இந்தியா சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் முதல் 30 லட்சம் கோடி ரூபாய்வரை மதிப்புள்ள கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, இரும்புத்தாது, செம்பு, நிலக்கரி, கால்சியம், பாஸ்பேட் மற்றும் பல கனிமங்களைப் பெறக்கூடிய இயற்கையான வளங்கள் நிரம்பியது. இந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைப்பதுடன் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த முடியும்.
அத்துடன் 10 கோடி முதல் 15 கோடிப் பேர் வரை கூடுதலாக வேலைவாய்ப்பு பெறுவர். இந்த இயற்கை வளங்களைப் பதப்படுத்தும் தொழிலில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் ஆயிரக் கணக்கான சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகளும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.)
கணிசமாக உயரும், வெளிவர்த்தகப் பற்றுவரவில் காணப்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வெகுவாகக் குறையும், இதன் பயனாக அனைவருக்கும் வருமானமும் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும்.
கனிம வளங்களை ஆய்வு செய்வதற்கும் அகழ்ந்தெடுப்பதற்கும் தொடர்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துவந்தால்தான் எதிர்காலச் சந்ததியினர் வசதியான வாழ்வுபெற உதவிகரமாக இருக்கும். கனிம அகழ்வால் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொண்டோ, உரிமைத் தொகையை (ராயல்டி) அளித்தோ இதை மேற்கொள்ளலாம். உரிமைத் தொகை என்பது, சுரங்கத்தில் உள்ள மொத்த கனிமத்தின் அளவைப் பொறுத்தும் அப்போதைய சந்தை மதிப்பையும் கணக்கில் கொண்டும் கணக்கிடப்படுவதாகும்.
இழக்கப்படும் வாய்ப்புகள்:
இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக இந்தியா பொருளாதார ரீதியாகக் கடினமான ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கனிம அகழ்வுக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்படும் தடைகளாலும், வெட்டி எடுப்பதில் ஏற்படும் தாமதங்களாலும் கனிம அகழ்வு என்பது லாபகரமான தொழில் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுவருகிறது. கணக்கு வழக்கற்ற கனிம வளங்கள் நம்மிடம் இருந்தும் அவற்றை நம்மால் முறையாக, பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
எல்லா நாடுகளுமே கனிமவளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி கனிமவளங்கள் வாய்த்துள்ள நாடுகளில் பெரும்பாலானவை அவற்றை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்திவருகின்றன. அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்துள்ளது, வறுமை ஒழிந்துள்ளது, பொருளாதாரம் நிலைபெற்றுள்ளது.
ஒரு காலத்தில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தியாவுக்கு இணையாக இருந்தன. இப்போதோ அவை முன்னேறிவிட்டன. நாம் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) குறைந்ததற்கு முக்கியக் காரணம் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் நாம் கடைப்பிடிக்கும் மெத்தனம்தான்.
இருக்கும் இயற்கை வளங்களே சரியாகப் பயன்படுத்தாத நிலையில், அதையும் சட்டபூர்வமாக வெட்டி எடுப்போருக்கும், சட்ட விரோதமாக வெட்டி எடுப்போருக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் மேலும் மோசமாக்கிவிடுகின்றன. இதன் விளைவாகவே கனிம அகழ்வுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படுகிறது. இதன் விளைவாக தொழில்துறை ஸ்தம்பிக்கிறது. மாநிலங்களின் பொருளாதாரமும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள், மக்களின் வாழ்க்கைத் தரமும் முடங்கிவிடுகிறது.
உலக அளவில் மிகவும் விரும்பப்படும் கனிமம் பாக்ஸைட்.
அது அலுமினியத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகைய பாக்ஸைட் கனிமம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் இருந்தும் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது. உலகிலேயே பாக்ஸைட் அதிகம் கிடைக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சுமார் 30,000 லட்சம் டன்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் கடந்த 35 ஆண்டுகளில் மிகப் பெரிய பாக்ஸைட் சுரங்கம் ஏதும் இந்தியாவில் திறக்கப்படவேயில்லை!
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட தங்கம், செம்பு ஆகிய கனிமங்களை அகழ்ந்தெடுக்க இன்னமும் முதலீடு செய்யப்படாமலேயே இருக்கிறது.
நம் நாட்டிலேயே முக்கியமான பல கனிமங்கள் ஏராளமாகப் புதைந்துகிடக்க, அவற்றை இறக்குமதி செய்ய கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிய அன்னியச் செலாவணிகளை நாம் வீணடிப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. எந்த கனிமத்தையும் பயன்படுத்தாமல் அப்படியே அடுத்த நூறாண்டுகளுக்குக்கூட நாம் கட்டிக்காக்கலாம். அதன் பிறகு, அவற்றின் தேவையும் பயன்பாடும் இதே அளவுக்கு இருக்க வேண்டும், அதை அகழ்ந்து சுத்தப்படுத்தவும் பயன்படுத்தவும் செலவு கட்டுப்படியாவதாக இருக்க வேண்டும்.
இப்படி கனிமங்களை வெட்டி எடுக்க விதிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடை உத்தரவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலம் குறித்துப் பார்ப்போம்.
கோவா மாநிலத்தின் பரிதாப நிலை:
இரும்புத் தாதை வெட்டி எடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்ட பொதுவான தடையால் கோவா மாநிலத்துக்கு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கோவா மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் சுரங்கத் தொழிலை நம்பித்தான் இருக்கின்றனர். இரும்புத் தாதை வெட்டி எடுக்காததால் சுமார் 20,000 லாரிகள் வேலை எதுவுமின்றி அப்படியே நிற்கின்றன. அந்த மாநிலத்தின் பொருளாதாரம் பெருத்த இழப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மதிப்பு சுமார் 25,000 கோடி ரூபாய்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. சுரங்கத் தொழிலில் நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல இழப்பு, இந்தத் துறையைச் சார்ந்த துணைத் தொழில்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்தத் துறைகளைச் சார்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலையையும் வருவாயையும் இழந்துள்ளனர்.
இரும்புத் தாதை வெட்டி எடுக்க விதிக்கப்பட்ட தடையால், கோவா மாநிலப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி இடையிலான சம நிலையே பாதிக்கப்பட்டிருப்பதை கோவா மாநில முதலமைச்சரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக அன்றாடம் 2,000 லட்சம் டன்கள் இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதில் 50% ஏற்றுமதியானது. உலகிலேயே இரும்புத் தாதை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 3-வது இடம் இந்தியாவுக்குக் கிடைத்தது. 2008-09-ம் ஆண்டு 1,170 லட்சம் டன்களாக இருந்த ஏற்றுமதி 2012-13-ல் வெறும் 180 லட்சம் டன்களாகக் குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் இது 140 முதல் 150 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடையால் ஏராளமான இழப்பைச் சந்தித்திருப்பதால் தடை நீங்கினால் மிகப் பெரும் அளவில் தாதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இத்துறைக்கு இருக்கிறது. கோவா மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக மட்டும் 600 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததில் இதன் பங்கும் கணிசமானது.
நிலைமை வெகு மோசமாக இருப்பதால், நிவாரணம் தர வேண்டும் என்று கோவா மாநில அரசு, மத்திய அரசை அணுகியிருக்கிறது. சுரங்கத் துறை அமைச்சர் தீன்ஷா படேல் 2013 டிசம்பர் 6-ம் தேதி மக்களவைக்கு அளித்த பதிலில் கோவாவின் கோரிக்கைகளை விவரித்திருந்தார்.
1. மத்திய அரசு நிதியுதவியை அதிகப்படுத்தி அளிக்க வேண்டும்.
2. கூட்டுறவு வங்கிகள் நொடித்துவிடாமலிருக்க சிறப்பு நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டும்.
3. வங்கிகளிடம் வாங்கிய கடன்களைத் திரும்ப வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும், கடன்கள் மீதான வட்டியை ரத்து செய்ய வேண்டும், கடன் செலுத்து காலத்தையும் தவணைகளையும் திருத்தியமைக்க வேண்டும் என்பவை முக்கிய கோரிக்கைகள்.
சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பதை யாரும் ஆதரிப்பதில்லை, அதே சமயம் சட்டத்துக்குட்பட்டு வெட்டியெடுக்க அனுமதிக்க வேண்டும். இயற்கை வளங்களை அடையாளம் காணவும், அகழ்ந்தெடுக்கவும் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் வறுமை ஒழியும், வேலையில்லா திண்டாட்டம் மறையும்.
சுரங்கத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்த கோவாவிலிருந்து ஒரு குழு சென்று பிரதமரைச் சந்தித்தது. “சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆழ்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆனால், வறுமைதான் மிகப் பெரிய மாசு உற்பத்தியாளர்” என்று பிரதமர் அவர்களிடம் கூறியிருக்கிறார்.
இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய வழிகாணப்பட வேண்டும், சுரங்கத் தொழிலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது பலருடைய வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.
எல்லா சுரங்கத் தொழிலும் சட்டவிரோதமானதல்ல. இந்தத் தடை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் கூறியிருக்கிறார்.
இடைவெளியை இட்டுநிரப்பல்:
இந்த நடவடிக்கைகளுக்கு நடுவே கோவாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. மாநிலத்தின் முழுப் பொருளாதார நடவடிக்கையும் நிலைகுத்தி நிற்கிறது. இரும்புத் தாதுத் தொழிலுக்கு ஏற்பட்ட தடை, மாநிலத்தின் தொழில்களுக்கும் மக்களுடைய உற்சாகத்துக்கும் பெரிய தடையாக மாறிவிட்டது.
ஆஸ்திரேலியா, பிரேசில் போல இந்தியாவும் இரும்புத் தாதுவளம் மிக்கது. ஆனால், கண்ணோட்டத்திலும் உற்பத்தி முறையிலும் காணப்படும் வேறுபாடானது அளவிட முடியாதது. ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் தங்களுடைய இரும்புத் தாது உற்பத்தியை அதிகப்படுத்தியிருக்கும் வேளையில், இந்தியாவில் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் தலா 4,000 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யும் இந்த நேரத்தில், இந்தியாவின் உற்பத்தி வெறும் 1,000 லட்சம் டன்களாகவே இருக்கிறது. இதை
மேலும் பல மடங்குக்கு நாம் உயர்த்த முடியும்.
இந்தியா போன்ற வளரும் நாடு, கிடைக்கும் இயற்கை வளங்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கொள்கைகளையும் வழிமுறைகளையும் எளிமைப்படுத்தி ஏராளமான முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கக்கூடிய ஒரே துறை கனிம அகழ்வுதான்.
அனில் அகர்வால், வேதாந்தா குழுமத் தலைவர்.
© பிசினஸ் லைன், தமிழில்: சாரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago