நூலாசிரியரே அச்சுக்கூடத்துக்குச் சென்று, அச்சுக் கோக்கச் செய்து, மெய்ப்புத் திருத்தி, அச்சடிக்கத் தாள்கள் வாங்கிக் கொடுத்து, அட்டைக்கு ஏற்பாடு செய்து நூலைக் கொண்டுவருவதுதான் வை.கோவிந்தனுக்கு முன்பிருந்த புத்தக வெளியீட்டு நிலைமை. கையெழுத்துப் பிரதியை மட்டும் எழுத்தாளரிடமிருந்து பெற்று, அதைப் புத்தகமாகத் தன் செலவில் ஆக்கித் தரும் பதிப்புச் செயலைத் தொழிலாக மாற்றிய முன்னோடிகளில் மூலவர் வை.கோவிந்தன். இன்னும் நுண்மையாகச் சொன்னால், காலத்துக்கு முன் கூவிய சேவல்!
1937-ல் தான் படித்த சுத்தானந்த பாரதியின் நூலை வெளியிடுவதற்கெனத் தொடங்கியது வை.கோவிந்தனின் பதிப்புப் பணி. பின்னர், 1939-ல் டால்ஸ்டாயின், ‘இனி நாம் செய்ய வேண்டுவது யாது?’ என்ற நூலோடு, தன் சொந்தப் பதிப்பகமான சக்தி காரியாலயத்தோடு தொடர்ந்தது அது. தான் மறைவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை அதாவது 1959 வரை பதிப்புத் தொழிலில் அவர் இருந்தார். கணக்கிடக் கிடைக்கும் 216 நூல்களுடன் மேலும் 50 அல்லது 60 நூல்களையாவது சக்தி காரியாலயம் வெளியிட்டிருக்கும். அழகழகான நூல்களை, வித்தியாசமான நூல்களை வெளியிட்டிருந்தாலும் காலம் அவரை நினைவில் வைத்திருப்பதற்கு இன்னொரு காரணம், அவரது மலிவுப் பதிப்பு முயற்சிகள்.
மலிவுப் பதிப்பின் முன்னோடி
புத்தக விற்பனையைக் கூட்டி, நூல் விலையைக் குறைக்க கோவிந்தன் கண்டுபிடித்த வழி மலிவுப் பதிப்பு. 1937-ல் ‘அன்பு நிலையம்’ மூலம் மற்றவர் துணையுடனும், 1939-ல் சக்தி காரியாலயம் மூலம் தன் முயற்சியிலும் மலிவு விலைப் பிரசுரங்களை வெளியிடத் தொடங்கினார் கோவிந்தன். இரண்டாம் உலகப் போரின் விளைவால் காகிதங்களின் விலையேற்றத்தால் அம்முயற்சியைத் தொடர முடியாமல் கைவிட்டார். பின்னர், 18 ஆண்டுகள் கழித்து, 1957-ல் அம்முயற்சியை மீண்டும் பெரிய அளவில் தொடர்ந்தார். ராஜாஜியின் வியாசர் விருந்தை தினமணி மலிவுப் பதிப்பாக வெளியிட்டது மலிவுப் பதிப்பில் ஒரு முன்னோடிச் செயல். 350 பக்கங்கள், ஒரு ரூபாய் விலையுள்ள அந்நூல் 80,000 பிரதிகள் விற்றது மலிவுப் பதிப்பில் ஒரு பெரும் உடைவு. இதைப் பற்றிக் கருத்துரைத்த கோவிந்தன், மேலும் ஒரு லட்சம் பிரதிகள் விற்க வாய்ப்பிருந்தது என்று அந்நூலை மதிப்பிட்டார் (சரஸ்வதி, 1957 ஆகஸ்ட்).
பாரதியும் வள்ளுவரும்
வியாசர் விருந்து வெற்றிகரமாக விற்றுக்கொண்டிருந்த சமயத்தில், கோவிந்தனைச் சந்தித்த பாரதி மகளிர் தங்கம்மா பாரதியும் சகுந்தலா பாரதியும் பாரதியின் கவிதைகளை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்று, பாரதி கவிதைகளை மலிவுப் பதிப்பில் முதல் முறையாக வெளியிட்டார் கோவிந்தன். பரலி சு.நெல்லையப்பரின் முன்னுரையோடும் ரா.அ. பத்மநாபனின் முகவுரையோடும் 1957-ல் அது வெளிவந்தது. அரசாங்கப் பதிப்பில் இருந்த பாடல்களோடு ஒரு புதிய கவிதையும் அப்பதிப்பில் சேர்ந்திருந்தது. வெளிவந்த ஐந்து நாட்களில் 15,000 பிரதிகள் விற்றன.
பாரதி கவிதைகள் மலிவுப் பதிப்பின் இரண்டாம் பதிப்பில், தொ.மு.சி.ரகுநாதனின் முயற்சியால் மேலும் பாரதி யின் ஒரு கவிதை புதிதாகச் சேர்ந்தது. மலிவுப் பதிப்பு என்பதால் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் கோவிந்தன் அசட்டையாக இல்லை என்பதற்காக இதைச் சொல்கிறேன். முதல்பதிப்பு வெளிவந்த ஐந்து மாதங்களில் 1957 செப்டம்பரில் இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது. கோவிந்தனின் பாரதி கவிதைகள் மலிவுப் பதிப்புக்கு இது மணிவிழா ஆண்டு. 60 ஆண்டுகளுக்கு முன் வந்த இதே ஹேவிளம்பி வருடப் பிறப்பன்றுதான் முதல் பதிப்புக்குப் பதிப்புரை எழுதியுள்ளார் கோவிந்தன்.
பாரதியின் கவிதைகளை மலிவுப் பதிப்பாக வெளியிட்ட மூன்று மாதங்களுக்குள் திருக்குறளை வெளியிடத் துணிந்தார். “பாரதியார் கவிதைகளில் மக்களுக்கு ரொம்பவும் பிரியம். ஆதலால் உடனே விற்றுத் தீர்ந்தது. குறள் அப்படி விற்காது” என்று ஒரு பதிப்பாளர் கோவிந்தனைப் பயமுறுத்தியிருக்கிறார் அல்லது உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
பரிமேலழகர் உரையுடன் கூடியது அந்தத் திருக்குறள் மலிவுப் பதிப்பு. 15,000 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். 17,000 பிரதிகளுக்கு முன்பதிவும் வந்துசேர்ந்திருக்கிறது. 1959-ல் வெளிவந்த திருக்குறள் மலிவுப் பதிப்பின் மூன்றாம் பதிப்பு எனக்குப் பார்க்கக் கிடைத்தது. அதனால், திருக்குறள் கோவிந்தனின் கையைக் கடிக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஒரே நூலில் இரண்டு நாவல்கள்
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழின் முதல் நாவலையும் சுகுண சுந்தரியையும் கோவிந்தன் மலிவுப் பதிப்பாக வெளியிட்டார். விலை ரூ.1.25. முதலில் ஒன்றரை ரூபாய் என்றுதான் விளம்பரம் செய்திருந்தனராம். பின்னால், நூல் பக்கங்கள் குறைந்ததை அடுத்து, விலை குறைந்ததாம். இது தவிர, இன்னொரு சிறப்பு அந்நூலுக்கு உண்டு. இரு நாவல்கள் அடங்கிய அப்புத்தகத்தில் பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தொடர்ந்து சுகுண சுந்தரி இடம்பெற்றிருக்காது. நூலைத் தலை கீழாகத் திருப்பி, பின் பக்கத்திலிருந்து சுகுண சுந்தரியைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
கைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படி மலிவுப் பதிப்பு வரிசையில் 13 நூல்களை கோவிந்தன் வெளியிட்டுள்ளார். கு.அழகிரிசாமியின் கம்பராமாயணப் பதிப்பு அந்த 13-வது நூல். சக்தி காரியாலயம் கோவிந்தனின் முதன்மைப் பதிப்பகமாக இருந்தாலும், வேறு பல பதிப்பகப் பெயர்களுடனும் அவரது முயற்சிகள் வெளிப்பட்டன. அன்பு நிலையம் தொடங்கி ஸ்வர்ணா பிரசுரம், பவானி பிரசுரம், ராயவரம் புத்தக நிலையம், மின்னொளி பிரசுரம், அன்னை நிலையம் எனப் பலவாய் அமைந்தன அவை. எனினும், எனக்குத் தெரிந்தவரையில் எல்லா மலிவுப் பதிப்புகளும் சக்தி காரியாலயம் பெயரிலேயே வெளிவந்துள்ளன.
1957, 58-ம் ஆண்டுகளில் கோவிந்தன் மலிவுப் பதிப்புகளைத் தான் வெளியிட்டதோடு, மற்றவர் முயற்சிகளையும் ஊக்குவித்து அதை ஒரு இயக்கமாக்க முயன்றுள்ளார். தென்மொழி புத்தகக் கழகம் ஒரு ரூபாய் விலையில் 128 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை வெளியிட ஏற்பாடு செய்வதைப் பாராட்டினார் கோவிந்தன். தமிழ்நாட்டின் மற்ற பதிப்பாளர்களும் ஆண்டுக்கு 12 புத்தகங்களை மலிவுப் பதிப்பு முறையில் வெளியிடலாம் என்று யோசனையும் தெரிவித்துள்ளார்.
கோவிந்தனுக்கு முன்பே அடக்க விலை, குறைந்த விலை என முயற்சிகள் தொடங்கியிருப்பினும் 1957-ல் தமிழ்நாட்டில் அவர் கவனப்படுத்திய மலிவுப் பதிப்பு முயற்சி வெற்றிகரமாகத் தொடரவில்லை. இன்றைக்கு நூலக ஆணையை நம்பியே புத்தகங்கள் அச்சேறுகின்றன. நூலக ஆணைகளை எதிர்பார்க்கலாம். ஆனால், அதையே நம்பக் கூடாது. மக்களைத்தான் நம்ப வேண்டும். மக்களை நம்பி, புத்தக வெளியீடு நடைபெறும் சூழலை உருவாக்குவதுதான் வை.கோவிந் தனுக்குத் தமிழ்நாடு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
- பழ.அதியமான், ஆய்வாளர்,
‘சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடி பதிப்பாளுமை)’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு : athiy61@yahoo.co.in
இன்று சக்தி வை.கோவிந்தன் பிறந்தநாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago