காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் அரிய அரசியல்வாதிகளில் ஒருவர். சிந்தனையாளர். அரசியல் விமர்சனங்களில் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பேசும் கரண் சிங் அளித்த பேட்டி இது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில், நாடு மீண்டும் நீண்டகால அரசியல் ஸ்திரமற்ற நிலைநோக்கிச் செல்வதுபோலத் தெரிகிறதே?
முதலாவதாக, கூட்டணி அரசியல் என்பது இந்தியாவில் வேரூன்றிவிட்டதாகவே நினைக்கிறேன். இதை ஒரு பிரச்சினையாகவோ சாபமாகவோ பார்க்கும் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் (காங்கிரஸ்) கூட்டணி அரசில்தான் இருக்கிறோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பது கூட்டணி அரசுதான். இது காங்கிரஸ் அரசு அல்ல. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் நல்லதொரு கூட்டணி பதவிக்கு வந்து, அந்தத் திட்டங்களை அமல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும். நான் இதில் மட்டும் நம்பிக்கைக் கீற்றைப் பார்க்கவில்லை, இந்தியாவுக்கும் அதன் எதிர்காலத்துக்குமே நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையே எனக்கு இருக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்ன?
டெல்லியில் ஏற்பட்டதுபோன்ற நிகழ்வு நாடு முழுவதும் ஏற்படுமா, ஏற்படாதா என்று அவசரப்பட்டு கருத்து சொல்லிவிட முடியாது. மக்களிடையே இருந்த கோபத்தையும், விரக்தி மனப்பான்மையும் ஆம் ஆத்மி கட்சியால் - சரியாகவோ தவறாகவோ - தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. எனவே, அவர்களுக்குக் கணிசமான ஆதரவு திரண்டது. அவர்களுடைய அரசியல் வழிமுறையும் புதுமையானது. வீடுவீடாகச் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. அப்படியிருந்தும் பேரவையில் அவர்களால் பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க முடியவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
நாம் இப்போது இரு விஷயங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். முதலாவதாக, அவர்கள் டெல்லியில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். டெல்லி பிற மாநிலங்களைப் போன்றதல்ல; இந்தியாவின் இதயம் போன்றது. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று எல்லோராலும் பார்க்கப்படும். இது புதுவிதமான முயற்சி என்பதால், நாமும் அவர்களுக்குச் சற்று அவகாசம் கொடுக்க வேண்டும். டெல்லியில் ஏற்பட்ட இந்த மாற்றம், தேசிய அளவில் நடைபெறுமா என்பது அடுத்தது. அது நமக்குத் தெரியாது. நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்துவதுதான் தங்களுடைய நோக்கம் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டெல்லிக்கும் பிற மாநிலங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் போன்ற அணுகுமுறையும் மிகவும் குறுகிய செயல்திட்டமும் கொண்ட ஆம் ஆத்மி கட்சி போன்றவை தொடர்ந்து செயல்படும் ஆற்றலைப் பெற்றிருக்குமா?
அவர்களுடைய 18 அம்சச் செயல்திட்டம் என்பது வறுமை, நிர்வாகக் கோளாறு, ஊழல் ஆகியவற்றையே முக்கியமாக மையம்கொண்டது. உள்ளூர் நிலையில் அவர்களுடைய சித்தாந்தம் வலுவாக இருக்கிறது. நாடு முழுவதற்கும் இது வலுவாக இருக்குமா என்பது அவர்களுடைய சிந்தனை அடுத்து எப்படி உருவெடுக்கிறது, அவர்களுடைய டெல்லி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தது.
மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கோ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ பெரும்பான்மை வலு கிடைக்காமல் போனால், மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு தரலாமென்ற முடிவை - பச்மாரி கூட்டத்தில் மேற்கொண்ட அணுகுமுறைக்கு ஏற்ப – காங்கிரஸ் எடுக்குமா?
மத்தியப் பிரதேசத்தின் பச்மாரி என்ற இடத்தில் 1998 செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அரங்கில் எடுத்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பாக இப்போது அதைக் குறித்துப் பேசுவது எளிதல்ல. அடுத்த மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் இதுபற்றி முடிவெடுக்க முடியும். கொள்கை அளவில், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இடம் கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து பிற கட்சிகள் ஆதரிப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்கும் என்று கூற முடியும்.
வெளியிலிருந்து ஆதரித்தால் ஆட்சியமைத்துவிடலாம் என்ற அளவுக்கு, பிற கட்சிகள் வெற்றிபெற்றுவிடும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய கருத்துப்படி அல்லது எதிர்பார்ப்புப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி 3-வது முறையாகத் தொடர்வதற்கோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கோதான் வாய்ப்புகள் இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதாவோ இடம்பெறாமல் - 280 இடங்களுக்கு மேல் உள்ள உறுப்பினர்களைக்கொண்டு - ஆட்சியமைத்துவிடுவோம் என்பது மற்ற கட்சிகளுக்குச் சாத்தியமேயல்ல. 25 தொகுதிகள் முதல் 30 தொகுதிகள் வரையில் பெற்றிபெறும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் அனைவரும் வெவ்வேறு சித்தாந்தங்களைக்கொண்ட, வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள். ஆட்சியமைக்கப் பெரிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு அவர்களுக்கு நிச்சயமாகத் தேவை.
மூன்றாவது அணியைச் சேர்ந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரினால்?
மாநிலக் கட்சிகள் தாங்களாகவே அப்படி உரிமை கோர முடியாது. அவர்கள் மூன்றாவது அணியாகச் செயல்பட முடியும். அவர்களுக்கு ஆதரவும் கிடைக்கக்கூடும். அப்படியும் அவர்கள் ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்றே கருதுகிறேன்.
குஜ்ராலை ஆதரித்ததைப்போல, மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டமைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரிக்கும் நிலைமை ஏற்படாது என்று கருதுகிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. அது மிகவும் அபூர்வமான நிலை.
மாநிலக் கட்சிகளே முன்வந்து காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என்று கருதுகிறீர்களா?
இறுதியாக அப்படித்தான் நடக்கும் என்று கருதுகிறேன். மாநிலக் கட்சிகள் முக்கியமானவை. இந்தி பேசாத மாநிலங்களில், மாநிலக் கட்சிகள் பல இருக்கின்றன. உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில்கூட மாநிலக் கட்சிகள் இருக்கின்றன.
அடுத்த அரசு அமைவதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ஆமாம், நிச்சயமாக (சிரிக்கிறார்). தமிழ்நாடு இல்லாமல் இந்திய அரசியலே கிடையாது… தமிழகக் கட்சிகள் முக்கியப் பங்காற்றும். எந்தப் பக்கம் அவர்கள் போவார்கள், யாரை அவர்கள் ஆதரிப்பார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம்.
தாகூர் - காந்திஜி - நேரு ஆகியோரின் ‘இந்திய தேசியவாதம்’ என்பது அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியது; பாரதிய ஜனதா தலைமையிலான வலதுசாரி சக்திகள் கூறிவரும் ‘இந்துத்துவா’, ‘கலாச்சார தேசியவாதம்’ என்பதிலிருந்து வேறுபட்டது. மதச்சார்பற்ற தன்மை, சமூகப் பிணைப்பு, மதங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?
முதலில் நீங்கள் கூறியதைப்போல ‘தாகூர் - காந்தி - நேரு’ தேசியவாதம் என்ற ஒன்று இருந்ததில்லை. பல்வேறு விஷயங்களில் தாகூருக்குத் தனிப்பட்ட பார்வை இருந்தது. காந்திஜிக்கும் அப்படியே. நேருஜியின் பாரம்பரியம் என்பது ‘சர்வ தர்ம சமபாவம்’ என்பதன் அடிப்படையிலானது. அதாவது, எல்லா மதங்களுக்கும் சம மரியாதை அளிப்பது. ‘மதச்சார்பற்ற’ என்பதைவிட ‘சர்வ தர்ம சமபாவம்’ என்பது உயர்வான, பொருத்தமான வார்த்தை என்பது என் கருத்து. ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை ஐரோப்பிய கலாச்சாரத்திலிருந்து வந்தது. அங்குதான் நாட்டை வழிநடத்துவதில் யாருக்கு உரிமை அதிகம் அரசருக்கா, தேவாலயத்துக்கா என்ற மோதல் எழுந்தது. அப்போது உருவான வார்த்தைதான் ‘மதச்சார்பின்மை’. தேவாலயங்களைப் போல அனைத்தையும் கட்டுப்படுத்தும் மத அமைப்பு இந்தியாவில் இருந்ததே இல்லை. ‘சர்வ தர்ம சமபாவம்’ என்ற கருத்துதான் ‘மதச்சார்பின்மை’ என்று கருதுகிறேன். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய வேதாந்த அணுகுமுறையால் அகில உலகத்துக்கும் பொருந்தும் நிலையில் இருப்பவை இந்து மதக்கொள்கைகள்.
இந்து வலதுசாரி சக்திகள் கடந்த 20 - 30 ஆண்டுகளாகவே வளர்ந்துவருகின்றன. வித்தியாசமான கலாச்சாரத் தனித்துவத்தை உருவாக்க முயல்கின்றன?
தனித்து இயங்குவது அல்லது தனிமைப்படுத்துவது என்ற எந்தக் கொள்கையும் இந்தியாவில் வெற்றிபெறாது என்றே கருதுகிறேன். நம்முடைய கலாச்சாரத்தின் தொடக்கத்திலிருந்தே இறைவனை அடையப் பல்வேறு வழிகள் இருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இதில் ஒரேயொரு மார்க்கம்தான் சிறந்தது என்று இந்து மதத்துக்குள்ளேயேகூட வலியுறுத்துவது செல்லுபடியாகாது.
காஷ்மீர் மாநிலத்தில் அமைதியும், அமைதியற்ற நிலையும் மாறிமாறி ஏற்படுகின்றன. பிரச்சினை தீர்க்கப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் கண்ணில்படவில்லை. காஷ்மீரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
முதலில், நீங்கள் கூறியதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். காஷ்மீர் என்றொரு மாநிலம் கிடையாது. ‘ஜம்மு - காஷ்மீரம்’என்ற ஒருங்கிணைந்த மாநிலம்தான் அது. அதை என்னுடைய மூதாதையர்கள்தான் உருவாக்கினார்கள். நீங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினை ஜம்மு - காஷ்மீருடைய பிரச்சினை.
அடுத்ததாக, இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராயவும் பரிந்துரைக்கவும் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆக்கபூர்வமான பல யோசனைகளையும் குழுக்கள் தெரிவித்துள்ளன. உதாரணத்துக்கு, பிராந்திய ஆணையங்களை ஏற்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நேரத்துக்குள் அதை நாம் செய்து முடித்து, பிராந்திய ஆணையத்துக்கு அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டும். அது ஜம்மு - காஷ்மீர மாநிலத்துக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
© தி இந்து ( ஆங்கிலம்), தமிழில்: சாரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
46 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago