மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் சட்டம்

உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்க 3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. அத்தீர்ப்பு புதிய உரிமை எதையும் உருவாக்கவில்லை.

1995-ம் ஆண்டின் ஊனமுற்றோர் சட்டம் அளித்த உரிமைகளை செயல்படுத்த அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் 33-வது பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன் 32-வது பிரிவின்படி எத்தகைய பதவிகளில் இடஒதுக்கீடு சாத்தியம் என்பதை குழு மூலம் ஆராய்ந்து, அரசுகளுக்கு உத்தரவிட சொல்கிறது. 3 சதவீத இடஒதுக்கீடு செய்து மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே அரசாணைகள் வெளியிட்டுள்ளன. உத்தரவுகளை நிறைவேற்ற தனி ஆணையர்களும் உண்டு. ஆனாலும் அதிருப்தி ஏன்? காரணங்கள் இருக்கின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பதவிகள் குறித்து பல வழக்குகள் வந்துள்ளன. இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும், உரிமையியல் நீதிபதிகளுக்கான தகுதித் தேர்விலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பங்கு கொள்ளலாம் என்று உச்ச, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

செவித்திறன் கேளாத மாணவர் ஒருவர் ஆரம்பக் கட்டத்தில் அதற்கான தனிப் பள்ளியில் படித்து, பின்னர் பொதுப் பள்ளி ஒன்றில் இடம் மறுக்கப்பட்டபோது அப் பள்ளியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ்கள் மூலம் பிறர் ஊடுருவும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு அமைத்த சான்றிதழ்கள் மறுபரிசீலனை உயர்மட்டக் குழுவுக்கும் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்த 3 சதவீத ஒதுக்கீட்டிலும் உடல் ஊனமுற்றோர், செவித்திறனற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கு தலா 1% இடஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் மாற்றுத் திறனாளிகளுக்கான பணி ஒதுக்கீடுகள் கானல் நீராகிவிட்டது. குறிப்பிட்ட சில பதவிகளில் செவி்த்திறன் கேளாத அல்லது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. பெரும்பாலும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளே இந்த ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுகின்றனர். எத்தனை விழுக்காடு உடல் ஊனம் இருந்தால் அந்த ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பதவி கிடைக்கும் என்பதுப பற்றியும், அவர்கள் கொண்டுவரும் சான்றிதழ்களின் நம்பிக்கையின்மை பற்றியுமே பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்துள்ளன.

இவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றவும் வழி இல்லை. டால்கோ இன்ஜினீயரிங் கம்பெனி வழக்கில் இச்சட்டம் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று 2010-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இச்சட்டத்தை தனியாருக்கும் பொருந்தும்படி திருத்த மத்திய அரசு முன்வரவில்லை. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் (அ) சந்தைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செயல் திட்டம் வகுக்கும்படி உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்புகள் தவிர அச்சட்டத்தின் 38-வது பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ பல்வேறு திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் மாற்றுத் திட்டங்களை அரசு உருவாக்கினால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வருத்தத்தை ஓரளவேனும் தணிக்க முடியும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்