இந்தியா தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். “பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அது நாட்டுக்குப் பெருத்த சுமை. ஏழை மக்களின் பணத்தைக் கொட்டி அழலாமா?” என்று உபதேசித்தார். மார்க்ரெட் தாட்சரைப் போல “வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று அவரும் சொன்னார். இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முரசறைந்தன. அப்போது, பாஜக அதை எதிர்த்தது. தொழிலாளர்களும் இடதுசாரிகளும் அது தவறென்று வீதிக்கு வந்து போராடினார்கள். தொழிலாளர்கள் தேசத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகப் போராடுவதாய்க் குற்றம் சுமத்தினார்கள்.
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பின்னர், லாபத்தில் இயங்கினாலும் முக்கியத்துவம் அல்லாத தொழில் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். அது சரிதான் என்று ஒரு ஒப்புதலை உருவாக்கினார்கள். ‘நஷ்டத்தில் இயங்குகிற தொழில்களைத் தனியார் நடத்தினால் மட்டும் எப்படி லாபம் வரும்?’ என்ற கேள்விக்கு “உயர் தொழில்நுட்பத்தோடு அந்த நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கும்” என்று அவர்களே தட்டிக்கொடுத்துக்கொண்டார்கள். அப்படிச் சொல்லித்தான் சென்னை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் பிரம் மாண்டமான குடியிருப்புக் கட்டிடங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை, தொழிற்சாலைகளை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் உயர்ந்த தொழில் நுட்பம்பற்றித்தான் பேசினார்களோ என்னவோ?
விற்றாலும் வாங்கினாலும்
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். ஆட்சியாளர்கள் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கினாலும், ஹெலிகாப்டர் வாங்கினாலும் பல நூறு கோடிகள் அரசுக்கு நஷ்டம். அலைக்கற்றையை விற்றாலும், நிலக்கரிப் படுகையை விற்றாலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம். இதில் முறைகேடு ஏதும் இல்லை, சந்தையின் விதி என்று அவர்கள் சான்றிதழ் கொடுத்தார்கள்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு பொதுத் துறைகள் பலப்படுத்தப்படும்” என்று சொன்னது. தற்போது அருண் ஜேட்லி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்
களுக்கான அமைச்சர்கள் குழு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ‘நஷ்டத்தில் இயங்குவது’, ‘விற்கப்படுகிறது’ என்ற இரண்டையும் லாவகமாக இணைத்து, ‘நஷ்டத்தில் இயங்குவது விற்கப்படுகிறது’என்ற பொதுப்புத்தியை அவர்கள் கட்டமைத்துவிட்டார்கள். இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் தவிர, இதர நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றனவா?
பொன்முட்டையிடும் வாத்தை…
நிறுவனங்களின் 2013-14 ஆண்டறிக்கைகளின் பட்டியலில் மூன்று பெரிய தனியார் நிறுவனங் களின் ஒட்டுமொத்த லாப வீதம் அவற்றின் வருவாயில் 5.21% மட்டுமே. இது பொதுத் துறையில் 5.12%. இதில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. அரசுக்குச் செலுத்திய தொகையை ஒப்பிட்டால், ரூ. 10.82 லட்சம் கோடி வருவாய் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு கஜானாவுக்கு ரூ. 68,474 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாயுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.1,38,299 கோடியை அரசு கஜனாவுக்கு வழங்கியுள்ளன. இதே நிலைதான் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பொன்முட்டை இடும் வாத்தாய், அமுதசுரபியாய், வற்றாத நீரூற்றாய், பொய்க்காத பெருமழையாய் விளங்கும் இந்த நிறுவனங்களைத்தான் தனியாருக்கு பாஜக அரசாங்கம் விற்கப்போகிறது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பிலாய் ஆலை மட்டும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந் திருக்கிறது. அதன் குடியிருப்புகள் 9,013 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகிறார்கள்.
1956-ல் அரசு, காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 5 ஆண்டுத் திட்டத்துக்கு இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் அரசுக்கு ரூ. 7.25 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்த 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் இதுவரையிலும் அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் துறையில் தனியாரும் அந்நிய மூலதனமும் அனுமதிக்கப்பட்டி ருக்கிறது. அதை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
இழப்பு யாருக்கு?
அவர்கள் முதலில் நஷ்டத்தில் இயங்குவதை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பிறகு, முக்கியமற்ற துறைகளை விற்கப்போவதாகச் சொன்னார்கள். இப்போது லாபத்தில் இயங்கும் முக்கியமான துறைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஏலமிட்டது காங்கிரஸ். இப்போது ஏலமிட்டுக்கொண் டிருப்பது பாஜக. இரண்டு பேர் காலத்திலும் விற்கப்பட்ட 2-ஜியையும், நிலக்கரிப் படுகையையும் நீதிமன்றம் தலையிட்டு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் அளவுக்கு மிகவும் நேர்மையாக இவர்கள் நடந்துகொண்டார்கள். அவையெல்லாம் பொதுப்புத்தியில் நியாயம் என்று கட்டமைக்கப்பட்டே எதிர்ப்பின்றி விற்கப்பட்டன.
மேலே சொன்ன பொதுத் துறைகளிலிருந்து அரசு கஜானாவுக்குச் சென்ற வரிகளும் லாபப் பங்குகளும் இந்திய மக்களுக்குச் சாலைகளாகவும் கல்வியாகவும் மருத்துவ வசதிகளாகவும், பொது விநியோகத் துறை மானியமாகவும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் அரசாங் கத்துக்குக் கொடுத்த தொகை மட்டும் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய். இவை நிறுத்தப்பட்டால், மக்கள் நலத்திட்டங்களும் மானியங்களும் வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.
- க. கனகராஜ்,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ (எம்)
- தொடர்புக்கு: kanagaraj@tncpim.org
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago