இந்திய அரசியல் வானில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திய 1967 பொதுத் தேர்தலின் பொன்விழா ஆண்டு இது. மதறாஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஐம்பதாவது ஆண்டும் இது.
மற்ற எல்லோரையும்விட இரண்டு பேர் மட்டுமே இந்த இரண்டாவது நிகழ்வின் கதாநாயகர்கள். மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றமைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணா முதலாமவர்; அதிர்ச்சி தரும் தோல்வியைத் தழுவினாலும் மக்களுடைய தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்ற பெருமகன் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த காமராஜர் இன்னொருவர். ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு வெற்றி கிட்டியிருந்தாலும் அதை அடக்கத்தோடு தலைவணங்கி ஏற்ற 58 வயதுக்காரர் அண்ணாதுரை; தோல்விதான் என்றாலும் ஜனநாயகத்தில் இது சகஜம் என்று அமைதியாக ஏற்ற 64 வயதுக்காரர் காமராஜர். அண்ணாவும் காமராஜரும் வெவ்வேறு ஆளுமைகள். ஆனால் சில விஷயங்கள் அவர்களிடையே பொதுவாக இருந்தன. இருவருமே முக்கியப்பட்டவர்கள், ஆனால் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்கள் அல்லர்; இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள், அந்த செல்வாக்கைத் தாங்கள் வகித்த பதவிகளின் மூலம் பெற்றவர்கள் அல்லர். 1967-ல் ஒருவர் வெற்றி முரசைக் கொட்டாமல் ஆட்சிக்கு வந்தார்; இன்னொருவர் மார்பில் அடித்துக்கொண்டு அழுது புலம்பாமல் மேடையிலிருந்து அகன்றார்.
பொதுவான பொன்விழா ஆண்டு
வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட வெற்றி, வரலாற்றில் மறக்க முடியாத தோல்வி என்ற இரண்டும் ஒருசேர நிகழ்ந்ததின் பொன்விழா ஆண்டு இது. 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, காமராஜரும் சரி, அண்ணாவும் சரி ஒருவருக்கொருவர் பகையாளியாக இருந்ததே இல்லை. இருவரும் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தனர், தங்களுடைய நம்பிக்கையில் தளராமல் இருந்தனர், தனிப்பட்ட புகழைவிட தாங்கள் எடுத்துக்கொண்ட லட்சியங்கள் முக்கியம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
1967 களத்தில் இன்னொருவரும் இருந்தார். 89 வயதான சி. ராஜகோபாலாசாரி, அவருடைய சுதந்திரா கட்சிக்கு அப்போது வயது 8. தொடங்கி சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் தன்னுடைய தோழமைக் கட்சியான திமுகவுடன் சேர்ந்து சிறப்பான வெற்றியைப் பெற்றது அக்கட்சி. ‘ஒரே கட்சி ஒரே தலைவன்’ என்று புகழ்பெற்ற காங்கிரஸை ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கியது அந்தக் கூட்டணி. ‘லைசென்ஸ் பர்மிட் கோட்டா’ ராஜ்யத்தை மத்தியிலிருந்து அகற்றுவது ராஜாஜியின் லட்சியம்; மதறாஸ் மாகாணத்தில் காங்கிரஸை ஆட்சியிலிருந்து இறக்கி திமுகவை அரியணையில் ஏற்றுவதே அண்ணாவின் லட்சியம்.
மத்தியிலிருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்ற சுதந்திரா கட்சியால் முடியவில்லை, ஆனால் சற்றே ஆட்டிப் பார்த்தது. திமுகவோ காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு திராவிடக் கொள்கைகளை - லட்சியக் கனவு என்ற நிலையிலிருந்து நிறைவேறுவது நிச்சயம் என்ற அளவுக்குக் கொண்டு சென்றது. ஒருவகையில் அது இரண்டாவது விடுதலையாகப் பார்க்கப்பட்டது. நீண்ட காலக் கனவு நனவானதாக பெரியார் ஈ.வெ. ராமசாமி கருதினார். காந்தியும் நேருவும் தேசிய உணர்வை ஊட்டினார்கள், பெரியாரும் அண்ணாவும் திராவிட உணர்வுகளை ஊட்டினார்கள். ஜோதிபாய் புலேவும் அம்பேத்கரும் சாதிகளற்ற தேசியத்தை சமைக்க விரும்பியதைப் போல, தமிழக அலையை அந்தப் பக்கமாகத் திருப்பினார்கள் பெரியாரும் அண்ணாவும்.
இந்தப் பொன் விழாவில் நாம் எதைக் கொண்டாடுவது? அந்த மாற்றமே பெரிய சம்பவம் என்ற உண்மையைக் கொண்டாடுகிறோம். ஒரே கட்சியின் ஆட்சி என்ற கலாச்சாரம் தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது. எங்களை யாரும் வெல்ல முடியாது என்ற அரசியல் இறுமாப்பு தோற்கடிக்கப்பட்டது. ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, அண்ணா பதவிப்பிரமாணம் செய்துகொள்ள, நல்லதொரு ஜனநாயக மாற்று மதறாஸ் மாகாணத்தில் 1967-ல் உருவானது, அதைத்தான் கொண்டாடுகிறோம்.
கொண்டாட்டத்தின்போதான கேள்வி
1967-ல் ஆட்சிக்கு வந்ததன் மூலம் திராவிட இயக்கம், ‘சுதந்திரமான திராவிடஸ்தான்’ (திராவிட நாடு) என்ற கோரிக்கையை மறு பரிசீலனைக்கே இடமில்லாமல் கைவிட்டது. பிரிவினைவாதிகளின் கட்சி அல்ல திமுக, முன்னாள் பிரிவினைவாதிகளின் கட்சி, இந்தியக் குடியரசில் பங்கேற்றுள்ளவர்களின் கட்சியானது. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம். இவ்வாறு நினைவுகூர்வது, கொண்டாடுவதல்லாமல் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, திராவிட இயக்கம் இப்போது எங்கே நிற்கிறது? பெரியார் விரும்பிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டனவா? அண்ணா கண்ட கனவுகள் நனவாகிவிட்டனவா?
பெரியாரிடமிருந்து அண்ணா சுவீகரித்துக் கொண்ட திராவிடக் கொள்கைப்படி மத்திய அரசு என்பது மைய அரசுதானே தவிர உச்ச அரசு அல்ல; வெவ்வேறு மாநிலங்களின் அரசியல் தேர்வுகளுக்கு ஏற்பச் செயல்படும் மாநிலங்களிடை மன்றம் வேண்டும் என்பது அண்ணாவின் லட்சியங்களில் ஒன்று. தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்ல திராவிட இயக்கம்.
1980-களிலும் அண்ணா வாழ்ந்திருந்தால் திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு தேசிய அளவிலும் பயன்பாடு ஏற்பட்டிருக்கும். 1969-ல் அண்ணா மறைந்தது, 1972-ல் திமுக பிளவுபட்டது என்ற இரண்டுமே திராவிட இயக்கத்துக்கு நேர்ந்த சோகமாகும். அது மாநிலத்துக்கு மட்டுமல்ல; தேசத்துக்கே ஏற்பட்ட இழப்பாகும். அந்த இயக்கம் சுருண்டு பதவிப்பூசலால் உள்கட்சி சண்டைக்கு ஆளானதும், தனி நபர்களை மையமாகக் கொண்ட அதிகாரப் போட்டியிலேயே எப்போதும் சிக்கியதும் புலம்பலுக்கு உரிய நிகழ்வுகள்.
அதே போல, காமராஜரும் 1980-கள் வரை வாழ்ந்து, கட்சியின் உயர் பதவியிலும் இருந்திருந்தால் கூட்டாட்சித் தத்துவம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவடைந்திருக்கும். திராவிட இயக்கத்துக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது என்றால் காங்கிரஸின் கலாச்சாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. காமராஜர் இல்லாததால், புயலில் சிக்கியக் கப்பலைப் போலத் தடுமாறுகிறது காங்கிரஸ்.
ஒரே கட்சி ஆட்சிக்கு எதிராக 1967-ல் ஏற்பட்ட உணர்வு, 2017-ல் இந்தியாவுக்கே தேவைப்படுகிறது. வடக்கை மையமாகக் கொண்ட ஆட்சி வீழ்த்தப்பட்டதும் கூட்டாட்சிக்குத் தெரிவிக்கப்பட்ட ஆதரவும் மீண்டும் மையம் பெற வேண்டும். 1967-ல் இருந்ததைப் போல தனி மனித அகங்காரம் அல்ல, சித்தாந்தங்களே மோதிக்கொள்ள வேண்டும். மதச்சார்பின்மை, பன்மைத்துவம், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றைக் காக்க 1967 பாணி தேர்தல் கூட்டணி ஏற்பட வேண்டும். 1967-ல் வென்றவரின் உற்சாகமும் ஊக்கமும், தோற்றவரின் உண்மையுணர்வும் இப்போது எவரிடத்தும் காணப்படவில்லை.
1967-ல் தமிழகம் அடைந்த பக்குவம், இப்போது தேசிய அளவில் இல்லையே என்று நாம் கவலைப்படக் கூடாது. 1967-ல் கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோருக்கு வயது முறையே 43, 50, 19 தான். ஒரு நாள் இந்த மாநிலத்துக்குத் தலைமை ஏற்க வேண்டிய பொறுப்பு நமக்கு வரும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.
அப்படி எதிர்காலத்துக்கான தலைவர்கள் நம்மிடையே யார் என்பதும் நமக்கு இப்போது தெரியாது. திராவிட இயக்கத்துக்கும் காமராஜரின் பாரம்பரியத்துக்கும் துரோகம் செய்யாதவர்கள் உண்மையான வாரிசாக பரிமளிப்பார்கள்.
முற்போக்கான பொதுதிட்டம்
திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் என்று எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் வேற்றுமைகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். மத, மொழி ரீதியாக சிறுபான்மையாக இருக்கும் மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டுக் குரல்கொடுக்க வேண்டும், அதுதான் திராவிடர்களின் கடமையாக இருக்க முடியும்.
வகுப்புரீதியிலான பிளவையும் மதச்சகிப்பற்ற தன்மைகளையும் ஒரே அணியாக நின்று தீவிரமாக, எந்தவித சமரசமும் இல்லாமல் எதிர்க்க வேண்டும். அதுதான் வள்ளுவரிய, பெரியாரிய வழியாகவும் திராவிட மரபணுவுக்கேற்ற செயலாகவும் திகழும். ஏழை எளியவர்களுக்கு திராவிடக் கண்ணோட்டத்தில் காட்டும் இரக்கத்தை, நாடு முழுவதிலும் அச்சுறுத்தலில் சிக்கியிருக்கும் மக்கள் மீது காட்ட வேண்டும்.
திராவிட இயக்கம் என்பது வரலாற்றுப் புத்தகத்தின் ஒரு அத்தியாயமாக முடிந்துவிட விட்டுவிடக் கூடாது. ஒரு தேசமாக, அதன் மக்களாக, ஒற்றைக் கலாச்சாரத்தை எதிர்க்கும் மரபை நாம் கைவிட்டுவிடக் கூடாது.
கோபாலகிருஷ்ண காந்தி,
முன்னாள் ஆளுநர், ராஜதந்திரி, நிர்வாகி
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago