மசூதிகளில் தொழுகைதான் நடக்கும். சிரியாவிலும் இராக்கிலும் துருக்கியிலும் இப்போதெல்லாம் குண்டுதான் வெடிக்கிறது. நேற்றைக்கு டெமஸ்கஸில் ஒரு மசூதி. முந்தாநேத்து இராக்கில் ஒரு மசூதி. போன திங்கள்கிழமை இராக்கிலேயே இன்னொரு மசூதி. மசூதி இல்லாவிட்டால் தூதரகங்கள். ஷாப்பிங் மால்கள். ஜனம் சேரும் இடம் எதுவானாலும் சம்மதமே. அல் ஷபாப், அல் காயிதா, ப்ரதர்ஹுட்டு, கசின் பிரதர்ஹுட்டு என்று என்னென்னமோ சொல்லி, கதறிக்கொண்டிருந்தாலும் வெடிக்கிற குண்டுகள் நிற்கிறபாடில்லை. மத்தியக் கிழக்கு செய்தி ஊடகங்கள் பலி எண்ணிக்கையைத் தவிர இன்னொன்று பேசுவதே இல்லை.
இதன் அரசியல், சமூகக் காரணங்கள் ஒரு பக்கம் சௌக்கியமான செழித்திருக்கட்டும். இப்படி வருஷம் முன்னூத்தி அறுபத்தைந்து நாளும் ஓயாது வெடித்துத் தீர்க்க இந்த பயங்கரப் பிரகஸ்பதிகளுக்கு எங்கிருந்து குண்டுகள் கிடைக்கின்றன?
சிரியா உள்பட எந்த மத்தியக் கிழக்கு தேசத்திலும் ரசாயன ஆயுதங்கள் முற்றிலுமாக இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே ஒழிக்கும் திருப்பணிக் கேந்திரத்துக்கு நோபல் பரிசைத் தூக்கிக் கொடுத்தாகிவிட்டது. எல்லாரும் க்ஷேமமாயிருக்கட்டும். ஒவ்வொரு நாளும் கொத்துக் கொத்தாக உதிரும் மனித உயிர்களைக் குறித்துச் சிந்திக்கவும் நல்லவர்களுக்குச் சற்று நேரம் வாய்த்தால் தேவலை.
முன்னொரு காலத்தில் மத்தியக் கிழக்குத் தீவிரவாத இயக்கங்களுக்கு குண்டு சப்ளை செய்யும் க்ஷேத்திரமாக இருந்தது சூடான். ஒசாமா பின் லேடன் சூடானிலிருந்து திக்விஜயம் புறப்பட்டு ஆப்கனிஸ்தானுக்கு வந்த பிற்பாடு எளிய குண்டுகளின் ஏகாதிபத்திய தேசமாக ஆப்கனிஸ்தானே அறியப்பட்டது. செசன்யப் போராட்டம் அதன் உச்சத்தில் இருந்த காலத்தில் குண்டுகள் உற்பத்தியில் அந்நாட்டுக் கைத்தொழில் வல்லுநர்கள் திறமை காட்டி சர்வதேச மார்க்கெட்டுக்கு சகட்டு மேனிக்கு சப்ளை செய்யத் தொடங்கினார்கள்.
9/11 சம்பவத்துக்குப் பிறகு காட்சிகள் இடம் மாறிப் போயின. ஆப்கனிஸ்தான் தீவிரர்களுக்குப் போதுமான பட்டாசை உள்நாட்டில் உற்பத்தி பண்ணமுடியாத நிலைமை. காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகாத சூழலில் கடனுக்கெல்லாம் குண்டு வாங்கிக் 'கடமை'யாற்றினார்கள். சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து இவர்களுக்கு வெடி பொருள்கள் சப்ளை செய்யப்பட்டன. ஒரு சௌகரியம் என்னவென்றால் இம்மாதிரியான வறுமையில் வாடும் ஆப்பிரிக்க தேசங்களில் அரசாங்கமே இன்னோரன்ன இயக்கங்களுக்கும் இயக்கங்களின் அடிப்பொடிகளுக்கும் வேண்டிய சகாயம் பண்ணிக்கொடுத்துவிடச் சித்தமாக இருப்பார்கள். எந்த வகையிலாவது வருமானம் வந்தால் சரி.
ஆனால் இதெல்லாம் முன்பு. இப்போதைக்கு மத்தியக் கிழக்கில் எந்தப் பேட்டையில், எந்த மசூதியில் வெடி வைக்கவேணுமென்றாலும் சரக்கு இராக்கிலிருந்துதான் வந்தாக வேண்டும். யுத்தம் அல்லது அழிவுக்குப் பிறகு தெற்கு இராக்கின் பல கிராமங்களில் குடிசைத் தொழில் போலவே குண்டு தயாரிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சந்து பொந்துகளில் முளைத்த திடீர் தீவிரக் குழுக்களில் ஆரம்பித்து அல் காயிதா போன்ற பெரும் இயக்கங்கள் வரை இவர்களுக்கு ஆயுள் சந்தா செலுத்தியிருக்கிறார்கள். கையெறி குண்டுகள் முதல் சைக்கிள் மற்றும் கார் வெடி குண்டுகள் வரை; டைமர் செட் பண்ணும் வசதி கொண்ட குண்டுகள் முதல், அப்படியான வசதியற்ற சாதா குண்டுகள் வரை சகலமானதும் சகாய விலைக்குக் கிடைக்கும். இந்தச் சந்தையில் ரசாயன குண்டுகளும் சாத்தியமே. தவிரவும் சாதா துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏகே ரகங்களின் எளிய ஜெராக்ஸ் பிரதிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் - எல்லாம், எல்லாமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இராக்குக்கு அடுத்தபடியாக சோமாலியாவிலிருந்தும் இந்தோனேஷியாவிலிருந்தும் வெடிபொருட்கள் தருவிக்கப்படுவதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளுடன் வருஷக்கணக்கில் மல்லுக்கட்டி மாரடிப்பதன்கூடவே, இந்த உற்பத்தி ஸ்தானங்களை ஒழித்துக்கட்டுவதில் உத்தமர்கள் சற்று கவனம் செலுத்தினால் புண்ணியமுண்டு. இந்த வாச்சுடாகுகளும் வால்கிளாக்கு டாகுகளும் பரிசு வாங்கிக்கொண்டு போகட்டும். சம்மந்தப்பட்ட தேசத்து அரசுகளாவது சற்றுத் தீவிரமாக இயங்கினால் இதைச் சாதித்துவிட முடியும்.
இல்லாவிட்டால் மத்திய கிழக்குப் பிராந்தியமே விரைவில் மாபெரும் மயானபூமியாகிவிடும். எலும்பு பொறுக்கும் பிரகஸ்பதிகள் ஏற்கெனவே ஆர்.ஏ.சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது எப்போதும் நினைவில் இருப்பது நல்லது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago