டெல்லி கரோல்பாக் ரயில் நிலையத்தைவிட்டு கொஞ்ச தூரம் வெளியே வந்தால், பாலிகா பஜாரை ஒட்டி ஒரு நல்ல பஞ்சாபி உணவகம் உண்டு. பெயர் மறந்துவிட்டதா அல்லது பெயர்ப் பலகை இல்லாத உணவகமா என்று இப்போது ஞாபகம் இல்லை. ஒரு சர்தார்ஜி தாத்தாவின் கடை. சாலையை ஒட்டினார்போல முகப்பிலேயே சமையல் கட்டு. பிரமாதமான பனீர் டிக்கா போட்டுக்கொடுத்தார். மேலே கொஞ்சம் தீய்ந்ததுபோல முறுகி, உள்ளே கொஞ்சம் வேகாமல் சதக் சதக் என்று, இடையிலேயே உடன் சேர்ந்துகொண்ட மிளகாய் துண்டின் மெல்லிய காரமும், புதினாவின் மெல்லிய வாசனை கலந்த கொஞ்சம் புளிப்பும் சேர்த்து, ஆகக் கூடிவந்த ஒரு பனீர் டிக்கா அது! அப்படி ஒரு அற்புதத்தை அனாயசமாக அவர் போட்டுத்தள்ளிக்கொண்டே இருந்தது பனீர் டிக்காவைக் காட்டிலும் பெரும் அற்புதமாகத் தெரிந்தது. “சாதா பனீர் டிக்கா இல்லை; பஞ்சாபி பனீர் டிக்கா” என்றார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன். பதிலுக்கு அவர் ஒரு சலாம் போட்டார். “இன்னொன்று இதேபோலக் கிடைக்குமா?” என்றேன். காதருகே குனிந்தவர், “இன்று வேண்டாம். இந்த நினைவு இப்படியே இருக்கட்டும்!” என்றார்.
ஆண்டுகள் ஓடுகின்றன; நினைவுகள் விடாமல் துரத்துகின்றன. ‘அமுல்’ விளம்பரத்தைகூட அந்த சர்தார்ஜி பெரியவர் நினைவு வராமல் தனித்துப் பார்க்க முடிந்ததில்லை. எவ்வளவு சூட்சமமான மனிதர் என்றுகூட சில சமயங்களில் தோன்றும். இன்னொரு பன்னீர் டிக்கா கொடுத்திருந்தால், மேலும் ஒரு நூறு ரூபாயை அவர் சம்பாதித்திருக்கக் கூடும்; மாறாக, அந்த மனிதர் நினைவைச் சம்பாதித்துவிட்டார். அவர் கையில் ஒரு முத்தமிட்டு இருக்கலாம் என்றுகூட இன்று தோன்றுகிறது. கரோல்பாக், பாலிகா பஜார், இடையில் குறுக்கிட்டுப்போன ஒரு சந்து, பெயரற்ற அல்லது பெயர் மறந்துவிட்ட அந்தக் கடை, சர்தார்ஜி பெரியவரின் முகம்... ஒரு பனீர் டிக்கா எவ்வளவு நினைவுகளை அள்ளி வருகிறது!
ஒரு அற்புதமான மனிதரை, ஆதாய அரசியல்வாதி களோடு ஒப்பிடுவதற்காக வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். யோசித்துப்பார்த்தால், நம் நினைவுகள்தான் நாம்; நினைவுகள் போனால் எல்லாம் காலி என்று தோன்றுகிறது! அதனால்தான் அதிகாரத்தைக் கட்டியாள நினைப்பவர்கள் முதலில் சகஜீவிகளின் நினைவுகளைக் கையாளத் தொடங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது. நினைவுகளைக் கட்டியாள வரலாற்றைக் கையில் எடுக்கிறார்கள். வரலாற்றைத் தமதாக்கிக்கொள்வதன் மூலம் மக்களின் கற்பனைகளையும் அவர்கள் அபகரித்துவிடுகிறார்கள்.
உலகில் அதிகாரத்தைப் பேணும் எந்த ஒரு அமைப்பின், எந்த ஒரு அரசாங்கத்தின் அடிப்படைச் செயல்திட்டங்களிலும் ஒன்றாகிறது இது. மக்களுடைய நினைவுகளைக் கையாளுதல் - அவர்களுடைய நினைவுகளில் புதுப்புதுச் சரடுகளை உருவாக்குதல் - மக்களுடைய நினைவுகளைப் பராமரித்தல். வசதிக்கேற்ற வரலாற்றின் மூலமாக ஒரு சமூகத்தின் கற்பனைகளை அபகரித்தல்! ஏன் ஒவ்வொரு இயக்கமும் அவர்களுக்கு ஏற்ப வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றால், மக்களின் நினைவுக்குள் சென்றடையவும் மக்களுடைய கற்பனைகளைத் திருத்தி அமைக்கவுமான தோதான அரசியல் வாகனமாக வரலாறு அமைகிறது. ஆனால், அன்றாட வாழ்க்கை அலைக்கழிக்கும் சாமானிய மக்களின் வாழ்வில் வரலாறு என்பது கலங்கலாக, மங்கலான ஒரு குறியீடாகவோ, சொல்லாகவோ மட்டுமே எஞ்சி நிற்கிறது. திட்டவட்டமாக சமகாலத்தை அது பலி கேட்டாலும், நிச்சயமற்றதுதான் என்றாலும், எதிர்காலத்துக்கான கனவுகளையும் உற்பத்திசெய்யும் வசதியை அது அளிக்கிறது.
அரசியல்வாதிகள் இந்த இடத்திலிருந்தே தங்கள் ஆட்டத்தைத் தொடங்குகிறார்கள். குறியீடுகளையும் சொற்களையும் அவர்கள் பூமாரங்போல ஒரு ஆயுதமாக்கிக்கொள்கிறார்கள். எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எவ்வளவோ மாறிவிட்டாலும், காங்கிரஸ்காரர்கள் ஏன் இன்னமும் கதர் உடுத்துகிறார்கள்? ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் வரலாற்றை நினைவூட்டும் குறியீடு அது. எவ்வளவோ மாறிவிட்டாலும் திராவிட இயக்கத்தினர் ஏன் இன்னமும் துண்டு போடுகிறார்கள்? பிராமணர்களுக்கும் ஆண்டைகளுக்கும் சமமாக சாமானியனும் துண்டு போடலாம் என்ற சாதிய எதிர்ப்புக்கான திராவிட அரசியல் வரலாற்றை நினைவூட்டும் குறியீடு அது.
இங்கே - அதாவது நினைவுகளைக் கையாளும் தளத்தில் - ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் பாஜக எங்கே மாறுபடுகிறது என்றால், வரலாற்றை அது எப்படிக் கையாள்கிறது; மக்களுடைய நினைவில் எந்த வகையில் வரலாற்றைப் பொதித்து, அவர்கள் கற்பனைகளை எப்படியானதாக அது தீர்மானிக்க முற்படுகிறது என்ற இடத்தில்தான் மாறுபடுகிறது. பாஜக அரசியலின் மிக நுட்பமான, அபாயகரமான பகுதிகளில் ஒன்று இது.
ஒரு வரலாற்றின் பழைய பெயரின் மீதே தன்னுடைய புதிய கதையைப் பொருத்தி, காலப்போக்கில் அதையே பழைய வரலாறாக மாற்றிவிடுகிறது பாஜக. சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிப்பதைக் கடவுளின் ஆட்சி என்று பொருள்பட காந்தி பயன்படுத்திய சொல்லாடலான ‘ராம ராஜ்ஜியம்’ கருத்தாக்கத்தைத் தன்னுடைய இந்துத்வ ராம ராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டுப் பேசும் பாஜக தலைவர்களின் உத்தியை இங்கு குறிப்பிடலாம்.
‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கீ ஜே!’ யாருடைய முழக்கங்கள்? சுதந்திரப் போராட்டத்தில் சங்கப் பரிவாரத்தின் பங்களிப்பு என்ன? காங்கிரஸை விஞ்சிய தேச பக்தர்களாக அவர்கள் இன்று எப்படி உருவெடுத்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
ஆக, வரலாற்றுக் குறியீடுகளைக் கைப்பற்றுகிறது பாஜக. பின்னர் அந்தக் குறியீடுகளின் உள்ளடக்கத்தில் தன்னுடைய கதைகளைப் பொருத்துகிறது. பின்னர், இப்படிப் புதிதாக அது உருவாக்கும் வரலாற்றின் அடிப்படையில் சமூகத்தின் நினைவுகளையும் கற்பனைகளையும் அது இயக்க முற்படுகிறது. சமீபத்தில் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் காந்தி படங்கள். கிட்டே நெருங்கிப் பார்த்தால், எல்லாப் படங்களிலும் காந்தி ஒரே செய்தியைத்தான் சொல்கிறார்: “தூய்மையாக இருங்கள்!” ஆக, பாஜகவின் வரலாற்றிலும் காந்தி குறியீடாக நீடிப்பார். ஆனால், இந்தியாவின் நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையும் கொடுத்த தேசப் பிதா இனி பாஜக வரலாற்றில் ‘ஸ்வச் பாரத்’தின் முகவராகவும் சுத்தத்தை வலியுறுத்தும் பிரதிநிதியாகவும் மட்டும் நீடிப்பார். அம்பேத்கரை எப்படி வரித்துக்கொண்டிருக்கிறது பாஜக? காலமெல்லாம் சாதிக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் இனி வெறும் அரசியலமைப்புச் சட்ட சிற்பியாக மட்டும் நீடிப்பார். இதிலும் நுட்பமான ஒரு அரசியல் உண்டு - மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தில் மாற்றம் கோரி கீழ்நிலைச் சமூகங்கள் கிளர்ந்தெழாமல் இருக்க அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் ஆக்கிவிடும் அரசியல்!
காங்கிரஸோடு பாஜகவை ஒப்பிட்டுப் பேசுவதென்றால், தன்னுடைய கொடியின் நிற வடிவமைப்பை ஒத்ததாக தேசியக் கொடியை காங்கிரஸ் உருவாக்கியதையும் இந்த மண்ணோடு கலந்து கிடந்த காவியைத் தன் கட்சிக் கொடியின் நிறமாக பாஜக அபகரித்துக்கொண்டதையும் இரு கட்சிகளும் வரலாற்றை அணுகும் போக்குக்கான மிகச் சிறந்த குறியீடாகச் சொல்லலாம். கன்னியாகுமரி கடற்கரையில் இன்று பெரிய காவிக் கொடி பறந்துகொண்டிருக்கிறது. அது பாஜக கொடி கிடையாது. ஆனால், பாஜக கொடி ஆகிவிடுகிறது. காவி இன்று துறவின் நிறம் அல்ல; அதிகாரத்தின் நிறம்! வரலாறு ஒரு நூற்றாண்டுக்குள் ஒரு நிறத்தின் தன்மையையும், நிறத்தின் நினைவையும் எவ்வளவு வேகமாக மாற்றிவிட்டிருக்கிறது!
(உணர்வோம்)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago