வறுமை எப்படி உருவாகிறது?

By வெ.ஸ்ரீராம்

‘வறுமையை ஒழிப்போம்’ என்ற தேர்தல் வாக்குறுதியை முன்வைக்காத அரசியல் கட்சிகள் எதுவுமே இல்லை. அதைத் தொடர்ந்து வறுமைக்கோட்டின் எல்லையை நிர்ணயிக்கும் பணியும், அதுகுறித்த சர்ச்சைகளும் எழுகின்றன. மக்கள்தொகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் விழுக்காடு, வறுமையிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்படுகின்றன.

எளிமை, இல்லாமை, ஏழ்மை, வறுமை போன்ற சொற்களின் படிநிலையைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியவில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ‘வறுமை எளிமையைப் பின்தொடரும்போது’ என்ற தலைப் பில், ஈரான் நாட்டின் முன்னாள் அமைச்சரும் பல ஆண்டுகளாக (1957-72) ஐக்கிய நாடுகள் சபையின் வெவ்வேறு அங்கங்களில் முக்கியமான பதவிகளை வகித்தவருமான மஜீத் ரானெமா பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ள புத்தகம் ஆழமானதும் சுவாரஸ்யமானதுமான பல பார்வைகளை அளிக்கிறது. 2003-ல் வெளியான இந்தப் புத்தகம், உலக அளவில் பெரும் கவனத்துக்குள்ளானதுடன் வேறு பல மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது.

ஓய்வு பெற்றபின், 20 ஆண்டுகளுக்கு மேலாக, உலகில் ஏழ்மை என்ற பிரச்சினைகுறித்து ஆய்வுகள் செய்துவரும் இவர், கலிஃபோர்னியாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

“வறுமையும் இல்லாமையும் பரவலாகப் பெருகி வருவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமூக அவலம். அதுவும், குறிப்பாக அதைத் தவிர்க்க முடிந்த சமூகங்களிலும் இப்படி வறுமையும் இல்லாமையும் பெருகிவருவது எல்லாவற்றிலும் மிக மோசம்” என்கிறார் ரானெமா.

ஏழ்மையின் மூன்று கோணங்கள்

அசையும் சொத்து, அசையாச் சொத்து, நுகர்பொருள்கள் இவற்றை மேலும் மேலும் உற்பத்தி செய்துதள்ளும் நடவடிக்கைகளினால் இந்த அவலத்தைப் போக்கிவிட முடியாது. ஏனென்றால், இதே நடவடிக்கைகள்தான் இன்னொருபுறம் வறு மையை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகவே, இந்த நிலையின் ஆழமான பன்முகக் காரணங்களைப் புரிந்துகொள்வதுதான் இன்றைய அக்கறையாக இருக்க வேண்டும்.

ஏழ்மை நிலையைப் பல கோணங்களிலிருந்தும் பார்க்கும் இவர், மூன்றுவிதமான ஏழ்மைகளைப் பற்றிப் பேசுகிறார்.

1. சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை.

2. ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை.

3. நவீன ஏழ்மை.

சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை என்பது அடிப்படையில் எளிமையான வாழ்க்கை. ஏழ்மை என்பது ஓர் எதிர்மறையான நிலை; குறைகளும் இல்லாமையும் நிறைந்தது. இதை விரும்பித் தேர்ந்தெடுப்பதென்பது விநோதமாக, முரண்பாடாகவேகூடத் தோன்றலாம்.

ஆனால், எளிமை, சிக்கனம், பிறரிடம் மரியாதை என்ற ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் அமைந்த சுதந்திரமான, தெளிவான வாழ்க்கை நிலையாக ஏழ்மை பண்டைய கலாச்சாரங்கள் எல்லாவற்றிலும் இருந்தது. இந்த வாழ்க்கை நிலைதான் பல பண்பாட்டாளர்களையும் உருவாக்கியிருக்கிறது.

ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை என்பது உலகைப் பற்றிய மத, ஆன்மிகரீதியினாலான பார்வையைச் சார்ந்தது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கிடையேயும் தங்களைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலுடனும் தாங்கள் கொண்டுள்ள உறவுகளினால் உருவான செல்வங்களைச் சார்ந்தது இந்த வாழ்க்கை.

இந்தச் செல்வங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். தேவைக்கு மேல் எதையும் விரும்பாத அவர்களுடைய உலகத்தில் பற்றாக்குறைக்கு இடமிருக்காது. தங்களால் உற்பத்திசெய்ய முடிந்தவற்றை வைத்துக்கொண்டுதான் அவர்களுடைய தேவையும் நிர்ணயிக்கப்படுகிறது.

நவீன ஏழ்மை என்பது, பௌதிகச் சொத்துகள் மட்டுமே செல்வத்தின் ஊற்றுக்கண் என்று கருதி, மனிதர்களின் முயற்சிகளெல்லாம் அதை நோக்கியே இருக்கக்கூடிய சமூகம் உருவாக்கும் ஏழ்மை. இந்தச் சமூகம் புதிது புதிதாகத் தயாரிக்கும் தேவைகளை எல்லோரும், சில சமயம் கணிசமான பண வசதி உள்ளவர்களும்கூட, அடைய முடியாமல் போய்விடுகிறது.

சமூக, பண்பாட்டு உறவுகளை எல்லாம் தன்னுடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருளாதார மேலாதிக்கத்தின் நேரடி விளைவுதான் இந்த ஏழ்மை. இந்தச் சமூகம் ஆசை காட்டுபவற்றில் மயங்கிவிழும் ஏழைகள் இரண்டுவிதமான தேவைகளுக்கு ஆசைப் படுகிறார்கள். ஒன்று, ஏற்கெனவே தங்களுடைய முன்னோர்கள் காலத்திலிருந்தே இருக்கும் தேவைகள். மற்றொன்று, நுகர்வோர் பொருளாதாரம் செயற்கையாகத் தயாரித்து முன்வைக்கும் தேவைகள். இந்த வறுமை உடலைச் சீர்குலைப்பதுடன் மனதையும் களங்கப்படுத்துகிறது என்பது ரானெமாவின் கருத்து.

பண்டைய வறுமையும் இன்றைய வறுமையும்

சிறு வயதிலிருந்தே வெவ்வேறு பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்த மக்களுடன் பேசிப் பழகி, அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்ததால் நியாயமான, அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்கக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ரானெமா. தவிர, தனக்கு அருகிலும் தொலைவிலும் இருந்த முன்னோர்களைத் தேடிப்போகும் புனிதப் பயணங்களை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

காலத்தில் பின்னோக்கிச் சென்று வரலாற்றுரீதியாகத் தகவல்களைச் சேகரித்ததில், பண்டைய காலத்தில் வறுமை என்று குறிப்பிடப்பட்டதற்கும் இன்றைய வறுமைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகச் சொல்கிறார். தொழில் நிமித்தமாக உலகம் முழுவதும் பயணம் செய்தபோது நிறைய குறிப்புகள் எடுத்துவைத்திருக்கிறார்.

வட கனடாவின் செவ்விந்தியர்கள், கொல்கத்தாவின் நடைபாதைவாசிகள் இவர்களிடையே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றித் தன் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.

2008-ல், ழான் ரோபெர் என்பவருடன் இணைந்து இவர் எழுதியுள்ள ‘ஏழைகளின் சக்தி’ என்ற புத்தகம் ஏழ்மையை இன்னும் விரிவாக ஆய்வுசெய்கிறது. புள்ளிவிவரங்கள் மூலம் மட்டுமே வறுமையை வரையறுப்பது என்பது யதார்த்த நிலையைப் பிரதிபலிக்காது. சமூகவியலின், தத்துவச் சிந்தனையின் கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமையைப் பற்றிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள் ரோபேடும் ரானெமாவும்.

இருவேறு வறுமைகள்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்கு இயற்கையாக ஏற்கெனவே இருக்கும் வறுமை நிலை வேறு, வெளியுலகம் ஆசை காட்டுவதால் உண்டாகும் வறுமை வேறு. அவனுடைய உள் உலகுக்கும் வெளி உலகுக்கும் இடையேயுள்ள உறவுகளின் அடிப்படையில்தான் ஏழ்மையின் வரலாறே உருவாகிறது.

ஆனால், உண்மையில் தனிமனிதன் ஒருவனின் உள் உலகம்தான் அவன் உணரும் ஏழ்மையையோ செல்வத்தையோ நிர்ணயிக்கிறது. அவசியம் எது, மிகை எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவனுடைய உள் உலகம்: தேவையையும் குறையையும் அதுதான் வரையறுக்கிறது.

ஏழ்மை என்று கருதப்படும் தளங்கள் இந்த உலகில்தான் கட்டுமானம் செய்யப்படுகின்றன என்று சொல்லும் ரானெமா, “இந்தத் தளங்கள் நொறுங்கும்போது, வெளி யுலகிலிருந்து மனிதனைத் தாக்கும் இன்னல்களையும் சோதனைகளையும் தடுக்கும் கேடயங்களை அவனுடைய உள் உலகம், உள்மனம் இழந்துவிடுகிறது. பொருளாதார வசதியின்மை அல்லது வருமானமின்மை குறிப்பிடும் ஏழ்மையுடன் இந்த அவலமான நிலையை ஒப்பிட்டுக் குழப்பம் அடையக் கூடாது. இவை இரண்டும் ஒன்றல்ல” என்கிறார்.

- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்,
இருமுறை செவாலியே விருது பெற்றவர்.
தொடர்புக்கு: ramcamus@hotmail.com​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

44 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்