ஸ்னோடென்: மீண்டும் சில குறிப்புகள்

By செய்திப்பிரிவு

சாட்சி சொல்வாரா?

“ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல்லின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து ஜெர்மன் அரசு விசாரணை நடத்தினால் சாட்சியம் அளிக்கத் தயார். ஆனால், ரஷ்யாவைவிட்டு வெளியேற மாட்டேன்” என்று ஸ்னோடென் கூறுகிறார். ஸ்னோடென்தான் உலக நாடு களின் தலைவர்களுடைய தொலை பேசி, இணையதளங்கள் இடை மறித்துத் தகவல்கள் திரட்டப்படு வதை உலகுக்கே அம்பலப்படுத்திய வர். அமெரிக்க அரசின் நடவடிக்கைக ளுக்கு அஞ்சி இப்போது ரஷ்யாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.

மாஸ்கோவில் ரகசிய இடத்தில் தன்னைச் சந்தித்த ஜெர்மனியின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ட்ரோ பெல்லிடம் இப்படிக் கூறியிருக்கிறார் ஸ்னோடென். இதை ஜெர்மனியின் ஏ.ஆர்.டி. தொலைக்காட்சி மூலம் தெரிவித்த ஸ்ட்ரோபெல், ஜெர்மன் அரசுக்கு ஸ்னோடென் எழுதிய கடிதத்தையும் காட்டினார்.

“பொறுப்பான முறையில் விசாரணை நடத்தினால் எனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் தெரிவிக்கத் தயார். ஆனால், ரஷ்யாவை விட்டு வெளியேற மாட்டேன். அமெரிக்க அரசு என்னைக் கைதுசெய்து பழிவாங்கக் காத்திருக்கிறது” என்று ஸ்னோடென் கூறியிருக்கிறார்.

வழக்குரைஞர் எச்சரிக்கை

“பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டால், உங்களை உங்கள் நாட்டிலேயே வந்தும் பார்க்கத் தயார்” என்று ஸ்னோடென் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவருடைய ரஷ்ய வழக்குரைஞர் அனடோலி குச்சரேணா இதை ஏற்கவில்லை. “ரஷ்யாவைவிட்டு வெளியேறினாலோ, அமெரிக்கா வுக்கு எதிராகச் சாட்சியம் கூறுவது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டாலோ ஸ்னோடெனுக்கு ரஷ்யா அளித்திருக்கும் அரசியல் அடைக்கலம் தானாகவே ரத்தாகி விடும்” என்று அவர் எச்சரிக்கிறார்.

“ஸ்னோடெனிடம் விளக்கம் கேட்க எந்த நாடு விரும்பினாலும் கேள்விகளை அனுப்பி வைக்கலாம், அவற்றுக்கு என்ன பதில் சொல்வது என்று அவர் தீர்மானிப்பார்” என்று அனடோலி குச்சரேணா கூறியிருக்கிறார். ஜெர்மனிக்குச் செல்ல ஸ்னோடெனுக்கு அனுமதியில்லை என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தியிருக்கிறார்.

“ஸ்னோடெனுக்கு அரசியல் புகலிடம் வேண்டுமானால் அவர் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்த பிறகே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அவருக்குப் புகலிடம் அளித்திருக்கிறார். அதேசமயம், ‘நேட்டோ’ அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படட்டும் என்பதற்காகவே ஸ்னோடென் சாட்சியம் அளிப்பதை ரஷ்யா அனுமதிக்கக்கூடும் என்றும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.

- விளாதிமிர் ரத்யுஹின்

'உளவு வேலை வரம்பு கடந்துவிட்டது'

முக்கிய தலைவர்களைப் பற்றித் தகவல் சேகரிப்பதில் தேசியப் பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) சற்றே வரம்பு கடந்து செயல்பட்டுவிட்டது என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜான் கெர்ரி. இதன் மூலம் அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் ஒபாமா அலுவலகத்துக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

“உலக நாடுகளின் நடப்புகளை அறிவதில் ஆர்வமாக இருக்கும் அமெரிக்க அரசுக்கு உறுதுணையாக இருப்பதற்காக உளவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கே நவீனத் தொழில்நுட்பமும் அதைக் கையாளும் திறனும் ஆள்பலமும் இருக்கின்றன என்பதற்காகவும் எல்லாத் தகவல்களையும் திரட்டி நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் நேச நாடுகளின் தலைவர்களுடைய தொலைபேசி உரையாடல்கள், இணையவழித் தகவல் தொடர்புகளையும் உளவு பார்த்து தகவல்களைத் திரட்டியுள்ளது தேசியப் பாதுகாப்பு முகமை” என்று கூறியுள்ளார் ஜான் கெர்ரி. லண்டனிலிருந்து ஒளிபரப்பான காணொலிக் காட்சி மாநாட்டில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்குத் தெரியாது

அமெரிக்க அரசு நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுக்குத் தெரியாமலே, அவர்கள் கேட்டுக்கொள்ளாமலேயே ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் மற்றும் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுடைய தொலைபேசி உரையாடல்களும் இணையவழித் தகவல் தொடர்புகளும் சேகரிக்கப்பட்டிருப்பதாக கெர்ரி கருதுகிறார். உளவுச் சேகரிப்பு என்பது தனித் துறையின் கீழ் வருவதால், அவர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவை அமெரிக்காவின் நேச நாடுகளாகும். அந்த நாடுகளின் தலைவர்களே உளவு பார்க்கப்பட்டிருப்பதும் அது வெளியே தெரிய வந்திருப்பதும் ஒபாமா நிர்வாகத்துக்குப் பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லா நாடுகளுமே அமெரிக்க அரசிடம் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்திருப்பதுடன் இது, எப்படி, யார் சொல்லி நடந்தது என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று விவரங்களைக் கேட்டிருக்கின்றன.

உளவு வேலைகளுக்கும் வெள்ளை மாளிகைக்கும் தொடர்பில்லை என்று ஒபாமா தெரிவித்ததன் பிறகு, ஜான் கெர்ரியும் அதை வழிமொழிந்திருக்கிறார்.

“நேச நாடுகளின் தலைவர்கள் தெரிவித்த கவலை, எங்களையும் கவலைகொள்ளச் செய்கிறது. இந்த நடைமுறைகளில் சில சீர்திருத்தங்களைச் செய்தே ஆக வேண்டும் என்று ஒபாமா கருதுகிறார்” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைத் தொடர்பாளர் ஜே கார்னி இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருக்கிறார்.

நடைமுறைகள் மாறும்

“இப்போதுள்ள நடைமுறைகளில் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இளநிலை அதிகாரிகள் தாங்களாகவே உளவு வேலைகளில் ஈடுபடக் கூடாது, நேச நாடுகளின் தலைவர்கள் போன்ற முக்கியத் தலைவர்களை வேவு பார்க்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இனி கொண்டுவரப்படும். இந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் வெள்ளை மாளிகை போன்ற தலைமையகங்களுக்குத் தெரியும் வகையில் வெளிப்படையாக அதன் நடவடிக்கைகள் திருத்தப்படும். எதிர்காலத்தில் இந்த அமைப்பு எப்படிச் செயல்பட வேண்டும் என்று திட்டவட்டமாக நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்படும்” என்றும் ஜே கார்னி விவரித்தார்.

“என்.எஸ்.ஏ-வின் உளவு வேலை வரம்புகடந்து போவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். ஜான் கெர்ரியும் அவர்களில் ஒருவர்” என்று தனிப்பட்ட நபர்கள் குறித்துத் தகவல் திரட்டும் மின்னணு மையத்தின் (எபிக்) உள்நாட்டுக் கண்காணிப்புத் திட்ட இயக்குநரான அமி ஸ்டெபனோவிச் தெரிவிக்கிறார்.

“வெறும் வாய் வார்த்தைகள் மட்டும் போதாது என்பதால், என்.எஸ்.ஏ-வின் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் எப்படி அமெரிக்க நிர்வாகத்துக்குத் தெரியும் வகையில் நடைபெற வேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என்ன, வெளிநாட்டுத் தலைவர்களைப் பொறுத்தவரையில் தகவல் சேகரிப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் வரையறைத்து, அதன்படி செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார் அமி ஸ்டெபனோவிச்.

“அமெரிக்க நிர்வாகத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்துவந்த ஆதரவு இப்போது இல்லை” என்று என்.எஸ்.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகக் கூறத் தொடங்கியுள்ளனர். இதிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் எந்தவிதத் தடையுமின்றி, இவர்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உளவு பார்த்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

- நாராயண் லட்சுமண்

ஸ்னோடென் கடிதம்

சம்பந்தப்பட்டவர்களுக்கு,

பெருந்திரள் கண்காணிப்பு விவகாரத்தின் விசாரணை தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி எனக்கு வேண்டுகோள் வந்திருக்கிறது.

என் பெயர் எட்வர்டு ஸ்னோடென். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகமை, மத்திய உளவு முகமை, ராணுவ உளவு முகமை ஆகியவற்றுக்காக ஒப்பந்த அடிப்படையிலும் நேரடிப் பணி நியமனத்தின் அடிப்படையிலும் தொழில்நுட்ப வல்லுநராக முன்பு பணிபுரிந்திருக்கிறேன்.

நான் இந்த நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்தபோது, என்னுடைய அரசாங்கம் திட்டமிட்ட சட்ட மீறல்களைச் செய்ததை நான் கண்ணுற்றேன். அதை எதிர்த்துச் செயல்படுவது தார்மீகக் கடமை என்றும் உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து நான் வெளிக் கொண்டு வந்த விஷயங்கள் காரணமாக எனக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென்று தொடர்ந்தும் தீவிரமாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் நான் என் வீட்டையும் குடும்பத்தினரையும் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சர்வதேச விதிமுறைகள்படி தற்போது தற்காலிகமாகத் தஞ்சம் அளிக்கப்பட்டு, நான் ரஷ்யாவில் இருக்கிறேன்.

என் அரசியல் வெளிப்பாட்டின் அடையாளமான எனது செயலுக்கு அமெரிக்காவிலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் கிடைக்கும் ஆதரவு என்னை நெகிழ்ச்சி அடையவைக்கிறது. யாருக்கும் கட்டுப்படாததும் எங்கும் ஊடுருவி இருப்பதுமான கண்காணிப்பு முறை யொன்றை நான் அம்பலப்படுத்தி யதை ஒரு சமூக சேவை என்றே உலக மக்களும் உயர் அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகள் உட்பட- கருது கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக முன்பு மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கைகளுக்குப் பதில் சொல் லும் வகையில் புதிதாக உத்தே சிக்கப்பட்டிருக்கும் சட்டங்களும் கொள்கைகளும் எனது அம்பல நடவடிக்கையின் விளைவே. இந்த விவகாரத்தில், தொடர்ச்சியான அறிதல்கள் விளைவாகச் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மை கள் என்னவென்பது ஒவ்வொரு நாளும் நமக்குத் தெளிவாகிக் கொண்டே வருகிறது. அதே வேளை யில், வரவிருந்த ஆபத்துகள் தணிந்திருப்பதும் புலனாகிறது.

என் முயற்சிகளின் விளைவு ஆக்கபூர்வமானது என்பது தெளிவு. இருந்தும், கருத்து மாறுபாடு என்பதைத் தேச விரோதம் என்ற ரீதியில் என் சொந்த நாடு கருதி வருகிறது. அரசியல் தொடர்பான பேச்சுகளெல்லாம் குற்றம் என்று ஆக்கி, எந்தத் தற்காப்பும் செய்து கொள்ள முடியாத கடுமையான தண்டனைகளை அவற்றுக்கு வழங்க அமெரிக்கா உத்தேசித்திருக்கிறது. உண்மையைப் பேசுவது ஒன்றும் குற்றம் இல்லையே? சர்வதேசச் சமூகத்தின் ஆதரவால், அமெரிக்க அரசு இந்தத் தீங்கான போக்கைக் கைவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். மக்கள் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் அதன் பிறகு, ஊடகங்களில் வெளியான தகவல்களின் - முக்கியமாக, ஆவணங்களின் - உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கண்டறியும் நடவடிக்கையில், சட்டத்துக்கு உட்பட்டு, என்னால் ஒத்து ழைக்க முடியும் என்று நம்புகிறேன்.

பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட் டால், உங்களை உங்கள் நாட்டி லேயே வந்தும் பார்க்கத் தயார். நம்மை எல்லாம் காத்துக்கொண்டி ருக்கும் சர்வதேசச் சட்டத்தை உயர்த் திப் பிடிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

எட்வர்டு ஸ்னோடென் 31/10/13

தமிழில்: சாரி, ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்