காந்தியை மிஞ்சிய காந்தியவாதி!

By தஞ்சாவூர் கவிராயர்

மேற்கத்திய பாணி உடை, ஆங்கிலம் என்று துரைமார் தோற்றத்தில் இருந்த மனிதர், பின்னாட்களில் இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு எளிய உடைகளுடன், தவறாத நேர்மையுடன் உழைத்தார் என்று சொன்னால், காந்தியைக் குறிப்பிடுவதாகக் கருதுவோம். ஆனால், இவர் காந்தியையும் மிஞ்சிய காந்தியவாதி. ஜே.சி.குமரப்பா! காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர்.

தஞ்சாவூரில் சாலமன் துரைசாமிக்கும் எஸ்தர் அம்மையாருக்கும் ஒன்பதாவது குழந்தையாக 1892 ஜனவரி 4-ல் பிறந்தவர் குமரப்பா. இவரது இயற்பெயர் செல்லத்துரை. பிரிட்டனில் கணக்குப் பரிசோதனைப் படிப்பில் உயர்கல்வி பயின்று, அமெரிக்காவில் பொருளாதாரம் பயின்றார். அமெரிக்காவில் மாணவராக இருந்தபோதே தமது ஆய்வுக்கென இந்திய மக்களைப் பற்றி அவர் சேகரித்த தகவல்கள் இந்தியாவை உறிஞ்சி வாழும் இங்கிலாந்தின் உண்மை உருவத்தை அம்பலமாக்கியது. மாணவப் பருவத்தில் 'இந்தியா வறுமைப்பட்டது ஏன்?' என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரையை 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டது.

திருடனும் வணிகனா?

இவரது பொருளியல் ஆசிரியர் டாக்டர் தேவன் போர்டுடன் ஏற்பட்ட கருத்து மோதல்தான் காந்தியிடம் இவரைக் கொண்டுவந்து சேர்த்தது. ஒரு கருத்தரங்கில், "வர்த்தகப் பொருளாதாரத்தில் சுயலாபம் ஒன்றே குறிக்கோள். அங்கே எந்தவிதமான கோட்பாடுகளுக்கும், லட்சியங்களுக்கும் இடமில்லை. திருடன் ஒருவன் கன்னக்கோல் கொண்டு கொள்ளையிட்டுப் பணம் சேர்த்தால், அவனும் ஒரு நல்ல வணிகனே" என்று வாதிட்டார் தேவன்போர்டு. அவரை எதிர்த்து வாதிட்ட குமரப்பா, "அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது. மனிதன் வெறும் பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான்" என்று உறுதிபடக் கூறினார். பேராசிரியருக்கு ஆத்திரம் உண்டானாலும் குமரப்பாவின் விவாதத் திறமையை மெச்சினார்.

காந்தியடிகள் நேர மேலாண்மையைத் தீவிரமாகக் கடைப் பிடிப்பவர் என்பதை அறிவோம். ஆனால், ஒப்புக்கொண்ட வேலை நிறைவடையாத நேரத்தில், காந்திஜியே தன்னைச் சந்திக்க விரும்பியபோது, பேச அவகாசமில்லை என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியவர் குமரப்பா. ஒரு முறை, பிஹார் பூகம்ப நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்தபோது, நிவாரணப் பணிகளைப் பார்வையிட வந்திருந்த காந்தியடிகளுக்கு எல்லோரையும்போல ஒரு நாள் உணவுக்காக மூன்று அணாதான் கொடுக்க முடியுமென்று கூறிவிட்டார் இவர். காந்தியடிகளே தலையிட்டு, 'நான் வந்தது நிவாரணப் பணிக்காக என்பதால், செலவை அந்த நிதியில் ஏற்கலாம்' என்று கூறியபோதும்கூட, வகுக்கப்பட்ட விதிமுறைகளை யாருக்காகவும் மீற முடியாதென உறுதியாகச் சொல்லிவிட்டார்.

முதல் சந்திப்பு

பொதுப் பணத்தைக் கையாள்வதில் தனது குருவையும் மிஞ்சக்கூடிய சீடராக குமரப்பா இருந்தார். இதனால், 'காந்தியத்தை காந்தியை விடவும் அதிகம் கடைப்பிடிக்கும் காந்தியின் சீடர்' என்று அவரைப் புகழ்வது உண்டு.

தான் எழுதிய கட்டுரை தொடர்பாக முதன்முதலாக காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார் குமரப்பா. சபர்மதி ஆசிரமத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பைப் பற்றி பின்னர் குமரப்பா இப்படி விவரித்தார். "காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டை எனக்குக் காட்டினார்கள். குறித்த நேரத்துக்கு அங்கு சென்று அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்கள். ஒரு கையில் கைத்தடியுடனும் மறு கையில் கட்டுரைச் சுருளுடனும் இரண்டு மணிக்கே சபர்மதி ஆற்றின் கரையில் உலவ ஆரம்பித்தேன். வழியில் ஒரு மரத்தடியில் சாணமிட்டு அழகாக மெழுகப்பட்ட இடத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்து நூல் நூற்றுக்கொண்டிருந்தார். நான் அதற்கு முன் ராட்டையைப் பார்த்ததே கிடையாது. ஆகவே, ஆச்சரியத்துடன் கைத்தடியைக் கீழே ஊன்றி, அதன்மேல் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். என் சந்திப்புக்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. இவ்வாறு சுமார் ஐந்து நிமிடம் வரை வேடிக்கை பார்த்தேன். காந்தியடிகளைச் சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகப் பையினின்றும் கடிகாரத்தை எடுத்து சரியான நேரத்தைப் பார்த்தேன். இதை அக்கிழவர் கவனித்து, பொக்கை வாயைத் திறந்து ஒரு புன்னகையுடன், 'நீங்கள்தான் குமரப்பாவா?' என்று விசாரித்தார். அக்கிழவர் காந்தியடிகளாக இருக்கக்கூடுமோ என்று திடீரென என் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆகவே, நீங்கள்தான் காந்தியடிகளா என்று பணிவுடன் கேட்டேன். அவர் தலையை அசைத்ததும் கீழே உட்கார முயன்றேன்; இஸ்திரி செய்யப்பட்டிருந்த 'பட்டு சூட்' அழுக்காகிவிடுமே என்று கவலைப்படாமல், சாணம் மெழுகிய தரையிலேயே உட்கார்ந்துவிட்டேன்".

இந்தச் சந்திப்பு, வெள்ளைக்காரத் துரையாக இருந்த குமரப்பாவை, உடையிலும் சரி, உள்ளத்திலும் சரி காந்தியவாதியாக மாற்றியது. ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு, காந்தியடிகளுடன் தேசப் பணியில் ஈடுபடுவது என்று தீர்மானித்தவர், நேராக கதர் கடைக்குச் சென்ற குமரப்பா, தனக்கு வேட்டிகள் வேண்டுமென்றும் அதைத் தயாரித்துக் கொடுக்க அளவெடுத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். வேட்டிக்காக யாரையும் அளவெடுக்கத் தேவையில்லை என்று கடைச் சிப்பந்தி சிரித்தபடி விளக்கினார். அந்த அளவுக்கு இந்திய உடைகளைப் பற்றிய புரிதலின்றி இருந்தவர், பிற்காலத்தில் காந்தியப் பொருளாதாரத்தின் தந்தையாகப் பரிமளித்தார்.

கந்தல் உடையும் பத்தொன்பது லட்சமும்

குமரப்பா உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்தவர். காந்தி எங்கு சென்றாலும் கையில் பகவத்கீதை இருந்ததைப் போல குமரப்பா வோடு பைபிள் இருக்கும். ரெவரென்ட் டாக்டர் வெஸ்ட்காட், கல்கத்தாவில் இருந்த கிறிஸ்தவர்களின் தலைமைக் குரு, காந்தியடி களின் அஹிம்சைப் போராட்டம் கிறிஸ்துவின் போதனைகளுக்கு முரண்பட்டதென்று விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டிப் பிரச்சாரம் செய்தார். குமரப்பா அவர் கருத்துக்கு எழுதிய மறுப்புகள் 'யங் இந்தியாவில்' கட்டுரைகளாக வெளிவந்தன. அக்கட்டுரையில், "ஒரு உண்மையான கிறிஸ்தவர்… உண்மையான காந்தியவாதியாகவே இருப்பார்" என்று ஆணித்தரமாக வாதிட்டிருந்தார் குமரப்பா.

ஒருமுறை குமரப்பா ராஜதுவேஷ வழக்கில் கைதாகி, சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்தார். அவரது உடைகள் சிறையில் இருந்த எலிகளால் கடித்துக் குதறப்பட்டு கந்தல் கந்தலாக ஆகியிருந்தன. அந்த உடையை அணிந்துகொண்டு வந்த குமரப்பா, அப்போது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிஹார் பூகம்ப நிவாரணக் குழுவின் பொறுப்பை ஏற்றார். கிழிந்த உடையுடன் கையில் பத்தொன்பது லட்ச ரூபாய் காசோலையுடன் இம்பீரியல் வங்கிக்குச் சென்றார். குமரப்பா பெற்றிருந்த மேலை நாட்டுப் பட்டங்களுக்கும் அவர் தோற்றத்துக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. அவரைக் காவலர்கள் வங்கிக்குள் விட மறுத்தனர். அவரது அறிமுக அட்டையை வங்கி மேலாளர் பார்த்துவிட்டு, எழுந்து வந்து அழைத்துச் சென்றார்.

அமைச்சர் ஒருவர் குமரப்பாவிடம் சமுதாய நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதால் ஏற்படும் 'வளர்ச்சி' குறித்து விரிவாகப் பேசலானார். குமரப்பா குறுக்கிட்டு, 'நான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் முன்னதாக, முதலில் அங்குள்ள ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன். திட்டக்காலம் முடிந்ததும் அந்த எலும்புகளில் ஏதாவது சதைப்பற்று காணப்படுகிறதா என்று ஆராய்வேன். அப்படிக் காணப்பட்டால் அந்தத் திட்டம் வெற்றிபெற்றிருப்பதாகக் கருதுவேன்" என்றார்.

டிராக்டர் சாணி போடாது

எந்திரக் கலப்பைக்கும் மாடுகள் பூட்டிய கலப்பைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அவர் தெரிவித்த கருத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது. வெளிநாட்டு ஆய்வாளர் குமரப்பாவிடம் "நீங்கள் எந்திரங்களுக்கு எதிரியா... டிராக்டர் பயன்படுத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?" என வினவினார். குமரப்பா சிரித்துக்கொண்டே 'ஏன் என்றால் டிராக்டர் சாணி போடாது!' என்றாராம்.

இந்திய அரசின் திட்டக் குழு உறுப்பினராக குமரப்பா நியமிக்கப்பட்டிருந்தார். இக்குழுவின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நிகழ்ந்தது. இக்கூட்டத்துக்கு மாட்டுவண்டியில் சென்றார் குமரப்பா. குடியரசுத் தலைவர் குடியிருக்கும் வீதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 'இது பொதுச்சாலை.. யாரும் செல்ல உரிமை உண்டு' என்று காவலரிடம் வாதிட்டார். 'இந்த வழியாக நேருஜி வருகிறார். ஆகவே, வண்டிகள் வருவதைத் தடுக்கிறோம்' என்றார்கள். "நானும் திட்டக் குழு உறுப்பினர்தான்" என்று கூறி, வண்டியில் தொடர்ந்து சென்றார். இப்படிப் பல இடங்களில் மாட்டுவண்டி நிறுத்தப்பட்டது. வண்டியிலிருந்து இறங்கி நடந்து செல்லுமாறு கூறப்பட்டது. குமரப்பா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், தேவைப்பட்டால் சத்தியாகிரகம் செய்யப்போவதாகவும் கூறினார். ஜவாஹர்லால் நேரு, 'ராணுவ லாரிகள் மிகுதியாகச் செல்லும் இச்சாலையில், மாட்டுவண்டிகளின் பாதுகாப்பைக் கருதியே அவற்றை அனுமதிப்பதில்லை' என்று கூறினார். அதற்கு குமரப்பா, "பொது இடத்தில் நல்லவனும் தீயவனும் இருந்தால், தீயவனைத்தான் அகற்ற வேண்டுமே ஒழிய நல்லவனை அல்ல" என்றார் காட்டமாக.

மந்திரியே ஆனாலும்...

நேர மேலாண்மையை ராணுவ அதிகாரிகளைவிட அதிக கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வந்ததன் காரணமாக, நெருங்கியவர்கள் இவரை 'கர்னல் சாகேப்' என்றே அழைத்தார்கள். ஒருமுறை பாட்னாவில் நிவாரணக் கமிட்டியின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த குமரப்பாவைக் காண காந்திஜி வந்தார். கமிட்டியின் கணக்கில் சில அணாக்கள் வித்தியாசம் வந்தது. இதைக் கண்டு பிடிக்க ஆடிட்டர்களாலும் முடியவில்லை. குமரப்பா தனி அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். வித்தியாசத் தொகையைக் கண்டுபிடிக்கும் வரை அவர் கதவைத் திறக்க மாட்டார் என்று காந்திஜியிடம் கூறப்பட்டது. மறுநாள் காலை வெளியில் வந்து பல் துலக்கிக்கொண்டிருந்த குமரப்பாவைப் பார்த்து, "இன்று உங்களுடன் பேச வேண்டும். எப்போது பார்க்கலாம்?" என்று கேட்டிருக்கிறார். "எனக்கு நிறைய வேலை இருக்கிறது, இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றார் குமரப்பா. வேறுவழியின்றி காந்தியடிகள் திரும்பிவிட்டார்.

காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், குமரப்பாவைச் சந்திக்க ஒருநாள் பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் நிச்சயித்திருந்தார். ஆனால், சில அவசரமான பணிகளைக் கவனித்துவிட்டுத் தமது அதிகாரிகள் புடை சூழ மாலை 5.30க்குள் வந்து சேர்ந்தார். குமரப்பா 5.30 நடைப் பயிற்சிக்குச் செல்லும் வழக்கமுடையவர். மந்திரி காலதாமதமாக வந்ததால் தம்மை நடைப்பயிற்சியில் சந்திக்குமாறும் பேசிக்கொண்டே நடக்கலாம் என்றும் கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் மந்திரி குமரப்பாவைப் பின்தொடர்ந்து 4 மைல்கள் நடக்க வேண்டி வந்தது.

நிதி திரட்ட மறுப்பு

காந்தி மறைவை ஒட்டி காங்கிரஸ் மகாசபை அவருக்கு ஒரு மிகப்பெரும் நினைவு நிதி திரட்ட முடிவுசெய்து, அந்தப் பணியை குமரப்பாவிடம் ஒப்படைத்தது. குமரப்பா இதை ஏற்கவில்லை. காந்தி நினைவைப் பொருள் உருவில் நிறுவத் தேவையில்லை. நிதி திரட்டச் செலவிடும் நேரத்தை தேச நிர்மாணத் திட்டங்களுக்குச் செலவிடலாம். பண மூட்டையைச் சேகரிக்கும் அந்த வேலையிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

தமது அந்திமக் காலத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் வந்து தங்கியிருந்தார் குமரப்பா. அங்கே சிறுகுடில் ஒன்றை அமைத்துக்கொண்டு, பல கிராமியக் கலைப் பொருட்களின் உதவியால் அதை அலங்கரித்தார். இக்குடிசையில் அவரைக் காண தேசத் தலைவர்கள் பலரும் வந்தனர். குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் வந்தபோது 'தனிப்பட்ட முறையில் தம்மைக் காண வருமாறும் குடியரசுத் தலைவராக வர வேண்டாம்' என்றும் கூறினார். குமரப்பா கூறியதை ஏற்று தனிமனிதராக கல்லுப்பட்டி குடிலில் வந்து சந்தித்தார். தரையில் விரித்த கம்பளத்தில் அமர்ந்து குமரப்பாவுடன் உரையாடினார்.

ரோஜாவின் வேருக்கு உரம்

அவரது இறுதிநாள் நெருங்கியபோது சென்னை பொதுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைக் காண பிரதமர் நேரு வந்தார். அந்த உரையாடலின்போது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அவரது யோசனைகளைக் கேட்டுக் குறித்துக்கொண்டார் நேரு. விடைபெறும்போது நேருவின் கையிலிருந்த குறிப்பு நோட்டை வாங்கிப் புரட்டினார். பிறகு, அதனை சுக்கல் சுக்கலாகக் கிழித்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். நேரு அதிர்ச்சியில் உறைந்துபோனார். "நீங்கள் டெல்லி சென்று என்ன செய்வீர்களோ, அதை நான் இங்கேயே செய்துவிட்டேன்" என்றார் குமரப்பா. நேரு வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதை இவர் அறிந்திருந்தார்.

புதியதோர் உலகம், சர்வோதய சமுதாயம், இம்மண்ணில் ரோஜாவாகப் பூக்க வேண்டும் என்பதே குமரப்பாவின் விருப்பம்! உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்த குமரப்பா, தமது மறைவுக்குப் பிறகு தன்னை எரிக்க வேண்டும் என்றும் தனது சாம்பலை கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் தனது குடிலைச் சுற்றி, தான் வளர்த்த ரோஜாச் செடிகளுக்கு உரமாக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். பூத்துச் சிரித்தபடி காட்சி தந்த ரோஜாப் பூக்களின் வேரில் உரமாக உதிர்ந்தார் குமரப்பா.

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

ஜனவரி-4 டாக்டர் ஜே.சி. குமரப்பா பிறந்த நாள்







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்