மாற்றத்தின் வித்தகர்கள் 5 - சிவக்குமார்

By சமஸ்

பிரதமர் மன்மோகன் சிங் அபூர்வமாக, “இந்தியாவின் தேசிய அவமானம் இது” என்று ஒப்புக்கொண்ட பிரச்சினை ஒன்று உண்டு ஏழ்மை, இந்தியக் குழந்தைகளைச் சூறையாடுவது. வளர்ச்சிபற்றி வாய் கிழியப் பேசும் இந்நாட்டில்தான் ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் பசிக்கொடுமையால் உயிரிழக்கின்றன; 42% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் எடை குறைந்தவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஏழ்மை ஒழிப்புக்கான முயற்சிகளும் வறுமை ஒழிப்புக்கான போராட்டங்களும் அவ்வளவு எளிதானதல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி வீதிகளில், குழந்தைகளுக்காக உதவி கேட்டு நின்ற அந்த எளிய மனிதரை முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியம். அவர் ஒரு விரிவுரையாளர். குமுழூர் அரசு ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஒரு மளிகைக் கடைக்காரரிடம் அவர் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்ட உதவி ஒன்றும் அவ்வளவு பெரிய உதவி அல்ல. 25 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்க அந்த மளிகைக் கடைக்காரர் ஏதாவது பொருட்கள் தர வேண்டும். அவ்வளவுதான். மளிகைக் கடைக்காரர் மறுத்துவிட்டார். அசராமல் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அடுத்த கடையை நோக்கிச் சென்றார் விரிவுரையாளர். அங்கும் உதவி கிடைக்கவில்லை. இன்முகத்துடன் இன்னொரு நன்றி. அடுத்த கடையை நோக்கிப் பயணம். இன்னொரு நாள் அவரை, ஒரு காய்கறிக் கடையில் பார்த்தேன். சலுகை விலையில் அதே சமயம், காய்கறிக் கடைக்காரருக்கு நஷ்டம் ஏற்படாத விலையில் காய்கறி கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு நாள் உள்ளூர் பிரமுகர் ஒருவர் வீட்டில் பார்த்தேன். மறுநாள் அந்தப் பிரமுகரின் பிறந்த நாள். எவ்வளவோ செலவுகளுக்கு மத்தியில், “ஏன் 30 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு தரக் கூடாது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

நாட்டிலேயே குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம்தான் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காலை உணவுத் திட்டத்துக்கும் முன்னோடியாகிறது தமிழகம், விரிவுரையாளர் எஸ். சிவக்குமாரால். திருச்சியின் 25 அரசு சார் பள்ளிகளைச் சேர்ந்த பல நூறு ஏழைக் குழந்தைகளின் பசியைத் தீர்க்கிறது சிவக்குமார் அறிமுகப்படுத்திய ‘சமுதாயக் காலை உணவுத் திட்டம்’.

“நான் படிச்சது அரசுப் பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும்தான். எங்க வீட்டில் பெரிய கஷ்டங்கள் எதையும் நான் சந்திக்கலை. அதே சமயம், கூடப் படிச்சவங்களோட கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். பலரோட படிப்பு அரசாங்கம் கொடுக்குற மதிய உணவுலதான் ஒட்டிக்கிட்டு இருந்ததுங்கிறதை நேரடியா உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னமும் எவ்வளவு குழந்தைகளைப் பசி கொன்னுக்கிட்டு இருக்குங்கிறதை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமா ஆசிரியர்களைச் சந்திக்கப் போனப்பதான் உணர்ந்தேன்.

அரசுப் பள்ளிக்கூடங்கள்ல காலை வேளைல பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போறப்பவெல்லாம் குழந்தைங்க மந்தமா நிக்குறதை அடிக்கடி பார்த்திருக்கேன். அதே மாதிரி காலை நேர வகுப்புகள்லயும் சில பிள்ளைங்க ரொம்ப சோர்வா உட்கார்ந்திருப்பாங்க. ஒருநாள் அப்படிப்பட்ட குழந்தைங்ககூடப் பேச ஆரம்பிச்சப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. காலையில வெறும் டீயும் பன்னும்தான் அவங்களோட உணவுங்கிறது. ‘சில பிள்ளைங்க மயக்கம் போட்டுக்கூட விழுந்துடுவாங்க; நாங்கதான் டீயோ வடையோ வாங்கிக் கொடுப்போம்’னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அன்னைக்கு முழுக்க நான் சாப்பிடலை. சாப்பாட்டுல கையை வைக்கும்போதெல்லாம் அந்தக் குழந்தைங்களோட முகம் வந்து மனசை வதைச்சுடுச்சு.

எப்போதுமே என்னோட பகல் பொழுது என்னோட தொழிலுக்கானதுன்னா, சாயங்காலப் பொழுது பொதுப் பணிக்குன்னு வகுத்துக்கிட்டு வாழறவன் நான். அதுக்கு முன்னாடி எவ்வளவோ விஷயங்கள்ல நான் ஆர்வம் காட்டியிருக்கேன். படிக்காத குழந்தைகளுக்கான ‘வீதிப் பள்ளிகள்’, ‘வீடு தேடிக் கல்வி’ங்கிற மாதிரியான முயற்சிகள் அதெல்லாம். இதுக்குப் பின்னாடி, பசியைத் துடைக்குறதுதான் முதல் கடமைன்னு இறங்கினேன்.

முதன்முதலா சேவா சங்கம் பள்ளிக்கூடத்துல, அங்குள்ள தலைமை ஆசிரியை விசாலாட்சி உதவியோட இணைஞ்சு இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்னைக்குத் திருச்சியில மட்டும் 25 பள்ளிகள்ல காலை உணவு கொடுக்குறோம். இன்னும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஏராளமான ஊர்கள்ல பலரும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்குறாங்க” என்று சொல்லும் சிவக்குமாரின் திட்டம் எளிமையானது.

“ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும் தங்களால் இயன்ற ஒரு தொகையைப் பள்ளிக் குழந்தைகளுக்காக அளிக்க வேண்டும். கூடவே, அந்தப் பகுதியில் உள்ள கொடையாளிகளை அடையாளம் கண்டு, உதவி கேட்க வாரத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதை ஒதுக்க வேண்டும். இவ்வளவுதான். எல்லாப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்” என்கிறார் சிவக்குமார்.

“உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு உள்ளூர் வளங்களை வைத்தே தீர்வு காண்றதுதான் இதோட முக்கியத்துவம். அந்தந்தப் பகுதியில உள்ள வசதியானவங்களைத் தேடிப் பிடிப்போம். அவங்களோட பிறந்த நாள், அம்மா அப்பா நினைவு நாள் மாதிரியான முக்கியமான நாட்கள்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்கச் சொல்லிக் கேட்போம். தவிர, அரிசி கொடுக்குறவங்க அரிசி கொடுக்கலாம்; மளிகைச் சாமான்கள் கொடுக்குறவங்க மளிகைச் சாமான்கள் கொடுக்கலாம். விறகுன்னு சொல்லி ரெண்டு மரத்துண்டுகளைக் கொடுத்தால்கூட வாங்கிப்போம். மளிகைக் கடைக்காரர்கள், காய்கறிக் கடைக்காரர்கள்கிட்ட சலுகை விலையில பொருட்களைக் கேட்டு வாங்குவோம். நன்கொடையாளர்களை நேரடியா கடைக்காரர்கள்கிட்டே பணத்தைக் கொடுக்கச் சொல்லிடுவோம். மதிய உணவு சமைக்கிற ஆயாக்களே கொஞ்சம் முன்னாடி வந்து சமைச்சுத் தந்துடுவாங்க.”

இந்தத் திட்டத்தின் முக்கியமான இன்னோர் அம்சம்: முறைகேடுகளுக்கு வழி இல்லாமல் நடத்தப்படுவது.

“உதவியை ஒரு ரூபாய்கூடப் பணமா வாங்குறது இல்லை. ஒண்ணு, உணவை நேரடியா சமைச்சு நீங்களே வந்து தரலாம்; இல்லைன்னா, பொருளா தரலாம். பொருட்கள் எல்லாமே பள்ளிக்கூடங்கள்ல எல்லோர் பார்வையிலேயும் இருக்குறதாலேயும் எல்லோரோட பங்களிப்பாலும் இது நடக்குறதாலேயும் வரவுசெலவுல முறைகேட்டுக்கு வழி இல்லை” என்கிறார்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுங்களா? உலகத்துல இருக்குற எடை குறைவான குழந்தைங்கள்ல சரிபாதிக் குழந்தைங்க நம்ம இந்தியக் குழந்தைங்க. பல ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான சூழல்லதான், பசி பட்டினியில இன்னைக்கும் நாம இருக்கோம். 100 ரூபாய் இருந்தா போதும்; 20 பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு கட்டுச்சாதமும் துவையலும் கொடுத்துடலாம். 50 ரூபாய்தான் இருக்குன்னாகூட கூழ் காய்ச்சிக் கொடுத்துடலாம். பசிக்குற நேரத்துல எதுவுமே அவங்களுக்கு தேவாமிர்தம்தான். நாங்க உணவு கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, பல பள்ளிக்கூடங்கள்ல குழந்தைங்களோட வருகைப் பதிவு கூடியிருக்கு. நேரத்துக்குப் பள்ளிக்கூடம் வர்றாங்க. படிப்புல காட்டுற ஆர்வம் அதிகரிச்சு இருக்கு. முன்னைவிடக் குழந்தைங்க தெளிவா இருக்காங்க” என்று சொல்லும் சிவக்குமார், காந்தியிடம் சுட்டிக்காட்டுவது அவருடைய எளிமையை.

“தன்னைக் கடையனிலும் கடையனாகத்தான் எப்போதும் நெனைச்சுக்கிட்டு இருந்தார் காந்தி. அந்த நெனைப்பு இருந்தா போதும். யாரிடமும் இணைஞ்சுக்கலாம். நான் என்னை அப்படித்தான் நெனைக்குறேன். நீங்க உதவின்னு சொல்றதைத்தான் நான் இணைஞ்சுக்குறதுன்னு சொல்றேன்; ஏன்னா, சமூகத்துல எல்லா நல்ல காரியங்களுமே நாலு பேர் கூடுறதாலதான் சாத்தியமாகும்” இணையக் கூப்பிடுகிறார் சிவக்குமார்.

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்