அம்பலத்து ஆனைகளின் வலி

கேரளத்தின் திருச்சூரில் உள்ள தெச்சிகாட்டுகாவு பெரமங்கலத்து தேவஸ் வத்துக்குச் சொந்தமான ராமச்சந்திரன் என்ற யானைக்கு வயது 49. உயரம் 10 அடி 4 அங்குலம் (315 சென்டி மீட்டர்), எடை 6.5 டன். சந்தன நிறத்துக்கு மாறிவிட்ட அழகிய இரு தந்தங்கள். சமீபகாலமாக பார்வைத்திறன் குறைந்து வருகிறது. இந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் கோயில் திருவிழாக்களுக்கு வரும்போது அதைப் பார்த்து ரசிக்காத கண்களே இல்லை. அதன் உயரம், எடை, அழகு, ராஜநடை ஆகியவற்றின் காரணமாகவே அதற்கு ‘சூப்பர்-ஸ்டார்' என்று பெயரிட்டுவிட்டார்கள்.

பிஹார் மாநிலக் காட்டில் சுதந்திரமாக உலவிவந்த ‘மோதி பிரசாதை' – ஆம் அதுதான் அதன் பூர்வாசிரமப் பெயர் – 1983-ம் ஆண்டு பிஹார் யானைச் சந்தையில் விலைகொடுத்து வாங்கி கேரளத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அதன் வயது 18 தான். போஜ்புரி இந்தியில்தான் முதலில் கட்டளைச் சொற்களைப் பழகியிருந்தது. கேரளம் வந்ததும் மலையாளத்தைப் புரிந்துகொண்டது. பாகன்களுக்குக் கட்டுப்பட்டு நல்ல பெயர் வாங்கியது. சில வேளைகளில் மதம் தலைக்கேறி தன் நிலை மறக்கும்போது பாகன்களையும் பக்தர்களையும் மரண பீதியில் ஆழ்த்திவிடுகிறது.

ஒரு பாகன் தன் கையிலிருந்த அங்குசத்தால் அதன் இடது கண்ணில் குத்தியதால் அந்தக் கண்ணில் பார்வை போய்விட்டது. 1988 முதல் இன்றுவரை 10 பேரைக் கொன்றிருக்கிறது. கடைசியாக 2013 ஜனவரி 27-ம் தேதி கொச்சிக்கு அருகில் உள்ள ராயமங்கலம் கோயில் திருவிழாவின்போது 3 பெண்களைக் கொன்றுவிட்டது. அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு வெளியில் அழைத்து வரப்படவே இல்லை. பிப்ரவரி 7-ம் தேதி திருச்சூரில் ஒரு கோயில் திருவிழாவின்போது முகபடாம் உள்ளிட்ட அலங்காரங்களுடன் வந்து நின்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் பொறுமை இழந்து ஒரு பாகனைத் தாக்கியது. நிலைமை மோசமாவதற்குள் இன்னொரு பாகன் அதைக் கட்டுப்படுத்தினார். இந்த யானை கடந்த சில மாதங்களாகவே உடல் நலமில்லாமல் இருக்கிறது என்று அதைக் கவனித்து வரும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாகன்கள் கால் மீது கடுமையாக அடிப்பதால் உள்காயம் ஏற்பட்டு அதன் கால்கள் வீங்கிக் கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். யானையைத் துன்புறுத்தியதாக அந்தப் பாகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, அவ்வளவுதான்.

அந்தஸ்தின் அடையாளம்

ஆடு, மாடு வளர்ப்பதுபோல வீட்டில் ஒரு யானை வைத்திருப்பது சிலருக்கு அந்தஸ்தின் அடையாளம். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், பிஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வழக்கம் இருக்கிறது. பெரும்பாலும் இந்த யானைகள் கோயில் நிர்வாகங்களுக்கும் தனியாருக்கும் சொந்தமாக இருக் கின்றன. காட்டிலிருக்கும் யானையைப் பழக்கிய பிறகு கடுமையாக வேலை வாங்குகின்றனர். ஓய்வே இல்லாமல் அதை வாடகைக்கு விட்டு தெருத்தெருவாகவோ ஊர் ஊராகவோ நடத்தியே அழைத்துச் செல்கின்றனர். கோயில் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

கேரளத்தில் சாதாரண யானைகளுக்கு ஒரு நாளுக்கு 35,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வாடகை தருகின்றனர். ராமச்சந்திரன் போன்ற உயரமும் கம்பீரமும் அழகும் உள்ள யானைகளாக இருந்தால் ஒரு லட்ச ரூபாய்கூடத் தருகின்றனர்.

வீடுகளில் அல்லது தோட்டங்களில் வைத்து பராமரிக்கப்படும் யானைகள் நரக வேதனைகளை அனுபவிக்கின்றன. நாளின் பெரும்பாலான நேரங்களில் பின்னங்கால்கள் இரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்க, நின்றுகொண்டே இருக்க நேர்கிறது. சங்கிலிகள் – அதுவும் துருப்பிடித்த சங்கிலிகள் – யானைகளின் தோல்களில் அழுத்தமாக உரசி உரசி அவற்றுக்குப் புண்களை ஏற்படுத்துகிறது. அந்தத் தோல் உரிந்து அதிலிருந்து ரத்தம் கசிகிறது. பிறகு சீழ்பிடித்து புண்ணாகிறது. அந்தப் புண் மீது சங்கிலி மேலும்மேலும் அறுத்து அதைப் பெரிதாக்குகிறது. இது யானைகளுக்குத் தாங்க முடியாத வலி, எரிச்சல், வேதனையைத் தருகிறது.

இதனால் யானைகளின் கால் எலும்புகளும் வலுவிழக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இந்த வலி, வேதனையுடன்தான் யானைகள் நீண்ட தொலைவுக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டு விழாக்களில் பங்கேற்க வைக்கப்படுகின்றன. நீண்ட நேரம் நிற்கவைக்கப்படுகின்றன. போதாக் குறைக்கு பட்டாசுகளையும் வெடித்து அதற்கு எரிச்சலை கூட்டுகின்றனர். எதிலும் கவனம் செலுத்த முடியாதபடிக்கு ஜெண்டை மேளம் போன்ற தாள வாத்தியங்களை அருகிலிருந்து வாசித்து அதை இம்சிக்கின்றனர்.

“கோயில் திருவிழாவுக்கு வரும் மக்கள், முகபடாம் போட்ட யானையையும் அதன் மீது அம்பாரியில் வைக்கப்படும் திருவுருவங்களையும் அருகிலிருந்து விரிக்கப்படும் வண்ணக் குடைகளையும் வீசப்படும் சாமரங்களையும் விண்ணில் பாய்ந்து செல்லும் அதிர் வேட்டுகளையும் கலர் வேட்டுகளையும் விழாவில் குவியும் மற்றவர்களையும் பார்த்து பரவசப்படுகின்றனரே தவிர, யாரும் குனிந்து யானையின் புண்ணாகிப் போன கால்களையும், அதனால் அது படும் வேதனையையும் பார்ப்பதே இல்லை” என்று என்.ஏ. நசீர் கூறுகிறார். வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் நிபுணரான இவர் கோயில் யானைகளின் வேதனைகளை மற்றவர் களும் உணரவேண்டும் என்பதற்காகக் கோயில் கோயிலாகச் சென்று புகைப்படம் எடுக்கிறார்.

நன்கு பழக்கப்பட்ட, பரம்பரை பரம்பரையாக யானைகளுடனே வாழ்ந்துவரும் பாகன்களால்கூட யானைக்கு எப்போது மதம் பிடிக்கும், எப்போது கோபம்கொண்டு அடிக்கும் என்று கூறிவிட முடியாது. இப்போது வயிற்றுப் பிழைப்புக்காகப் பாகன் வேலைபார்க்க வரும் கற்றுக்குட்டிகள், யானையைப் பழக்கத் தெரியாமலும் அடக்கத் தெரியாமலும் கூர்மையான ஈட்டி, அங்குசம், கம்பி, கத்தி, பிரம்பு போன்றவற்றால் குத்தியும் கிழித்தும் அடித்தும் இம்சைப்படுத்துகின்றனர். யானையின் உடலில் 107 மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றில் அடித்தால் யானைக்கு மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற அதிர்ச்சிகள் ஏற்படும். இந்த அதிர்ச்சியால், யானை அடங்கினாலும் அடங்கும், வெறிகொண்டு பாய்ந்தாலும் பாயும். இரும்பு அல்லது மரத்தாலான அங்குசங்களில் கொக்கி போன்ற கூர்மையான பாகத்தைப் பொருத்தி அதைத்தான் யானையின் கழுத்தில் குத்துகின்றனர்.

“யானையைப் பற்றிய அறிவும் யானையைப் பழக்குவதில் அனுபவமும் இல்லாத கற்றுக்குட்டி பாகன்களால்தான் இந்தியா, தாய்லாந்து இலங்கை போன்ற நாடுகளில் வளர்ப்பு யானைகளுக்குத் துயரங்கள் ஏற்படுகின்றன” என்று ரிச்சர்ட் சி. லயர் கூறுகிறார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு – வேளாண்மை ஸ்தாபனத்துக்காக ‘யானையைப் பராமரிக்கும் வழிமுறைகள்' என்ற நூலை எழுதியவர். யானையைக் கட்டுப்படுத்துவதற்கான அங்குசத்தை அடிக்கடியும் வரம்புமீறியும் பயன்படுத்துவதால் யானைகள் ரத்த காயம் அடைகின்றன.

அந்த காயங்களுக்குக்கூட அவர்கள் நல்லவிதமாக மருந்து போடுவதில்லை. அடுப்புக் கரியைக் குழைத்து காயத்தில் பூசிவிடுவார்கள். துணியைச் சுருட்டி அடைத்தும் துணிக் கந்தலை வைத்துக் கட்டியும் காயத்துக்கு மருந்து போட்டுவிட்டதைப்போல பாவனை செய்வார்கள். இந்த காயங்களோடு யானையை கொதிக்கும் தார்ச்சாலையில் நடக்கவைக்கிறார்கள். யானையின் பாதங்கள் மிகவும் மென்மையானவை. அவை காட்டிலும் புல்வெளிகளிலும் நடப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அவற்றைக் கொதிக்கும் தார்ச்சாலையில் வெறுங்காலுடன் நடக்க வைப்பதால் கால் பொரிந்துவிடும். அத்துடன் பாதத்திலிருக்கும் சில வேளைகளில் ரத்தக்குழாய்கள் உடைந்து ரத்தம் கசியும். இந்த வேதனையோடே மைல் கணக்கில் யானையை நடத்தியே கூட்டிச் செல்கிறார்கள்.

காயம் பட்ட யானைகளின் பாகன்கள், உரிமை யாளர்கள் மீது 162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வனத்துறையினர் மட்டுமல்ல, காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதே கிடையாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்