வால் நட்சத்திரத்தைத் துரத்திச்செல்லும் விண்கலம்

By என்.ராமதுரை

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப்பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் பெயர் ரோசட்டா.

ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப்பிடிப்பதுடன் நில்லாமல், அதைச் சுற்றிவர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம் இப்படிச் சுற்றிவந்து, வால் நட்சத்திரத்தை நோட்டம்விடும். பிறகு, அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள், மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கித் துளைபோட்டு, வால் நட்சத்திரத்தை ஆராயப்போகிறது.

விண்வெளி வரலாற்றில் வால் நட்சத்திரம் ஒன்று இவ்விதம் ஆராயப்படுவது இதுவே முதல்முறை. ஆகவே, விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வால் நட்சத்திரம் என்றால் பயம் ஏன்?

ஒரு காலத்தில் வால் நட்சத்திரத்தைக் கண்டு மன்னர்களும் சரி, மக்களும் சரி அஞ்சினார்கள். வானில் வால் நட்சத்திரம் தோன்றினால், மன்னருக்கு ஆபத்து என்று அஞ்சப்பட்டது. அத்துடன் மக்களைப் பஞ்சம், நோய் ஆகியவை தாக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், இன்றோ வால் நட்சத்திரம்தான் மனிதர்களைக் கண்டு பயப்பட வேண்டும்.

வால் நட்சத்திரம் ஒன்று இரவு வானில் நீண்ட வாலுடன் செல்வது பிரமிப்பூட்டும் காட்சியாக விளங்கலாம். ஆனால் பூமி, செவ்வாய் போன்ற கிரகங்களுடன் ஒப்பிட்டால் வால் நட்சத்திரம் வெறும் சுண்டைக்காய்.

ஒன்று அல்லது இரண்டு பெரிய பாறைகள், கல் மற்றும் மண், உறைந்த நிலையிலான பலவகை வாயுக்கள், நிறையப் பனிக்கட்டி இவற்றை யெல்லாம் மொத்தையாக உருட்டி வைத்ததுதான் வால் நட்சத்திரம். ஒரு வால் நட்சத்திரத்தின் தலையும் அதுதான். வால் என்பது தூசு அல்லது வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் வாயுக்களே. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் பல லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருக்கலாம். சூரிய ஒளி படுவதால் வால் ஒளிரு கிறது. நமது பூமி, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வால் நட்சத்திரத்தின் வால் வழியே சென்றுள்ளது.

ஒரு வால் நட்சத்திரத்தின் தலை, மிஞ்சிப்போனால் 30 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கலாம். ஆதி காலத்தில் ஏதோ விஷயம் புரியாமல் வால் நட்சத்திரம் என்று பெயர் வைத்து விட்டார்களே தவிர, நட்சத்திரத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

67-பி / சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ

ரோசட்டா இப்போது துரத்தும் வால் நட்சத்திரத்துக்கு வருவோம். அது சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளமும் மூன்று கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அந்த வால் நட்சத்திரத்தின் பெயர்: 67-பி / சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ. 1969-ம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த இரண்டு ரஷ்யர்களின் பெயர்களைச் சேர்த்து அதற்குப் பெயர் வைக்கப்பட்டது. இவர்களில் ஜெராசிமெங்கோ பெண் விஞ்ஞானி.

இந்த வால் நட்சத்திரம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவிட்டுச் செல்கிறது. ஏதாவது ஒரு வால் நட்சத்திரத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி, அந்த வால் நட்சத்திரத்தில் பள்ளம் தோண்டி ஆராய்ச்சி நடத்துவது என்று முடிவுசெய்த ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்த வால் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது.

இந்த முடிவைத் தொடர்ந்து, ரோசட்டா விண்கலம் 2004 ஆண்டு மார்ச் மாதம் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த விண்கலம் இப்போதுதான் வால் நட்சத்திரத்தைத் துரத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் ஆவானேன்?

10 ஆண்டுகள் பயணம்

இதற்கு 67 பி வால் நட்சத்திரத்தின் நீள்வட்டச் சுற்றுப்பாதை ஒரு காரணம். எந்த ஒரு வால் நட்சத்திரமாக இருந்தாலும், அது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றும். சூரியனைச் சுற்றி முடித்த பின்னர், மிகத் தொலைவுக்குச் சென்றுவிடும். 67 பி வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்போது சுமார் 85 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். பிறகு, அங்கிருந்து சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும்.

அந்தக் கட்டத்தில், அதாவது சூரியனை நோக்கி அந்த வால் நட்சத்திரம் வர ஆரம்பிக்கும்போது, ரோசட்டா அதைத் துரத்த வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.

நீங்கள் ஒரு பஸ்ஸை துரத்திப் பிடிக்க வேண்டுமானால் பஸ்ஸின் பின்புறமாக அதைத் துரத்தினால்தான் அதைப் பிடிக்க முடியும். ஆகவே, ரோசட்டா 85 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றால்தான் அங்கிருந்து அது வால் நட்சத்திரத்தைத் துரத்த முடியும்.

ரோசட்டா 2004-ம் ஆண்டில் செலுத்தப்பட்டபோது, அந்த விண்கலத்துக்கு அவ்வளவு தூரம் செல்வதற்கான வேகம் கிடையாது. ஆகவே, ரோசட்டாவுக்கு மேலும்மேலும் வேகம் கிடைத்தாக வேண்டும். அவ்விதம் கூடுதல் வேகம் பெற வழி உண்டு.

ரோசட்டா மூன்று தடவை பூமியைச் சுற்றியது. ஒரு தடவை செவ்வாய் கிரகத்தைச் சுற்றியது. ஒரு விண்கலம் தொலைவிலிருந்து வந்து பூமியை ஒரு தடவை சுற்றிச் சென்றால், பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக அந்த விண்கலத்துக்கு இயல்பாகவே வேகம் அதிகரிக்கும். இது இயற்கை நியதி. ரோசட்டா ஏற்கெனவே கூறியபடி பூமியை மூன்று தடவையும் செவ்வாயை ஒரு தடவையும் சுற்றியபோது அதன் வேகம் அதிகரித்தது. இதன் பலனாக அது 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடிந்தது. 10 ஆண்டுகள் ஆனதற்கு இதுதான் காரணம்.

ரோசட்டா இப்படிச் சுற்றிச்சுற்றி வந்த கால கட்டத்தில் அது ஸ்டெயின்ஸ் மற்றும் லூடேஷியா ஆகிய விண்கற்களை நெருங்கி ஆராய்ந்து தகவல் அனுப்பியது.

நீள் உறக்கம்

ரோசட்டா பூமியிலிருந்து 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தபோது, அதாவது 2011-ம் ஆண்டு வாக்கில் அந்த விண்கலத்தில் இருந்த கருவிகள் செயல்படுவதை நிறுத்தி, ரோசட்டாவை நீள் உறக்கத்தில் இருக்கும்படி செய்தார்கள். நிபுணர்கள் ஒரு காரணமாகத்தான் இதைச் செய்தனர். ரோசட்டாவில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. ஆகவேதான் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென ரோசட்டாவின் இரு புறங்களிலும் தலா 14 மீட்டர் நீளத்துக்கு சோலார் செல் எனப்படும் மின் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமி, சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. இந்த அளவு தூரத்தில் இருந்தால், மின் பலகைகள் மூலம் நிறைய மின்சாரம் கிடைக்கும்.

ஆனால், சூரியனிலிருந்து 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்போது அந்த மின் பலகைகள் மீது அற்ப அளவுக்கே சூரிய ஒளி விழும்; போதுமான மின்சாரமும் உற்பத்தியாகாது. எனவேதான் இந்த நீள் உறக்கம். அதே நேரத்தில் அவ்வளவு தொலைவிலிருந்து மறுபடி சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும் கட்டத்தில் ரோசட்டா விழித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதாவது, ரோசட்டாவில் உள்ள கணினி விழித்துக்கொண்டு பூமிக்குத் தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்கு ஒப்பானது.

சுமார் 31 மாத காலம் உறக்கத்தில் இருந்த ரோசட்டா, கடந்த ஜனவரி 20-ம் தேதி விழித்துக்கொண்டு சமிக்ஞை அனுப்பியது. இந்த சமிக்ஞை பூமிக்கு வந்துசேர 45 நிமிஷங்கள் ஆனது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் தலைமைக் கேந்திரத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலையுடன் காத்திருந்த விஞ்ஞானிகள், இந்த சிக்னல் கிடைத்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். ரோசட்டாவின் கணினியில் கோளாறு ஏற்பட்டு, அந்த விண்கலம் விழித்துக்கொள்ளாமல் போயிருந்தால் எல்லாம் பாழ். எதுவும் செய்திருக்க முடியாது. இப்போது ரோசட்டா சுமார் 67 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வருகிற மே மாத வாக்கில் தகுந்த ஆணைகள் மூலம் ரோசட்டாவின் வேகம் குறைக்கப்படும். அது வால் நட்சத்திரத்தை மெல்ல நெருங்கி ஆகஸ்ட் மாத வாக்கில் வால் நட்சத்திரத்தைச் சுற்றிவர ஆரம்பிக்கும். நவம்பர் 11-ம் தேதி பிலே இறங்கு கலம் வால் நட்சத்திரத்தில் மெதுவாக இறங்கி ஆய்வுப் பணிகளைத் தொடங்கும்.

எதற்காக இந்த ஆராய்ச்சி

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு, 10 வருஷக் காத்திருப்பு; சின்னஞ்சிறிய வால் நட்சத்திரம் ஒன்றை இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்வானேன்?

சூரியன் தோன்றியபோது பூமி, செவ்வாய் முதலான கிரகங்களும் தோன்றின. தயிர் கடையும்போது வெண்ணெய் ஒதுங்குவதுபோல சூரியக் குடும்பத்தின் கிரகங்கள் தோன்றியபோது மிஞ்சிய பொருட்கள் சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால் ஒதுங்கின. இப்படி ஒதுங்கியவைதான் வால் நட்சத்திரங்கள். எனவே, வால் நட்சத்திரங்களை - ஏதேனும் ஒரு வால் நட்சத்திரத்தை ஆராய்ந்தால் சூரியக் குடும்பம் தோன்றியபோது இருந்த நிலைமைகளை அறிய முடியும். சூரியக் குடும்பத் தோற்றம்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இயலும். இந்த நோக்கில்தான் ரோசட்டாவில் 12 கருவிகளும் கீழே இறங்கும் பிலேவில் ஒன்பது கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

வருகிற ஆகஸ்ட் தொடங்கி, அடுத்த வருட டிசம்பர் வரை ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றியபடி தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். வால் நட்சத்திரம் அடுத்த வருட ஆகஸ்டில் சூரியனுக்கு நெருக்கமாக இருந்துவிட்டு, அதாவது சூரியனைச் சுற்றிவிட்டு டிசம்பர் வாக்கில் வந்த வழியே செல்ல முற்படும். அத்துடன் ரோசட்டாவின் பணி முடிந்துவிடும். ரோசட்டா சுற்றுப்பாதைப் படத்தை இந்த இணையதளத்தில் காணலாம்: http://prnewsdaily.com/rosetta-comet-chaser-phones-home-bbc-news/

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், அறிவியல் எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்