குறிப்பிட்ட செயலை, இடத்தை, கோட்பாட்டை, பயன்பாட்டை நேரடியாகக் குறிக்கும் சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதைத் தமிழ்ப்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிது. Americanisation (அமெரிக்கமயமாதல்), victimisation (பலியாக்குதல்), Structuralism (அமைப்பியல்), Shock observer (அதிர்வுதாங்கி) முதலான சொற்களில் அவை சுட்டும் பொருட்கள் வெளிப்படையாக இருக்கின்றன. Decentralisation என்னும் சொல் சற்று வித்தியாசமானது.
நிர்வாகம் முதலான அம்சங்களில் மையப்படுத்தும் அணுகுமுறைக்கு (Centralisation) மாறான அணுகுமுறையைக் குறிக்கும் சொல். Centralisation என்னும் சொல்லை மையப்படுத்துதல் என்று சொன்னால், அந்தச் சொல்லின் நேரடிப் பொருள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அது அரசியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் அதிகாரம் மையத்தில் குவிந்திருப்பதைக் குறிக்கும் சொல். எனவே, இந்தத் துறைகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்போது அதை அதிகாரக் குவிப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு எதிர்ச் சொல்லான decentralisation என்பதை அதிகாரப் பரவலாக்கல் என்னும் சொல்லின் மூலம் சரியாக உணர்த்தலாம்.
இப்படித் தன்னுடைய ஆகிவந்த எல்லைகளை மீறி, ஒரு குறிப்பிட்ட துறையில் கூடுதலான அல்லது மாறுபட்ட பொருட்களைக் குறிக்கும் சொற்களைக் கலைச் சொற்கள் (Technical Terms) என்று சொல்வதுண்டு. இத்தகைய சொற்களைத் தமிழாக்கும்போது அவற்றின் நேரடிப் பொருள்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. சில சமயம் நேரடிப் பொருளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அது குறிப்பிட்ட ஒரு துறையில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்து அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். Decentralisation என்பதிலாவது அது எது தொடர்பானது என்னும் குறிப்பு அந்தச் சொல்லிலேயே இருக்கிறது. ஆனால், சில பொருள்கள் அவற்றின் வழக்கமான பொருளுக்கு மிகவும் மாறுபட்ட பொருளில் சில துறைகளில் வழங்கிவரும். சில சமயம் நேரெதிரான பொருளிலும் வழங்கிவரும்.
உதாரணமாக, sanction என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதன் வழக்கமான பொருள் அனுமதி (loan sanctioned). ஆனால் பொருளாதார - அரசியல் துறையில் இதன் பொருள் தடைவிதித்தல். குறிப்பாகப் பொருளாதாரத் தடை விதித்தல். ஈராக்குடனான அமெரிக்காவின் போரின்போது ஈராக்கின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இவை இரண்டுமே sanctionதான். இந்த இடத்தில் sanction என்பதன் சாதாரணப் பொருள் செல்லுபடி ஆகாது. இதைக் கவனத்தில் கொண்டு தமிழில் இதற்கான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
சில சொற்களை நேரடியாக மொழிபெயர்த்துவிடலாம். Geography என்றால் புவியியல் என்கிறோம். Geo என்றால் புவி. இந்தச் சொல் தமிழில் ஏற்கெனவே புழக்கத் தில் உள்ளது. எனவே, இதை நேரடியாக மொழிபெயர்ப் பதில் சிக்கல் இல்லை. Sewing Machine என்பதைத் தையல் இயந்திரம் என்று சொல்வதிலும் சிக்கல் இல்லை. ஏனென்றால் தையல், இயந்திரம் ஆகிய இரு சொற்களும் தமிழில் ஏற்கெனவே இருக்கின்றன.
தமிழில் ஏற்கெனவே இல்லாத சொற்களைக் கொண்ட பிறமொழிச் சொற்களை மொழிபெயர்க்கும்போதுதான் சிக்கல் வருகிறது. உதாரணமாக Ex-ray. இதில் Ray என்றால் கதிர் என்று சொல்லிவிடலாம். Ex என்பதை எப்படிச் சொல்வது? ஊடுகதிர் என இதைத் தமிழில் சொல்வதற்கான காரணம் இந்தச் சொல்லின் நேர்ப் பொருளில் இல்லை. அது சுட்டும் பொருளில் உள்ளது. அதுபோலவே Scan, Edit போன்ற சொற்களை அவை சுட்டும் பொருள்களைக் கொண்டுதான் தமிழாக்க வேண்டும். சொல்லின் நேர்ப் பொருளைப் பின்தொடர முடியாது.
-தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
50 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago