துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததற்குப் பிறகு, மலாலா வுக்குக் கிடைக்காத கௌரவங்களே இல்லை; அமைதிக்கான நோபல் பரிந்துரையில் ஆரம்பித்து அன்னை தெரசா விருது, ‘டைம்’பத்திரிகையின் ‘செல்வாக்கு மிக்க 100 பேர்’பட்டியலில் கிடைத்த இடம் என்று நீண்டுகொண்டே போகின்றன. மலாலாவின் அசாத்தியமான துணிச்சலும் பெண் கல்வி, சமாதானம் ஆகியவற்றில் அவரின் ஈடுபாடும் உண்மையிலேயே உத்வேகமளிக்கக் கூடியவை. ஆனாலும், அவர் மீது தொடர்ச்சியாகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் ஒருவித அசௌகர்ய உணர்வை ஏற்படுத்துகின்றன. தீவிரப் பழமைவாத சமூகமாகவும் தந்தைவழி சமூகமாகவும் பொதுவாகக் கருதப்படும் பஷ்டூன் சமூகத்தைச் சேர்ந்தவர் மலாலா. ஆஃப்கன், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்தச் சமூகம் பரந்திருக்கிறது. மலாலாவின் குரல்தான் இந்தச் சமூகத்திலேயே தனித்த குரல் என்றும் மலாலா கிட்டத்தட்ட முன்னுதாரணமற்ற நிகழ்வு என்றும் கருதுவதும்தான் அந்த அசௌகர்ய உணர்வுக்குக் காரணம்.
தீவிரவாதிகள் பதுங்குமிடங்கள், பழங்குடியினருக்கிடையேயான ரத்தக் களரி, மத வெறியர்கள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள்… இப்படி எல்லாம் குத்தப்படும் முத்திரைகள் அந்தப் பிரதேசத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கின்றன என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்வார்கள். மேற்குறிப்பிட்ட முத்திரைகள் எல்லாம் முழுக்கவும் பொய் இல்லை என்றாலும், அவையெல்லாம் பன்முகத்தன்மை கொண்ட சமூகமொன்றின் ஒரு பக்கம்தான். உண்மை என்னவென்றால், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான காந்திய அகிம்சைவழிப் போராட்டத்தின் குறிப்பிடத் தக்க ஒரு மையமாக இந்தப் பிரதேசம் பல ஆண்டுகளாக இருந்தது; அது மட்டுமல்லாமல் ஆன்மிகக் கவிதைகள், சூஃபி இசை போன்றவற்றுக்கும் எழுச்சிமிகு பெண் தலைவர்களுக்கும் தாயகமாக இந்தப் பிரதேசம் இருந்திருக்கிறது.
மைவாண்ட் மலாலா
இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த முதல் மேற்கத்திய காலனிய ஊடுருவல்பற்றி எழுதும்போது மைவாண்ட் கிராமத்து மலாலாயைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டேன். இந்த மைவாண்ட் மலாலாயின் நினைவாகத்தான் நம் காலத்து மலாலாவுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பஷ்டூன் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மலாலா என்று சொன்னால் பெண் கல்விக்காக இப்போது போராடும் இளம் பெண் மலாலா என்று அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்; ஆங்கில -ஆஃப்கன் போரின்போது முக்கியமான தருணத்தில் போரின் போக்கையே தீரத்துடன் மாற்றிய இளம் பெண் மலாலாய் என்பவரைச் சொல்கிறோம் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.
மைவாண்ட் போரைப் பற்றிய ஆங்கிலேயர் தரப்பு ஆவணங்களில் மலாலாய் என்ற பெயர் காணோம். ஆனால், ஆஃப்கன் தரப்பு வரலாறு சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில், 19-ம் நூற்றாண்டில் நடந்த சண்டையொன்றில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம் சந்தித்த மாபெரும் தோல்விக்குக் காரணம் மலாலாயின் தீரச்செயல்கள்தான்.
பஷ்டூன் சமூகத்தின் வாய்வழிச் செய்திகளின்படி, 1880 ஜூலை 27-ல் நடந்தது இது: பிரிட்டிஷ் படையைவிடப் பெரிய படையை பஷ்டூன் வீரர்கள் திரட்டி வந்திருப்பதைப் பார்த்த ஆங்கிலேயர்கள், தங்களிடமுள்ள பீரங்கிகளைக் கொண்டு ஆஃப்கன் வீரர்களைத் துரத்தியடித்தனர். மலாலாய் போரில் இறங்கிய பிறகுதான் போக்கு மாறியது. சரமாரியாக வந்து விழும் பீரங்கிக் குண்டுகளால் தன் வருங்காலக் கணவன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட மலாலாய், கீழே கிடக்கும் கொடியொன்றைப் பற்றிக்கொண்டு (அவளுடைய பர்தாவின் முகத்திரை என்றும் சிலர் சொல்வதுண்டு) இந்தக் கவிதையை உச்சாடனம் செய்கிறாள்:
“என் அன்பே, மைவாண்ட் போர் உன்னை மகத்துவப்படுத்துமெனில், என் கூந்தல் கற்றைகளைக் கொண்டு உனக்கொரு சவப்பெட்டி செய்வேன்.”
- கடைசியில் பார்த்தால், மைவாண்ட் போரில் மகத்துவப்படுத்தப்பட்டது மலாலாய்தான், புனித யாத்திரைகள் மேற்கொள்ளப்படும் தலமாக அவளுடைய கல்லறை மாறியிருக்கிறது.
ஒரு மலாலா மட்டும் அல்ல…
மலாலாய் மட்டுமல்ல… ஆங்கில - ஆஃப்கன் போரைப் பற்றி பிரிட்டிஷ் தரப்பு ஆவணங்கள் நீங்கலாக, பஷ்டூன் தரப்பு ஆவணங்களைப் படிக்கப் படிக்க அந்த வரலாற்றில் மிக முக்கியமான பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஷா ஷுஜா உல்முல்க் சுல்தான் (ஆஃப்கன் அதிபர் ஹமித் கர்சாய்க்கு நேரடி மூதாதை) வாஃபா பேகம் என்ற பஷ்டூன் இனத்துப் பெண்ணை மணந்திருந்தார். அரசின் உண்மையான அதிகார மையமாக பேகம்தான் இருந்தார் என்பது அக்காலத்தைச் சேர்ந்த பலரின் கருத்து. (பேகத்தின் நிதானத்தையும் தீரத்தையும் பிரிட்டிஷ்காரர்களே பாராட்டி இருக்கிறார்கள்).
ஆட்சியிலிருந்து ஷா தூக்கியெறியப் பட்டு, காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டார். ஷாவின் விடுதலைக்காக, உலகிலேயே மிகப் பெரிய வைரமான கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயருக்குக் கொடுத்து உரிய ஏற்பாடுகளைச் செய்தது பேகம்தான்.
இரண்டாம் முறையாக, லாகூரில் ஷா சிறைவைக்கப்பட்டபோதும் அவரை விடுவிப்பதில் பேகம்தான் முக்கியப் பங்குவகித்தார். சுரங்கப்பாதை, பிறகு கழிவு நீர்ப்பாதை, படகு, வரிசையாகக் குதிரைகள் என்று ஷா தப்பிப்பதற்கு விரிவான ஒரு திட்டம், பேகத்தின் உதவியோடு செயல்படுத்தப்பட்டது. தனக்குத் தஞ்சமளிக்கும்படியாக ஆங்கிலேயரை வசப்படுத்தினார். அதன் மூலம் அவரது குடும்பத்தினர் காபூலில் அரியணை ஏறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். ஆஃப்கன் அரியணையில் ஷாவை மறுபடியும் ஆங்கிலேயர்கள் அமர்த்துவதற்குச் சற்று முன்னால், 1838-ல் பேகம் காலமானார். ஷாவின் ஆட்சியும் நீடிக்கவில்லை. கடைசியில், நிகழ்ந்த சீரழிவுகளுக்கெல்லாம் காரணம், மதியூகம்மிக்க பேகம் இல்லாமல் போனதுதான் என்று பலரும் கருதுகின்றனர்.
காந்தியம் செழித்த பஷ்டூன்
பஷ்டூன் பிரதேசத்தின் அமைதி வழிப் போராட்ட மரபு நெடியது. 1930-களில், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு எதிரான காந்தியப் போராட்டத்தின் மையமாக வடமேற்கு எல்லைப் பகுதி உருவெடுத்ததை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பஷ்டூன் இனத் தலைவர் பாட்ஷா கானின் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. குதாய் கித்மத்கார்கள் (கடவுளின் ஊழியர்கள்) என்ற முக்கியமான இயக்கத்தினர் காந்திய சேவை,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் காந்தி பின்பற்றிய கட்டுக்கோப்பான அகிம்சை வழி, ஒத்துழையாமை போன்றவற்றால் ஊக்கம்பெற்றனர். அதுமட்டுமல்லாமல், பழமைவாத உலமாக்களின் ஆதிக்கத்தை அகற்றும் விதத்தில் கல்விப் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பிரிவினைக்குப் பிந்தைய பாகிஸ்தானின் வரலாற்றிலிருந்தே குதாய் கித்மத்கார்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டதை இந்த இயக்கத்தின் வரலாற்றாசிரியரான முக்குலிகா பானர்ஜி நமக்குக் காட்டுகிறார்.
முஸ்லிம்கள் என்றாலே, குறிப்பாக பஷ்டூன் இனத்தவர் என்றாலே அவர்கள் தீவிர வாதிகள்தான் என்று நாம் தவறான எண்ணம் கொண்டிருப்பதால்தான் மேற்குறிப்பிட்ட வரலாறு நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கு கிறது. 1980-களில் சோவியத் ஒன்றியத்தை எதிர்ப்பதற்காக அமெரிக்காவும் சவூதியும் பாகிஸ்தானின் உளவுத் துறையும் பெஷாவரில் மத அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை அளித்தன. அப்போதிலிருந்தே ஆஃப்கன் பாகிஸ்தான் எல்லையின் இரு பகுதிகளும் கடுமையான வன்முறைகளாலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுவந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், இந்தத் தீவிரவாதத்துக்குப் பிரதான எதிர்ப்பாளர்கள் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அதே பஷ்டூன் மக்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்தியல்களின் போரில் பயங்கர வாதிகளை வெல்ல விடாமல் தடுப்பதற்கு மலாலாவுக்கும் அவளையொத்த எண்ணம் கொண்டவர்களுக்கும் நாம் நிச்சயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். முஸ்லிம்-பஷ்டூனாகவும் அகிம்சை வழியைப் பின்பற்றுபவராகவும் பெண்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் இருப்பது என்பது ஒரே சமயத்தில் சாத்தியம்தான், அப்படித்தான் வரலாறு நெடுகவும் சாத்தியப்பட்டிருக்கிறது. உண்மையில், அந்தப் பிரதேசத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமக்கிருக்கும் முக்கியமான ஆயுதங்களே அங்கு வசிக்கும் பெரும்பான்மை மக்களின் துணிவும் கண்ணியமும்தான்!
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago