கோமாரி என்பது கால்நடைகளைக் கொல்லும் மிகக் கொடூரமான தொற்றுநோய். கால் குளம்பு பிளவுபட்ட வகையைச் சேர்ந்த விலங்குகளான மாடுகள், ஆடுகள், பன்றிகள் போன்றவை இந்த நோயினால் பாதிக்கப்படும். ஆப்தோவைரஸ் என்ற வகையைச் சேர்ந்த வைரஸ் தாக்குவதால் ஏற்படும் இந்த நோயால் பெரும்பாலும் மாடுகளே பாதிக்கப்படுகின்றன.
நோயின் அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு வாய், கால் குளம்பு, மடிகளில் புண் ஏற்படும். வாயிலிருந்து தொடர்ச்சியாக எச்சில் ஒழுகிக்கொண்டே இருக்கும். அதிகக் காய்ச்சல் இருப்பதோடு, மாடுகள் உணவு உண்ணாது. கறவை மாடுகளில் பால் குறையும். மாடுகள் மிகவும் சோர்ந்து காணப்படுவதுடன், எடை வேகமாகக் குறைந்துகொண்டே போகும்.
நோய் பரவுதல்
கோமாரி நோய் நீர், காற்று முதலியவற்றின் மூலம் மிக விரைவாகவும் எளிதாகவும் பரவும். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் வெளியேற்றும் சிறுநீர், சாணம், எச்சில் போன்றவற்றின் மூலம் பிற மாடுகளுக்கு நோய் எளிதில் பரவும். நோயுள்ள மாடுகள் தும்மும்போது காற்றின் மூலம் வைரஸ் பிற மாடுகளைத் தொற்றிக்கொள்ளும். நோயால் பாதிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் கன்றுகளுக்கும் நோய் தொற்றிக்கொள்ளும்.
தடுக்கும் முறைகள்
கோமாரி நோய் வராத வகையில் எல்லா மாடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாட்டை மந்தைகளிலிருந்தும் தொழுவத்திலிருந்தும், பிற மாடுகளிடமிருந்தும் பிரித்து, உடனடியாகத் தனிமைப்படுத்திவிட வேண்டும். அந்த மாட்டைக் கட்டி வைக்க வேண்டுமே தவிர, நடமாட விடக் கூடாது.
நோயால் பாதிக்கப்பட்ட மாடு கட்டி வைக்கப்பட்டிருந்த தொழுவத்தைச் சுத்தப்படுத்துவதற்கு முன்பு பிற மாடுகளை அந்தத் தொழுவத்துக்குக் கொண்டுசெல்லக் கூடாது. அந்தத் தொழுவத்தை சலவை சோடா கலந்த தண்ணீரால் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு அருகில் இருந்த புல், வைக்கோல், தீவனம், தண்ணீர் போன்றவற்றைப் பிற மாடுகளுக்குத் தரக் கூடாது. கோமாரி நோய் பாதிப்பு காணப்படும் ஊர்களில், ஆப்ப சோடா கலந்த தண்ணீரை வைக்கோல், புல் போன்ற உணவுகளில் தெளித்த பின் மாடுகளுக்குத் தருவதன் மூலம் நோய்த்தொற்றைத் தடுக்கலாம். நோயால் பாதிக்கப்பட்ட தாய் மாட்டின் அருகே அதன் கன்றுக் குட்டி செல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோமாரி நோயால் உயிரிழந்த மாட்டை, திறந்த வெளியிலோ நீர் நிலையிலோ தூக்கி எறியாமல், ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும். கோமாரி நோய் காரணமாக மனிதர்களுக்கு நோய்த்தொற்று பெரும்பாலும் ஏற்படுவதில்லை. ஆனால், நோயைப் பரவச் செய்யும் ஊடகமாக மனிதர்கள் உள்ளனர். கோமாரி நோய் உள்ள மாடு அடைக்கப்பட்ட தொழுவத்துக்குச் சென்றுவரும் மனிதர்களின் கை, கால்கள், காலணிகள், ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள், அந்த மனிதர்கள் பிற இடங்களுக்குச் செல்லும்போது வேறு மாடுகளுக்குப் பரவிவிடும்.
நோய் பாதிப்புப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் மாடுகள் சந்தைக்கு வரும். ஆகவே, கோமாரி நோய் பரவும் காலங்களில் சந்தைகளில் மாடு வாங்கக் கூடாது. பொதுவாக, இந்தக் காலங்களில் மாடுகள் வாங்குவதையோ விற்பதையோ தவிர்ப்பது நல்லது.
சிகிச்சைகள்
கோமாரி நோயை ஒழிக்க முடியாது. ஆனால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இருந்தால் கோமாரி நோய், மாடுகளைத் தாக்காத வகையில் தடுத்திட முடியும். நம் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து காப்பதற்காக நடைபெறும் போலியோ சொட்டு மருந்து தரும் முகாம்களைப் போல மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்கள் ஆண்டுக்கு இரண்டு முறை எல்லா ஊர்களிலும் நடைபெறுகின்றன. அந்த முகாமுக்கு மாடுகளைக் கொண்டுசென்று தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
வழக்கமாகவே மாடுகளைச் சுற்றிப் பல பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால், மாடுகளின் நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக அந்த பாக்டீரியாக்களால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. இந்நிலையில், கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டவுடனேயே உணவு எடுத்துகொள்வதை நிறுத்திவிடுவதால், மாடுகள் பலவீனமாகிவிடுகின்றன. மேலும், அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்தி வேகமாகக் குறைகிறது. இதன் காரணமாக, அருகேயுள்ள பல வகை பாக்டீரியாக்களின் தாக்குதல் அதிகமாகி, மாடுகள் உயிரிழக்க நேரிடுகின்றன. ஆகவே, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதைத் தடுக்கும் வகையில், கோமாரி நோயால் பாதிப்புக்குள்ளான மாடுகளுக்கு உடனடியாக நோயுயிர்முறி (ஆண்டிபயாடிக்) மருந்துகள் தருவதற்காகக் கால்நடை மருத்துவர்களைக்கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
தவறான நம்பிக்கைகள்
தடுப்பூசிகள் போடுவதால் சினை மாடுகளின் கரு கலைந்துவிடும் என்றும், கறவை மாடுகளில் பால் குறைந்துவிடும் என்றும் தவறாகக் கருதி, சிலர் கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் போடுவதைத் தவிர்த்துவிடுகின்றனர். இது தவறான நம்பிக்கை என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.
சரியான காலத்தில் தடுப்பூசி போடாத காரணத்தால், கோமாரி நோய் தாக்கி நம் வீட்டு மாடுகள் மட்டும் இறப்பதில்லை. நம் வீட்டு மாடுகள் பரப்பும் நோய்க் கிருமிகளின் காரணமாக, அண்டை வீட்டாரின் மாடுகளும் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
கிராமங்களில் ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் பலரின் வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடைகள் அழிந்துபோவது கிராமப் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே, கோமாரி நோயின் தாக்குதலில் இருந்து நம் மாடுகளைக் காக்க உரிய காலத்தில் தடுப்பூசி போடுவதுடன், நோய் தாக்கிய மாடுகளை சரியாகப் பராமரிப்பதும் மிகவும் அவசியம் மற்றும் அவசரம்.
devadasan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago