எதற்கும் லாயக்கு இல்லாதவர்கள் சேரும் இடம் கலைக்கல்லூரி என்று ஆக்கிவிட்டோம் தமிழ்நாட்டில். நல்ல மதிப்பெண் வாங்காதவர்கள், நன்கொடை அளிக்க முடியாதவர்கள், ஏதோ ஒன்று படிக்கணுமே என்று படிப்பவர்கள், கொஞ்சம் தாறுமாறான பின்னணி கொண்டவர்கள், ரொம்ப நாளாய் படிப்பவர்கள் இவர்களுக்குத் தான் கலைக்கல்லூரிகள் என்பதுதான் இன்று பொது அபிப்பிராயம்.
மாணவர் தேர்தல் என்று அடிதடி போடுவார்கள், பஸ் டே என்று அராஜகம் செய்வார்கள், ராக்கிங் என்று பெண்களை வம்புக்கு இழுப்பார்கள், அவர்கள் போகும் நேரத்தில் பஸ்ஸில் போவதே தொந்தரவு என்பவை அவர்கள் மீது பொது மக்கள் படிக்கும் குற்றப்பத்திரிகை.இவற்றை மேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் கூறுவது நியாயமாகக் கூடபடலாம்.
ஆனால் சற்றுப் பின்னோக்கி ஆராய்ந்தால் யார் குற்றவாளிகள் என்று புரியும். அரசாங்கம் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாய், மக்கள் நலப்பணியாய், வருங்கால நாட்டு வளர்ச்சிக்கு மூலதனமாய் எண்ணி கல்லூரிகளைத் தொடங்கியது. கொடைத்தன்மை கொண்ட சில செல்வந்தர்களும் இந்த பணியில் ஈடுபட்டு கல்வி நிலையங்களை அமைத்தனர்.
லாபகரமான தொழில்
மருத்துவம், சட்டம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு, குறைந்த கட்டணத்தில் மக்களுக்கே வழங்கப்பட்டன. உலகமயமாக்கம் கல்வியை முழு வியாபாரமாக மாற்றியது. தொழிற்சாலைகள் பெருகும்; அதனால் அதில் வேலை செய்யத் தகுந்த பொறியாளர்களை உற்பத்தி செய்வதை நல்ல சந்தை வாய்ப்பாகப் பார்த்தன கல்லூரிகள்.
மளமளவென்று அரசியல்வாதிகள் எல்லாரும் கட்சி பேதமின்றி கல்வித்தந்தைகள் ஆனது இப்படித்தான். எந்த தொழில் செய்தாலும் கூடவே சில கல்லூரிகளைத் தொடங்குவது லாபகரமான தொழிலாக பெருகியது. பயிர் செய்யும் நிலம் ரியல் எஸ்டேட் ஆகி கல்லூரிகளாகவும் பல்கலைக் கழகங்களாகவும் உருவெடுத்தன.
விளம்பரங்களால் ஆன கல்வி
வெளி மாநிலத்து புரோக்கர்கள் துணையுடன் அமோகமாக நடக்க ஆரம்பித்தது வியாபாரம். கலைக்கல்லூரிகளைவிட, பாலிடெக்னிக்குகளை விட, ஐ.டி.ஐக்களை விட பொறியியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் முளைக்கக் காரணம் இதுதான்.வெளிநாட்டு கம்பெனிகள் வருகையைப் பார்த்து விட்டு தங்கள் பிள்ளைகளை என்ஜினீயர் ஆக்கத் துணிந்து கார்ப்பரேட் கனவுடன் காட்டை விற்று கேப்பிடேஷன் கொடுத்தனர் தமிழர்கள்.
அரண்மணைபோல கட்டிடங்கள், வரிசையாகப் பேருந்துகள், கணினி வசதிகள், ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சி அறிவிப்புகள், சினிமா/ டி.வி நட்சத்திரங்களைக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் என்று கார்ப்பரேட் கம்பனிகளை மிஞ்சும் அளவிற்கு படம் காட்ட, மக்கள் மனதில், படித்தால் இங்குதான் படிக்கணும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.சேர்ந்தவர்களில் 30% டிகிரி முடிக்காததும், தேர்ச்சி பெற்றவர்களில் 70%க்கு மேல் கேம்பஸ் வாய்ப்பு கிடைக்காமல் சும்மா இருப்பதும் தனிக்கதை. அது இங்கு வேண்டாம்.
ஆனால் இந்த மாற்றங்களில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவை கலை அறிவியல் கல்லூரிகள். எளியோருக்கும், அரசு உதவியுடன் படிப்போருக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், நலிவுற்ற வர்க்கத்தின் பெண்களுக்கும் இவை என்பது எழுதப்படாத விதியானது.
பி.ஏ. என்றால் கேவலமா?
கலைக் கல்லூரிகளில் படிப்ப வர்கள் மேல் ஒரு கீழான மனோபாவத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த ஆரம்பித்தது சமூகம். “இது புரபஷனல் காலேஜ்; ஆர்ட்ஸ் காலேஜ் இல்லை இஷ்டத்திற்கு வந்து போக!” “ஹிஸ்டரி, எகனாமிக்ஸ் எல்லாம் படிச்சு என்ன சார் பயன்?” “இதுக்கு கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சுட்டு ஏதாவது வேலை பாக்கலாம்!” “ஏதாவது பிரச்சினைன்னா முதல்ல ரோடுல வந்து உக்காந்திருவாங்க; வேலையத்த பசங்க!” இப்படி கவனமும் இன்றி வாய்ப்பும் குறைந்து கேட்பாரின்றி கிடக்கின்றன கலைக்கல்லூரிகள்.
இன்று பி.ஏ என்றால் அது மகா கேவலம். அதனால் கலைக்கல்லூரிகள் கூட பி.காம், பி.எஸ்.ஸி, பி.பி.ஏ என்று தான் போர்டு போட்டு கூட்டம் சேர்க்க ஆரம்பித்தன. தனியார் கலைக்கல்லூரிகள் கூட வெறும் அறிவியல் கல்லூரிகளாக மாறி வருகின்றன. சமூகவியல், சரித்திரம், அரசியல், இலக்கியம், தத்துவம் போன்ற பாடங்கள் முழுவதும் நீக்கப்பட்டு விட்டன. “டெக்னாலஜி என்கிற வார்த்தை இருக்கணும் சார். பி.எஸ்.ஸி கூட கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி இப்படி இருந்தாதான் அட்மிஷன் ஆகுது சார்” என்றார் ஒரு கல்லூரி நண்பர்.
ஆனால் வட இந்தியாவில்- குறிப்பாக தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வெளிநாட்டு மாணவர்களும் வந்து நம் கலைக்கல்லூரிகளில் படிக்கிறார்கள். ஐரோப்பாவில் இன்னமும் கலைகளுக்கும் மானிடவியலுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். என்னை வளர்த்து ஆளாக்கியது நான் படித்த பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி என்றால் அது மிகையில்லை. பாடத்துடன் வாழ்க்கையை படிக்க அவகாசமும் சூழலும் இடமளித்தன.பிரஞ்சு எடுத்தும் தமிழ் வகுப்பில் உட்காரும் சுதந்திரம் இருந்தது.
கல்விப் புறக்கணிப்பு
முதல் மக்கள் ஒருங்கிணைப்பு செயலாக மாஸ் கட் அடித்தபோதும் ஆசிரியர்கள் கைவிடவில்லை. ஈழப் பிரச்சினைக்கு காந்திபுரத்தில் பஸ்களை முடக்கியபோது புரிந்து கொள்ளப்பட்டோம். ஹாஸ்டல் டே விழவில் சகலகலா வல்லவன் பாடலுக்கு மூன்றாம் முறை ‘ஒன்ஸ் மோர்’ கேட்டதற்கும் எந்த ஒழுங்கு மீறல் பிரச்சினையும் வரவில்லை.
சமூகக் கவிதையும் காதல் கதையையும் முயன்று பார்க்க கல்லூரி இதழ் இடம் கொடுத்தது. என்.சி.சி. விமானப் பிரிவில் சேர முடிந்தது. புதிதாய் துவங்கிய பல்கலைக்கழக வளாகத்தில் தென்னங்கன்றுகள் நட முடிந்தது. காதலியுடன் தென்னைமர நிழலில் கவிதை வாசிக்க முடிந்தது. வங்கித் தேர்விற்கு கண்காணிப்பாளராய் ஆசிரியர்களுடன் செல்ல முடிந்தது. ‘விக்ரம்- பாகம் 2” என்று Sequel நாடகம் போட்டு மேடையில் மொபட் ஓட்டி ஓரிரவில் நட்சத்திர அந்தஸ்தை பெற முடிந்தது.
சுயமாய் யோசிக்கவும், தவறுகளையும் அசட்டுத்தனங்களையும் விரைவில் கற்று வெளியேறவும், வாழ்க்கையை முழுவதும் ருசிக்கவும் அந்த கலைக்கல்லூரி சூழல் இலகுவாக இருந்தது.
சோதனை எலிகள்
கையில் பைசா இல்லாமல், வருங்காலம் பற்றி மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது. இன்று வேலையும் சம்பாத்தியமும் தான் கல்வியை நிச்சயிக்கின்றன என்ற சூழ்நிலையில் மாணவர்கள் சோதனை எலிகள்போல நடத்தப் படுவதில் எந்த வியப்பும் இல்லை. அங்கு அத்துமீறல்கள் இல்லையா என்று கேட்கலாம். நாவரசு ராகிங் செய்து கொல்லப்பட்டது கலைக்கல்லூரியிலா நடந்தது? மருத்துவக் கல்லூரியில் தானே! தற்கொலைகள் கலைக்கல்லூரியிலா நடக்கின்றன? பொறியியல் கல்லூரிகளில் தானே?
அடைபட்ட கோழிகளாய் மாணவர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு ஆட்டமும் பாட்டமும் மிச்சமுள்ள கலைக்கல்லூரி மாணவர்களைப் பார்த்தால் நாராசமாகத் தோன்றுவதில் வியப்பில்லையே.என்னைக் கேட்டால் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். சிவில் சர்வீஸ், அரசாங்கத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், கம்ப்யூட்டர் படிப்புகள், அயல் நாட்டு மொழிகள் என நிறைய விஷயங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிதானமாகக் கற்கலாம்.
மேற்படிப்பு, ஆராய்ச்சி, ஆசிரியப்பணி, வெளிநாட்டு வாய்ப்பு என்று செல்பவர் இங்கு அதிகம்.பொறியியல் கல்லூரி மாணவர்களின் தரம் குறைந்ததால் பல ஐ.டி. நிறுவனங்கள் தற்போது ஆரம்ப கட்ட வேலைகளுக்கு கலைக்கல்லூரிகளைத் தேடி வருகின்றன. தமிழ அரசு கலைக்கல்லூரிகள் துவங்கும் இந்த பொன்னான தருணத்தில் தனியார் நிறுவனங்களும் இந்த கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு திறன் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். பின்னர் தகுதிக்கேற்ப பணி வாய்ப்புகள் கொடுக்கலாம்.
மற்ற தனியார் கல்லூரிகளில் வெளி மாநிலத்தினர் தமிழர்களுக்கு நிகராக படிக்கையில், கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மக்கள் தான் பெரும்பான்மை. கலைக்கல்லூரிகளை மீட்டெடுப் போம். தமிழர்களைக் காப்போம்!
gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago