கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் வரிசையில் கார்ட்டோசாட்- 2இ செயற்கைக்கோள் கடந்த ஜூன் - 23 அன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்த வரிசையில் இது ஏழாவது. இது பூமியிலிருந்து சுமார் 500 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியைப் படம் எடுக்கும் திறன்கொண்டது. இதற்கென்று இந்த செயற்கைக்கோளில் மிக நுட்பமான கேமராக்கள் உள்ளன. இதர தொலையுணர்வுக் கருவிகளும் உண்டு. பூமியைப் படம்பிடிக்க இந்தியாவிடம் கார்ட்டோசாட், ரிசோர்ஸ்சாட், ரைசாட் என வெவ்வேறு பெயர்களில் பல செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை அனைத்தும் இதே போன்று கேமராக்களைக் கொண்டவை.
முதலாவது கார்ட்டோசாட் 2005-ல் செலுத்தப்பட்டது. எனினும், அதற்கு முன்னரே இந்தியா 1988-ல் தொடங்கி ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்களை ரஷ்ய ராக்கெட்டுகள் மூலம் செலுத்திவந்தது. முந்தைய ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்களும் சரி, இப்போதைய கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களும் சரி, பூமியைத் தெற்கு வடக்காகச் சுற்றுபவை. இவை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 90 நிமிடங்கள் ஆகும். இப்போதைய கார்ட்டோசாட் 94 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
முழுமையான நோட்டம்
பூமி, தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் கார்ட்டோசாட் செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு அடுத்த சுற்று வரும்போது இந்தியாவின் வேறு பகுதி இந்த செயற்கைக்கோளின் பார்வைக்கு வரும். மேலும் சில தடவை சுற்றி முடிக்கும்போது, மேற்காசியா இந்த செயற்கைக்கோளின் பார்வைக்கு வரும். பிறகு ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா என உலகின் எல்லா நாடுகளுமே அடுத்தடுத்து கார்ட்டோசாட் செயற்கைக்கோளின் பார்வைக்கு வரும். 126 நாட்களில் இது பூமி மொத்தத்தையும் நோட்டமிட்டுவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்ட்டோசாட் வகை செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றுவதால், இவற்றில் ஏதாவது ஒன்று எப்போதும் இந்தியாவுக்கு மேலாக இருந்தபடி படம் எடுக்கும். அவசியமானால் பக்கவாட்டில் 45 டிகிரி அளவுக்குத் திரும்பியும் படம் எடுக்கும்.
பூமியைத் தெற்கு வடக்காகச் சுற்றும் செயற்கைக்கோள்களுடன் ஒப்பிட்டால் ஜிசாட் வகை செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் பூமியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுபவை. இவை தொலைக்காட்சி ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் முதலான பணிகளுக்கானவை.
இந்தியாவுக்கு வருமானம்
பூமியைப் படம்பிடிக்கும் செயற்கைக் கோள்களை இந்தியா பெற்றுள்ளதால் ஏதேனும் ஒரு நாடு தங்கள் நாட்டைப் படம்பிடித்து அப்படங்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். உலகில் இவ்விதம் செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் முதலான நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் படங்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளன. இந்தியா எடுக்கும் இவ்விதப் படங்கள் இஸ்ரோவின் துணை அமைப்பான ஆண்டிரிக்ஸ் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது கார்ட்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் சேர்த்து 30 குட்டிச் செயற்கைக்கோள்களும் உயரே செலுத்தப்பட்டன. இப்படியான குட்டிச் செயற்கைக்கோள்களைச் செலுத்தித் தருவதற்கான பணி உத்தரவுகளையும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம்தான் பெற்றுத் தருகிறது. இதன் மூலமும் இந்தியாவுக்கு வருமானம் கிடைக்கிறது.
இப்போதைய கார்ட்டோசாட் 2இ செயற் கைக்கோள் எடுக்கும் படங்களின் தெளிவுத் திறன் 65 செ.மீ. அதாவது, 65 செ.மீ-க்கும் அதிகமான நீள அகலம் கொண்ட எந்தப் பொருளும் செயற்கைக்கோள் எடுக்கும் படத்தில் தெளிவாகத் தெரியும். அதற்குக் குறைவான எதுவும் செயற்கைக்கோள் எடுக்கும் படத்தில் தெரியாது. அடுத்த ஆண்டில் இந்தியா செலுத்தவிருக்கும் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் எடுக்கும் படங்களின் தெளிவுத்திறன் 25 செ.மீ. ஆக இருக்கும். அதாவது, சிறிய பொருளையும் வானிலிருந்து படம் எடுக்க முடியும்.
கார்ட்டோகிராஃபி என்றால், நில வரைபடங்களைத் தயாரித்தல் என்பது பொருள். அந்த வகையில் மேலும் மேலும் துல்லியமான நில வரைபடங்களைத் தயாரிக்க இந்த வகை செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. நாட்டில் சாலைகளை அமைத்தல், நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் மேம்பாட்டுக்குத் திட்டமிடல், பாலங்கள் அமைத்தல், ரயில்பாதை அமைத்தல் எனப் பல காரியங்களுக்கு நல்ல வரைபடங்கள் தேவை. துல்லியமான வரைபடங்கள் மூலம் நில ஆக்கிரமிப்பு களையும் தடுக்கலாம்.
போர்களுக்கும் உதவுபவை
இந்த வகை செயற்கைக்கோள்கள் நாட்டின் ஆக்கப் பணிகளுக்கு மட்டுமின்றி பாதுகாப்புக்கும் பங்களிப்பவை. 2016 செப்டம்பரில் இந்திய எல்லைக்கு மறுபுறம் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் நிலைகளை இந்தியப் படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன. இந்த நடவடிக்கைக்கு இந்திய செயற்கைக்கோள் எடுத்த படங்கள் பெரிதும் உதவின என்று அப்போது ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்தது.
கார்ட்டோசாட் வகை செயற்கைக் கோள்கள் நமது எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. நமது கடலாதிக்கப் பகுதியில் அந்நியக் கப்பல்கள் நடமாடினால் அவற்றை இந்த செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.
போர் என்று வந்தால் இவை மிகவும் உதவிகரமாக இருக்கும். 1982-ல் தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜெண்டினா, தன் கரைக்கு அருகே அமைந்த பாக்லாந்து தீவுகளைக் கைப்பற்ற முற்பட்டது. அந்தத் தீவுகள் பிரிட்டனுக்குச் சொந்தமானவை. எனினும், இந்தத் தீவுகள் பிரிட்டனிலிருந்து 13 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்தவை. எனவே, அவ்வளவு தொலைவிலிருந்து தனது படைகளை அனுப்பிப் போர் புரிவதில் பிரிட்டனுக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. அப்போது அமெரிக்கா தனது செயற்கைக்கோள்கள் மூலம் எடுத்த படங்களையும் சேகரித்த தகவல்களையும் ரகசியமாகப் பிரிட்டனுக்கு அளித்து உதவியதாகப் பின்னர் தெரியவந்தது.
வளைகுடா போரின்போது செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட குரூயிஸ் ஏவுகணை நீண்ட தூரம் பறந்து சென்று, பாக்தாத் நகரில் இராக் அரசின் ரகசியப் பிரிவுக் கட்டிடத்தைக் குறிபார்த்துத் தாக்கி அழித்தது. அமெரிக்காவிடம் இராக்கின் துல்லியமான நில வரைபடங்கள் இருந்ததால், இது சாத்தியமாகியது. அமெரிக்க ஏவுகணையில் பாக்தாத் நகர வரைபடம் இடம்பெற்றிருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கொசாவா போரின்போது அமெரிக்கா செலுத்திய ஒரு ஏவுகணை, குறி தவறி சீனத் தூதரகக் கட்டிடத்தின் மீது விழுந்தது. பழைய வரைபடத்தைப் பயன்படுத்தியதால் இப்படித் தவறு நேர்ந்ததாக சீனத் தூதரகத்திடம் அமெரிக்கா விளக்கம் தெரிவித்தது. சீனாவும் அந்த விளக்கத்தை ஏற்றது.
ஒருகாலத்தில் இந்தியா, அமெரிக்காவின் ஐகோனாஸ் செயற்கைக்கோள் வானிலிருந்து எடுத்த படங்களை விலை கொடுத்து வாங்கிவந்தது. இப்போது நமது செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களை நாம் பிற நாடுகளுக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறோம்!
- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், ‘பருவநிலை மாற்றம்’ உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago