யாகாவாராயினும் நா காக்க...

By ஞாநி

அண்மையில் ஒரு வீடியோ பதிவை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பெரியார் ஈ.வெ.ராவை அவன் இவன் என்று வர்ணித்தும் அவரை அப்போதே செருப்பால அடித்திருக்க வேண்டாமா என்று கேட்டும், இந்து விரோதிகளை உடனுக்குடன் எதிர்த்து செருப்பால் அடிக்காமல் விட்டதால்தான் இன்றும் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசுகிறார்கள் என்றும் ஒருவர் பேசிய பதிவு அது. இப்படிப்பட்ட பேச்சுகளை இந்து அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் பல உதிரி அமைப்புகளின் தலைவர்கள் பேசுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை பேசியவர் யார் என்பதுதான் அதிர்ச்சியாக இருந்தது.

பேசியிருப்பவர் ஹெச்.ராஜா. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர். ஆடிட்டர். இயற்கை வேளாண் விவசாயம் செய்பவர். தொலைக்காட்சிகளில் பாரதிய ஜனதா சார்பில் அடிக்கடி தோன்றி கருத்து விவாதங்களில் ஈடுபடுபவர். நானும் பல முறை அவருடன் விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இப்படி கண்ணியமற்ற ஒரு பேச்சைப் பேசக் கூடியவராக ஒருபோதும் நினைத்ததில்லை.

இந்துக் கடவுள்களைப் பற்றிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாகவே ராஜா இப்படிப் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது என்று ஒருவர் தெரிவித்தார். எதிர் மதக் கடவுளரை இழிவுபடுத்துவதில் சீமானுக்கு ராஜா குறைந்தவரல்ல என்றே பேச்சுகளைக் கேட்டால் தோன்றுகிறது. மத நம்பிக்கையாளர்கள் வேறு. மத வெறியர்கள் வேறு. அதேபோல பகுத்தறிவாளர்கள் வேறு. பகுத்தறிவு வெறியர்கள் வேறு. எல்லா வெறிகளும் அழிவுசக்திகளே. “அவன நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்தறேன்'' என்ற போட்டியில் வெறியர்கள் ஈடுபடும்போது பலியாவது நாகரிகமும் கண்ணியமும்தான்.

பின்னர், இணையத்தில் ராஜா பேச்சு என்று பதிவாகியிருக்கும் இன்னும் சில வீடியோ பதிவுகளைப் பார்த்தபோது, அவர் இப்படிப் பேசுவது எனக்குத்தான் புதிய செய்தி போலிருக்கிறது என்று தோன்றியது. இந்திரா காந்தி கொலையில் சோனியாவுக்கு பங்கு உண்டு என்றும் தேவைப்பட்டால் ராகுல் காந்தியையும் சோனியா கொன்றுவிடுவார் என்றும் ராஜா சில மாதங்கள் முன்னர் கூடப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க-வின் கண்ணியமான தலைவர்களில் ஒருவராக மீடியா மூலம் கருதப்படும் பல வருட அரசியல் அனுபவமுள்ள ராஜாவின் நிலையே இப்படி என்கிறபோது, ஆம் ஆத்மி கட்சியில் எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல் வந்திருக்கும் சோம்நாத் பாரதி, குமார் விஸ்வாஸ் போன்றவர்கள் எல்லாம் உளறலாகவும் அவதூறாகவும் பேசுவதில் வியப்பில்லை. ஒரே வருத்தம், இவர்கள் எல்லாரும் மெத்தப் படித்தவர்கள் என்பதுதான்.

ஹார்வர்டு பேராசிரியரும் தற்போது பா.ஜ.க-வில் இருப்பவருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று வரை ட்விட்டரில் தமிழர் உரிமைகளுக்குக் குரலெழுப்புவோர் எல்லோரையும் 'பொறுக்கிகள்' என்றேதான் எழுதிவருகிறார். ஆம் ஆத்மி கட்சியில் யோகேந்திர பாரதி போன்ற முதிர்ச்சியுள்ள தலைவர்கள், தங்கள் கட்சியின் இளம் தலைவர்களின் தவறான பேச்சுகளுக்காக மன்னிப்பும் வருத்தமும் கேட்டிருப்பது ஆறுதலான விஷயம். பாரதிய ஜனதாவில் யாரும் இதுவரை இப்படி எதற்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை. சீமான் போன்றோரின் பேச்சைக் கண்டிக்க அவரது கட்சியில் அவருக்கு மேலே தலைமை எதுவும் இல்லை.

பெரியார் போன்றவர்கள் கூடக் கொச்சையாகப் பொது மேடைகளில் பேசியதில்லையா என்பது இன்னொரு எதிர்க் கேள்வி. பேசியதுண்டுதான். அவை புராண மூட நம்பிக்கைபற்றிய நையாண்டிக் கொச்சைகள். சக தலைவர்கள்பற்றி ஒருபோதும் அவர் பேசியதில்லை. அவர் கொச்சைகளைப் பயன்படுத்திய காலம் நம் சமூகத்தில் கால்பங்கினர்கூடப் படிப்பறிவை எட்டிப்பிடிக்காத காலம்.

சமூகத்தின் கல்வி, அறிவுவளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, மொழிப் பயன்பாடும் மேடைகளில் மாறிவந்திருக்கிறது. மாறிய அரசியல் சூழலில் கட்சிகளின் கீழ்நிலைப் பேச்சாளர்கள் மட்டுமே அவதூறாகவும் ஆபாசமாகவும் கண்ணியமில்லாமலும் பேசுவது என்பதாக அது மாறியது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளிலும் தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா, வெற்றிகொண்டான், ஜேப்பியார், அடியார் என்று பலரும் இப்படிப் பேசுவதையும் எழுது வதையும் செய்துவந்திருக் கிறார்கள்.

ஆனால், கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்போது மாறிவரும் போக்கில் உயர்மட்டத் தலைவர்களே இப்படியெல்லாம் பேசினால், நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற பின்னடைவு நிலையை நோக்கி நம் சமூகச் சூழல் போய்விட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இதற்கான அடையாளங்களை, படித்தவர்கள் மட்டுமே புழங்கும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. இன்று ஃபேஸ்புக்கில், அரசியல்ரீதியில் தாங்கள் எதிர்ப்பவர்களைப் பற்றி எது வேண்டுமானாலும் என்ன மொழியைப் பயன்படுத்தியும் எழுதலாம் என்ற கட்டற்ற சுதந்திரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், சோனியா என்று உயர்நிலைத் தலைவர்கள் முதல் இந்தக் கட்சிகளின் டி.வி. பேச்சாளர்கள் வரை எல்லோரைப் பற்றியும் கொச்சையாக எழுதுவது சகஜமாக நடக்கிறது. பெரும் பாலான கொச்சைகள் பாலியல் உறவு, பாலியல் உறுப்புகள் சார்ந்தவைதான். இவை எல்லாமே பெண்ணை இழிவாகக் கருதும் மனநிலையில் சமூகத்தில் உருவான கொச்சைகள்.

இன்று இவை படித்த வர்க்கத்தால் சகஜமாக எழுத்தில் பல லட்சம் பேர் இயங்கும் சமூகத் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. படித்த வர்க்கத்தில் உச்சமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் எழுத்தாளர்கள். அவர்களிடையேயும் இந்தப் போக்கு வந்துவிட்டது. அண்மை உதாரணம், ராயல்டி, நூல் விநியோகம் தொடர்பாக பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனக்கு இழைத்த அநீதிக்கு எதிராகக் கொந்தளித்த எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் பயன்படுத்திய வசை மொழியாகும்.

நன்கு படித்த அறிஞர்கள், படைப்பாளிகள், பேராசிரியர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் என்று பல துறையினரும் புழங்கும் சமூக வலைத் தளங்களிலும் இப்படிக் கொச்சைகளும் அவதூறுகளும் வன்முறை மிரட்டல்களும் சகஜமாகிக்கொண்டுவருவது எதைக் காட்டுகிறது? படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அதன் தரம் உயரும் என்று சொல்லப்பட்டதெல்லாம் மாயைதானா?

ஒரு சமூகமாக நாம் வளர்கிறோமா? தேய்கிறோமா? நம் அடிப்படைகளில் எங்கே, எதைத் தொலைத்தோம்? அதை மீட்பது எப்படி? மீட்க முடியுமா? நம்மை நாமே கேட்டுக்கொண்டு விடை தேட வேண்டிய கேள்விகள் இவை.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக, அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்