அணு ஆயுதத் தயாரிப்புக் குற்றச்சாட்டு ஒரு முகாந்திரம். அமெரிக்க மிரட்டல்களுக்கும் யுத்த முஸ்தீபு முண்டாதட்டல்களுக்கும் இதுதான் ஆரம்பப் புள்ளி. நாளைக்கு வேறு ஏதாவது மேட்டர் அகப்பட்டால் இதை விட்டுவிட்டு அதற்குப் போய்விடுவார்கள். அதுவல்ல பிரச்னை.

என்னடா திடீரென்று ஈரானிய அதிபருக்கு ஒரு நல்ல பிள்ளை தோற்றம் கிடைத்துவிட்டதே, அமெரிக்க அதிபரோடெல்லாம் பேச்சு வார்த்தைக்கு ரெடி யென்கிறாரே, அவரும் முஸ்தபா முஸ்தபா பாடுகிறாரே என்று இஸ்ரேலதிபருக்குக் கவலையாகிவிட்டதன் விளைவு, அவரை ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

யாரும் நம்பிவிடாதீர்கள். ஈரானாவது அணுமின்சாரம் எடுப்பதாவது? அயோக்கியப் பயல்கள் ஆயுதம்தான் தயாரிக்கிறார்கள். இது புரியாமல் அவர்களை நல்லவர்கள் என்றெண்ணி மோசம் போய்விடாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். ஈரான் தன் கற்பை நிரூபித்தாகவேண்டியது கட்டாயம். ஆயுதமில்லை என்பதை அவிழ்த்துக் காட்டியே தீரவேண்டும். செய்யத் தவறினால் யுத்த பேரிகை கொட்ட நான் தயாராக இருக்கிறேன். யார் துணையும் தேவையில்லை. ஒண்டிக்கு ஒண்டி. சண்டைக்குச் சண்டை. இரண்டிலொன்று பார்க்காமல் ஓயமாட்டேன்.

என்ன பேச்சு இதெல்லாம் என்று வாயைப் பிளக்காதீர்கள். ஈரான் விஷயத்தில் தனது நிலைபாட்டை மிகத் தெளிவாக முன்வைத்திருக்கும் இஸ்ரேலிய அதிபர், இரண்டு விஷயங்களை மிகவும் வற்புறுத்துகிறார். முதலா வது, உலக நாடுகள் ஈரானுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பொருளாதாரத் தடையுத்தரவு போடவேண்டும். தனிமைப்படுத்த வேண்டும். ரெண்டாவது, தெளிவான, மிகத் தெளிவான அச்சுறுத்தல் அவசியம் என்கிறார். அடேய், மரியாதையாக உன் அணு ஆயுதத் தயாரிப்பை மூட்டை கட்டு; இல்லாவிட்டால் நீ காலி என்று மிரட்ட வேண்டும்.

இந்த மிரட்டல் உற்சவத்தில் தம் பங்களிப்பாக யுத்தம் தொடங்கவே சித்தமாகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். முன்பே சொன்னதுபோல், யார் தயவும் தேவையில்லை; ஒண்டிக்கு ஒண்டி. மத்தியக் கிழக்கு நாடுகளை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பது அமெரிக்காவின் நிரந்தரச் செயல்திட்டம். இதுவரை எந்தவிதப் பேச்சு வார்த்தைக்கும் முன்வராத ஈரான் இப்போது சற்றே சமரச சாத்தியங்களுக்குக் கதவு திறக்கத் தயாராகும் நேரத்தில் இஸ்ரேலிய அதிபரின் இந்த மிரட்டல், அமைதிக்கு எதிரான அவர்களுடைய தெளிவான மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இதெல்லாம் நல்லதுக்கே இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்