மெல்லத் தமிழன் இனி...! 26 - மூளைக்குள் உறையும் பூதம்

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஈரோடு அருகே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு வயது 35 இருக்கும். நடுத்தரக் குடும்பம். கணவர் தனியார் நிறு வனத்தில் பணிபுரிகிறார். நான் பார்த்தபோது அந்தப் பெண் கடும் போதையில் இருப்பதுபோலத் தெரிந்தது. பத்தடிகள் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. தடுமாறுகிறார். கால்கள் பின்ன விழப்போகிறார். தலை தொங்கிக் கிடக்கிறது. அவரால் திடமாக நிற்க முடியவில்லை.

பெண்ணின் கணவர் என்னை அவரிடம் அறிமுகப் படுத்தினார். லேசாகச் சிரித்தவரிடம், “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டேன்.

“இட்லி நல்லாவே இல்லை, மழைன்னு ஸ்கூலு லீவு விட்டுட்டாங்க’’ என்றார்.

“இல்லை, உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டேன்” என்று புரியவைக்க முயன்றேன்.

“உடம்பா...” என்று யோசித்தவர், என் கழுத்தில் கை வைத்துப் பார்த்து, “ஜூரம் எல்லாம் இல்லை, ஊசி போட வேண்டாம். எங்க, நல்லா ஆகாட்டுங்க...” என்றார்.

குழப்பமாக இருந்தது. அவர் குடித்திருக்கவில்லை. ஆனால், போதையில் இருப்பவரைவிட அதிகம் தள்ளாடுகிறார். அவரது கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன்.

கணவருக்கும் அடி விழும்!

ஈரோடு அருகே ஒரு மில்லில் இருவரும் பணிபுரிந்திருக்கிறார்கள். கணவரிடம் குடிப் பழக்கம் இருந்திருக்கிறது. அது மனைவிக்கும் தொற்றிக்கொண்டது. தினமும் இரவானால் இருவரும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இரவில் மட்டும் மது அருந்திய அந்தப் பெண், பகலிலும் அருந்தத் தொடங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் காலையிலேயே மது அருந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பயந்துபோன கணவர் தன்னுடைய குடிப் பழக்கத்தை நிறுத்திவிட்டார். மனைவியால் முடியவில்லை. தினமும் கணவர் மது வாங்கித் தரவில்லை என்றால், வீட்டில் ரகளையே நடந்தது. பொருட்களை விற்றுக் குடிப்பது, குழந்தைகளை அடிப்பது, கணவரை உதைப்பது என ஆண் குடிநோயாளிகள் செய்யும் அத்தனையையும் அந்தப் பெண் செய்தார். அதனால்தான் சொன்னேன், குடிநோய்க்கு ஆண்/பெண் தெரியாது என்று!

நடிக்கும் மூளை நரம்பு செல்கள்!

மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி யிடம் பேசினேன். “அந்தப் பெண் மது குடிப்பதை நிறுத்தி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், அவர் முழுமையாகக் குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அவருக்கு இருப்பது ‘வெர்னிக்கி கார்சாகாஃப் சின்ட்ரோம்’ (Wernicke korsakoff syndrome). தொடர்ந்து மது அருந்துவதால் பி-1 விட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் மூலம் உண்டாகும் மூளை நரம்புப் பாதிப்புகளில் ஒன்று. மேற்கண்ட சின்ட்ரோமின் உடல்ரீதியான பிரச்சினையான ‘வெர்னிக்கிஸ் என்ஸிபாலோபதி’ (Wernicke's encephalopathy) என்கிற தீவிர நோய்த் தாக்கத்தால், அந்தப் பெண்மணி அவதிப்பட்டுவருகிறார்.

அந்தப் பெண்ணின் பெரும்பாலான மூளை நரம்பு செல்கள் சேதமடைந்திருக்கின்றன. அதாவது, தொடர்ந்து பல காலம் மிக அதிகமாக மது குடித்ததால், மது குடிக்காத நாட்களிலும், ‘போதை இல்லாத’ நிலையை மூளை நரம்பு செல்கள் விரும்புவதில்லை. நரம்பு செல்களில் மதுவின் தாக்கம் வடிந்து பல நாட்கள், பல மாதங்கள் ஆகியும்கூட அவை அதிலிருந்து விடுபட விரும்பாமல், மயக்க நிலையிலேயே இருக்கின்றன அல்லது நடிக்கின்றன.

அதனால்தான், மது அருந்தாத, மதுவின் போதை இல்லாத நிலையிலும், இந்த வகை நோயாளிகள் தள்ளாடித்தான் நடப்பார்கள். வலது கையைத் தூக்கு என்று மூளை கட்டளை யிட்டால், இடது காலைத் தூக்குவார்கள். உட்கார் என்றால் நிற்பார்கள். அதாவது, உடலின் பிற உறுப்புகளுக்கு மூளை சரியான கட்டளைகளைப் பிறப்பிக்க இயலாது. கண்களின் நரம்புகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், விழி பாப்பாக்கள் ஓரிடத்தில் நிற்காது. அலைபாயும். லேசாகக் கண்ணை மட்டும் திருப்பி பக்கவாட்டில் பார்க்க முடியாது. ஆளே திரும்பினால்தான் பக்கவாட்டுக் காட்சியைப் பார்க்க முடியும். இதுபோன்ற பாதிப்பு களை ‘அட்டாக்ஸியா’(Ataxia) என்கிறோம். இவை எல்லாம் உடல்ரீதியான பாதிப்புகள்.

மெமரி கார்டு இல்லாத கேமரா

சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது இந்த நோய், கார்சாகாஃப் சைக்கோசிஸ் (Korsakoff's psychosis) என்கிற மனநோயாக அதன் இரண்டாவது நிலைக்கு முற்றுகிறது. மூளை நரம்பு செல்களில் புதிய பதிவுகள் எதுவுமே தங்காது; கண்ணால் பார்க்கும் காட்சிகள் அந்தந்தக் கணத்தில் அழிந்து விடும். அதாவது, மெமரி கார்டு போடாத டிஜிட்டல் கேமராவில் படம் எடுப்பதுபோல. இதன் பெயர் ‘ஆன்டி ரோகிரேடு அம்னீஷியா’ (Anterograde amnesia). நாம் ஏதாவது பேசினால், அதில் சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதனால், கேள்விக்கான நேரடியான, முழுமையான பதிலைத் தர முடியாது. அதனால்தான், அந்தப் பெண்மணி, ‘நல்லா இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், ‘இட்லி நல்லா இல்லை’என்கிறார்.

இந்த இரண்டாம் கட்ட நோயின் நிலை யில்தான் அந்தப் பெண்மணி சிகிச்சைக்கு வந்தார். அப்போதும் அவர் வரவில்லை எனில், அவர் நோயின் முற்றிய மூன்றாவது கட்டத்துக்குப் போயிருப்பார். அது குணப்படுத்த முடியாத ‘ரெட்ரோகிரேடு அம்னீஷியா’ (Retrograde amnesia). நிரந்தர மூளை ஊனம் இது. புதிய பதிவுகள் மட்டுமின்றி, மூளையின் பழைய பதிவுகளும் படிப்படியாக அழியத் தொடங்கும். கொடுமையான மனநோய் இது. தனது பெயர் தெரியாது; தாய்மொழி புரியாது. ஒலிகளே மொழியாகிவிடும். மூளையின் நிரந்தர ஊனம் இது. மது, எதுவரையிலும் செல்லும் என்பதற்கு இது ஒன்று போதுமே” என்றார் மருத்துவர்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்