தேசிய அளவில் மூன்றாவது அணி இன்னும் முழுமையாக முளைவிடாமல் இருக்கலாம். ஆனால், அதன் எதிர்காலம் என்ன என்பதை இப்போதே கணித்திருக்கிறார் சோ.
அரசியல் நிலவரத்தைக் கவனிக்கிறீர்களா? இன்றைய சூழலைக் கணிக்க முடிகிறதா?
தேசிய அளவில் மோடிதான் முன்னிலையில் இருக்கிறார்; மற்றவர்களைவிட மக்களிடம் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்திவருகிறார். தமிழகத்தில் இன்னும் கூட்டணிகளே முடிவானபாடில்லை. விஜயகாந்த் எந்தப் பக்கம் சாய்வார் என்பது யாருக்கும் தெரியவில்லை. எந்தக் கட்சியுடன் பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் கூட்டணி சேரப் போகிறது, காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் இடையிலான உறவு என்ன என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், இப்போதைக்கு எதையும் கணிக்க முடியாது.
தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு என்ன? மக்களவைத் தேர்தல் கூட்டணியை முடிவுசெய்வதில் அந்தக் கட்சியின் மிக நீண்ட தாமதத்துக்குக் காரணம் என்ன?
முடிவெடுக்க இன்னும் நிறைய நேரமும் காலமும் இருக்கிறது என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம். எந்தக் கூட்டணியில் இணைந்தால் தனது கட்சிக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்றும் அவர் இன்னமும் கணக்கு போட்டுக்கொண்டிருக்கலாம்.
தே.மு.தி.க-வால் பா.ஜ.க-வுக்கு ஆதாயம் உண்டா?
பா.ஜ.க. கூட்டணியுடன் விஜயகாந்த் இணைந்தால், பா.ஜ.க-வுக்கு நிறைய ஆதாயங்கள் உள்ளன. தே.மு.தி.க-வுக்கு 8% வாக்கு வங்கி இருக்கிறது. அதன் காரணமாகத்தான் தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. விரும்புகிறது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால்?
என்னைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைமை மோசமாகிவருகிறது. அந்தக் கட்சி தனது வாக்குகளைப் படிப்படியாகப் பறிகொடுத்துவருகிறது. அதனால், தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால்கூட, அ.தி.மு.க-வின் வாக்கு வங்கிக்கு இணையாக முடியாது.
ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையுமா?
இப்போதைய நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசவில்லை. அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் திடீர் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லை.
தேசிய அளவில் அ.தி.மு.க. முக்கியப் பங்கு வகிக்குமா?
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. 25 - 30 தொகுதிகளைக் கைப்பற்றினால், தேசிய அளவில் அந்தக் கட்சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 210-220 இடங்களைப் பிடித்ததாக வைத்துக்கொண்டால், அ.தி.மு.க-வின் 25-30 சீட்டுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.
மூன்றாவது அணி சாத்தியமா?
மூன்றாவது அணி அல்லது மாற்று அணி என எந்தப் பெயரில் அணி அமைந்தாலும், அந்த அணி வலுவான கூட்டணியாக இருக்காது. மிகவும் பலவீனமான கூட்டணியாகத்தான் இருக்கும். மூன்றாவது அணி என்பது சிறு அரசியல் சலசலப்பு மட்டுமே.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒருபோதும் ஒருமித்துச் செயல்பட மாட்டார்கள். இடதுசாரித் தலைவர்களும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் இணைய மாட்டார்கள். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எப்போதுமே இருவேறு துருவங்கள். இந்தக் காரணங்களால் பாதிக்கும் மேற்பட்ட கட்சிகள் வெளியேறிவிடும். அதன் பின் மூன்றாவது அணியில் எஞ்சியிருக்கும் கட்சிகளால் நிச்சயமாகப் பெரும்பான்மையைப் பெற முடியாது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவின்றி அந்த அணியால் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும், மூன்றாவது அணி என்பது மிகவும் பலவீனமான அணி.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?
ஒருவேளை, பா.ஜ.க-வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலோ, மற்ற கட்சிகள் பா.ஜ.க-வை ஆதரிக்க முன்வராவிட்டாலோ அந்தக் கட்சி வேறு யாரையாவது ஆதரிப்பதைவிட, முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம்.
முலாயம் சிங் பிரதமராக பா.ஜ.க. ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. மாயாவதி, ஜெயலலிதா இருவரில் யாரை ஆதரிக்கலாம் என்றால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்குத்தான் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கே தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை நெருங்கிவிடும். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியும்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும், மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதில் எழுந்துள்ள சர்ச்சைகள்குறித்து…
பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமான நபர் இல்லை என்பது உள்பட, பல்வேறு விதமாக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இப்போது வாக்காளர்களின் மனதில் சில கேள்விகள் எழுந்துள்ளன. யார் பிரதமராக வேண்டும்? மோடியா அல்லது வேறு நபர்களா? மோடி ஏன் பிரதமராகக் கூடாது?
ஒரு வாக்காளரின் மனதில் இந்தக் கேள்வி எழும்போது அவர் நிச்சயமாக மோடிக்கு வாக்களிப்பார்.
உத்தரப் பிரதேசம், பிஹாரில் பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றினால், அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?
நிதீஷ்குமார் வெளிப்படையான, நேர்மை யான முதல்வர். பா.ஜ.க அணியிலிருந்து விலகியதன் மூலம், அவர் தன்னைப் பலவீனப் படுத்திக்கொண்டுள்ளார்.
காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருக்கும்?
நீங்களே சொல்லுங்கள், ஏதாவது ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது அங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. தெலங்கானாவிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்படும். ஆந்திரத்தைப் பிரிப்பதில் காங்கிரஸின் நேர்மை, உண்மையான நோக்கத்தை எல்லோரும் சந்தேகப்படத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரங்களால்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பலன் அடையக்கூடும்.
ஆம் ஆத்மி கட்சி புதிய சக்தியாக உருவெடுக்குமா?
பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை ஆம் ஆத்மி கெடுக்கக் கூடும். டெல்லியைத் தவிர்த்து, ஏனைய இடங்களில் அந்தக் கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். சில தொகுதிகளில் வேண்டுமானால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் ஆம் ஆத்மிக்குக் கிடைக்கலாம்.
பிசினஸ்லைன், தமிழில்: சு.கோயில் பிச்சை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago