கடந்த வாரம் செய்தித்தாள்களில் வந்த இரு செய்திகள் கவனத்தை ஈர்த்தன. முதல் செய்தி, கடந்த வெள்ளிக்கிழமையன்று உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் எவரும் நுழைய முடியாதபடி பார்த்துக்கொண்டது. இரண்டாவது செய்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களை அகற்றியது சட்டப்படி தவறில்லையென்று பேட்டியளித்தது.
இவ்விரு செய்திகளுக்கும் இடையே அடிநாதமாக ஒரு இழை ஓடுகிறது. உயர் நீதிமன்றத்தின் வாயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை பூட்டப்படுவதன் பின்னணி பலருக்கும் தெரியாது. உயர் நீதிமன்ற வளாகமும், அதிலுள்ள கட்டடங்களும் அரசுக்குச் சொந்தம். அவை பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருக்கின்றன. அரசின் சொத்துக்கள் எவற்றையும் யாரும் ஆக்கிரமித்துவிடாதபடி தடுக்கவே இம்முன்னேற்பாடு. அன்றைய தினத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவ்வளாகத்தை சோதனைசெய்து அவ்வளாகத்திலோ, அதிலுள்ள கட்டடங்களிலோ எவ்வித ஆக்கிரமிப்பும் காணப்படவில்லையென்று, அதற்கான பதிவேட்டில் பதிவுசெய்து கையெழுத்திட்டு வைத்துக்கொள்வார்கள். யாரேனும் அச்சொத்துக்குச் சொந்தம் கொண்டாடி, பின்னர் நீதிமன்றத்தை நாடினால், அவர்கள் கூற்றைப் பொய்ப்பிப்பதற்கே இத்தகைய ஏற்பாடு.
அனுபவ பாத்தியதை
ஒரு சொத்துக்குச் சொந்தக்காரரின் விருப்பத்துக்கு எதிராக, யாரேனும் ஒருவர் அச்சொத்தை 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவந்தால், அச்சொத்து தனக்கே உரியதென்று நீதிமன்றத்தில் வாதாட முடியும். இப்படி, சொத்துரிமையாளரின் விருப்பத்துக்கு எதிராக வேறொருவர் உரிமைகோருவதைப் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆக்கிரமிப்பாளரே சொத்துரிமை கொண்டாடுவதற்கான காலநிர்ணயம் அநேகமாக 12 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை என்று பல நாடுகளின் சட்டம் கூறுகிறது. அனுபவ பாத்தியதையின் அடிப்படையில் உரிமையாக்கிக்கொள்ளுதல் (பெர்ஃபெக்டிங் டைட்டில் பை அட்வெர்ஸ் பொசெஷன்) என்று இதைச் சொல்வார்கள். பரதனின் தாயார் கைகேயி, ராமனிடம் “ ‘ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்… ஏழ் இரண்டு ஆண்டின் வா’ என்று இயம்பினன் அரசன் என்றாள்” என்று கம்பன் வர்ணித்தான். ராமன் காட்டுக்குப் போய்த் திரும்பி வந்தாலும் அவன் அயோத்தியாளும் உரிமை பறிபோய்விடும் என்ற அடிப்படையில்தான் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வருமாறு அவனது சிற்றன்னை கேட்டுக்கொண்டாள்.
சட்டத்தில் தனிப்பட்டவர்களின் சொத்துக்கு 12 ஆண்டுகள் காலவரையறை இருப்பதுபோல் அரசின் சொத்துகளுக்கு 30 ஆண்டுகள் காலவரையறை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் சொத்துகளை யாரேனும் தன்னுடையது என்று கோரி உரிமையியல் நீதிமன்றங்களை அணுகினால், அதற்கு எதிர்வினையாக அரசு வாதாடுவதற்கேற்ப ஆண்டுக்கொருமுறை அரசு சொத்துகளை ஆய்வுசெய்து, சட்டப் பாதுகாப்புக்கான பதிவேடுகள் வைத்துக்கொள்ளப்படுகின்றன. உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுச்சொத்துகளுக்கும் இவ்வித ஏற்பாடுகள் உண்டு. ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாலங்களிலும் இப்படிப்பட்ட ஆண்டு ஆய்வுக் குறிப்புகள் பதியப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நிலத்தையோ வீட்டையோ ஒருவரது அனுபவத்துக்கு வாடகைக்கோ குத்தகைக்கோ விட்டிருந்தால், சொத்து வைத்திருப்பவர் பலருக்கு அச்சொத்து பறிபோய்விடுமா என்ற அச்சம் எழுவதுண்டு. சொத்துரிமையாளரின் அனுமதியின் பேரில் அனுபவ பாத்தியதை கொண்டாடுபவர்கள் எவ்வளவு ஆண்டுகளாயினும் அச்சொத்து தமதென்று உரிமைகோர முடியாது. சொந்தக்காரரின் இசைவின் பேரில் அனுபவிப்பது வேறு, இசைவின்றி ஆக்கிரமித்து அனுபவிக்கும் உரிமை வேறு. அதனால்
தான் சிவில் சட்டங்களில் சொத்தை அனுபவிப்போருக்கு 90% சொத்துரிமையுண்டு என்று கூறுவர். சொத்துரிமையை நிலைநாட்டி தம் பாதுகாப்பில் வைத்திராதோர் அந்தச் சொத்தை, சட்டப்படி இழப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் 12 வருட காலவரையறையை மறுபரிசீலனை செய்து சட்டத்தைத் திருத்தும்படி அரசுக்கு ஆலோசனை வழங்கியது.
ஆனால், பல அரசர்கள் படையெடுத்துப் பக்கத்து நாடுகளைப் பலவந்தமாக இணைத்துக்கொண்டதுதான் வரலாறு. அமெரிக்கா என்பது ஐரோப்பிய வந்தேறிகளின் 13 காலனிகளாகி, பின்னர் வல்லான் வகுத்த வழி என்ற அடிப்படையில் மேற்குப் பிரதேசங்கள் முழுவதையும் துப்பாக்கி முனைகளில் ஆக்கிரமித்து விரிவுபடுத்தப்பட்ட நாடாகியது. அங்குள்ள பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் ரத்தத்தில் எழுப்பப்பட்டதுதான் இன்றுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆக்கிரமிப்பு பாத்தியதை
இந்தியாவில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர் வியாபாரம் செய்யவும் குடியிருக்கவும் இந்திய மன்னர்களிடம் அனுமதி பெற்று, பின்னர் தங்களுடைய ஆளுமையைச் சிறிதுசிறிதாக விரிவுபடுத்தி காலனியாட்சியை ஏற்படுத்தினர். கம்பெனி ஆதிக்கத்தை ரத்துசெய்து, பின்னர் விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசியாக முடிசூடிக்கொண்டதும் அவளது வாரிசுகள் படிப்படியாக பிரிட்டிஷ் இந்தியாவைத் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்படுத்தியதும்தான் காலனிய வரலாறு. அவர்கள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதி இந்திய விவசாயிகளிடமிருந்து வசூலித்த நிலவரி. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் நிலங்களை சர்வே செய்து அதற்குண்டான நிலவரியைக் கட்டாயமாக வசூலிக்க, மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவரே மாவட்ட கலெக்டர்கள். தமிழில் மாவட்ட ஆட்சியர் என்றழைக்கப்பட்டாலும் அதன் ஆங்கில மூலம் ‘(வரி) வசூலிப்பவர்’ என்பதுதான். வட மாநிலங்களில் மாற்றப்பட்டு மாவட்ட நடுவர் (அ) மாவட்ட ஆணையர் என்றழைக்கப்பட்டாலும் தென் மாநிலங்களில் கலெக்டர் என்றே அழைக்கப்பட்டுவருகிறது.
சொந்தம் கொண்டாடி நிலத்தில் சாகுபடி செய்தவர்களிடம் மட்டுமே நிலவரி வசூலிக்கப்படும். அவர்கள் பெயர் கிராம நிலப்பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டு கலெக்டர்கள் நடத்தும் ஜமாபந்தியின்போது அவர்களது விண்ணப்பத்தின் பேரில் பட்டாக்களும் வழங்கப்படும். 1905-ம்ஆண்டுவரை இங்குள்ள நிலங்களில் வெள்ளையர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. பிரிட்டிஷ் இந்தியாவை, ராணுவ பலத்துடன் தங்களுடைய முழு நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, இந்தியாவின் பேரரசராக ஏழாவது எட்வர்டு மன்னர் முடிசூட்டிக்கொண்டார். இந்தியா முழுவதும் சட்டப்படி தங்களுக்குச் சொந்தம் என்னும் வகையில் ‘1905-ம் வருடத்திய நில ஆக்கிரமிப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது. கோயில் நிலங்களும் வீட்டு மனைகளும் தவிர, அனைத்து நிலங்களும் அரசின் பொறுப்புக்கு வந்தன. அரசின் பொறுப்பிலுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பவர்களிடம் தண்டத் தீர்வை வசூலிக்கப்பட்டது. தண்டத் தீர்வை வசூலிப்பதற்கான அறிவிப்பு பி-மெமோ (B-Memo) என்றழைக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற எப்போதாவது அரசு விழைந்தால், உரிய அறிவிப்புடன் அவர்களை நிலத்திலிருந்து வருவாய் அதிகாரிகள் அகற்றவும் அந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்லவும் சட்டத்தில் இடமுண்டு.
ஆக்கிரமிப்பாளர்களே நாட்டின் சொந்தக்காரர்களாகவும், குடிமக்கள் அனைவரையும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் மாற்றிய 1905-ம் வருடத்திய சட்டத்தை இந்திய மக்கள் கடுமையாக எதிர்த்தும் பயனில்லை. வங்க மாநிலப் பிரிவினையையும், நிலஅபகரிப்புச் சட்டங்களையும் கடுமையாக எதிர்த்த தேச பக்தர்களின் குரலை ஒலிக்கும் வண்ணம் பாரதியார் 1906-லிலேயே கீழ்க்கண்டவாறு பாடியதில் வியப்பில்லை.
“ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?”
நிலத்தில் தண்டத் தீர்வை செலுத்தி அனுபவிப்பவர்கள் ‘பி-மெமோ’ ரசீதுகளின் அடிப்படையில் நிலம் தங்களுடையதென்று விற்பதும், பத்திரப் பதிவுத் துறை கட்டணம் வாங்கிக்கொண்டு அதைப் பதிவுசெய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது கேலிக்கூத்து.
சுதந்திரத்துக்குப் பின்…
நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சென்னை போன்ற நகரங்களில் புதிதாக மக்கள் குடியேறும் சூழ்நிலைகள் இல்லாததைக் கருதிய அரசு, சென்னை நகர வளர்ச்சிக் கட்டளைச் சட்டத்தை உருவாக்கியது. அதன்படி வீட்டு மனைக்கான நிலங்களைப் பெருமளவில் வைத்திருப்போரிடமிருந்து கையகப்படுத்திப் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. குடியேறும் உழைக்கும் மக்களுக்குக் குறைந்த வாடகையில் இருப்பிடம் அளிக்க விழைந்தது அச்சட்டம். அதன்படி உருவான குடியிருப்புகளே சி.ஐ.டி நகர், சி.ஐ.டி. காலனி போன்றவை. கிராமப்புறப் பாட்டாளிகளை நகருக்கு வரவழைத்துப் புதிய நகர்ப்புறப் பாட்டாளிகளை உருவாக்குவதற்காகச் சொற்ப வாடகையில் உருவாக்கப்பட்ட அந்தக் குடியிருப்புகள், இன்று கைமாறிப் பல செல்வந்தர்கள் வாழுமிடமாக ஆகிவிட்டது சோகக் கதை.
வீட்டு வாடகை அதிகரித்துவருவதையும், வளர்ந்துவரும் விலைவாசியில் அதைக் கொடுக்க முடியாமல் திண்டாடும் குடித்தனக்காரர்களை வீட்டுச் சொந்தக்காரர்கள் விரட்டுவதையும் ஒழுங்குபடுத்த 1960-ம் வருடத்திய கட்டடம் (குத்தகை மற்றும் வீட்டு வாடகை) ஒழுங்குபடுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பிடங்களை விட்டுக் குடித்தனக்காரர்களைக் காரணமின்றி வெளியேற்றுவதை அந்தச் சட்டம் தடுக்க முயன்றது. ராட்சத வேகத்தில் வளர்ச்சி பெற்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையோ லட்சக் கணக்கில் பெருகியது. அதேபோல் மத்தியதர வர்க்கத்தினருக்கு வீட்டு வேலைகள் செய்ய ஆட்களும் தேவைப்பட்டது.
குடிசைவாசிகளும் நடைபாதைவாசிகளும்
பல்லாயிரக் கணக்கில் நகரை நோக்கி வந்த மக்கள் கூட்டம் அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களிலும் பக்கிங்காம் கால்வாய் ஓரத்திலும் ஓலைக்குடிசை அமைத்து வாழத் தொடங்கினார்கள். அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் குடிசை போட்டுக்கொண்டு வாழ்ந்ததோடல்லாமல், பல லட்சம் பேர் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் வாழத் தொடங்கினர். 1970-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த பத்ரிநாத் அறிக்கை 43 சதவீத மக்கள் சென்னையில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டது. குடிசைவாழ் மக்கள் நலன் கருதி 1971-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்தி வாழத் தகுதியுள்ளதாக மாற்ற முனைந்த அவ்வாரியம் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியதில், இணையாக இருந்த குடிசைகள் இன்று செங்குத்தான சிமெண்டு குடிசைகளாக மாறிவிட்டன. குடிசைப் பகுதிகள் மாற்று வாரியமா (அ) அகற்றும் வாரியமா என்ற கேள்விக்கு அரசிடமே விடையுண்டு.
சென்னை அழகுபட்டிருக்கிறதா?
1983-ம் ஆண்டு, நடைபாதையில் வசிப்பவர்களை அரசாங்கம் பலவந்தமாக அகற்ற முன்வந்தபோது அவர்கள் சார்பில் பொதுநலன் கருதிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வழக்கில் நடைபாதைவாசிகளுக்கும் வாழ்வுரிமையுண்டு என்று வாதாடியதில் உச்ச நீதிமன்றம் 1984-ல் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பவர்களை அகற்ற அரசு முயலும்போது மாற்று இருப்பிடங்களை அம்மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண விரும்பிய குடிசை மாற்று வாரியத்தின் குறிக்கோளை நீதிமன்றம் அரசுக்கு நினைவூட்டியது.
அந்தத் தீர்ப்புக்குப் பின் விளைந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரித்திரமே. சென்னையில் வாழ்ந்த ஏழை மக்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகி நகரிலும் செம்மஞ்சேரியிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சுயவேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானோரின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, அவர்களுடைய குழந்தைகளின் கல்வியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 43 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதே இந்த மாபெரும் மனித இடப்பெயர்ச்சியின் விளைவு. மாற்றிட ஏற்பாடு என்ற பெயரில் மனிதர்களின் வாழ்வுரிமையைப் பறித்ததை ஆதரிக்க முடியாது. புலம்பெயர்க்கப்பட்ட அந்த மக்கள் இன்று வாழுமிடம் முள்வேலி முகாம்களே.
சாலையோரக் குடியிருப்புகளும் சில்லறை வணிகங்களும் போக்குவரத்தைத் தடைசெய்கின்றன; சிங்காரச் சென்னையின் அழகைச் சீர்குலைக்கின்றன எனக் கூறி அவற்றை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பிப்ரவரி 2005-ல் உத்தரவிட்டது. நடவடிக்கை எடுத்த விவரங்களைத் தொடர் அறிக்கைகளாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதையொட்டி பொக்லைன்களும் புல்டோசர்களும் வைத்து ஏழை மக்களின் குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி தகர்த்தெறிந்தனர். டிவிஷன் பெஞ்சின் உத்தரவு தவறென்றும், ஆக்கிரமிப்புகளானாலும் அவற்றைச் சட்ட முறைப்படியே அகற்ற வேண்டுமென்றும் நில ஆக்கிரமிப்புச் சட்டமானாலும் (அ) பொது இடங்கள் (அதிகாரமின்றி குடியிருப்போரை அகற்றும்) சட்டமானாலும் முன்னறிவிப்பு கொடுத்து, காரணம் கேட்டு உரிய உத்தரவின்படியே அகற்றப்பட வேண்டுமென்று நீதிபதி பி.கே. மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட பின்னரே ‘இடிக்கும் படைகள்’ பாசறைக்குத் திரும்பின. நெடுஞ்சாலைத் துறைக்கும் இவ்வுத்தரவு பொருந்துமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை அகற்றியது சட்டப்படி தவறல்ல என்று ஞானதேசிகன் அரசியல் காரணங்களுக்காகக் கூறியிருக்கலாம். தலைசிறந்த மூத்த வழக்கறிஞரான அவர் பல வழக்குகளில் முன்னறிவிப்பின்றி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தவறென்று வாதாடி வெற்றியும் பெற்றிருக்கிறார். “சான்றோரும் உண்டுகொல்” என நினைவு முற்றத்திலுள்ள தமிழன்னை கேட்பதற்கு ஞானதேசிகன் பதில் சொல்வாரா?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago