உள்ளே பார்!

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியப் படைகள் வாபஸ். அடுத்த வருஷத் தொடக்கத்தில் தேர்தல். அளவற்ற அன்புடன் அமைதிப் பேச்சு வார்த்தை அழைப்புகள். இந்தப் பக்கம் ஆப்கனிஸ்தானுக்குள்ளேயே இருக்கும் தாலிபன்களுக்கு ஹமீத் கர்சாய் சோப்பு போட்டுக்கொண்டிருக்கிறார் என்றால், அந்தப் பக்கம் பாகிஸ்தானுக்கு டெபுடேஷனில் போயிருக்கும் தானைத் தலைவர்களுக்கு நவாஸ் ஷெரீஃப் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறார். என் செல்லம்ல? என் கண்ணில்ல? இந்தத் துப்பாக்கி சனியன் எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பாலிடிக்ஸ் சனியனுக்கு வந்துடுடா செல்லம்.

நடக்கிற கதையா என்று கேட்காதீர்கள். நடக்கும் என்று மிகத் தீவிரமாக நம்பித்தான் சொச்ச காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் கனவான் கர்சாய். தாலிபன் தரப்பிலிருந்து இதுவரை இந்தக் கெஞ்சல்களுக்கும் கொஞ்சல்களுக்கும் எந்த பதிலும் வந்ததாகத் தெரியவில்லை. நாளொரு சண்டை, பொழுதொரு குண்டு என்றுதான் காலம் நகர்கிறது.

யுத்தம் முடிந்தது என்று பொதுவில் சொல்லப்பட்டாலும் நேட்டோ படைகளின் எச்சமும் மிச்சமும் இன்னமும் ஆப்கனிஸ்தானில் உத்தியோகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. முன்பாவது ஒசாமாவைத் தேடுகிறேன், முல்லா ஓமருடன் கண்ணாமூச்சி ஆடுகிறேன் என்று சொல்லிக்கொள்ள இரண்டு நோக்கங்கள் இருந்தன. இன்று ஒசாமா பரலோகப் பிராப்தியடைந்துவிட்டார். ஓமர் ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போயே வருஷம் பலவாகிவிட்டது.

போன வருஷம் பாரக் ஒபாமாவுக்கு அவர் என்னமோ ஒரு கடுதாசி போட்டு, பேச்சு வார்த்தைக்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று கேட்டதாக ஒரு புதுக்குண்டு போட்டார்கள்.

வெடிக்கவும் இல்லமால் நமுத்தும் போகாமல் அந்தக் குண்டு எந்த பங்க்கரில் போய் ஒளிந்துகொண்டதென்று இப்போவரைக்கும் யாருக்கும் தெரியாது. எந்த சலனமும் இல்லாத ஸ்திதப் பிரக்ஞர்களாகத் தாலிபன்கள் தமது தினசரி நடவடிக்கைகளைச் செவ்வனே செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அதில் தலையாயது வாரத்துக்குச் சுமார் 80 போலீசாரைப் போட்டுத்தள்ளுவது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்தக் கணக்கு மாறியதே இல்லை என்கிறது ஆப்கன் தேசிய காவல் துறை. வாரம் எண்பது என்றால் மாதம் 320 பேர். வருஷத்துக்கு 3840 பேர். ஐந்தாண்டுக் கணக்குப் போட்டால் 19,200 பேர். இது சாதாரண நாள்களுக்கான புள்ளி விவரம். ஏதாவது பெரும் பிரச்னை, முழுநீளக் கலவரம், யுத்த பேரிகை நிற்கமாட்டாமல் சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறதென்றால் இந்த விவர எண்ணிக்கை மாறும் அல்லது ஏறும்.

சரி, என்ன செய்வது? போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் உத்தியோகம் பார்த்தால் இம்மாதிரியான கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தானே செய்யும் என்று சொல்லிவிட முடியாது. எந்த விதமான அடிப்படைப் பாதுகாப்பும் இல்லாமல், போதிய ஆயுத பலம் இல்லாமல், சரியான பயிற்சி கூட இல்லமால் காவல் துறையில் இருக்கும் ஆப்கானியர்கள் - பச்சையாகச் சொல்வதென்றால் 'மாட்டிக்கொண்டவர்கள்'.

Afghan National Police (ANP) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருவது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஊழியர்களைக் கொண்டது.

தாலிபன்கள் பதவியில் இருந்த காலத்தில் தனக்கொரு தனிப்படை அமைத்துக்கொண்டு இந்த தேசிய போலீஸ் படையை ஓரம்கட்டி வைத்தார்கள். ஆனால் இந்தப்படைக்குள் தமது ஒற்றர்களை நியமிக்கத் தவறவில்லை. இப்போது வரைக்கும் ஆப்கன் போலீசுக்குள் இருக்கும் தாலிபன்கள் யார் யார் என்று கண்டுபிடிக்க முடிந்ததில்லை. நாளது தேதி வரைக்கும் தாலிபன்களுக்குக் காவல் துறையின் அசைவுகளை ஃபுல் ஸ்டாப், கமா மிச்சம் வைக்காமல் தெரியப்படுத்துகிற கைங்கர்யத்தைச் செவ்வனே செய்து வருவது அவர்கள்தாம். இதனால்தான் எந்த சந்துமுனை யுத்தத்திலும் தாலிபன்களை போலிசாரால் வெல்ல முடியாமல் போகிறது.

எதிர்வரும் தேர்தல் சமயம், ஒளிந்துகொண்டிருக்கும் தாலிபன்களால் எம்மாதிரியான உபத்திரவங்கள் வருமென்று கர்சாய் யோசித்துக்கொண்டிருக்கிறார். அவரை அப்படியே திசை திருப்பி வைத்துக்கொண்டு டிபார்ட்மெண்ட்டுக்குள்ளிருந்த படிக்கே தடாலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தாலிபன்கள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

நோபல் சார்ந்த அமைதிப் பேச்சுக் கனவுகளையெல்லாம் சற்று நகர்த்திவைத்துவிட்டு முதலில் இந்த இண்டர்னல் இம்சைக்கு ஒரு வழி பண்ணப் பார்த்தால் அது ஆப்கனுக்கும் நல்லது; ஹமீத் கர்சாய்க்கும் நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்