மனித இனம் கடந்து வந்த வரலாறு

By கே.என்.ராமசந்திரன்

பூமியில் மனித இனம் தோன்றிய குறுகிய காலத்தில் அது சாதித்தவை மிகவும் அற்புதமானவை



தொலைத்தொடர்புச் சாதனங்கள், ஆகாய விமானங்கள், இன்டர்நெட், வீடு நிறைய மின்னணுக் கருவிகள் ஆகியவையெல்லாம் இன்றைய மக்களுக்கு மிகச் சாதாராணமாகிவிட்டன. யாரும் அவற்றைக் கண்டு வியப்படைவதில்லை. அலட்சியமாகக்கூடப் பார்ப்பது உண்டு. ஆனாலும், ஆழ்ந்து சிந்தித்தால் மனிதனின் சாதனைகள் உண்மையில் மகத்தானவை என்ற உண்மை புலப்படாமல் போகாது.

காடுகளிலும் குகைகளிலும் வசித்துவந்த மனித இனம், கடந்து வந்திருக்கிற பாதை மெய்யாகவே அற்புதமானது. உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டம் என்ற கட்டத்தையெல்லாம் தாண்டி, உலகத்தை உயிர் வாழப் பாதுகாப்பான இடமாக மாற்றியிருக்கிறோம். 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாலில்லாக் குரங்கு இனத்திலிருந்து மனித இனம் ‘ஹோமோ’ என்ற சிற்றினமாகப் பிரிந்தது. 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து இன்றைய மனித இனம் பரிணமித்தது. அது வாலில்லாக் குரங்கினத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ‘ஹோமோ சேப்பியன்’ என்ற மதிநிறை மனிதர்கள் உருவானார்கள். அந்தக் காலகட்டத்தில் பூமியில் ஆறு விதமான மனித இனங்கள் தோன்றின. அவை எல்லாமே இன்றைய மனிதர்களுடன் பல வகைகளில் ஒத்திருந்தன. ஆனாலும், அந்த இனங்களுக்குள் உருவத்திலும் மதிநுட்பத்திலும் வேறுபாடுகள் இருந்தன. அந்த இனங்களில் ‘நிமிர்நிலை’ மனித இனம் மட்டுமே இன்று வரை 20 லட்சம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. மற்ற மனித இனங்கள் யாவும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாயழிந்துவிட்டன. அவை அவ்வாறு அழிந்துபோனதற்கு என்ன காரணம் என்பதை இன்று வரை ஆய்வர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

மனித இன வாழ்வியல்

ஒன்று, பூமியின் கால நிலையிலும் மேற்பரப்பிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மனித இனங்கள் அழிந்திருக்கலாம். அல்லது வெவ்வேறு மனித இனங்கள் ஒன்றோடொன்று போரிட்டு அழிந்திருக்கலாம் என்று ஆய்வர்கள் ஊகிக்கிறார்கள். அக்காலத்தில் நடந்திருக்கக் கூடிய போர்கள், இன்றைய கோஷ்டிச் சண்டைகளின் அளவில் நூற்றுக் கணக்கான மனிதர்கள் மட்டுமே பங்குகொண்டவையாக இருந்தன. ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி எல்லாரும் கோஷ்டிச் சண்டைகளில் பங்கேற்றனர். வெற்றிபெற்ற கோஷ்டி, தோற்ற கோஷ்டியிலிருந்த ஆண்கள் எல்லாரையும் கொன்றுவிட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்து சென்றுவிடும். இதன் மூலம் இனக் கலப்பு பரவலாக ஏற்பட்டாலும் ஒவ்வொரு கோஷ்டியும் தனக்கென்று ஒரு நிலப் பரப்பை வைத்துக் கொண்டு, பிற கோஷ்டிகள் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொண்டது.

மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித சமூகங்கள் கூட்டங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு கூட்டமும் தனக்கென்று ஒரு மொழியை உருவாக்கிக்கொண்டு பேசியது. சேர்ந்து வேட்டையாடுவது, கருவிகளை உருவாக்குவது, குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்ப்பது, குடிசைகள் அமைப்பது போன்ற பணிகளில் குழு உறுப்பினர்கள் எல்லோரும் பங்கேற்றனர். இறந்தவர்களைக் குழிதோண்டிப் புதைத்தனர்.

அடுத்த தலைமுறைக்கு செய்தி

அடுத்த கட்டத்தில் எண்ணங்களை வாய் மூலமாக மட்டுமின்றி, கோட்டுப் படங்கள் மூலமாகப் பரிமாறிக்கொள்ளும் முறை உருவானது. குகைகளின் சுவர்களில் எழுதப்பட்ட படங்களும் குறிகளும் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் செய்திகளைத் தெரிவிப்பனவாக அமைந்தன. இதுதான் விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சம். விலங்குகள் தமது குட்டிகளுக்கு இரை தேடவும், வேட்டையாடவும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால், சித்திர வடிவில் அவற்றைக் கற்பிக்கும் முறையைக் கண்டுபிடித்தது மனிதன்தான். பல குகைகளில் ‘மம்மத்’ யானையைக் கொல்ல பல மனிதர்கள் கையாண்ட உத்திகள் படமாக வரையப்பட்டிருக்கின்றன.

வேட்டையாடுவதைப் பற்றி மட்டுமல்லாது, தரையில் குடிசைகள் அமைப்பதைப் பற்றியும் குகைச் சுவர்களிலும் பாறைகளிலும் விளக்கப் படங்கள் வரையப்பட்டன. நான்கு குச்சிகளை நட்டு, அவற்றின் மேல் முனைகளில் விலங்குகளின் தோல்களையும் இலைகளையும் மாட்டி கூரைகளும் சுவர்களும் அமைக்கப்படுவது சித்திரமாகப் பதிவுசெய்யப்பட்டது. அது அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிக் கையேடுபோல உதவியது. ஒவ்வொரு தலைமுறையும் வீடு கட்டும் கலையில் சிறுசிறு அபிவிருத்திகளையும் புதுப் புனைவுகளையும் அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற படிப்படியான திறன் வளர்ச்சி காரணமாக, இன்று உறுதியும் பாதுகாப்பும் வசதியும் மிக்க வானுயரக் கட்டிடங்களை அமைக்கும் திறமை ஏற்பட்டது.

வளர்ச்சிக்கான தொடக்கம்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் பிறந்தது. மக்கள்தொகை பெருகியது. திடீரென ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை ஆய்வர்கள் கண்டுபிடிக்க முயன்றும் முழுமையாக வெற்றி கிட்டவில்லை.

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மற்றுமொரு புரட்சி தோன்றியது. விவசாயம் செய்து உணவு தானியங்களைச் சாகுபடிசெய்யும் முறையைக் கண்டுபிடித்தான். விலங்குகளின் பின்னால் ஓடி வேட்டையாடியும், காய் கனிகளைப் பறித்து அல்லது சேகரித்து உணவுபெற வேண்டிய தேவை மறைந்தது. எல்லாப் பருவங்களிலும் தடையின்றி உணவு கிடைக்க விவசாயம் உதவியது. இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம்பெயர வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து, விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கியது. சிறுசிறு குடியிருப்புகள் உருவாயின. ஒரு கிராமத்துக்கான தொடக்கமாக இது அமைந்தது.

கேள்விக்கு என்ன பதில்?

இத்தகைய சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சிபெற்றன. மக்கள் அதிக அளவில் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அது பேச்சு வடிவ மொழியிலும் எழுத்து வடிவத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படக் காரணமாயிற்று.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய புரட்சி தோன்றியது. அது அறிவியல் புரட்சி. உயிரியல், வானவியல், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் அற்புதமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதையடுத்து, தொழிற்புரட்சி ஏற்பட்டது. மனிதர்களின் உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்தது. புதிய புதிய வாகனங்களும், கருவிகளும் உடல் உழைப்புக்கான தேவையைக் குறைத்து, ஓய்வுக்கும் உல்லாசத்துக்குமான அவகா சத்தை அதிகரித்தன. நுண் கலைகள் உத்வேகம் பெற்றன.

பூமியில் மனித இனம் தோன்றிச் சில லட்சம் ஆண்டுகளே ஆன நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் அது சாதித்தவை மிகவும் அற்புதமானவை. ஒவ்வோராண்டும் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழையன கழிந்து புதியன புகுந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருக்கிற நண்பருடன் சென்னையில் இருந்தவாறு, நினைத்தபோது பேச முடிகிறது. அவரை தொலைக்காட்சித் திரையில் பார்த்துக்கொண்டேயும் அளவளாவ முடிகிறது. இதையெல்லாம் நமது கொள்ளுத் தாத்தா, பாட்டியால் கனவில்கூடக் கண்டிருக்க முடியாது.

ஆனால், எல்லா அறிஞர்களுக்கும் எழுகிற கேள்வி, “எல்லாம் இருந்தும், எல்லாம் கிடைத்தும், எல்லாம் தெரிந்தும்கூட மனிதர்கள் ஏன் ஒருவரையொருவர் கொன்று அழிக்கிறார்கள்?” என்பதுதான் அது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்