அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன் - நம்மாழ்வார்

By சமஸ்

வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக் கணக்கான விவசாயிகளைத் திசைதிருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தேபோன சிறுதானியங்கள் இன்று பேரங்காடிகளில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் தொகுப்பு இது.

இயற்கை வேளாண்மையை நோக்கி எப்போது திரும்பினீர்கள்? நவீன வேளாண் அறிவியலைப் பயின்ற உங்களை எது அந்த முறையையே வெறுக்கச் செய்தது?

அடிப்படையில விவசாயக் குடும்பத்துல பொறந்தவன் நான். அப்பா எங்க எல்லாரையும் படிக்கவெச்சார்னு சொன்னாலும், வயக்காட்டுக்கும் நாங்க போகணும். அதனால, சின்ன வயசுலேயே ஏர் புடிச்சுட்டோம். முழுக்கக் கிராமத்துச் சூழல்லயேதான் வளர்ந்தோம்கிறதால ஒரு வேளாண் குடும்பத்தோட பிரச்சினை, கிராமங்களோட பலம், பலவீனம் எல்லாம் புரியும். வேளாண் விஞ்ஞானம் படிக்கிற காலத்துல நாம ஏதோ பெரிய வேலை பண்ணப்போறோம்கிற நெனைப்பு இருந்துச்சு. வேலைக்குனு போய் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல, அந்த ‘நவீன விஞ்ஞானக் கூட்ட’த்துல ஒருத்தனா - துணை விஞ்ஞானியா - சேர்ந்ததுக்கு அப்புறம்தான் ஆராய்ச்சிங்குற பேர்ல நடக்குற அயோக்கியத்தனங்கள் தெரியவர ஆரம்பிச்சுச்சு. அதற்கான வேரைத் தேடினப்போ அது டெல்லி வழியா பரவி அமெரிக்கால போய் முடிஞ்சுச்சு.

பாரம்பரிய அறிவை மக்கள்கிட்டே இருந்து சிதைக்கிறதும் ஏகாதிபத்தியம் சொல்றதை அப்படியே அறிவா ஏத்துக்க வெச்சு வேளாண்மையை உழவர்கள்கிட்டே இருந்து முதலாளிகள் கைக்குக் கொண்டுபோறதுதான் நவீன வேளாண்மையோட அடிப்படைங்கிறது படிப்படியா புரிஞ்சப்போ நான் படிச்ச படிப்பையும் நவீன வேளாண்மையையும் வெறுக்க ஆரம்பிச்சேன். பின்னால, ‘பச்சைப் புரட்சி’யோட கொடூரமான பாதிப்புகள், வேலையை விட்டதுக்கு அப்புறம் நேரடியா உழவர்கள்கிட்டே இருந்து கிடைச்ச அனுபவங்கள், நான் படிச்ச சில முக்கியமான புஸ்தகங்கள், சந்திச்ச சில நண்பர்கள் எல்லாமுமா சேர்ந்து இயற்கை வேளாண்மையை நோக்கி என்னைத் திருப்புனுச்சு.

பசுமைப் புரட்சியை நிராகரிக்கிறீர்கள். ஆனால், அன்றைய உணவுப் பற்றாக்குறை அதற்கான தேவையை உருவாக்கியிருந்தது அல்லவா? பாரம்பரிய வேளாண் முறையால் அந்தத் தேவையை நிறைவேற்றியிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

தேவையை நான் மறுக்கலை. ஆனா, பல்லாயிர வருஷப் பாரம்பரியம் கொண்ட இந்திய வேளாண்மை முறையால அதைப் பூர்த்திசெஞ்சிருக்க முடியும்னு உறுதியா நம்புறேன். மாறா, நவீன வேளாண் முறையைத் தேர்ந்தெடுத்ததால என்னாச்சு? சாகுபடி நிலங்கள்ல கணிசமான பகுதி அதீதமான பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாட்டால உவர் நிலமாயிடுச்சு; உணவு நஞ்சாயிடுச்சு; ஒட்டுநெல் ரகச் சாகுபடிக்கு மாறினதால, பல்லாயிரக் கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிஞ்சுபோச்சு; நிலத்தடிநீர் ஆதாரம் அருகிப்போச்சு; உழவன்னா அவன் கடனாளின்னு ஆகிப்போச்சு. நாட்டுல 30 கோடிப் பேர் ஒவ்வொரு நாளும் ஒருவேளை பட்டினியோட படுக்கப்போறாங்க; நாலுல மூணு புள்ளை ஊட்டச்சத்து இல்லாம ரத்தசோகையால பாதிக்கப்பட்டிருக்கு; அரை மணி நேரத்துக்கு ஒரு உழவன் கடன் தொல்லை தாங்காமத் தற்கொலை செஞ்சுக்குறான். ஆனாலும், நாம உணவுல தன்னிறைவு அடைஞ்சிருக்கோம்னு சொல்லிப் பீத்திக்கிறோம். வெட்கக்கேடு இல்லையா இது?

இந்தியா 1750-க்கும் 1950-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், பல்வேறு பஞ்சங்களில் கோடிக்கும் மேற்பட்டவர்களை இழந்திருக்கிறது; அன்றெல்லாம் இயற்கை வேளாண்மையைத்தானே நம் விவசாயிகள் செய்தார்கள்; அதன் போதாமைதானே இந்தப் பஞ்சச் சாவுகள் என்று கேட்கிறார்கள் நவீன விவசாய ஆதரவாளர்கள்...

சரித்திரத்தை முழுசாப் படிச்சா, பதில் கிடைக்கும். வெறும் வறட்சி மட்டும் அன்னைக்கு நம்ம உழவர்களுக்கு எதிரா நிற்கலை. அரசாங்கமும் நின்னுச்சு. வெள்ளைக்காரங்களோட கடுமையான வரி விதிப்பு அவங்களை வாட்டி வதைச்சுது. வங்கத்துப் பஞ்சத்தையே எடுத்துக்குவோம். 1770-கள்ல கவர்னர் ஜெனரலா இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸோட சட்டம் என்ன சொன்னுச்சு தெரியுமா? விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும்போதுதான் ஆயிரக் கணக்கான டன் உணவு தானியங்களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பிவெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா? ‘இந்திய உழவர்களுக்கு கத்துக்கொடுக்க எதுவுமில்லை; நான்தான் அவங்ககிட்டேயிருந்து கத்துக்கிட்டேன்’னு எழுதினார். பின்னாடி இங்கே வந்த ஆல்பர்ட் ஓவார்டு - இந்திய உழவாண்மை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினவர் - இன்னும் ஒருபடி மேலே போய் ‘இந்திய உழவர்கள் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தார்கள்’னு சொன்னார்.

ஆக, மக்களைக் கொன்னது பஞ்சமோ, பாரம்பரிய இயற்கை வேளாண்மையோ இல்லை; அரசாங்கத்தோட தவறான கொள்கைகள். இன்னைக்கும் எங்கெல்லாம் பசி - பஞ்சச் சாவுகள் நடக்குதோ அதுக்குக் காரணமா அதுதான் இருக்கு.

இன்றைக்கு இருக்கும் சூழலில் - கிராமங்களிலுள்ள ஆள் பற்றாக்குறை, சாகுபடிப் பரப்பு சரிவு போன்ற சிக்கல்களிடையே - ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவது சாத்தியம்தானா?

நீங்க சிக்கலா சொல்ற சூழலையே எடுத்துக்குவோம். யார் காரணம்? வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக்கடையில ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்கவரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா? நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க,

ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு? அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம்? அதை சரிசெஞ்சா, பழைய சூழல் திரும்பும்தானே?

நகரங்களில் குடியேறிய மக்களை விவசாயத்தை நோக்கித் திருப்புவது, இயந்திரங்களை ஒதுக்கிவிட்டுக் கால்நடைகள் வளர்ப்பது, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவது… காலத்தைப் பின்னோக்கி இழுக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

ஐயா… அழிவைதான் பின்னோக்கி இழுக்கச் சொல்றேன். நம்ம மனசுவெச்சா எல்லாமே சாத்தியம்தான். காட்டுல இருக்குற பல்லாயிரம் மரங்களையும் பல லட்சம் உயிரினங்களையும் இயற்கைதானே வளர்க்குது?

எனில், அரசு என்ன மாதிரியான தொழில் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

காந்தி அன்னைக்குச் சொன்னதுதான். ‘நமக்குத் தேவை, அதிக அளவிலான பொருட்களை உற்பத்தி செய்யிற முறை (மாஸ் ப்ரொடக்‌ஷன்) இல்லை; அதிகம் பேர் பங்கேற்கிற வகையிலான பொருள் உற்பத்திதான் (ப்ரொடக்‌ஷன் பை மாஸஸ்)’. அது இயற்கையோடு ஒட்டினதா இருக்கணும். அதுக்கு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்திய நாடுகளோட நிர்பந்தத்துக்காகவும் யோசிக்காம, இந்த நாட்டோட விவசாயிகளை மனசுல வெச்சு திட்டங்களை யோசிக்கணும்.

உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது…

கேள்வியோட நோக்கத்தை என்னால முழுமையா விளங்கிக்க முடியலை.

மக்களிடம் எதிர்ப்புணர்வைத் தணித்து, அவர்களுடைய அரசியலை மடைமாற்றும் வேலையில் தொண்டு நிறுவனங்கள்தானே இன்று முன்னணியில் நிற்கின்றன?

நான் அப்படிப் பார்க்கலை. சாதாரண மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒண்ணுசேர்க்குற களமாத்தான் நான் தொண்டு நிறுவனங்களைப் பார்க்குறேன்.

ஏன் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களை ஒருங்கிணைக்க நினைக்கிறீர்கள்? அதிகாரம் முழுக்க அரசியலில் இருக்கும்போது அரசியலுக்கு வெளியே எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நான் அரசியலுக்கு எதிரானவன் இல்லை. ஆனா, ஒரு அரசியல் இயக்கம்கிறது ஒத்தையடிப் பாதை இல்லை. பலதரப்பட்ட ஆட்களுக்கும் நோக்கங்களுக்கும் இடம்கொடுக்குற இடமாத்தான் ஓர் அரசியல் இயக்கம் இருக்க முடியும். அப்படிப் பல நோக்கங்களோடு இயங்குற இயக்கத்துல, இன்னைக்கு நான் எடுத்துக்கிட்டு இருக்குற நோக்கம் சிதைஞ்சுடும். அதை நான் விரும்பலை. அதனாலதான் அமைப்புகளை விவசாய இயக்கங்களாகவே கட்டுறோம். அப்புறம், இது வெறுமனே கூட்டம் போட்டுட்டுக் கலையுற வேலை இல்லை; நீங்க என்கூடக் கைகோத்துக்கிட்டீங்கன்னா, உங்க வாழ்க்கைப் பாதையையே மாத்திக்கணும். இயற்கை வேளாண்மைங்கிறது வெறும் தொழில்முறை இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை இல்லையா? நீங்க இயற்கையோட இணைஞ்ச ஒரு வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்கன்னா, சின்ன செடிக்கும்கூட நல்லதையே நினைக்கிறவர் ஆயிடுறீங்க இல்லையா; அதுலேயே எல்லா சமூக மாற்றங்களும் ஆரம்பமாயிடும்.

தனிப்பட்ட வாழ்வுக்கு வருவோம். இந்த நீண்ட போராட்டத்தில், நீங்கள் எதிர்கொண்ட பெரிய சவால் எது?

இயற்கை வேளாண்மைன்னா ரசாயன உரங்களுக்குப் பதிலா வெறும் சாணத்தைப் போடுறதுன்னு மக்கள்கிட்டே இருக்குற மலிவான நினைப்பு; பாரம்பரிய வேளாண்மை மேல இருக்குற தாழ்வுமனப்பான்மை; அவநம்பிக்கை.

உங்களுடைய கொஞ்ச நேரப் பேச்சில்கூட, நிறைய மேற்கோள்கள் வெளிப்படுகின்றன. வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்?

நான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுத்துச்சு. வேலை

இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம் இல்லாம பார்க்க முடியாது.

ஒரேயொரு புத்தகத்தை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை வைத்துக்கொள்வீர்கள்?

என் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’. ஆனா, ஒரேயொரு புஸ்தகம்தான் வைச்சுக்கணும்னு சொன்னீங்கன்னா, மகாத்மா காந்தியோட ‘சத்திய சோதனை’யைத்தான் வெச்சுக்குவேன். ஏன்னா, எல்லாக் காலத்துக்குமான புஸ்தகம் அது.

வெகுவாகப் பாதித்த மூன்று ஆளுமைகள்?

சின்ன வயசுல பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும் மகாத்மா காந்தி.

வாழ்க்கையைத் தொடங்கின சில மாதங்களிலேயே வேலையை விடத் தீர்மானித்ததில் தொடங்கி, வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்கும் போராட்டத்துக்குமே அர்ப்பணித்திருக்கிறீர்கள். வீட்டில் இதற்கெல்லாம் ஆதரவு எப்படி?

சித்தார்த்தன் நிறைவான கணவனா வாழ்ந்திருந்தா, புத்தன் கிடைச்சிருக்க மாட்டான்னு சொல்வாங்க. நான் எந்த அளவுக்கு நிறைவா நடந்துகிட்டேன்னு எனக்குத் தெரியலை; ஆனா, என் மனைவி சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,

வீடும் பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு நிர்வாகத்தை – அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் – அவங்க கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது.

ஆனால், வயோதிகத்தையோ உடல்நலனையோ பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்...

நமக்குன்னு சில காரியங்களை இயற்கை ஒதுக்கியிருக்கு. சிலர் அதைப் புரிஞ்சுக்குறோம். அதை முடிக்கத்தான் ஓடுறோம். என்னோட கவலை எல்லாம், இவ்வளோ ஓடியும் எனக்கான காரியங்களை இன்னும் முடிக்க முடியலையேன்னுதான். நாம காரியத்தைப் பத்திதான் கவலைப்படணும்; ஓட்டத்தைப் பத்தி இல்லை!

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்