உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா. அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், நாமும் தயாராக வேண்டும் அல்லவா? இதோ, தொடங்கிவிட்டது 16-வது மக்களவைத் தேர்தலுக்கான ‘தி இந்து’வின் சிறப்புப் பக்கம்.
நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக நம் முன்னோர்கள் பட்ட பாட்டை ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, நம் கண்ணீரால் காத்தோம்’ என்ற வரிகளின் மூலம் நினைவுகூர்கிறோம் அல்லவா, சுதந்திரத்துக்கு மட்டும் அல்ல; ஜனநாயகத்துக்கும் அந்த வரிகள் அப்படியே பொருந்தும். இன்றைக்கு 18 வயதான ஒவ்வொரு குடிமகனுக்கும் கையில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் வாக்குச்சீட்டுக்குப் பின் உள்ள சரித்திரம் சாதாரணமானதல்ல.
நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால்தானே இன்றைய நாளின் சுகம் புரியும்? நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டின் முதல் தேர்தல்பற்றியும் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களைப் பற்றியும் 22.11.1951 அன்று ஆற்றிய இந்த உரையுடன் ஜனநாயகத் திருவிழாவைத் தொடங்குகிறோம். இனி, தேர்தல் முடியும் வரை திங்கள் முதல் வெள்ளி வரை நடுப்பக்கங்களின் ஒரு பக்கம் திருவிழாவை உங்களோடு கொண்டாடும்!
பொதுத் தேர்தலைப் பற்றி நம் நாட்டு மக்களிடையே பெரிய அளவில் ஆர்வம் காணப்படுகிறது. வரலாறு அறிந்திராத அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நடைமுறையின் மீது நீங்கள் ஒவ்வொருவரும் ஆர்வம் செலுத்த வேண்டியது முறையே. இந்தியக் குடியரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தேர்தலின் மீது இந்தியக் குடியரசின் குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் ஆர்வம் காட்டுவது மிகவும் முக்கியமானது. தேசிய விவகாரங்களிலும் அரசாங்கங்களை உருவாக்கக்கூடிய தேர்தல்களிலும் செயல்ரீதியிலும் அறிவுபூர்வமாகவும் மக்கள் அளிக்கும் பங்களிப்பைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது ஜனநாயகம்.
எப்படி நடக்கப்போகிறது இந்தத் தேர்தல்?
பொதுத்தேர்தல் எந்த அளவுக்கு நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்பதைப் பற்றி முதலில் பார்ப்போம். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3,293 தொகுதிகள் இருக்கின்றன. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் சேர்ந்ததுதான் மேற்கண்ட 3,293 தொகுதிகளும். ஒட்டுமொத்தமாக இவை எல்லாவற்றையும் சேர்த்து4,412 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.
பொதுத்தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17,66,00,000. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 2,24,000. ஒவ்வொரு வாக்குச்சாவடியும் ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, ஐந்து கிளர்க்குகள், நான்கு போலீஸ்காரர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். இந்தியா முழுதும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கப்போவதில்லை என்பதால், இந்த அலுவலர்களில் கணிசமான பங்கினர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டியிருக்கும். தேர்தலுக்கான சிறப்பு அலுவலர்களின் விவரம் இது: வாக்குச்சாவடி அதிகாரிகள் 56,000; கிளர்க்குகள் 2,80,000; காவல் துறையினர் 2,24,000.
இந்த எண்ணிக்கையுடன் பெரும் அளவிலான அரசு ஊழியர்களையும் தன்னார்வலர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையில், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இந்தத் தேர்தல்களுக்காக முடுக்கிவிடப்படும். நாடாளுமன்றத்துக்காகவும் மாநில அளவிலும் நடைபெறும் இந்தத் தேர்தல்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆகவிருக்கும் செலவு தோராயமாக ரூ. 10,00,00,000.
அரசு ஊழியர்களை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்; கூடுதலாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு தேர்தல் முகவரும் பிற முகவர்களும் உதவியாளர்களும் இருப்பார்கள். இப்படியாக, இந்தத் தேர்தல்களுக்காக ஈடுபடுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். உண்மையில், இந்த முழு அமைப்பும் மாபெரும் அளவில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது; இது நம் எல்லோருக்குமான பரீட்சையும்கூட. வாக்குப்பதிவு என்கிற காரியத்துக்குச் செய்யப்பட்ட மாபெரும் முஸ்தீபுகளுக்கு முன்னதாக நம்பவே முடியாத அளவிலான மனித உழைப்புச் செலுத்தப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் முதலில், வாக்காளர் பட்டியல் தயார்செய்திருக்க வேண்டும். இந்தப் பட்டியல்களுக்காக எவ்வளவு காகிதம் தேவைப்பட்டிருக்கும் என்பதையும் எவ்வளவு அச்சாக்கம் நடந்திருக்கும் என்பதையும் நீங்கள் கற்பனை செய்துபாருங்களேன்!
நாமே வகுத்துக்கொள்ளும் விதிகள்
துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய வாக்காளர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவற்றவர்கள். எனவே, அவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேறுவேறு நிறத்திலான பெட்டிகளையும் கூடவே சின்னங்களையும் ஒதுக்கியிருக்கிறோம். இந்தப் பணிக்காக, பெரும் அளவிலான அலுவலர்களை ஒன்றுசேர்த்து அவர்களை மத்தியத் தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால், மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் எவ்வளவு பெரியஅரசு அமைப்புகளாக இருந்தாலும் இந்தத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்கமுடியாது. எனவே, வாக்களிப்பதற்கு அடிப்படையான அனைத்து நடைமுறைகளையும் புரிந்து கொள்வதும் தங்களுடைய அறிவுபூர்வமான ஒத்துழைப்பைத் தருவதும் நம் மக்கள் அனைவரின் மிக முக்கியமான கடமையாகும்.
அமைப்புரீதியான கட்சிகள் நிறைய இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அதேபோல், கணிசமான அளவுக்குச் சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பார்கள். இந்தத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் நியாயமான, சரிசமமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆளுங்கட்சிக்குச் சலுகை இல்லை
ஆளுங்கட்சி என்பதாலேயே அந்தக் கட்சிக்குத் தேர்தல்களின்போது தனிச் சலுகை என்று எதுவும் கிடையாது. அரசு அதிகாரிகள் பாரபட்சமின்றிப் பணியாற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் முறையற்றுச் செயல்படும் பட்சத்தில் அவர்களைத் தண்டிப்பதற்கென்று சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையமும் இதுபோன்ற எச்சரிக்கைகளைப் பல சந்தர்ப்பங்களில் விடுத்திருக்கிறது.
வேட்பாளர்களும் அவர்களுடைய முகவர்களும் தங்கள் கடமைகளையும் கடப்பாடுகளையும் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் குறித்த சிக்கலான சட்டங்களையும் விதிமுறைகளையும் கட்டாயம் அவர்கள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.
அமைச்சர்கள் ஆற்ற வேண்டிய கடுமையான பணி ஒன்று அவர்கள் முன்னே இருக்கிறது; அவர்களில் பெரும்பாலானோரும் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்கள். தேர்தலின்போது சுயலாபங்களுக்காகத் தங்கள் பதவியை எந்த வகையிலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை, தேர்தல் சம்பந்தமான காரியங்கள் அல்லது சொந்தக் காரியங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் தங்களுடைய பதவிக்குரிய பணிகளை விலக்கியே வைக்க முயல வேண்டும். இது தொடர்பாக, விரிவான நெறிமுறைகள் எல்லோருக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.
எந்தக் கட்சியும் தங்கள் சொந்தக் காரியங்களுக்காகத் தேசியக் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். தேசியக் கொடியை அதிகாரபூர்வமாக எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. தேர்தல் தொடர்பான எந்த விஷயங்களிலும் தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது.
முக்கியமான விஷயங்கள் குறித்த வாக்காளர்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதும், தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்காளர்களுக்கு உதவுவதும்தான் ஜனநாயகபூர்வமான இந்தத் தேர்தல்களின் ஒட்டுமொத்த நோக்கம். கட்சிகளெல்லாம் தங்கள் செயல்திட்டங்களை மக்களின் முன்னால் வைக்கின்றன; தங்கள் செயல்திட்டங்களின் மேன்மை குறித்தும் பிறருடைய செயல்திட்டங்களின் குறைகள் குறித்தும் தீவிரமான பிரச்சாரங்களை கட்சிகள் மேற்கொள்கின்றன.
இதுபோன்ற மாறுபட்ட அணுகுமுறைகள் வாக்காளர்களுக்கு அறிவைப் புகட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் சரியான விதத்தில் வாக்களிப்பதற்கு உதவுபவையாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்துக்கு முன்மாதிரி
ஏதோ சில காரணங்களால், தேர்தல்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும் சில சமயங்களில் உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்துகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த உணர்ச்சி வேகம் முறையற்ற நடத்தைக்கும் ஜனநாயகத்தின் தரம் குறைவதற்கும் காரணமாகிவிடுகிறது. இப்படியெல்லாம் நடந்துவிடாமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனவே, நாம் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடிப்பது என்பதுதான் நமக்கு மிகவும் முக்கியம் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எழுத்து மற்றும் பேச்சு வடிவிலான நமது பிரச்சாரங்கள் தனிப்பட்ட நபர்களை மையம்கொண்டிராமல் கொள்கைகள், செயல் திட்டங்கள் போன்றவை பற்றியவையாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இவையெல்லாம் தனிநபர் தாக்குதலாகவோ அவதூறாகவோ மாறிவிடக் கூடாது. நாம் இப்போது ஏற்படுத்தப்போகும் தர அளவானது, எதிர்காலத் தேர்தல்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
ஜனநாயகத்தின் சாரம்
இந்தத் தேர்தல்கள் குறித்து நான் இதுவரை சொன்னதெல்லாம் சற்று எளிமையான தகவல்களே; இவற்றில் மேலதிக விவரங்கள் இருக்காது. உங்களைப் போலவே நானும் இந்திய மக்களின் இந்த மகத்தான முயற்சியின் பெரும் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்வதற்கு முயல வேண்டும். இந்தியாவில், கோடிக் கணக்கான மக்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கிறார்கள்.
இந்திய மக்கள், தங்கள் தேர்வு என்ன என்பதை வெளிப்படுத்தும் வாக்குச்சீட்டுகளை ஆயிரமாயிரம் வாக்குப் பெட்டிகளில் போடவிருக்கிறார்கள். இதை, அமைதியான முறையில் செய்வார்கள்/செய்ய வேண்டும். இந்த வாக்குச்சீட்டுகளின் மூலம் நாடாளுமன்றம், சட்டசபைகள் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் நமக்குக் கிடைப்பார்கள்; தேர்தல் முடிவை நாம் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இதுதான் ஜனநாயகத்தின் சாரம். நமது லட்சியம் வெற்றிபெற வேண்டும் என்றுதானே நாமெல்லாம் விரும்புவோம். நாம் பாடுபடுவதும் அதற்காகத்தான். ஒரு ஜனநாயகத்தில், வெற்றி பெறுவது எப்படி என்பதையும், அதேபோல் மாண்பை இழக்காமல் தோற்பது எப்படி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர்கள் அந்த வெற்றியைத் தலைக்கு ஏற்றிகொள்ளக் கூடாது, தோற்பவர்கள் அதனால் துவண்டுபோய்விடவும் கூடாது.
இறுதி முடிவு என்ன என்பதைவிட வெற்றி, தோல்வி ஆகிய இரண்டின்போதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைதான் மிகவும் முக்கியமானது. தவறான முறையில் பெறப்படும் வெற்றியால், உண்மையில் வெற்றி என்பதன் மதிப்பே போய்விடுகிறது.
இலக்குகளையும் அவற்றுக்கான வழிமுறைகளையும் பற்றி ஏராளமான வாதங்கள் இந்தியாவில் இருக்கின்றன. தவறான வழிமுறைகள் சரியான இலக்குகளை நியாயப்படுத்திவிடுமா? நம்மைப் பொறுத்தவரை, இந்தியாவில், தவறான வழிமுறைகளைப் பயன்படுத்தி அடையக்கூடிய எதுவும் சரியானதாக இருக்காது என்பதை நாம் வெகுகாலத்துக்கு முன்னரே முடிவுசெய்திருக்கிறோம். இதே கொள்கையை நாம் தேர்தல்களுக்கும் பொருத்திப் பார்த்தோமானால், உயர்ந்த லட்சியங்களை உடைய ஒருவர் முறைகேடான வழிகளில் வெற்றி பெறுவதை விட, தவறான கொள்கையை உடைய ஒருவர் வெற்றிபெறுவது மேல் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
தவறான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றால், அந்தக் குறிக்கோள்களின் நியாயத்தன்மை அர்த்தமற்றதாகிவிடும். இது மிகவும் முக்கியம் என்பதாலும், தேர்தலின் போது எல்லாவிதமான ஒழுக்கங்களையும் தூக்கியெறிவது என்ற ஒரு போக்கு இருப்பதாலும்தான் இதை நான் வலியுறுத்திச் சொல்கிறேன். ஒவ்வொரு வேட்பாளரும், அவருடைய ஆதரவாளர்களும் இந்தியாவின் பெருமை அவர்கள் கையிலும் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்வார்கள் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன்.
நான் அடிக்கடி சொல்லிவரும் ஒரு விஷயத்தைக் குறித்து மேலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நம் நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும், பொருளாதார ரீதியிலும் கல்விரீதியிலும் பின்தங்கி, நாட்டு மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக இருப்பவர்களுக்கும் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நமது உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறோம். நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைவில்கொள்வது அதைவிடவும் முக்கியம்.
பொதுதேர்தல் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வை நாம் எல்லோரும் நல்ல மனதோடும் உத்வேகத்தோடும் எதிர் கொள்வோம்; வெறுப்புணர்வைத் தவிர்ப்போம். இப்படியாக, மகத்தான இந்தக் குடியரசின் ஜனநாயகக் கட்டுமானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நாமெல்லாம் சேர்ந்து அமைப்போம்.
தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago