தலித் அல்லாதோருக்காகக் காத்திருக்கிறோம்!- திருமாவளவன் சிறப்புப் பேட்டி

By சமஸ்

போராட்டங்களே கள அரசியலைச் சொல்லித்தரும் கல்வி என்பது சரி. எனினும், வெறும் மேடைப் பேச்சுகள் வாயிலாக மட்டும் எல்லாவற்றையும் சொல்லித் தந்துவிட முடியுமா? ஒரு சமூகத்தின் விடுதலைக்கான மிக முக்கியமான சாவி கல்வி. திராவிட இயக்கம் வளர்ந்தபோது கிராமத்துக்குக் கிராமம் படிப்பகங்கள் திறக்கப்பட்டன. சாமானிய மக்களிடம் அது ஒரு அறிவு எழுச்சியை உருவாக்கியது. அப்படியான பள்ளிக்கூடங்களுக்கு அப்பாற்பட்ட கல்வியைத் தருவதில் நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறை என்ன?

அம்பேத்கர், ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’ என்கிறார். சமூக விடுதலைக்கான அடிப்படையே கல்வியில் தொடங் குகிறது என்பதை முழுமையாகவே உணர்ந்திருக்கிறோம். நேரடியாக, முழுவீச்சில் இப்பணியை எங்களால் மேற்கொள்ள முடியாமல் போனாலும் விசிகவில் கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இதனுடைய அடிப்படையான பணி, எல்லாக் கிராமங்களிலும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்குவது. அங்கு நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளும் வகையில் நாளேடு கள், வார ஏடுகள், புத்தகங்களை வாங்கிப் போடுவது, ஏழை எளிய பிள்ளைகளுக்கு டியூஷன் கொடுப்பது, உயர் கல்விக்கு உதவுவது. நிறைய செய்ய நினைக்கிறோம். பொருளாதாரம் பெரிய தடையாக இருக்கிறது.

பொருளாதாரம் தொடர்பாகப் பேசும்போது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நாடார் சமூகம் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட தலித் சமூகம்போலக் கீழ்நிலையில் இருந்தது. இன்றைக்கு அந்தச் சமூகம் தலையெடுத்து நிற்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் முன்னெடுத்த சுயஉதவி மகமை முறை. சமூகத்தில் முன்னேறியவர்களும் முன்னேறுபவர்களும் தமக்குள் ஒரு வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி, அப்படித் திரட்டும் நிதியைக் கொண்டு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளை உருவாக்கும் வழக்கம் நாடார் சமூகத்திடம் இன்றைக்கும் இருக்கிறது. சாதிய அடுக்குத்தட்டில் இரு சமூகங்களையும் ஒன்றாக வைத்தோ, அரசிடம் கோரும் உரிமைகளை மறுதலித்தோ இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு வழிகளில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா? தலித் சமூகத்தில் இப்படியான விஷயங்கள் நடப்பதாகத் தெரியவில்லை. காந்தியின் ‘அரிஜன சேவா சங்கம்’ தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டுக்குச் சில ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்த வரலாறு உண்டு. அம்பேத்கரிய இயக்கங்கள் எதுவும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. விசிகவும் இதை யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது…

நீங்கள் சொல்லக்கூடிய இந்தப் பணி மிகமிக முக்கியமானது. ஆனால், ஒரு அரசியல் இயக்கம் இவற்றைச் செய்ய முடியாது. சமூக அமைப்புகள் செய்ய வேண்டும். இந்தச் சமூகத்தின் சமூக இயக்கங்களுக்கோ அப்படியான ஒரு புரிதலே இன்னும் உருவாகவில்லை என்பதுதான் துயரம். இன்னொரு சிக்கலும் இருக்கிறது. காலங்காலமாக இந்தச் சாதிய ஒடுக்குமுறைச் சமூகம் ஒரு தலித் மீது திணித்திருக்கும் அடக்குமுறைகள் கிட்டத்தட்ட ஒரு தண்டனைக் கைதி மனநிலையை அவனுக்குள்ளே உண்டாக்கிவிடுகிறது. இந்தச் சமூக அடையாளமே வேண்டாம் என்று தப்பி ஓடும் மனநிலையையே அவர்களுக்கு இந்தச் சமூகம் பரிசளித்திருக்கிறது.

நாடார் சமூகமும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டது என்றாலும், தலித்துகளைப் போல முற்றிலுமாக அவர்களை இந்து மத வளையத்துக்குள்ளிருந்து சாதியம் தள்ளிவைக்கவில்லை. மேலும், அவர்கள் சமூக விடுதலையைக் கையில் எடுத்தபோது, இந்து மதத்துக்குள்ளான மாற்றமாக அது இருந்ததால் இந்துத்துவவாதிகளின், ஏனைய ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பு வேலைகள் அங்கே இல்லை. ஆனால், நாங்கள் சாதியத்தை எதிர்க்கிறோம், சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறோம் என்று வருகிறபோது, இந்து மதம் இதனால் பாதிப்புக்குள்ளாகும்போது தலித்துகளை எல்லோருமே குறிவைக்கிறார்கள்.

ஒரு ஊரில் பலசரக்குக் கடை, சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை என்று ஒரு நூறு கடைகளை எடுத்துக்கொள்ளுங்களேன். எங்காவது தலித்துகள் கடை உரிமையாளராக உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறதா? அரிது. மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு டீக்கடையையோ, பெட்டிக் கடை யையோகூட தலித்துகளால் தொடங்க முடியாது. சேரிக்காரன் கடை என்பார்கள். ஒதுக்குவார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது அடித்து நொறுக்குவார்கள். அப்படி மீறி வைப்பவன் தலித் அடையாளத்துடன் கடை வைத்து எங்கே மகமை அமைப்பது?

அந்நியமாக்குதல் என்ற நீண்ட கால ஒடுக்குமுறையே இதற்குக் காரணம். 2,000 ஆண்டுகளுக்கு முன் எப்படி ஒரு தலித்தை ஆதிக்கச் சாதிகள் பார்த்தனவோ அப்படித்தானே இன்றைக்கும் பார்க்கின்றன? இவன் யாருடனும் பண்பாட்டுரீதியிலோ, பொருளாதாரரீதியிலோ, அரசியல்ரீதியிலோ இணைய முடியாது. ஒரு ஆண்டான் அடிமையாக, வேலையாளாகத்தான் உறவில் இருக்க முடியும். இதற்காக இன்றிருக்கக் கூடிய யாரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. இந்த அமைப்பு காலங்காலமாக அப்படி நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் வந்த பிறகு, இடஒதுக்கீடு வந்தது. சமூக நீதிக் கோட்பாடு வலுப்பெற்ற பிறகு ஓரளவுக்குக் கல்வி, ஓரளவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10% கூடத் தன்னிறைவு பெறாத ஒரு சமூகம் தனக்குள் உதவிக்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அப்படியான உதவிக்கொள்ளும் முறை கட்டாயம் வர வேண்டும். இந்தச் சமூகத்தின் கடைசி ஏழையும் மேலே ஏறிவர ஒவ்வொருவரும் ஏனையோரைக் கைதூக்கிவிட வேண்டும். ஒரு அரசியல் இயக்கம் இதற்கான துணிச்சலையும் சூழலையும் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தப் பணியை இங்கே விசிக செய்யும்.

இன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து காந்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் பள்ளியில் படித்தபோது காந்தியை மிகவும் நேசித்தேன். அவருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறேன். அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு காந்தியை ஒரு தியாகசீலராகப் பார்த்தாலும்கூட, பெரும் சிந்தனையாளராகப் பார்த்தாலும்கூட அவர் இந்துத்துவத்தின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் என்று உணர்ந்தேன். தலித்துகளுக்கு அவர் எதிரி என்று சொல்ல மாட்டேன். அதேசமயம், தலித் விடுதலை தொடர்பான அவருடைய அக்கறைகள் இந்து மதப் பாதுகாப்பையும் நல்லெண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றே நினைக்கிறேன்.

சாதிய விடுதலை தலித் மக்கள் ஒருங்கிணைவால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நம்புகிறீர்களா?

அப்படி எப்படி நினைக்க முடியும்? சாதிய விடுதலைக்காகப் பேசும், போராடும் ஒவ்வொருவரையுமே ஜனநாயகச் சக்தியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும் சாதிக்கு எதிராகப் பேசுவதும் வெறும் இரக்க சிந்தனை அல்லது நல்லிணக்க எண்ணங்களால் மட்டுமே கைகூடுவது அல்ல. வரலாற்றுப் பின்னணியில் சமகாலப் பிரச்சினைகளை அணுகும் பார்வையும் புரிதலும் அதற்குத் தேவைப்படுகிறது.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால், இதிலே யார் மீது தவறு? தலித் மீது தவறா; தலித் அல்லாதவர் மீது தவறா; தலித் தவறு செய்திருக்கிறான் என்றால் அவன் மீது நடவடிக்கை எடு என்று அணுகுவது சாதியத்தை வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கும் பார்வை. தலித்துகளிடமிருந்து சத்தம் வந்தால், அதைச் சமூக அமைதிக்கு எதிராகப் பார்ப்பவர்கள் அந்த அமைதி எத்தகைய அடக்குமுறை மற்றும் அநீதியின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலித்தனமான அமைதி என்பதை யோசிப்பதில்லை. இந்தச் சமூகம் இந்த நிலையிலிருக்க இன்றைக்கு யார் காரணம் என்கிற கேள்வியினூடேதான் தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதனூடேதான் சமத்துவத்தையும் அதற்கு அடிப்படையான சாதி ஒழிப்பையும் நோக்கி நகர முடியும். இப்படிச் சாதி ஒழிப்புக் குரலோடு வரும் ஒவ்வொருவருக்காகவும் கை கோக்கநாங்கள் காத்திருக்கிறோம். அவர்களும்இணைந்துதான்சாதிக்கு எதிரான பெரும் போரை வென்றெடுக்க முடியும்.

தமிழகத்தில் இதுவரை வேறெந்த தலித் தலைவருக்கும் கிடைக்காத அரசியல் செல்வாக்கு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், விசிக இன்றைக்கும் பறையர் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறது. தேவேந்திரர்களோ, அருந்ததியர்களோ உங்களை முழுமையாக ஏற்கவில்லை. அருந்ததியர்கள் உங்களை மேலாதிக்கச் சாதியாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் பட்டியலினத்தில் மட்டும் 76 சாதிகள் இருக்கின்றன. அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை? சாதிய அடுக்குமுறையைத் தலித்துகளாலும் மீற முடியாத சூழல் இருக்கிறதே ஏன்?

தலித் என்பது அரசியல் அடையாளத்துக்கான ஒரு சொல்லாடல். அது ஒரு தனி சாதியின் பெயரல்ல. நான் தலித் என்று சொல்லக்கூடிய சமூகப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித் தனிச் சமூக அடையாளங்களுடன் நீண்ட நெடுங்கால மாக வாழ்ந்து வரக் கூடிய சமூகக் குழுக்கள். ஆக, இந்தக் குழுக்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று கைகோத்துக் கொண்டுவர வெறும் அரசியல் தளத்தில் மட்டும் அல்லாது பண்பாட்டுத் தளம் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளது. அது ஒரு நீண்ட பணி.

ஒரு அமைப்பை ஒருவர் தொடங்கும்போது இயல்பாகவே அவருடைய தொடர்பு வளையங்களின் முதல் வளையமாக எது இருக்கிறதோ அந்த வளையத்துக்குள் இருப்பவர்களே முதல் கட்டத்தில் அந்த அமைப்பில் வெகு வேகமாக இணைத்துக்கொள்வார்கள். இது எனக்கும் விசிகவுக்கும் மட்டும் அல்ல; யாருக்கும் எந்த அமைப்புக்கும் பொருந்தும். இதைத் தவிர்க்க முடியாது என்றாலும் ஒருகட்டத்தில் இந்த வளையத்தை உடைத்தெறியவும் வேண்டும். இன்றைக்கு விசிகவில் அதுநடக்கிறது.

வெளிப்படையாகவும் ஆத்மார்த்தமாகவும் சொல்கி றேன், விசிகவை நான் பறையர் அரசியல் களமாக அணிதிரட்டவில்லை. வெறும் தலித் இயக்கமாக மட்டுமேகூட அணிதிரட்டவில்லை. ஆரம்பத்திலிருந்தே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, பாட்டாளி மக்கள் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்த ஐந்தையும் மைய நோக்கமாகக் கொண்டே இயக்கத்தைக் கட்டமைத்தேன். இந்தக் கொள்கைகளை வைத்தே கொடியையும் வடிவமைத்தேன். இந்தக் கொள்கைகளை ஏற்கும் எவரும் கைகோக்கலாம் என்றேன். எப்போது முதல் முறை இப்படியான விமர்சனத்தை எதிர்கொண்டேனோ, அமைப்பின் பெரும்பான்மைப் பொறுப்புகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேனோ அப்போதே, 2008-ல் ஒரே நாளில் ஒட்டுமொத்த அமைப்பையும் கலைத்தேன். எல்லோரும் புதிதாய் விண்ணப்பம் கொடுங்கள் என்றேன். கட்சியின் மறுசீரமைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி தலித் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மூன்று பிரிவினர்களையும் பெருமளவில் கட்சிப் பதவிகளில் கொண்டுவந்தோம். இன்றைக்கு இந்த இயக்கத்தில் தேவர்கள், கவுண்டர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாத் தரப்பினரும் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை ஒரு பொது நீரோட்ட அரசியலில் இணைக்கவே விரும்புகிறேன். என் கனவும் அது.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். எவ்வளவோ இடங்களில் உங்கள் கட்சியினரின் சுவர் விளம்பரங்களில், ‘அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்; திமிறி எழுவோம், திருப்பியடிப்போம்’என்பன போன்ற வாசகங்களை அரிவாள் படத்துடன் சகஜமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளச் சொல்கிறீர்கள்?

(திருமாவளவன் தொடர்கிறார்..)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்