ஈரானின் புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஹஸன் ரூஹானியைக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் இரு முறை சந்தித்தேன். அவை அழுத்தமான சில எண்ணங்களை எனக்குள் ஏற்படுத்தின. ஹஸன் ரூஹானி ஏதோ காற்றில் அடித்துக்கொண்டுவந்து இந்தப் பதவியில் தற்செயலாக உட்கார்ந்தவர் அல்ல. மலர்ந்த முகத்தோடு மக்களைக் கவர்ந்த வசீகரத் தலைவரும் அல்ல. உள்நாட்டு நிலைமையால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக அவர் இப்போது இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். ஈரானின் அணு நிலையங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானிய அதிகாரிகளும் நேருக்கு நேர் கடுமையாக, ஆனால் விரிவாக எல்லாவற்றையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இந்தப் பேச்சுகள் சுமுகமான முடிவுக்கு இட்டுச் செல்லுமா என்று கேட்டால் என்னால் நிச்சயமாகப் பதில் சொல்ல முடியாது. இருதரப்பும் தீவிரமாகப் பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதாலேயே எதிர்பார்ப்புகளும் பொறுப்புகளும் கடுமையாகின்றன.
ஒருவேளை பேச்சுகளில் திருப்தி ஏற்படாமல் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதுகுறித்தும் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்குவதுகுறித்தும் ஒபாமா இறுதி முடிவு எடுக்க நேரிடும். அப்படி நடந்தால் மிகப் பெரிய நாடான ஈரான் செயலற்ற நாடாக, தன்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாத தோல்வியுற்ற நாடாக மாற நேரும். இந்த நிலையில், இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நிலையிலான நேருக்கு நேர் பேச்சுகளிலேயே நல்ல முடிவு ஏற்பட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஈரானுக்கு எப்படி இந்த மனமாற்றம் ஏற்பட்டது? அதற்கு முன்னால், சமீபத்தில் நடந்த ஈரானிய அதிபர் தேர்தலில் என்ன நடந்தது என்று சற்றே பின்னோக்கிப் பார்ப்போம். ஈரானின் அரசியலையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் தீர்மானிக்கும் ‘ஈரானியக் காவலர்கள் பெருமன்றம்’( ஈரான் கார்டு கவுன்சில் ) அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மொத்தம் 8 பேருக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியது. அவர்களில் இருவர் வாக்குப் பதிவுக்கு முன்னதாகவே போட்டியிலிருந்து விலகிவிட்டனர். ஈரானின் கொள்கைகளுக்கு முரணாகப் போகக்கூடிய சுதந்திரச் சிந்தனையாளர் யாரும் இல்லை என்ற திருப்தி அந்தப் பெருமன்றத்துக்கு ஏற்பட்டிருந்தது. எனவே, எல்லா வேட்பாளர்களுமே தங்கள் நலனுக்கு முரணாகச் செல்லாத, பாதுகாப்பான வேட்பாளர்களே என்று அது கருதியது.
ஆனால், தேர்தல் நெருங்கநெருங்க, எஞ்சிய வேட்பாளர்களிலேயே ரூஹானிதான் சற்றே சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவர் என்ற எண்ணம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டது. எனவே மொத்தம் பதிவான வாக்குகளில் 51% அவருக்கே விழுந்தது. டெஹ்ரான் நகர மேயரும் களத்தில் நின்றார். இரண்டாவது இடத்தில் வந்த அவருக்கு 16% வாக்குகள்தான் கிடைத்தன. நாடு இப்போது இருக்கும் நிலையிலிருந்து மீள வேண்டும் என்றே பெரும்பாலான ஈரானியர்கள் நினைக்கின்றனர். அணு நிலையத்துக்காக நாட்டின் எதிர்காலத்தையே பணயம் வைப்பதை அவர்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய சித்தாந்தங்கள், அமெரிக்காவால் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆகிய இரண்டுமே அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டன. எனவே, ஜனநாயக உரிமைகளைச் சுவைத்த அவர்கள் அந்த உரிமைகள் மேலும் கிடைக்க வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தைத் தேர்தலில் வாக்குகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
நான் மட்டும் இப்படி நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் செலாவணியான ரியால் தன்னுடைய முகமதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை இழந்துவிட்டது. ரூஹானி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே ரியாலின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் உயரத் தொடங்கியது. தங்களுடைய புதிய அதிபர் அணு நிலையங்கள் பிரச்சினையில் சுமுகத் தீர்வுகண்டு நாட்டை மீட்டுவிடுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மிகக் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும் 30% பணவீக்கமும் இருக்கும் நாட்டில் மக்கள் இப்படி நினைப்பதில் வியப்பு ஏதும் உண்டா?
ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்குத் தெரியாமல் புதிய அதிபர் ரூஹானி, அணு நிலையங்கள் குறித்துப் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபரிடம் தெரிவிக்கவில்லை. நாட்டின் ‘புரட்சிகரக் காவலர்க’ளுக்குச் சொந்த வர்த்தக நலன்களே முக்கியம். அவர்களுடைய கட்டுப்பாட்டில் சட்ட விரோதத் துறைமுகங்கள் சில இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் முழு அளவுக்கு நடத்த முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, பொருளாதாரத் தடைகளை உடைத்து தங்களுக்கும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொள்ள உள்ளூர விரும்புகின்றனர்.
தங்களுடைய கருத்து என்ன என்று வெளிப்படையாகத் தெரிவிக்காத ஈரானின் பெரும்பான்மையான மக்கள் வாக்குச் சீட்டு மூலம் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்துவிட்டனர். இதனால்தான் நாட்டின் பெரிய தலைவராக கமேனி அல்ல; ரூஹானி உருவாகியிருக்கிறார்.
உலகப் பொருளாதாரத்துடன் சேர ஈரான் விரும்புகிறது, அமெரிக்காவின் தலையீட்டால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடை அந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பெருத்த முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதை எவ்வளவு விரைவாக நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்கிக்கொள்ள அனைத்துத் தரப்பினருமே விரும்புகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவும் மத்தியக் கிழக்கு நாடுகள் விவகாரத்தில் இப்படித்தான், எப்போது விடுபடுவோம் என்று ஏங்கித் தவித்தது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காலை வைத்துவிட்டு எடுக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல் திண்டாடியது. இதற்கிடையே ஈரான் மீது எடுத்த நடவடிக்கையால் ஈரானிடமிருந்தும் அதன் தோழமை நாடுகளிடமிருந்தும் ஏற்பட்ட எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்துகொண்டது. இப்போது அதே நிலை ஈரானுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிரியாவில் பஷார் அஸாதின் ஆட்சியை நீடிக்கவைக்க பணம், பொருள், சக்தி ஆகியவற்றுடன் ஆள்களையும் தந்து உதவ வேண்டிய நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. லெபனானில் ஹெஸ்புல்லாவுக்குத் தொடர்ந்து உதவி செய்து அதை எழுந்து நிற்கவைத்து சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள தங்களுடைய நண்பர்களுக்கும் உதவ வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது.
ஈரானுக்கு இப்படி தேசியக் கடமைகள் இருந்தா லும் நாட்டின் மக்கள் தொகையில் 60%-க்கும் அதிக மாக இருக்கும் இளைஞர்கள், அதிலும் குறிப்பாக 30 வயதுக்கும் குறைவானவர்கள் தங்களுடைய நாடு தனிமைப்பட்டுக் கிடப்பதை விரும்பவில்லை.
ஒபாமாவை நேரில் சந்தித்து அவருடன் கைகுலுக்கி அது பத்திரிகைகளிலும் புகைப்படங்க ளாக வந்து, ஈரானில் இன்னமும் அதிகாரம் செலுத்திக்கொண்டிருக்கும் புரட்சி வீரர்கள் கோபப்பட்டுவிட்டால் காரியமே கெட்டுவிடும் என்று அடக்கமாகச் செயல்பட்டிருக்கிறார் ரூஹானி. அதனால்தான் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். ஒபாமா கையெழுத்திடக்கூடிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்றால் அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று சொல்லாமலே புரியும். அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை ஈரானியர்கள் ஏற்க வேண்டும் என்றால், அதைப் பக்குவமாகத்தான் புரியவைக்க வேண்டும். இந்த நிலையில் வாய்தவறி எதையாவது சொல்லி, அது ஈரானிய புரட்சி வீரர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் இப்போது இருப்பதைவிட நிலைமை மோசமாகிவிடும் என்பதால் ரூஹானி எச்சரிக்கையாகச் செயல்பட்டிருக்கிறார்.
ஈரானுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை மட்டும் அணு மின் நிலையங்களிலிருந்து தயாரித்துக்கொண்டு அணு ஆயுதம் தயாரிக்கும் வசதி ஏதும் இல்லாமல் சிறிய அளவில் மின்னுற்பத்தி நிலையத்தை நடத்துகிறோம் என்று உறுதியளித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அணு மின்னுற்பத்திக்கான இடுபொருள்களின் அளவு, மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தியது, எஞ்சியது என்று சர்ச்சைக்குரிய இடுபொருள்களைப் பற்றிய கணக்கு முழுவதையும் முறையாக எழுதிவைப்பது, அணு மின்னுற்பத்தி நிலையங்களையும் கையிருப்புகளையும் சர்வதேச அணுவிசை முகமையைச் சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக ஆய்வு செய்ய அனுமதிப்பது என்று ஒப்பந்தத்தில் பட்டியலிட்டு அமெரிக்கா விதித்த தடைகளை விலக்கிக்கொள்ளலாம். அதாவது, இந்த அணு மின்சாரத் தயாரிப்பு மூலம் அணுகுண்டு தயாரித்துவிட முடியாதபடிக்கு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம்.
சர்வதேச அரசியல் என்பது விட்டுக்கொடுப்பது தொடர்பானது. யார் விடுவது யார் கொடுப்பது என்பதில்தான் சூட்சுமமே. வலு மிகுந்தவருக்குத் தேவைப்படும் சலுகையைக் கொடுத்து அல்லது அவர் இடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு தாங்களும் பலன் அடைவதே புத்திசாலித்தனம். இப்போது உரையாடல் களம் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கிறது. இது ஒபாமாவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. ஈரான் அணு மின்சாரம் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் அதன் அறிவியல் திறமையை அங்கீகரித்ததுபோலாகும். 1979-ல் ஈரானில் நடந்த புரட்சியானது தேசியப் புரட்சியாகும். மேற்கத்திய நாடுகள் தலையீட்டால் திணிக்கப்பட்ட தலைமைக்கு எதிரானது அந்தப் புரட்சி. அந்தப் பாடத்தை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மறந்துவிடக் கூடாது. அணு நிலையம் அமைப்பது என்பது அந்நாட்டு மக்களின் தேசிய உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. அதை அனுமதிக்கும் அதே வேளையில் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்துவதே புத்திசாலித்தனமாகும். இதை நாம் வலியுறுத்தினால் ஈரான் ஏற்றுக்கொள்ளுமா? எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நாம் இதை நாம் நிபந்தனையாக விதித்து அதைப் பகிரங்கப்படுத்தினால் காரிய சாத்தியமானவற்றை ஏற்கும் ஈரானியர்கள் மட்டுமல்ல, தீவிரவாத ஈரானியர்களும் அதன் மீது கருத்து தெரிவிக்கும் அல்லது வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அது அரசியல் மோதலுக்கும் வழிவகுக்கும். அது ஈரானின் அணு மின் திட்டத்தின் தரம் பற்றியதாக அல்லாமல் ஈரானிய மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றிய விவாதமாகவும் மாறக்கூடும்!
(c) நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago